குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆடி(கடகம்) 13 ம் திகதி சனிக் கிழமை .

பொன்னியின் செல்வன்' நாவல் பற்றிய நினைவுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

02.10.2022....பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அவ்வப்போது எழுதிய குறிப்ப்புகளிவை. பெரும்பாலும் எனது முகநூற்  பக்கத்தில் வெளியானவை. அனைத்தையும் தொகுத்து இங்கு தந்திருக்கின்றேன். இக்குறிப்புகள் ஏற்கனவே பதிவுகள் இணைய இதழிலிலும்  அவ்வப்போது துண்டு துண்டாக வெளியானவைதாம். 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகவுள்ள இத்தருணத்தில் இக்குறிப்புகளை வாசிப்பதும் இனிமையானதுதான். - வ.ந.கி -

அழியாத கோலங்கள்: பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும்,, நந்தினியும் (ஓவியர் வினுவின் கை வண்ணத்தில்)

மானுடராகிய நாம் பல்வகை உணர்வுகளுக்கும் உட்பட்டவர்கள். எப்பொழுதுமே தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். நகைச்சுவையைக் கேட்டுச் சிரிப்பவர்கள்; நல்ல கலையை இரசிப்பவர்கள். நல்ல நூல்களைச் சுவைப்பவர்கள்.

நல்ல நூல்கள், நல்ல கலைகள் என்னும்போது அவற்றிலும் பல பிரிவுகளுள்ளன. உதாரணத்துக்கு நூல்களை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் அம்மா தூக்கி வைத்து, சந்திரனைக் காட்டிக் கதை கூறிச் சாப்பிட வைத்ததிலிருந்து கதைகளுடனான எம் தொடர்பு ஆரம்பமாகின்றது. பின்னர் குழந்தை இலக்கியப்படைப்புகள் (அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் , சிறுவர் பகுதிகள், குழந்தைப்பாடல்கள் போன்ற) , வெகுசன இலக்கியப்படைப்புகள் என்று வளர்ச்சியடைந்து பின்னர் பல்வகை தீவிர இலக்கியப்போக்குகளை உள்ளடக்கிய தீவிர வாசிப்புக்கு வந்தடைகின்றோம். இதனால்தான் எல்லாவகை இலக்கியங்களுக்கும் மானுட வாழ்வின் வளர்ச்சிப்படியில் , வாசிப்பின் வளர்ச்சிப்படியில் இடமுண்டு.

ஒரு காலத்தில் எம் பால்ய, பதின்மப் பருவங்களில் நாம் வாசித்த படைப்புகள் (வெகுசன, குழந்தை இலக்கிய) எல்லாம் பின்னர் எம் வாழ்வின் அழியாத கோலங்களாகி நிரந்தரமாக எம் ஆழ் மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மீண்டுக் காண்கையில் இன்பம் கொப்பளிக்கின்றது. மகிழ்ச்சியால் பூரித்துப்போய் விடுகின்றோம். அவை எம்மை வாசித்த அப்பருவங்களுக்கே தூக்கிச் சென்று விடுகின்றன. அவற்றையெல்லாம் அழகாக ஓவியங்களுடன் வெளியான அத்தியாயங்களுடன் 'பைண்டு' செய்து வைத்திருந்தோம்; தொலைத்து விட்டோம். அவ்விதமான பல்வகைப்படைப்புகளை நாட்டில் நிலவிய போர்ச்சூழலில் என்னைப்போல் பலர் இழந்திருப்பார்கள். ஆனால் இன்று இணையம் ஓரளவுக்கு அவ்விதம் இழந்ததையெல்லாம் மீண்டும் கண்டு அனுபவிக்க இடமேற்படுத்தித் தந்துள்ளது. நான் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் வாசித்துக்குவித்த கல்கி சஞ்சிகையின் படைப்புகளை அக்கல்கி இதழ்களினூடே மீண்டும் வாசிப்பதற்கு இணையம் வழியேற்படுத்தித் தந்துள்ளது. நூல்கள் பலவற்றைப் பழைய புத்தகக் கடைகளில் தேடிக்கண்டுபிடிக்க இணையம் உதவுகின்றது.

என்னைப்பொறுத்தவரையில் வாழ்க்கைச் சுமைகளில் இன்பத்தைத் தருபவை வாசிப்பும், எழுத்தும், சிந்திப்புமே.

இவ்விதம் எம் தலைமுறையினருக்கு இன்பத்தை அளித்த ஓவியர்களாக ஓவியர் வினு, ஓவியர் கல்பனா, ஓவியர் லதா, ஓவியர் கொபுலு, ஓவியர் விஜயா, ஓவியர் மாயா, ஓவியர் ரமணி , ஓவியர் மொறாயஸ் , ஓவியர் மூர்த்தி என்று பலரைக் குறிப்பிடலாம். இவர்களின் ஓவியங்களை அகப்படுகையில் அவ்வப்போது இங்கு பதிவு செய்வேன்.

அவ்வகையிலோர் ஓவியம். பொன்னியின் செல்வனுக்கு ஓவியர் வினு வரைந்தது.

நமக்கெல்லாம் மிகவும் பிடித்த நாவலின் நாயகன் வாணர்குலத்து வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனும், பழுவூர் இளைய ராணியான பேரழகி நந்தினியும் இடம்பெறும் காட்சியிது.

பொன்னியின் செல்வன் மணிரத்தினத்தின் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவரப்போகுமிச் சந்தர்ப்பத்தில் இவ்வோவியத்தை நோக்குகையில் என்னால் வந்தியத்தேவனின் இடத்தில் நடிகர் கார்த்தியை நினைத்துப்பார்க்கவே முடியாது. உண்மையில் நடிகர் சூரியாவின் முகப்பொலிவு வந்தியத்தேவனுக்கு நன்கு பொருந்தும். இதற்குக் காரணம் நாமெல்லாரும் பொன்னியின் செல்வன் வெளியானபோது வெளிவந்த ஓவியங்களுடன் நாவலின் பாத்திரங்களுடன் உறவாடியவர்கள். அவ்வோவியங்களின் சாயலற்ற முகத்தோற்றமுள்ளவர்களை அதனால்தான். ஏற்றுக்கொள்வதில் சிறிது சிரமம். ஆனால் நந்தினி பாத்திரத்துக்கு ஐசுவரராய் நன்கு பொருந்துவார். இதுபோல் நிதானமும், மதியூகமும் மிக்கவராகக் கல்கியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் குந்தவைப்பிராட்டியாரின் பாத்திரத்துக்கும் திரிஷா பொருந்துவாரா என்பதில் எனக்குச் சந்தேகமே. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நன்கு பொருந்துவார்கள். ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்னப் பழுவேட்டையராக பார்த்திபன் இவர்கள் இவ்வேடங்களுக்கு நன்கு பொருந்தக் கூடியவர்கள். எதற்கும் படத்தைப் பார்த்தபின்னரே இறுதியான முடிவுக்கு வர முடியும்.

எழுத்தாளர் 'தாயகம்' யேர்ர்ச்.இ.குருசேவ் 'பொன்னியின் செல்வன்' நாவலைப்பற்றி முகநூற் பதிவொன்று இட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "பொன்னியின் செல்வன் வாசிக்கவேயில்லை என்ற விசயத்தை வெளியில சொன்னா... கேவலமா பாப்பாங்களா!? பிரெண்ட்சு!"

அதற்கு எதிர்வினையாற்றியிருந்த எழுத்தாளர் அளவெட்டி சிறீஸ்கந்தராஜா பின்வருமாறு தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்: "பலர் புளுகினாற்போல் அது திறமானதென்றில்லை. நான் கல்கிப்பிரியனல்லன். என்னிடம் 'பொன்னியின் செல்வன்' இருந்தது. கடைசி வரைக்கும் வாசித்து முடிக்கவில்லை.'

இவர்கள் இருவரும் தம் வாசிப்பின் பரிணாம வளர்ச்சிப்படிக்கட்டிலொன்றில் அனுபவித்திருக்க வேண்டிய இன்பத்தை  இழந்து விட்டார்கள்.  இவர்கள் பொன்னியின் செல்வனை வாசித்திருக்க வேண்டியது அவர்களது வாசிப்பின் ஆரம்ப காலத்தில். அப்பொழுதுதான் அதன் அருமை புரிந்திருக்கும்.  ஒரு காலகட்டத்தில் அம்புலிமாமாக் கதைகளை வாசித்து இன்புற்றோம். அடுத்த எம் வாசிப்புப் படியில் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை வாசித்தோம்.. அக்காலகட்டத்தைத் தவற விட்டு வாசிப்பில் முதிர்ச்சியடைந்த நிலையில் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கினால் அதனை ஒருபோதுமே இரசிக்க முடியாது. அதனைத்தான் இவர்கள் செய்கின்றார்கள். அதனால்தான் பொன்னியின் செல்வனை இவர்களால்  இரசிக்க முடியவில்லை. நான் இப்போது பொன்னியின் செல்வனை  வாசித்தாலும் எனக்கு அதனை முதன் முதலில் வாசித்தபோது அடைந்த இன்பமும், ஆர்வமும் ஏற்படாது.  ஆனால் அது இப்பொழுதும் மகிழ்ச்சியைத் தருவதற்குக் காரணம் பால்ய , பதின்மப் பருவங்களில் வாசிப்பின்போது அது தந்த இன்பம்தான். அவ்வின்பமும், அவ்வாசிப்பனுபவமுமே இன்று எம் உணர்வுகளில் அதனைப்பற்றி எண்ணியதும் எழுகின்றன. ஆனால் ஒருபோதுமே இன்று என்னை வாசிப்பில் ஒன்றிவிடச் செய்யும் படைப்புகளான 'தத்யயேவ்ஸ்கியின்' 'குற்றமும், தண்டனையும்'. 'அசடன்', 'க்ரமசாவ் சகோதரர்கள்', 'டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' , 'போரும் அமைதியும்' போன்ற நாவல்களை என்னால் என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் இரசித்து வாசித்திருக்கவே  முடியாது. அதற்குரிய மானுட அனுபவமும், அறிவும் அப்போது எனக்கில்லை.

யாரும் அம்புலிமாமாக் கதைகளை, தொடர்களை வாசிப்பில் முதிர்ச்சியடைந்த நிலையில் குறை கூறுவதில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை ஏன் குறை கூறுகின்றார்கள்? அம்புலிமாமாக் கதைகளைப்போல் வாசிப்பின் வளர்ச்சிப்படிக்கட்டில் வாசிக்கும் நாவல்களிலொன்றாக இவர்கள்   பொன்னியின் செல்வனை உணர்ந்திருந்தால்  அதன் அருமையினை  உணர்ந்திருப்பார்கள். இன்று பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த புகழுடன் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு அதிகமாகப் புகழுடன் இருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் இவர்களில் பலரும் தலைமுறை , தலைமுறையாக அந்நாவலை அவர்கள் தம் வாசிப்பின் ஆரம்பக் கட்டத்தில் வாசித்து மகிழ்ந்திருப்பதுதான். அதனால்தான் மேலும் வாசிப்பில் முதிர்ச்சியடைந்த நிலையிலும் 'பொன்னியின் செல்வன்' போன்ற நாவல்களைப்பற்றி எண்ணியதுமே மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

குந்தவைப் பிராட்டியார்!

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டு அரசியலில் பெண் ஒருவர் முக்கிய இடத்திலிருந்திருக்கின்றார் என்பதே வியப்பூட்டுவது. சாணக்கியம் நிறைந்த அரசியல் மதியூகியாக, அரசியல் ஆலோசகராக இப்பெண்மணி அன்றே விளங்கியிருக்கின்றார்.

அப்பெண்மணி யார்?

இந்நேரம் நீங்கள் அவர் யாரென்பதை  ஊகித்திருப்பீர்கள். அவர்தான் குந்தவைப்பிராட்டியார். முதலாம் இராசராச சோழனின் அக்கா குந்தவைப்பிராட்டியார். பொன்னியின் செல்வன் முதலாம் இராசராசனின் சகோதரியான குந்தவையார்தான் வாணர்குலத்து வீரனும், நாவலின் கதாநாயகனுமான வந்தியத்தேவனின் மனைவியாராகத் திகழ்ந்தவரும் கூட.

இவரைப்பற்றிய கல்வெட்டுகளில் 'ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார்' என்றும் 'பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி' என்றும் இவர் குறிப்பிடப்பட்டிருக்கின்றார். முதலாம் இராசராச சோழன் தனது அக்காவான குந்தவைப்பிராட்டியார் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவன். தஞ்சைப்பெரிய கோயிலின் நடு விமானக் கல் மீது தான் கொடுத்தவற்றை வரைந்திருப்பதோடு அருகில் அக்கா குந்தவை கொடுத்தவற்றையும் வரைந்திருக்கின்றான். வந்தியத்தேவனைப்பற்றியும் தஞ்சைபெரிய கோயிற் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன.

இன்று கூட ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்களை நாம் அறிவோம். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் குந்தவையார் வாழ்ந்த சமூகத்தில் பெண்கள் நிலை எப்படியிருந்திருக்கும் என்பதைப்பற்றிக் கூறவே தேவையில்லை. ஆனால் அக்காலகட்டத்தில் அவர் அக்கால அரசியலில் செலுத்திய ஆதிக்கம் பிரமிக்கத்தக்கது. அது ஒன்றே போதும் அவர் மீதான மதிப்புக்கு.

இந்த ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் மணியம்.

தமிழ் வரலாற்று நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்களிலொருவர் , முதலிடத்திலிருப்பவர் குந்தவைப் பிராட்டியார். வரலாற்று நாவற் காதலர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் வந்தியத்தேவன் & குந்தவை இருவருமே. அவர்களது உணர்வுகளை, ஆளுமைப்பண்புகளை மிகவும் எளிய சொற்களில், உள்ளத்துக்கு இன்பமூட்டும் வகையில் விபரித்திருப்பார் நாவலாசிரியர் கல்கி.

அதே சமயம் ஒன்றை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். பொன்னியின் செல்வன் வரலாற்று நூலல்ல. வரலாற்றுப் புனைவு. வரலாற்றுப் புனைவொன்று பல கற்பனைக் கதாபாத்திரங்களையும் உள்ளடக்கியேயிருக்கும், உதாரணம் பூங்குழலி கற்பனைப்பாத்திரம். புனைவென்பது ஒரு சில வரலாற்று உண்மைகளைக்கொண்டு புனையப்படுவது. அவ்விதம் புனையப்பட்ட பொன்னியின் செல்வன் பல வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் புனையப்பட்ட வரலாற்றுப் புனைவு.

அழியாத கோலங்கள்: பூங்குழலி - அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் புனைவதிலும் வல்லவர்கள். அது மட்டுமல்ல இருவருமே தம் நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கேற்பக் கவிதைகள் எழுதி, தம் நாவல்களில் இணைப்பதில் வல்லவர்கள். கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியின் உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதையொன்று எழுதியிருப்பார். அந்தக் கவிதை ஒரு முறை வாசித்தாலும் வாசிப்பவர்

நெஞ்சினை விட்டு அகலாத தன்மை மிக்கது.

'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்னும் அவரது கவிதையானது ஓடக்காரப்பெண் பூங்குழலியின் சோகம் ததும்பிய நிலையினைத்தெரிவிப்பது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அந்தக்கட்டத்தினையும், அந்தக்கவிதை வரிகளையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஒரு படைப்பானது இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிச்சிறந்து விளங்குகின்றது.

அந்தப்பாடலும், அது பற்றி நாவலில் வரும் கல்கியின் வர்ணனையையும் இங்கு, தற்போது நீங்கள் வாசிக்கலாம். அது கீழே:

- "பூங்குழலிு படகில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு பாடினாள். அவளுடைய கானத்தைக் கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள மெள்ளத் தவழ்ந்து வந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களும் இலை அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன போலும்! வானமும், பூமியும் அந்தக் கானத்தைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்தக் கானத்தை முன்னிட்டே மூலைக் கடலை அடைந்து முழுகி மறையாமல் தயங்கி நிற்கின்றான் போலும்.

தேனில் குழைத்து, வானில் மிதந்து வந்த அப்பாடலைச் சற்றுச் செவி கொடுத்துச் கேட்கலாம்.


"அலைகடலும் ஓய்ந்திருக்க

அகக் கடல்தான் பொங்குவதேன்?

நிலமகளும் துயிலுகையில்

நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும்

கூடுகளைத் தேடினவே!

வேட்டுவரும் வில்லியரும்

வீடு நோக்கி ஏகுவரே

வானகமும் நானிலமும்

மோனமதில் ஆழ்ந்திருக்க

மான்விழியாள் பெண்ணொருத்தி

மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் அடங்கி நிற்கும்

மாருதமும் தவழ்ந்து வரும்

காரிகையாள் உளந்தனிலே

காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"

அந்த இளமங்கையின் உள்ளத்தில் அப்படி என்ன சோகம் குடி கொண்டிருக்குமோ, தெரியாது! அவளுடைய தீங்குரலில் அப்படி என்ன இன்ப வேதனை கலந்திருக்குமோ, தெரியாது! அல்லது அப்பாடலில் சொற்களோடு ஒருவேளை கண்ணீரைக் கலந்துதான் பாடலை அமைத்துவிட்டார்களோ, அதுவும் நாம் அறியோம். ஆனால் அந்தப் பாடலை அவள் பாடுவதைக் கேட்கும் போது நமக்கு நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சி ஏனோ உண்டாகிறது." -

அண்மையில் வானதி பதிப்பக வெளிவந்த 'கல்கி பாடல்கள்' நூல் அவரது பாடல்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 'கல்கி பாடல்கள்' நூலில் கவிதையின் முழு வரிகளுமுள்ளன.

ஆனால் கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் அவர் பாடலின் சில வரிகளையே அவ்வப்போது பாவித்திருப்பதாக நினைவு. அந் நூலிலுள்ள பாடலின் முழு வரிகளும் கீழே:


"அலைகடலும் ஓய்ந்திருக்க

அகக் கடல்தான் பொங்குவதேன்?

நிலமகளும் துயிலுகையில்

நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும்

கூடுகளைத் தேடினவே.

வேட்டுவரும் வில்லியரும்

வீடு நோக்கி ஏகுவரே.

வானகமும் நானிலமும்

மோனமதில் ஆழ்ந்திருக்க

மான்விழியாள் பெண்ணொருத்தி

மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் அடங்கி நிற்கும்

மாருதமும் தவழ்ந்து வரும்

காரிகையாள் உளந்தனிலே

காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?

அலை கடல் கொந்தளிக்கையிலே

அகக் கடல்தான் களிப்பது மேன்?

நிலமகளும் துடிக்கையிலே

நெஞ்சக்ந் தான் துள்ளுவதேன்.

இடிஇடித்து எண் திசையும்

வெடி படும் இவ் வேளையிலே

நடனக் கலை வல்லவர்போல்

நாட்டியந்தான் ஆடுவதேன்.


'மீரா' திரைப்படத்தில் எம்.எஸ்.சுப்புலக்சுமி பாடுவதாக வரும் புகழ் பெற்ற பாடல் 'காற்றினிலே வரும் கீதம்'. இதனை எழுதியவர் கல்கி. ஆனால் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கவில்லை.

மணிமேகலையின் காதல்!

பொன்னியின் செல்வன் நாவலை ஐந்து பாகங்கள் நீட்டிய கல்கி நாவலை எவ்விதம் அனைவரையும் கவரும் வகையில் படைத்தாரோ அவ்விதமே இறுதி அத்தியாயத்தையும் மறக்க முடியாதவகையில் படைத்திருப்பார்.

அதுவரை நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, பெரிய/சின்ன பழுவேட்டைரையர்கள், பூங்குழலி, சேந்தன் அமுதன்., ஆழ்வார்க்கடியான், அருண்மொழிவர்மன், நந்தினி. மந்தாகினி. ஆனால் நாவலின் முடிவு முக்கியப்படுத்துவது வந்தியத்தேவனையும் , அதுவரை அதிகம் முக்கியப்படுத்தப்படாமலிருந்த கடம்பூர் சம்புவரையரின் புத்திரியான மணிமேகலையையும்தாம்.

வந்தியத்தேவன் மேல் தீராக் காதல்கொண்டிருக்கும் மணிமேகலை இறுதியில் அவன் மடியில் படுத்தவாறே உயிர்விடுவாள். அந்தக்காட்சியைத்தான் நாவலின் இறுதி அத்தியாயம் தொண்ணூற்றொன்றில் இடம் பெறும் இக்காட்சி சித்திரிக்கின்றது.

நாவலில் பட இடங்களில் கல்கியின் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக ஓடக்காரப்பெண் பூங்குழலி பாடுவதாக வரும் 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்' என்னும் பாடலைக் குறிப்பிடலாம். எனக்கு மிகவும் பிடித்த கல்கியின் கவிதைகளிலொன்று அக்கவிதை. நாவலின் இறுதியிலும் மணிமேகலை மரணவாசலில் நிற்கையில் பாடும் கவிதை வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவை வருமாறு:


"இனியபுனல் அருவிதவழ்

இன்பமலைச் சாரலிலே

கனிவுகுலவும் மரநிழலில்

கரம்பிடித்து உகந்ததெல்லாம்

கனவுதானோடி - சகியே

நினைவுதானோடி!

புன்னைமரச் சோலையிலே

பொன்னொளிரும் மாலையிலே

என்னைவரச் சொல்லிஅவர்

கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம்

சொப்பனந்தானோடி - அந்த

அற்புதம் பொய்யோடி!

கட்டுக்காவல் தான்கடந்து

கள்ளரைப்போல் மெள்ளவந்து

மட்டில்லாத காதலுடன்

கட்டிமுத்தம் ஈந்ததெல்லாம்

நிகழ்ந்ததுண்டோடி - நாங்கள்

மகிழ்ந்ததுண்டோடி!"

****************


மலர் உதிர்ந்தது!

பொன்னியின் செல்வன் நாவலின் மையக்கரு பொன்னியின் செல்வனின் மகுடத்தை மதுராந்தகருக்கு விட்டுக்கொடுத்த தியாகத்தையொட்டியதாகவிருந்தாலும் நாவலின் நாயகன் பொன்னியின் செல்வனல்லன். வாணர்குலத்து வீரனான வந்தியத்தேவனே நாவலின் நாயகன்.

நாவல் வந்தியத்தேவன் தன் நண்பன் கந்தமாறனின் தந்தையான கடம்பூர் சம்புவரையரின் அரண்மனையை நோக்கிச் செல்வதுடன் ஆரம்பமாகும் . இடையில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் அவர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நாவலின் இறுதி மீண்டும் வந்தியத்தேவன் கந்தமாறனுடன் சந்திப்பதில் முடிவுறும்.  கந்தமாறனின் தங்கையான மணிமேகலை வந்தியத்தேவன் மீது மிகுந்த காதல் கொள்கின்றாள். அதன் காரணமாகச் சித்தப்பிரமை மிக்கவளாகின்றாள். இறுதியில் வந்தியத்தேவனின் அரவணைப்பில் அவன் மடியில் உயிர் துறக்கின்றாள்.

நாவலில் வாசிப்பவர் உணர்வுகளை அதிரவைக்கும் துயரச் சம்பவம் மணிமேகலையின் மரணம். ஐந்தாம் பாகத்தின் தொண்ணூற்றோராவது அத்தியாயத்தில் முடிவுறும் நாவலின் அத்தியாயத்தலைப்பு : மலர் உதிர்ந்தது.  அந்த மலர் மணிமேகலை. மணிமேகலையின் மறைவினை வெளிப்படுத்தும் ஓவியர் வினுவின் ஓவியத்தையும் , நாவலின் இறுதிப்பக்கத்தையும் இங்குள்ள பக்கங்களில்  காணலாம்.

தமிழர்தம் இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் (அகமும், புறமும்) சிறப்பித்துக்கூறுகின்றன. பொன்னியின் செல்வன் நாவலையும் காதலையும், வீரத்தையும் சிறப்பித்துக் கூறுமொரு நவகால உரைநடைக் காவியமாகவே நான் கருதுகின்றேன். வந்தியத்தேவன் - குந்தவை காதல், வானதி - இராஜராஜன் காதல், மணிமேகலை - வந்தியத்தேவன் காதல், மந்தாகினி - சுந்தரசோழர் காதல் என்று மானுடர் பலரின் காதலைச் சிறப்பித்துக்கூறும் பொன்னியின் செல்வன் அக்காலத் தமிழரின் வீரத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றது. இதனால்தான் நாவல் தமிழர்கள் மத்தியில் தலைமுறைகள் கடந்து இன்றும் விருப்புடன் வாசிக்கப்படுகின்றது. என்னைப்பொறுத்தவரையில் சிலப்பதிகாரம் , மணிமேகலை போல் தமிழர் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கப்போகுமொரு உரைநடைக்காப்பியம்தான் கல்கியின் பொன்னியின் செல்வன். மக்களை அடையாத எந்தவொரு இலக்கியமும் நிலைத்து நிற்காது. 'பொன்னியின் செல்வன்'  விமர்சகர்கள் பலரின் புலமைத்துவ எதிர்ப்புகளையும் மீறி மக்களைச் சென்றடைந்த உரைநடை இலக்கியம். மக்கள் இலக்கியம் நிலைத்து நிற்கும்.

அழியாத கோலங்கள்: என் பிரியத்துக்குரிய வரலாற்றுக் காதலர்கள்!

தமிழ் வெகுசன இதழ்களில் வெளியான வரலாற்று நாவல்களில் என் மனதைக் கவர்ந்த காதலர்களில் முதலிடத்திலிருப்பவர்கள் யார் என்று நினைக்கின்றீர்கள்? உங்களுக்கெதற்கு வீண் சிரமம்? நானே கூறிவிடுகின்றேன்.

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் வலலவரையன் வாணர்குலத்து வீரன் வந்தியத்தேவனும், குந்தவைப்பிராட்டியாரும்தாம்.

நாவலில் ஈசான பட்டருடன் ஒருமுறை வந்தியத்தேவன் குந்தவையைச் சந்திக்கின்றான். அப்பொழுது அவள் ஓலையொன்றினை அவனிடம் கொடுத்து அதனை அச்சமயத்தில் ஈழத்திலிருக்கும் தன் தம்பி அருண்மொழிவர்மனிடம் (முதலாம் இராச இராச சோழன்) கொடுக்கும்படி பணிக்கின்றாள். அவ்விதம் ஓலையை அவனிடம் கொடுக்கும்போது அவளது காந்தள் மலரையொத்த விரல்கள் அவனது கையைத்தொட்டு விட்டன. அதனைக் கல்கி விபரிக்கும் அழகைப் பாருங்கள்:

"குந்தவை ஓலையை அவளிடம் கொடுத்தபோது காந்தள் மலரையொத்த அவளுடைய விரல்கள் வந்தியத்தேவனுடைய அதிர்ஷ்டக் கையைத்தொட்டன. அவனுடைய மெய் சிலிர்த்தது. நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. ஆயிரம் பதினாயிரம் பட்டுப்பூச்சிகள் அவன் முன்னால் இறகுகளை அடித்துக்கொண்டு பறந்தன. ஆயிரம் பதினாயிரம் குயில்கள் ஒன்று சேர்ந்து இன்னிசை பாடின. மலை மலையான வண்ண மலர்க்குவியல்கள் அவன் மீது விழுந்து நாலா பக்கமும் சிதறின. இந்த நிலையில் வந்தியத்தேவன் தலை நிமிர்ந்து குந்தவை தேவியைப் பார்த்தான். என்னவெல்லாமோ சொல்ல வேணும் என்று அவனுடைய உள்ளம் பொங்கியது. ஆனால் அதைச் சொல்லும் சக்தி உயிரற்ற வெறும் வார்த்தைகளுக்கு ஏது? சொல்ல வேண்டியதையெல்லாம் அவனுடைய கண்களே சொல்லின. அச்சமயம் வந்தியத்தேவனுடைய கண்கள் புனைந்துரைத்த கவிதைகளுக்கினையான காதற் கவிதைகளைக் காளிதாசனும் புனைந்ததில்லை. 'முத்தொள்ளாயிரம்' இயற்றிய பழந்தமிழ்க் கவிஞர்களும் இயற்றியதில்லையென்றால் வேறு என்ன சொல்ல வேண்டும்? வஸந்த மண்டபத்துக்கு வெளியில் எங்கேயோ சற்றுத்தூரத்தில் காய்ந்த இலைச்சருகுகள் சலசலவென்று சப்தித்தன. ஈசான் சிவ பட்டர் தம் குரலைக் கனைத்துக்கொண்டார். வந்தியத்தேவன் இந்த உலகத்துக்கு வந்து சேர்ந்தான்."

நாமும் அவனுடன் கூடவே இவ்வுலகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

நன்றி -.2022-09-28

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.