இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா ரெப்லிசுட்டின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. கோட்டாபய அரசின் சார்பில் கல்வி அமைச்சர் யி.எல்.பீரிசும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டனர்.
எனினும், இந்த சந்திப்புக்கள் குறித்து தாம் அறிந்திருக்கவில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று பங்காளிக்கட்சிகளும் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி, சர்வதேச உறவுகளில் நெருக்கடி என எல்லாப் பக்கங்களிலும் நெருக்கடியை சந்தித்துள்ள கோட்டாபய அரசு, பெரும் பாலான பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கான சுலபமான- ஒரே வழியாக- தமிழர் தரப்புடனான இணக்கம், பேச்சு என நம்ப ஆரம்பித்துள்ளது.
இதற்காக, புதிய பேச்சு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
புதிய அரசு பதவியேற்ற சமயத்திலிருந்தே எம்.ஏ.சுமந்திரனுடன் நெருக்கமான உறவை பேணி வந்தது. அதிவேக நெடுஞ்சாலையில் அவரது வாகனம் விபத்திற்குள்ளான சமயத்தில் பிரதமர் மகிந்த இராயபக்ச, ஆளுந்தரப்பு பிரதம கொரடா யோன்சன் பெர்னாண்டோ ஆகியோர் நேரடியாக தலையிட்டு, பயணத்தடைகளை விலக்கியிருந்தனர்.
இப்பொழுது புதிய பேச்சு முயற்சிகளையும் எம்.ஏ.சுமந்திரன் தரப்புடன், கோட்டாபய அரசு ஆரம்பித்துள்ளது. அண்மையில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரண்டு தரப்பும் நேரடியாக சந்தித்து பேசியுள்ளனர்.
இதன்போது, அரச தரப்பில் கலந்து கொண்ட யி.எல்.பீரிசு, பேச்சு முயற்சிகளை உடனடியாக ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தெரிவித் துள்ளார். இதற்கான பொறுப்பை பசில் இராயபக்சவிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர் தலைமையிலான குழுவுடன் பேச்சை ஆரம்பிக்கலாமென்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு நடந்த பல நாட்களாகி- ஊடகங்கள் தரப்பில் வெளியான பின்னரும்- கூட்டமைப்பில் உள்ள பங்காளிக்கட்சிகள் தலைவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.
இன்று காலையில் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக்கட்சிகளின் தலைவர்களையும் ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு வினவிய போது, அவர்கள் “சம்பவத்தையே அறிந்திருக்கவில்லை“ என்றார்கள்.
கடந்த இரணில்- மைத்திரி ஆட்சியிலும் தமிழ் அரசு கட்சியின் ஒரு பிரிவும், புலம்பெயர்ந்துள்ள சிலரும் மாத்திரம் பேச்சு முயற்சிகளை மேற்கொண்டு, தமிழர் தரப்பு பெரும் பின்னடைவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.