குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை !

சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை !

(இது ஒரு மீள் பதிவு)

--------------------------------------------------------------------

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரையா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணிமன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று, “சித்திரை” பிறந்திருக்கிறது. முந்தை ய வழக்கத்தின் அடிப்படையில் சிலர் “புத்தாண்டு” வாழ்த்துத் தெரிவிக்கக் கூடும். ”தை” மாதமே புத்தாண்டு பிறந்து விட்டது. எனவே இப்போது “வாழ்த்து”க் கூற வேண்டிய தேவை எழவில்லை. இதன் தொடர்பாக வானறிவியல் விளக்கம், படத்துடன் தரப்படுகிறது.

01. வான் அறிவியலின்படி  (               ) , டிசம்பர் 21 அன்று, உலக உருண்டையின் தென்பகுதியில் (SOUTH HEMISPHERE) 23-1/2 பாகையில் உள்ள சுறவக் கோட்டிலிருந்து (மகர ரேகை) சூரியன், வடக்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த வடக்கு நோக்கிய நகர்வை, (பயணத்தை) ”பஞ்சாங்கம்” வடமுகச் செலவு (உத்தராயணம்) என்று சொல்கிறது. டிசம்பர் 21 என்பது சிலை (மார்கழி) மாதத்தின் 5 –ஆம் நாள்.

02. வான் அறிவியலின் (ASTRONOMY) படி சிலை (மார்கழி) மாதம் 5 –ஆம் நாளில் தொடங்கும் வடமுகச் செலவை (உத்தராயணத்தை) பஞ்சாங்கம் சுறவம் (தை) மாதம் முதல் நாளில் தொடங்குவதாகக் குறிப்பிடுகிறது. இது ஒரு முரண்பாடு.

03. வடக்கு நோக்கிய நகர்வில் இருக்கும் சூரியன் மார்ச் 21 அன்று நில நடுக் கோட்டை (பூமத்திய ரேகையை) அடைகிறது. மார்ச் 21 என்பது மீனம் (பங்குனி) மாதத்தின் 7-ஆம் நாளுக்குச் சமம்.

04. தொடர்ந்து வடக்கு நோக்கிய நகர்வில் இருக்கும் சூரியன் சூன் 21 அன்று, உலக உருண்டையின் வடபகுதியில் (NORTH HEMISPHERE) 23-1/2 பாகையில் உள்ள கடகக் கோட்டைத் தொட்டுவிட்டு, வந்த வழியிலேயே எதிர்த் திசையான தெற்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த தெற்கு நோக்கிய நகர்வை (பயணத்தை) “பஞ்சாங்கம்” தென்முகச் செலவு (தட்சிணாயணம்) என்று சொல்கிறது. சூன் 21 என்பது ஆடவை (ஆனி) மாதத்தின் 6 –ஆம் நாள்.

05. வான் அறிவியலின் (ASTRONOMY) படி ஆடவை (ஆனி) மாதம் 6 –ஆம் நாளில் தொடங்கும் தென்முகச் செலவை (தட்சிணாயணத்தை) பஞ்சாங்கம் கடகம் (ஆடி) மாதம் முதல் நாளில் தொடங்குவதாகக் குறிப்பிடுகிறது. இதுவும் ஒரு முரண்பாடு.

06. தெற்கு நோக்கிய நகர்வில் இருக்கும் சூரியன் செப்டம்பர் 23 அன்று நில நடுக் கோட்டை (பூ மத்திய ரேகையை) அடைகிறது. செப்டம்பர் 23 என்பது கன்னி (புரட்டாசி) மாத்த்தின் 6 –ஆம் நாளுக்குச் சமம்.

07. தெற்கு நோக்கிய நகர்வில் இருக்கும் சூரியன் டிசம்பர் 21 அன்று சுறவக்கோட்டை (மகர ரேகை) அடைந்து மீண்டும் தன் வடமுகப் பயணத்தைத் தொடங்குகிறது. இந்தச் செய்தியின் விரிவு, மேலே பத்தி 1 –ல் தரப்பட்டுள்ளது. அதைக்காண்க !

வான் அறிவியலின் (ASTRONOMY) படி சிலை (மார்கழி) மாதம் 5-ஆம் நாளே வடமுகச் செலவு (உத்தராயணம்) தொடங்கிவிடுகிறது ஆனால் பஞ்சாங்கத்தின் படி, மேலும் 23 நாள் சென்ற பின்பு, சுறவம் (தை) மாதம் முதல் நாளில் தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது.

இது போன்றே, ஆடவை (ஆனி) மாதம் 6 –ஆம் நாள் தென்முகச் செலவு (தட்சிணாயணம்) தொடங்குகிறது. ஆனால் பஞ்சாங்கத்தின் படி மேலும் 25 நாள் சென்ற பின்பு, கடகம் (ஆடி) மாதம் முதல் நாளில் தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது.

வான் அறிவியலின் (ASTRONOMY) படி, சூரியச் செலவின் (பயணத்தின்) சிறப்பு நாள்கள் என்பவை சிலை (மார்கழி) 5-ஆம் நாள், மீனம் (பங்குனி) 7-ஆம் நாள், ஆடவை (ஆனி) 6 –ஆம் நாள், கன்னி (புரட்டாசி) 6 –ஆம் நாள் ஆகியவையே. இதில் மேழம் (சித்திரை) முதல் நாள் எங்கிருந்து வந்து சேர்ந்தது ? சித்திரை முதல் நாளில் புத்தாண்டு எப்படித் தொடங்கும் ?

வடமொழியார் வகுத்துள்ள வானியல் கணிப்புக்கும் அறிவியலார் வகுத்துள்ள வானியல் கணிப்புக்கும் வேறு பாடு உள்ளது. சூரியச் செலவை (நகர்வை) தவறாகக் கணித்து, அதன் அடிப்படையில் ஏற்படுத்தப் பெற்ற “மேஷம்”, “ரிஷபம்”, “மிதுனம்”........”மீனம்” முதலான மண்டிலங்கள் (இராசிகள்) தவறாக அமைகின்றன. எனவே இந்த தவறான கணிப்பின் அடிப்படையில், சூரியன் “மீனம்” மண்டிலத்திலிருந்து “மேஷம்” மண்டிலத்தில் நுழையும் “சித்திரை” முதல் நாளே புத்தாண்டு நாள் என்று வடமொழியார் வகுத்துள்ள விதி பொருத்தமற்றது.

ஆகையால், “சித்திரை” முதல் நாள் புத்தாண்டின் தொடக்கமும் அல்ல; அதைக் கொண்டாட எவ்விதக் காரணமும் இல்லை ! சில திங்கள் முன்பு தமிழ்ப் பணி மன்றத்தில் அறிவித்திருந்த படி சுறவம்” (தை) முதல் நாளே புத்தாண்டு நாள் ! சுறவம் திங்களே புத்தாண்டின் தொடக்க மாதம் !

ஆகவே, நண்பர்களே ! “சித்திரை” முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டு ஒருவர்க்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்வதைக் கைவிடுவோம் !

--------------------------------------------------------------

[ அறிவியல் கோட்பாட்டின்படி, சூரியன் ஒரே இடத்தில் நிலையாக இருக்கிறது. அது வடக்கு நோக்கியோ, தெற்கு நோக்கியோ நகர்வதில்லை. ஆனால் வடமொழியார் வகுத்துள்ள பஞ்சாங்கத்தின் படியும், அவர்கள் ஏற்படுத்தியுள்ள சோதிடக் கலையின் படியும் பூமி நிலையாக ஒரே இடத்தில் நிற்கிறது; சூரியன் தான் நகர்கிறது. கட்டுரையைப் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பாக, சூரியன் வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் நகர்வதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ]

--------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை:

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ: 2050, மீனம்,30]

{13-04-2019}