இதனால் முன்பு கருதப்பட்டதைவிட 7 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே மனிதர்கள் அமெரிக்க கண்டத்தில் கால்பதித்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆசியாவில் இருந்து மனிதர்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்ற விவாதம் பல பத்தாண்டுகளாக முடிவில்லாமல் தொடர்கிறது.
வட அமெரிக்காவின் உட்பகுதிகளில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பல ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
விளம்பரம்
இப்போது நியூ மெக்சிகோவில் ஆய்வில் ஈடுபட்டுள்ள ஒரு குழு அங்கு கண்டறியப்பட்டுள்ள ஏராளமான மனித காலடித்தடங்கள் 23 ஆயிரம் முதல் 21 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தவை என்று கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்கக் கண்டத்துக்கு மனிதர்கள் எப்போது வந்தார்கள் என்பது தொடர்பான பார்வையை இந்த புதிய கண்டுபிடிப்பு மாற்றியமைக்கலாம். நமக்கு இதுவரை தெரிந்திராத தலைசிறந்த இடம் பெயரும் குழுவாக அது இருக்கக்கூடும். இந்த முதல் குடியேறிகள் குலம் அழிந்தும் போயிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆழம் குறைந்த ஓர் ஏரியின் ஓரத்தில் மென்மையான மண்ணில் இந்தக் காலடித் தடங்கள் பதிந்திருக்கின்றன. இப்போது இந்தப் பகுதி வெண் மணலில் உள்ள வறண்ட காரப்படுகையாக உள்ளது.
இந்த ஆய்வு Science. என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
மண் படிவு அடுக்குகளில் இந்தக் கால்தடத்துக்கு மேலேயும், கீழேயும் கண்டெடுக்கப்பட்ட விதைகளை கார்பன் கால அளவு பரிசோதனைக்கு அனுப்பியது அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஓர் ஆய்வுக்குழு. இதன் மூலம் கால்தடத்தின் காலத்தை அவர்களால் மிகத் துல்லியமாக கணிக்க முடிந்தது.
ஆரியர்களும், சிந்துவெளி நாகரிகமும்: மரபணு ஆய்வு சொல்லும் புதிய வரலாறு
'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'
கால் தடத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது அவை பெரிதும், முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் காலடித் தடமாக இருக்கும் என்றும் அவ்வப்போது பெரியவர்கள் வந்து போன தடங்களும் இருப்பதாகவும் அறிவியலாளர்கள் நினைக்கிறார்கள்.
விதைப் படிவுகளை ஆராயும் விஞ்ஞானி.
பட மூலாதாரம்,BOURNEMOUTH UNIVERSITY
படக்குறிப்பு,
காலடித் தடங்களுக்கு மேலேயும் கீழேயும் உள்ள மண் படிவு அடுக்குகளில் காணப்பட்ட விதைகளை கார்பன் பரிசோதனைக்கு உள்ளாக்கி காலத்தை கணித்தனர் விஞ்ஞானிகள்.
தற்போது அமெரிக்க நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில், ஆதியில் நுழைந்த இந்த மனிதர்களுக்கு வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்துப் பார்ப்பதற்கான அற்புதமான சாளரங்களாக இந்த காலடித் தடங்கள் அமைந்துள்ளன.
இந்தக் காலடித் தடங்களுக்கு சொந்தமான இளைஞர்கள் அங்கே என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பது விஞ்ஞானிகளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. பிற்காலத்தின் பூர்வகுடி அமெரிக்கர்களிடம் காணப்பட்ட ஒருவகை வேட்டையாடும் தொழிலில் அவர்கள் தங்கள் குலத்தின் பெரியவர்களுக்கு உதவிக் கொண்டிருந்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த வேட்டையாடும் பாணிக்கு எருமை குதிப்பு (பஃபல்லோ யம்ப்) என்று பெயர். தாழ்தள மலை முகடுகளை நோக்கி எருமைகளை விரட்டி அவற்றை குதிக்கவைத்து அவற்றை வேட்டையாடுவது இந்தப் பாணி.
இந்த விலங்குகளை மிகக் குறுகிய காலத்தில் சமைக்கவேண்டி இருந்திருக்கும். ஒரு பக்கம் நெருப்பு மூட்டவேண்டும். மறுபக்கம், கறியை எடுத்துப் போடவேண்டும். இந்தப் பணியில் விறகு, தண்ணீர், பிற அத்தியாவசியப் பொருள்களை சேகரிப்பதில் இந்த இளைஞர்கள் உதவி செய்திருக்கவேண்டும் என்கிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர் சாலி ரெனால்ட்சு. இவர் போர்னேமௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்.
இந்த காலடித் தடங்களின் வயது என்பது மிக முக்கியமானது. ஏனென்றால், ஆதிகால அமெரிக்க மனித குடியிருப்புகள் இங்கே இருக்கின்றன, அங்கே இருக்கின்றன என்று பலரும் பலவிதமான கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார்கள். அவை ஒவ்வொன்றையும் ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் மறுக்கவும் செய்கிறார்கள்.
ஒரு தொல்லியல் தளத்தில் கண்டறியப்பட்ட கல் கருவி உண்மையில் கல் கருவிதானா அல்லது இயற்கை செயல்முறையில் உடைந்த வெறும் கல்லா என்பது தொடர்பான விவாதத்தை பல முறை கண்டிருக்கிறேன்.
தொல்லியல் தளங்களில் கண்டறியப்பட்ட பழம்பொருள்கள் என்று கூறப்படுகிறவை பல நேரங்களில் மிகத் தெளிவாக இல்லாமல் இருக்கின்றன. வட அமெரிக்காவில் கிடைக்கிற 13 ஆயிரம் ஆண்டு முதலான காலத்தைச் சேர்ந்த அழகாக செதுக்கப்பட்ட வேல் முனைகளைப் போல இவை பல நேரங்களில் தெளிவாக இருப்பதில்லை. இதனால், அவை உண்மையில் என்ன என்ற சந்தேகம் கொள்ளவும் வழி ஏற்படுகிறது.
"உறுதியான, சந்தேகத்துக்கு இடமில்லாத தரவுகள் போதாமையால்தான் இவ்வளவு விவாதத்துக்கும் சர்ச்சைக்கும் இடம் ஏற்படுகிறது," என பிபிசியிடம் கூறினார் இந்த ஆய்வேட்டின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் மேத்யூ பென்னட்.
குளோவிசு மக்கள் செய்ததாகக் கருதப்படும் கல்லால் ஆன ஒரு வேல் முனை.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
குளோவிஸ் மக்கள் செய்ததாகக் கருதப்படும் கல்லால் ஆன ஒரு வேல் முனை. இந்த மக்களே ஆதி அமெரிக்கர்கள் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது.
ஆனால், "காலடித் தடங்கள் கற்கருவிகளைப் போன்றவை அல்ல. மண் அடுக்குகளில் இந்த காலடித் தடங்கள் மேலேயும் கீழேயும் நகர்ந்திருக்க முடியாது," என்கிறார் அவர்.
இந்த பொருண்மையான ஆதாரத்தை அவ்வளவு எளிதாக புறக்கணிக்க முடியாது. ஆனால், காலத்தை நிர்ணயிக்கும் நடைமுறை பிழையில்லாமல் நடப்பதை அவர்கள் உறுதி செய்யவேண்டும்.
இந்த காலடித் தடத்தின் காலத்தை கணிக்கும் முயற்சியில் 'ஏரி விளைவு' என்று கூறப்படும் ஒரு பிழை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வின் தொடக்க நிலையில் இந்த ஆய்வேடு சுட்டிக்காட்டியது.
5,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலை நிலத்தில் பசுமை புகுத்திய சிந்து சமவெளி நகரம்
ஆறு திசைமாறிய பின்பே சிந்து வெளி நாகரீகம் தோன்றியதா? புதிய ஆய்வு முடிவுகள்
நீர் நிலை போன்ற ஒரு சூழலில் பழைய கார்பன் மறுசுழற்சிக்கு உள்ளாகி காலக்கணிப்புக்கு உள்ளாகும் பொருளின் மீது படிந்துவிட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்திருக்கும் நிலையில் கார்பனின் காலம் அந்த பொருளின் காலத்தைவிட பழமையானதாக இருக்கும்.
இப்போது ஆய்வாளர்கள் அந்தக் கார்பனின் காலத்தைக் கணித்துவிட்டு, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருளின் காலத்தை உண்மையில் இருப்பதைவிட பழமையானது என்று கணித்துவிடும் பிழை ஏற்படலாம். இந்தப் பிழையைத்தான் ஏரி விளைவு என்கிறார்கள்.
இந்த ஏரிவிளைவினை தங்களுடைய ஆய்வில் கவனத்தில் கொண்டே செயல்பட்டதாகவும், அந்த விளைவு இந்தத் தளத்தில் குறிப்பிடும் அளவுக்கு இல்லை என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகிறார்கள்.
இந்த காலடித் தடத்துக்கு அருகே இருந்த வேறு சில பொருள்களின் காலத்தை இவர்கள் பரிசோதித்துப் பார்த்தனர். முழுமையாக தரையில் இருந்து கிடைத்த மாதிரிகளின் (கரி) காலமும், காலடித் தடத்துக்கு அருகே எடுக்கப்பட்ட நீர்நிலை உயிரிகளின் காலமும் ஒன்றுபோலவே இருந்தன என்று வியன்னா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரேடியோ கார்பன் காலக் கணிப்பு வல்லுநர் பேராசிரியர் டாம் ஹிக்காம் கூறுகிறார்.
"அங்கே மனிதர்கள் நடமாடியபோது அந்த ஏரி ஆழம் குறைவான ஒன்றாக இருந்திருக்கவேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஏற்கத்தக்க இந்த வாதமும் ஏரி விளைவு குறைவாகவே ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதற்கான காரணம் ஆகும்" என்கிறார் அவர். ஆய்வு முடிவுகளின் தொடர்ச்சியும், காலம் அறிவதற்குப் பயன்படுத்திய பல்வேறு விதமான ஆய்வுகளும் இந்த காலம் தொடர்பான இந்த ஆய்வு முடிவை ஆதரிக்கும் வகையிலேயே வந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
20ம் நூற்றாண்டின் பின் பகுதியில் அமெரிக்காவுக்கு வந்த முதல் மனிதர்கள் குளோவிசு மக்கள் என்பதில் அமெரிக்க தொல்லியலாளர்களுக்குள் ஒரு கருத்தொற்றுமை இருந்தது.
காலடித் தடங்களுக்கு மேலே உள்ள விதைகளை ஆராயும் வல்லுநர்கள்.
பட மூலாதாரம்,BOURNEMOUTH UNIVERSITY
படக்குறிப்பு,
காலடித் தடங்களுக்கு மேலே உள்ள விதைகளை ஆராயும் வல்லுநர்கள்.
பனியுகத்தின் கடைசி பகுதியில், கடல் மட்டம் குறைவாக இருந்தபோது, இரசியாவில் உள்ள சைபீரியாவுக்கும், அமெரிக்காவில் உள்ள அலாசுகாவுக்கும் இடையே உள்ள பெரிங் நீரிணையில் உள்ள ஒரு நிலப் பாலம் போன்ற பகுதி வழியாக வேட்டையாடிய நவீன மனிதர்கள் அமெரிக்காவுக்குள் வந்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
அதன் மூலம் குளோவிசு மக்களே முதல் அமெரிக்க மக்கள் என்ற கோட்பாடு நிலை பெற்றது.
அவர்களைவிட முந்திய குடியிருப்புகள் என்று கருதப்பட்ட தொல்லியல் தடயங்களை நம்ப முடியாதவை என்று புறக்கணித்தனர். சில தொல்லியலாளர்கள் குளோவிசு மக்களைவிட பழய மனிதர்கள் அமெரிக்காவில் குடியேறியதற்கான தடையங்களைத் தேடும் பணியையே விட்டுவிட்டனர்.
ஆனால் இந்த இறுகிப் போன பார்வையை மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் 1970களில் ஏற்பட்டது.
தென்னமெரிக்கா நாடான சிலியில் மான்டே வெர்டே என்ற இடத்தில் 14,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான உறுதியான தடயங்கள் 1980களில் கிடைத்தன.
2000மாவது ஆண்டுகளில் இருந்து குளோவிஸ் மக்களுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் தாராளமாக ஏற்கப்பட்டன.
இப்போது நியூ மெக்சிகோவில் கிடைத்துள்ள காலடித் தடங்கள், பனிததொன்காலத்தின்( யுகத்தின் )உச்சத்தில் மனிதர்கள் வட அமெரிக்கக் கண்டத்தின் உள் பகுதிகளில் வாழ்ந்ததைக் காட்டுகிறது.
அமெரிக்க கண்டத்தின் மக்கள் தொகை வரலாற்றில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள கேம்பிரிட்ச் பல்கலைக்கழக மரபியலாளர் டாக்டர் ஆன்ட்ரியா மேனிகா தன்னுடைய அறிவுப் புலத்துக்கு வெளியே சென்று இந்த காலக் கணிப்பு எவ்வளவு நம்பகமானது என்று தம்மால் கூற முடியாது என்கிறார். ஆனால், மனிதர்கள் அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தார்கள் என்ற ஆய்வு முடிவு மரபியல் ஆய்வுகளுக்கு முரணாகவே இருப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
ஆசிய மக்களிடம் இருந்து அமெரிக்கப் பூர்வகுடிகள் பிரிவது தோராயமாக 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்துள்ளது என்பதை மரபியல் ஆய்வுகள் காட்டுவதாக அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
"எனவே அமெரிக்காவில் முதலில் குடியேறிய மக்களை, பனிப்பாதை உருவான பிறகு வந்த அடுத்த குடியேறிகள் அழித்திருக்கலாம் என்று இந்த புதிய ஆய்வு முடிவுகள் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து நமக்கு எதுவும் தெரியாது" என்கிறார் அவர்.