குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 18 ம் திகதி புதன் கிழமை .

ஒழுக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி சிந்திக்கத் தூண்டுவதே உண்மைச் சமயமாகும்!

26.01.2022....தி.ஆ 2053...மலேசிய நாட்டு  தமிழ் ஆற்றலாளன் திரு.இரா. திருமாவளவன் உரை முழக்கம்...

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே!

எல்லாம் வல்ல பேரிறைக்கு எனது வணக்கம். இன்று இந்த நிகழ்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற தேமியாங் வட்டார இந்து சங்க தலைவர் ஐயா கிருட்டிணன் அவர்களே! என்னை இந்த நிகழ்ச்சிக்கு விடாப் பிடியாக நின்று வந்தே தீர வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் தொடர்பு கொண்டு என்னை இங்கு வரும்படியாகச் செய்த தமிழ்த் திரு லோகன் அவர்களே! மற்றும் இந்தத் தேமியாங் வட்டார இந்து சங்கத் பொறுப்பாளர்களே! தாய்மார்களே அன்புத் தமிழ் நெஞ்சங்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தலை தாழ்த்தித் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சி ஒரு சமய அமைப்பின் நடவடிக்கை என்பதால் சமயம் தொடர்பாகவும் கொஞ்சம் விளக்கப் படுத்தி விட்டு பிறகு மற்ற பொது செய்திகளை நான் பேசலாம் என்று நினைக்கின்றேன். தமிழில் மட்டுந்தான் வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெரிய சிறப்பு உண்டு. பெருமை உண்டு. தமிழில் மட்டும் தான் சமயம் என்ற சொல் மதம் என்ற சொல் கடவுள் என்ற சொல் பொருள் பொதிந்தனவாக உள்ளன. இந்தச் சொற்களை ஆராய்ச்சிச் செய்தால் அவற்றில் தென்படுகின்ற கருத்துகள் மிக ஆழமாக இருக்கும். கடவுள் என்று சொன்னாலே காலங் காலமாக நாம் எதைப் பார்த்தோமோ எதைக் கற்றுக் கொடுத்தோமோ அதைத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பொருள் பொதிந்த சொல் தமிழில் மட்டுந்தான் உண்டு. வேறு எந்த மொழியிலும் இந்த மாதிரி பொருள் தரும் சொல் கிடையாது. மலாய் மொழியில் Tuhan என்று சொல்கிறான். ஆங்கிலத்தில் God என்று சொல்கிறான். அதற்கு பொருள் விளக்க முடியாது. ஆனால் கடவுள் என்ற சொல்லுக்கு நாம் பொருள் விளக்கம் சொல்ல முடியும். கட என்றால் கடத்தல் செல்லுதல் என்ற பொருளாகும். உள் என்றால் உள்ளே என்ற பொருளாகும். இதை இன்னொரு மாதிரியும்திருப்பிச் சொல்வார்கள். உள் கட என்று. உள்ளே கடந்து பார். உள்ளே கடந்து செல். என்ற பொருளை உணர்த்துகின்றது கடவுள் என்ற சொல். எனவே அதைப் பார்க்கும் பொழுது அது பொருளாக, அது ஓர் உருவமாக, ஒரு பால் வகைப் பட்டதாக இல்லாமல் எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டதாக விளங்குகின்றது. அதை ஒரு பொருளாகவோ ஒரு மனிதனாகவோ விலங்காகவோ பறவையாகவோ எந்த வகையிலும் அடக்க முடியாது. எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் என முன்னோர்கள் சொன்னது போல் அது எல்லையற்றது.

அந்தக் கடவுள் உணர்த்துகின்ற இன்னொரு பெரிய செய்தி என்னவன்றால், திருமந்திரம் என்ற நூல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த நூலிலே இந்தச் செய்தி சொல்லப் பட்டுள்ளது. நம்மவர்கள் நமது முன்னோர்கள் எழுதிய பண்டைய நூல்களை உள்ளபடியாகவே உணர்ந்து படித்திருப்பார்களேயானால் கண்டிப்பாக இந்த அரிய செய்திகளை அறிந்திருப்பார்கள். நம்மவர்கள் எளிய ஆட்கள் இல்லை. மிகப் பெரிய கருத்துகளையும் சிந்தனைகளையும் தத்துவங்களையும் வாரி வழங்கிச் சென்றவர்கள் நம்மவர்கள். அந்தத் திருமந்திர நூலில் பல பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்கள் எவற்றையும் தள்ளத் தக்கன என்று தள்ளிவிட முடியாது. எனவே அதில் குறிப்பிட்ட ஒரு பாடலைத்தான் நான் சொல்ல விருக்கின்றேன்.

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னை அர்ச்சிக்கத் தானிருப்பானே!

என்பதுதான் அந்தப் பாடல்

இந்தப் பாடல் இடம் பெற்ற நூல்தான் திருமந்திரம். மிக அரிய கருத்துகளைத் தத்துவங்களை உள்ளடக்கிய நூல்தான் திருமந்திரம். ஆனால் அதை யாரும் படிப்பதில்லை. நமக்குக் கிடைத்த மற்றொரு அரிய நூல் திருக்குறள். பண்டைத் தமிழ் முன்னோர்கள் எழுதிய நூல்கள் பலவன. இரண்டை மட்டும் குறிப்பிட முடியாது. தொல்காப்பியம் என்ற நூல் இருக்கிறது. அது இலக்கணத்தையும் வாழ்வு இலக்கணத்தையும் குறிக்கிறது.அதுவும் மிகப் பெரிய வாழ்வியல் தத்துவங்களைக் குறிக்கின்ற நூல்தான். அதைச் சிலர் மொழிக்குள்ள இலக்கண நூலாக மட்டுந்தான் பார்ப்பார்கள். ஆனால் அது வாழ்வு இலக்கணத்தையும் மெய்யியல்களையும் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறது. அதில்தான் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்.

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே!

என்பது தொல்காப்பியத்தில் வரும் ஒரு பாடல் வரி. இந்த உலகத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரிக்கும் கண்டிப்பாக இறப்பென்று ஒன்று உண்டு. பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பென்று ஒன்று இருக்கும் . அது இயற்கை நீதி. அதிலிருந்து யாரும் மாறவும் முடியாது; விலகவும் முடியாது. இந்தப் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் இருப்பதுதான் வாழ்க்கை. இந்த தொடக்கம் முடிவு இரண்டுக்கும் நடுவில் மாந்தன் உழலுகின்றான்; வாழுகின்றான். அந்தப் பிறப்பு வாழ்க்கை என்பது எப்படி அமைய வேண்டும். பிறந்த ஒருவன் இறக்கும் போது எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் இந்த உலகத்தால் போற்றப் படுவான். அவனை சூழ்ந்திருக்கும் மக்களால் நினைத்துப் பார்க்கக் கூடியவனாகப்  போற்றப் படக் கூடியவனாக இருப்பான் என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே இந்த வாழ்க்கை மிகவும் முக்கியம். இன்றியமையாதது.

இந்த வாழ்க்கை இலக்கணத்தைத் தெரியாத காரணத்தால் முறையாக வகுத்துப் படிக்காத காரணத்தால் இடையில் ஏற்படக் கூடிய பல்வேறு தடங்கல்களில் இந்த மனிதன் மாட்டி சிக்கிக் கொள்கிறான். எப்படிச் சிக்கிக் கொள்கிறான்? திருக்குறளில் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு மிக மிக இன்றியமையாதது அறம் என்று. அறம் என்றால் என்னவென்றால் மனத்தூய்மை. திருக்குறளில் வள்ளுவர் என்ன சொல்கிறார்

.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீரப் பிற.

என்பது குறள். மனத்தூய்மை இல்லாத ஒருவன், அவன் பேசினாலோ செயற்பட்டாலோ எழுதினாலோ எப்படி இருந்தாலும் அவன் வெளிப்பாடுகள் என்றும் தூய்மையாக இருக்காது. ஏன் தூய்மையாக இல்லை? மனம் தூய்மையாக இல்லை. புரிகின்றதா? எனவே மனத்தூய்மை என்பது மிக மிக இன்றியமையாதது. மனம் தூமையாக இருக்க வேண்டும் என்றால் அந்த மனத்தைத் தூய்மை படுத்தக் கூடிய தூய்மையாகவே வைத்திருக்கக் கூடிய செய்திகளை அவன் பார்க்க வேண்டும்; கேட்க வேண்டும்; படிக்க வேண்டும். உண்மையா இல்லையா? என்றைக்குமே மனதைத் தூய்மையாக வைத்திருக்கக் கூடிய செய்தியைப் பார்க்க வேண்டும். என்றைக்குமே மனம் அழிந்து போகா வண்ணம் தூய்மையான சிந்தனைகளையும் கருத்துகளையும் நெறிகளையும் அவன் கேட்க வேண்டும். அப்படியான ஒன்றை அவன் கேட்க வேண்டும். அப்பொழுதான் அவன் மனம் தூய்மையாக இருக்கும். நெறியாக இருக்கும். தூய்மையுடைய ஒன்றுதான் அறமாகும்.

இந்த அறத்துக்கு மேலும் இலக்கணம் வகுத்துச் சொல்கிறார். என்ன சொல்கிறார் என்றால், ஒரு மனிதன் தள்ளத் தக்க கூடிய நான்கு கூறுகளையும் பின்பற்றக் கூடாது என்கிறார். என்ன அந்த நான்கு கூறுகள் என்றால். அழுக்காறு இருக்கக் கூடாது. ஒருவருடைய வளர்ச்சியிலோ பிறரைப் பார்த்தோ ஏற்றுக் கொள்ள முடியாமை. அவன் இப்படி சிறப்பாக வந்து விட்டானே நன்றாக வளர்ந்து விட்டானே என்று மனத்துக்குள்ளே ஏற்றுக் கொள்ள முடியாமை என்கின்ற அழுங்கல் மனப்பான்மை. அழுக்காறு என்றால் அழுக்கு வழி அல்ல. ஏற்றுக் கொள்ள முடியாமை என்று பொருள். அதனைப் பொறாமை என்றும் சொல்வார்கள். இதனால் ஒருவன் பிறருக்குக் கேடு செய்ய தொடங்கி விடுவான்.

தொடர்ந்து அவா இருக்கக் கூடாது என்கிறார். அவா என்றால் பேராசை. அளவுக்கு மீறிய ஆசை. அளவுக்கு மீறிய ஆசை பட்ட ஒருவன், தன்னையும் கெடுத்துக் கொள்வான். மற்றவனையும் கெடுத்து விடுவான். ஆசை என்ற வெறியால் அவன் தன்னையும் அழித்து மற்றவனையும் அழித்து விடுவான். இதனால்தான் மனிதன் சீர் கெடுகிறான்; இவ்வுலகமும் சீர் கெடுகிறது. நம்மவர்கள் மும்மலம் என்று கூறுகிறார்கள் அல்லவா? மும்மலம் என்றால் என்ன? தள்ளத் தக்க மும்மலம் என்றால், ஒன்று மண்ணாசை, மற்றது பெண்ணாசை, இன்னொன்று பொன்னாசை. தனக்கு வாழ்வதற்கு நிலம் வேண்டும் என்று எண்ணுவது தப்பில்லை. ஆனால் தனக்கு மட்டுமே வேண்டும் எண்ணுவது தப்பு. அதே போல் ஆண் பெண் விருப்புகள் இயல்பானவை. அதில் ஒழுக்கமும் நெறியும் இருக்க வேண்டும். வெறி இருந்தால் அழிவுதான் ஏற்படும். மூன்றாவது பொன்னாசை. பொன்னாசை என்பது பணத்தைக் குறிக்கும். பண வெறி இந்த மாந்தனை எந்த அளவுக்கு அலைக்கழிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். கொலை கொள்ளை முதலான பல்வேறு கேடுகள் இந்தப் பண வெறியினால் ஏற்படுகின்றன.

மாந்தன் வளர்கின்ற பொழுதே அவனுடைய சிந்திக்கின்ற அறிவால் மனவளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் ஏற்படுகின்றது. இவை இரண்டும் ஒழுங்காக அமைந்தால்தான் ஒருவன் சரியான விடை காண முடியும் சரியான முடிவு காண முடியும். ஆனால் ஒழுங்கு முறை அமையாததற்கு அவனுடைய ஆசைகள் தடையாக இருக்கின்றன.

அவன் வளரும் போதே அறிவைத் தேர்ந்தெடுப்பதற்கு மாறாக ஆசையின் தூண்டுதலால் அறிவு கெட்ட வேலையைச் செய்யத் தொடங்கி விடுகின்றான். அறிவுடையவனாக அவன் ஆவதில்லை. சிந்தனையுடையவனாக ஆவதில்லை. சிந்தனை அவனுக்குப் பிறப்பதில்லை. அறிவு அவனுக்கு நிரம்புவதில்லை.

ஏனென்றால் இது போன்ற தடைகள். இந்த மூன்று வகையான பேராசைகளாலும் ஒருவனுக்கு கெடுதல்கள் வந்து சேர்கின்றன. இதுவே அவா என்று சொல்லப் படும். இந்த அவா மாந்தனுக்கு இருந்தால் மனிதன் மனிதனாக வாழ மாட்டான். மற்றவனையும் வாழ விட மாட்டான். அழிக்கத் தொடங்கி விடுவான்.

மூன்றாவது வெகுளி. வெகுளி என்றால் என்ன?அளவுக்கு மீறிய சீற்றம்.

அதாவது தமது அறிவையே கெடுக்கின்ற ஆத்திரம். இதற்கு ஆட்பட்ட ஒருவனுக்கு அறிவே வேலை செய்யாது. இதனால் இவனும் மற்றவனுக்குக் கெடுதல் செய்து விடுவான். வெகுளி என்று சொன்னால் பொதுவாக நாம் என்ன நினைப்போம்? ஒன்றும் தெரியாதவன் என்று நினைப்போம்.

ஆனால் இங்கு வெகுளி என்பது எல்லை கடந்த ஆத்திரம் என்றுதான் பொருள். ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். அளவுக்கு மீறிய ஆத்திரம் கொள்வதால் ஒருவன் என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியாது.

அவனுக்கே தெரியாமல் போய்விடுகின்ற காரணத்தால் அவன் தனக்கும் கேடு செய்து விடுவான். மற்றவனுக்கும் கேடு செய்து விடுவான். எனவே அந்த வெகுளியும் இருக்கக் கூடாது என்கிறார் வள்ளுவர். தொடர்ந்து நான்காவதாக இன்னாச் சொல் என்கிறார்.

இன்னாச் சொல் என்பது பிறருக்குக் கெடுதல் தருகின்ற சொல் இதனைப் பேசக் கூடாது.

பிறருக்குப் பழியைத் தருகின்ற சொற்களைப் பேசக் கூடாது. ஒருவன் நல்லவனாக இருப்பான். ஆனால் அவனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கூறி பழியை ஏற்படுத்துவது. இன்னலை ஏற்படுத்துவது. துன்பம் தருகின்ற சொற்களைப் பேசுவதாலேயே ஒருவனுக்கு இன்னல் நேர்ந்து விடும். தொல்லைகள் நேர்ந்து விடும். உண்மையாக இருக்காது ஆனால் பொய்யானக் கருத்துகளைச் சிலர் மீது இட்டுக் கட்டிச் சொல்லி விடுவார்கள். இதனால் ஒருவன் வாழ்க்கையையே கெடுத்து விடுவார்கள்.

இந்த நான்கு கூறுகளும்,  கேடுகளும் இல்லாமல் வாழ்வதுதான் அறம். இந்த நான்கையும் அகற்றிவிட்டு பார்க்கும் போது ஒருவன் தூய்மையாக வாழ முடியும் .

அதற்குப் பெயர்தான் அறம் என்று சொல்கிறார் வள்ளுவர். எனவே ஏன் நான் இந்த அறத்தைப் பற்றி இங்கே சொல்கின்றேன் என்றால் பிறந்தது முதல் இறப்பது வரை ஒரு மனிதன் அற வாழ்க்கை வாழ வேண்டும். அப்போதுதான் அவன் இறந்து விட்டான் என்றால் அவன் இறப்புக்கு ஒரு பொருளிருக்கும்.

அவன் இறந்த பிறகும் நான்கு பேர் அவனைப் பற்றிப் பேசுவார்கள். நான்கு பேர் மட்டுமல்ல இந்த உலகே பேசும். மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்.

என்று ஒரு பாடல் இருக்கிறதா இல்லையா ? உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம். மிக அருமையான பாட்டு. இன்னொரு பாட்டு நான் ஏன் பிறந்தேன் இந்த நாட்டிற்கு நலம் என்ன புரிந்தேன் என்பதுதான் அந்தப் பாட்டு.

பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமை பட வேண்டும். உன்னைப் பெற்றதனால் மற்றவராலே அவள் போற்றப் பட வேண்டும். கற்றவர் சபையினில் நீ நடந்தால் தனி இடமே தர வேண்டும். உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் இந்த உலகே அழ வேண்டும். இது அந்தக் காலத்தில் எழுதப் பட்டப் பாட்டு.

அக்காலத்தில் திருக்குறளை அடிப்படையாக வைத்துப் பாடல்களைப் புனைந்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்று.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்டத் தாய்

என்ற குறளையும் அந்தப் பாடலையும் பொருத்திப் பாருங்கள். தொடர்பிருப்பதை உணரலாம்.

எனவே ஒரு மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் வளர்கின்ற போது நல்ல சிந்தனைகளையும் நெறிகளையும் அவனுக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தோமானால் அவன் இறக்கும் போது நல்ல புகழையும் நல்ல பேரையும் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் எந்த இனத்தில் பிறந்தானோ அந்த இனத்திற்கும் அவன் நாட்டிற்கும் இந்த உலகத்திற்கும் தேடித்தந்து இறப்பான். அந்த இறப்புக்கு ஓர் அர்த்தம் உண்டு.

அதனால்தான் தொல்காப்பியர் அவ்வாறு சொன்னார். சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன் என்று. அது எளிய வரியா? சாதாரண வரியா? ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்ட நூல் அது. அந்த தொல்காப்பிய நூலில் சொல்லப் பட்ட செய்திதான் அது. நீ இறந்தாய் என்றால் அந்த இறப்புக்குப் பயன் என்ன தெரியுமா? நீ சிறந்தது பயிற்றியிருக்க வேண்டும். இந்த உலகத்திற்கு இந்த ஊருக்கு உன்னுடைய வாழ்க்கையால் நன்மை கிடைத்திருக்க வேண்டும். நாலு பேரு நன்றாக வாழ வேண்டும். இந்த நல்ல நெறிகளை நாம் இந்த உலகத்தில் விதைத்துச் செல்ல வேண்டும். இவற்றையெல்லாம் வள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

  1. உள்ளத்துள் எல்லாம் உளன்.

நீ உள்ளத்தால் பொய்யாது வாழ்வாயானால் உலகமே போற்றுகின்ற அளவில் நீ வாழ்வாய். வெறும் வாயளவில் மட்டுமல்ல உள்ளத்தளவிலும் ஒருவனிடம் பொய்மை இருக்கக் கூடாது. உள்ளத்தளவில் ஒருவன் பொய்யாது இருந்தால்தான் அவன் உலக வாழ்க்கையிலும் பொய்யாது இருப்பான். உள்ளத்திலும் உதட்டிலும் பொய்யிருப்பது பொய்த்துப் போன வாழ்க்கையாகும். போலியான வாழ்க்கையாகும் நடிப்பிற்காக வாழும் வாழ்க்கையாகிவிடும். அதனால்தான் நாம் சொல்கிறோம் சும்மா பேச்சு மட்டுந்தான் அவனுக்கு என்று. ஏன் அவன் உள்ளத்தில் வேறு, உதட்டில் வேறு, நடத்தையில் வேறு. அப்படி ஒருவனுடைய வாழ்க்கை இருக்கக் கூடாது. சமயத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

உண்மை இல்லை என்றால் ஏது சமயம்? நல்ல நெறியும், நல்ல ஒழுக்கமும், நல்ல பண்பாடும், நல்ல மாண்பும், நல்ல சிந்தனையும் இல்லையென்றால் அது சமயம் அன்று. உண்மை நெறிக்குப் புறம்பானது சமயமாகாது. அதற்கு அப்பாற்பட்டதல்ல சமயம். அதை உள்ளடக்கியதுதான் சமயம். உணமைதான் சமயத்திற்கு அடிப்படை. சமயம் என்றாலே என்ன? பண்படுதல் என்றுதான் பொருள். சோறு சமைந்து விட்டதா என்று கேட்போம். ஏன் எதற்கு? சாப்பிடுமளவிற்கு சமைந்து விட்டதா? பக்குவம் அடைந்து விட்டதா? அதனால்தான் தமிழன் அதற்குச் சமையல் என்று பேர் வைத்திருக்கிறான். நல்ல சமயம் வந்தால் வருகிறேன் என்று சொல்வோம். அப்படி என்றால் என்ன? அதற்குரிய நேரம் வந்தால் நான் வருகிறேன் என்று பொருள். அதனால் தகுந்த நேரத்திற்குச் சமயம் என்று பேர் வைத்தான். பெண் பூப்படைந்து விட்டால் சமைந்து விட்டால் என்று கூறுவார்கள்.

வாழ்வின் பேற்றுக்குரிய பக்குவ நிலையை அடைந்து விடடாள் என்று பொருள். தமிழில்தான் இத்தகைய பொருள் பொதிந்த சொற்களைப் பார்க்கலாம். எனவே வாழ்க்கையில் நல்ல ஒழுக்கத்தையும் நல்ல நெறிகளையும் நல்ல பண்புகளையும் தெரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு அந்த வாழ்கையை ஒழுக்கமுடைய வாழ்க்கையாக வாழ்கின்ற முறை இருக்கின்றதல்லவா? அதற்குப் பேர்தான் சமயம்.

நான் பெரிய சமயவாதி என்று கூறிக் கொண்டு காட்டிக் கொண்டு ஆனால் வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அதற்குப் பெயர் சமயம் அன்று. அவ்வாறு ஒழுங்கீனங்களைச் சொல்வதும் சமயமாகாது.

இவற்றையெல்லாம் வகுத்துக் கொடுத்தவர் யார்? இந்த நெறிகளை வகுத்தவர்கள் தமிழர்கள். என்றைய தமிழர்கள்? பண்டைய தமிழர்கள். பண்டைய தமிழன் எழுதி வைத்திருக்கிறான் அதனால் இன்றைய தமிழன் பாதுகாக்கப் பட்டு வருகின்றான். இன்றைய தமிழன் ஒன்றும் படைக்கவில்லை. அந்த நெறிகளெல்லாம் இன்றைய தமிழனை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழன் என்றால் எப்படிப் பட்ட இனம் என்று நாம் வேறு இனங்களுக்குக் காட்டுவதாக இருந்தால் இன்றைய தமிழனை வைத்துக் காட்ட முடியாது. ஏனென்றால் இவன் ஒரு நெறியில் இல்லை. ஒரு வாழ்க்கையில் இல்லை. ஒரு பண்போடு இல்லை. தன் பண்பாட்டைப் பாதுகாப்பவனாக இன்றைய தமிழன் இல்லை. தன் மொழியைப் போற்றுகின்றவனாக பாதுகாக்கின்றவனாக இன்றைய தமிழன் இல்லை. தன் மொழியைத் தானே அழிப்பவனாக இன்றைய தமிழன் இருக்கின்றான். அன்றைய தமிழன் அப்படி இல்லை. அவனைத்தான் இமையத்தின் உச்சியில் வைத்துப் போற்ற வேண்டும். அவன்தான் நம்முடைய வாழ்வியல் நெறிகளையெல்லாம் உலகத்துக்கே வாரி கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

பண்டைய நூல்களைப் பார்த்தீர்களேயானால் பெரும்பாலும் உலகு உலகு என்றுதான் தொடங்கும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

என்று உலகை நோக்கித்தான் சொல்லியிருக்கிறான். தனிப்பட்ட மனிதர்களை இனங்களை குழுக்களைக் குறிப்பிடவில்லை. இதைப் பார்த்துதான் மற்றவர்களும் உலகப் பொதுமையைக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழர்கள் தமிழர்களுடைய நூல்களையும் அடையாளங்களையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளாத காரணத்தால் உண்மையை உணர்ந்து கொள்ளாத காரணத்தால் இன்றைய தமிழன் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். இன்று இவனுடைய மொழியைப் பாதுகாக்கவில்லை, பண்பாட்டைப் பாதுகாக்கவில்லை, இவன் நாகரிகத்தைப் பாதுகாக்க வில்லை. எல்லாவற்றையும்  தூக்கி எறிந்து விட்டு தெருவில் நிற்கிறான். அடுத்த பண்பாட்டின் மீது மோகம் கொண்டு அதைத் தனது வாழ்க்கையாகக் கருதிக் கொண்டு இருக்கின்றான். இவனுக்கு உயர்வாக இருந்த நாட்டையே அடுத்தவனிடத்தில் கொடுத்துவிட்டு தெருவில் நிற்கின்ற இனமாக இருக்கின்றான். நமக்கென்று ஒரு நாடு இருக்கின்றதா? இவ்வுலகில் தமிழனுக்கென்று ஓர் ஊர் இருக்கின்றதா? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்? ஒரு காலத்தில் இருந்தன. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று ஒரு காலத்தில் சொன்னோம். பெரும் பெரும் சேர சோழ பாண்டிய மன்னர் எல்லாம் படையெடுத்து இமையம் கடாரம் வரை சென்று ஆண்டார்கள் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. இன்று நம்முடைய நாடு, நம்முடைய படை, நம்முடைய அரசு என்று இன்றைக்கு அறவே இல்லை. இவனுடைய ஏமாளித் தனத்தால் இவனுடைய பெருமைகளையும், இவனுடைய பண்பாடுகளையும், இவனுடைய நெறிகளையும் போற்றிக் கொள்ளாத இழிவு தனத்தால் அடுத்தவனுக்கு அடிமையாகி மிகக் கேவலமான நிலையில் கிடக்கின்றான். எந்த நாட்டில் வாழ்கிறானோ அந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப அடிமையாகி விடுகின்றான். இதனால் இவனுடைய நடை உடை பாவனை எல்லாம் மாறி போய் விட்டன. தமிழையே வீட்டில் பலர் பேசுவதில்லை!

இது பற்றியெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் மொழியில்தான் சமயத்தின் அருமையை மிகத் தெளிவாக வேறு எவரும் மறுக்க முடியாத அளவிற்கு ஒழுங்கு படுத்திக் காட்டியிருக்கின்றான். வேறு எங்கேயும் இவ்வாறு பார்க்க முடியாது. நான் சொன்னேன் இல்லையா? தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னை அர்ச்சிக்கத் தான் இருப்பானே! என்பது திருமந்திரத்தின் ஒரு பாட்டு. இதன் பொருள் என்ன? உங்களை நீங்கள் உணர வேண்டும். உங்களுக்குளாகவே இருக்கின்ற ஆற்றலை நீங்கள் உணர வேண்டும். அதற்குப் பேர்தான் கடவுள். நீங்கள் உங்களையே கடந்து பாருங்கள். உங்களையே உணர்ந்து பாருங்கள் என்று சொல்கிறான். இந்தச் சொல்லுக்கு மேல் நாட்டுக் காரன் இப்பொழுது self realization என்று சொல்கிறான். தன்னை அறிதல் என்றால் என்ன? தனக்குள் இருக்கும் மாபெரும் சக்தி என்றால் என்ன? என்று ஆராய்ச்சிப் பன்னி கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறான் .

அண்டப் பெருவெளியின் உண்டைப் பிறக்கம்

என்று திருவாசகத்தில் ஒரு வரி வரும். இந்த அண்டப் பெருவெளி பற்றி பலரும் பாடியிருக்கிறார்கள். நம்முடைய தாயுமானவர் சுவாமிகள் பாடியிருக்கிறார். நம்முடைய வள்ளல் பெருமான் அருட்சுடர் இராமலிங்க அடிகளார் பாடியிருக்கிறார்.

இந்த அண்டப் பெருவெளியைப் பற்றி ஒட்டுமொத்தமாக ஒரு கருத்து சொல்கிறார்கள். என்னவென்றால் அதற்கு எல்லையில்லை. அதற்கு முடிவு கிடையாது . இந்த இடத்திற்கு முடிவு உண்டு. ஆனால் அண்டப் பெருவெளிக்கு எல்லைவகுக்க முடியாது. இந்த இயற்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்த வெளி நாட்டுக் காரர்கள் இத்தனை நான்காகப் பகுத்து வைத்திருக்கிறார்கள்.

கிரேக்க அறிஞர்கள் இவாறுதான் குறிப்பிட்டார்கள் . சாக்கரடீசு சொல்லும் தத்துவத்தில் நான்குதான் குறிப்பிடப் பட்டுள்ளது.

என்ன அந்த நான்கு என்றால் நிலம் , தீ , நீர், வளி என்பனவே அவை.

நிலம் என்பது மண். நீர் என்பது தண்ணீர், தீ என்பது நெருப்பு . வளி என்பது காற்று. ஆனால் தமிழன் எத்தனை தெரியுமா சொல்லியிருக்கின்றான்? ஐந்தாக பிரித்து வைத்திருக்கின்றான். அவற்றை ஐந்து பூதங்கள் என்று சொன்னான். பூதம் என்றால் பேய் என்று பொருள் அல்ல .

பூதம் என்றால்  பெரிய என்று தொடரும் என எதிர்பார்க்கின்றோம்! ( குமரிநாடு இணையத்தின் இடைச்செருகல்)

தொடரும்