தமிழகம் எனப்படுவது தட்டையான எகபரிமாணம் கொண்ட ஒரு மக்கள்தொகுதி அல்ல. அது பல பரிமாணங்களைக் கொண்ட பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கலவை. முதலாவது அடுக்கு தமிழக அரசு. அது ஒரு மாநில அரசு. இந்திய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் அரைச் சமஸ்டி கட்டமைப்பு. கவனியுங்கள் அது ஒரு முழுச் சமஸ்டி கட்டமைப்பு அல்ல.
இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள். மூன்றாவதாக தமிழகத்திலுள்ள ஈழ உணர்வாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களர்கள்.நாலாவது அடுக்கு தமிழகத்தில் உள்ள சாதாரண ஜனங்கள். ஐந்தாவதாக சிவில் சமூகங்களையும் ஊடகங்களையும் கூறலாம்.இந்த ஐந்து அடுக்குகளையும் ஒரே விதமாக அணுக முடியாது. ஒரே விதமாக கையாளவும் முடியாது.
முதலாவதாக மாநில அரசுக் கட்டமைப்பு.தமிழக அரசை அதன் வரையறைகளுக்குள் வைத்து விளங்கிக்கொள்ள வேண்டும். அது எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் எதிர்பார்க்கலாம்.ஒரு மாநில அரசாக அதற்கு இருக்கக்கூடிய வரையறைகளின் அடிப்படையில்தான் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதையும் செய்யமுடியும்..
இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள்.தமிழகத்திலுள்ள கட்சிகளில் ஈழத்தமிழர்களுக்கு நெருக்கமான கட்சிகளும் உண்டு. நெருக்கம் குறைந்த கட்சிகளும் உண்டு. எப்படியானாலும் இக்கட்சிகள் யாவும் அங்கேயுள்ள தேர்தல் அரசியலுக்கு உட்பட்டவை. எனவே ஈழத் தமிழர் விவகாரத்தையும் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு ஊடாகவே கையாள முயல்வார்கள். அதில் தேர்தல் நோக்குநிலையிலான நலன்கள் இருக்கும். அந்த நலன்களின் அடிப்படையில்தான் ஈழத் தமிழர் விவகாரம் கையாளப்படும். இதில் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமான சில அரசியல்வாதிகள் உண்டு. அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஆபத்துக்களை சந்தித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் பொறுத்து மாறாத நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள்.அவர்களோடு ஈழத்தமிழர்கள் மானசீகமான உறவுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் கட்சி நலன் என்று வரும்பொழுது குறிப்பாக தேர்தல் அரசியல் என்று வரும் பொழுது அவர்கள் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்கு ஏற்பவே முடிவெடுப்பார்கள். அதில் ஈழத்தமிழர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
மூன்றாவது தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள். இவர்கள் தேர்தல் நோக்குநிலை அற்றவர்கள். கொள்கை ரீதியாக ஈழத் தமிழர்களோடு நெருங்கி வருவார்கள். இவர்களோடு கொள்கை அடிப்படையில் கூட்டு வைத்துக் கொள்ளலாம். அது ஒருவிதத்தில் மாறாத உறவாகவும் இருக்கும்.
நாலாவது சாதாரண தமிழக மக்கள். இதுதான் பெரிய தொகை. எல்லா கட்சிகளிலும் இவர்கள் உண்டு. ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் இன ரீதியாக கொதித்து எழுவார்கள். மொழிரீதியாக கொதித்து எழுவார்கள். அவர்களுடைய கட்சித் தலைவர்கள் அவர்களை தேர்தல் நோக்கு நிலைகளில் இருந்து வழிநடத்தக் கூடும். ஆனால் ஈழத்தமிழர்களுக்கும் சாதாரண தமிழக மக்களுக்கும் இடையிலான உறவு என்பது தூய்மையானது. அரசியல் நலன்கள் அற்றது.சுயநலம் அற்றது.அதிலுள்ள உண்மை மற்றும் உணர்வு ஒருமைப்பாடு காரணமாகத்தான் தமிழகத்தில் இதுவரையிலும் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள்.
எனவே தமிழகத்தின் சாதாரண ஜனங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் புனிதமானவை. அந்த உறவை ஈழத்தமிழர்கள் மதிக்க வேண்டும். ஆனால் இந்த சாதாரண தமிழக மக்கள்தான் ஈழத் தமிழர்களால் விரும்பப்படுகின்ற அல்லது வெறுக்கப்படுகின்ற தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள். எனவே தமிழகத்தின் தலைவர்களை குறித்து கருத்து கூறும் பொழுதும் தமிழக தலைவர்களை அணுகும் போதும் சாதாரண தமிழக மக்களின் உணர்வுகளை மதித்தே எதையும் செய்ய வேண்டும்.இதுவிடயத்தில் சாதாரண தமிழக மக்களை பகைநிலைக்கு தள்ளாத ஒரு நிதானப்போக்கை ஈழத்தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
ஐந்தாவது ஊடகங்களும் சிவில் அமைப்புக்களும்.கருத்துருவாக்கிகளும்.இங்கேயும் ஈழத்தமிழர்களுக்காக நலன்சாராது விசுவாசமாக உழைப்பவர்கள் உண்டு.
மேற்கண்டவற்றின் அடிப்படையில் தொகுத்துச் சிந்தித்தால் ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து தமிழகத்தை எப்படி கையாள வேண்டும் என்ற ஒரு தெளிவான வழி வரைபடம் கிடைக்கும். துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களிடம் அவ்வாறான வழிவரைபடம் எதுவும் கிடையாது. ஆயுதப்போராட்ட காலத்தில் இருந்து இன்றுவரையிலும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் தொடர்பாடல் மையங்கள் என்று கருதத்தக்க அலுவலகங்கள் அல்லது தகவல் வழங்கும் நிலையங்கள் தமிழகத்தில் இல்லை. குறைந்தபட்சம் ஈழத்தமிழ் அகதிகளின் நலன்களைக் கவனிப்பதற்குக்கூட கட்சிகளிடம் பொருத்தமான கட்டமைப்புக்கள் இல்லை.தமிழக ஊடகங்களுக்கும் ஈழத்தமிழ் ஊடகங்களுக்கும் இடையில் ஒரு பொதுவான தொழில்சார் இடையூடாட்டக் கட்டமைப்பும் இல்லை.தமிழகத்திலுள்ள கருத்துருவாக்கிகளுக்கும் ஈழத்தமிழ் கருத்துருவாக்கிகளுக்கும் இடையிலும் ஒரு இடையூடாடட்டப் பரப்பு இல்லை.தமிழகத்து சிவில் அமைப்புகளுக்கும் ஈழுத்து சிவில்அமைப்புகளுக்கும் இடையிலும் பொதுவான ஒரு இடையூடாடட்டத் தளம் கிடையாது.
எனவே கடந்த பல தசாப்தங்களாக ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இடையூடாடக்கூடிய பொதுப்பரப்புகளை கட்டமைப்புகளை ஈழத்தமிழர்கள் உருவாகியிருக்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் கூட அதைச் செய்திருக்கவில்லை. குறிப்பாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் மோசமாக சேதமடைந்த நிலைமைகளை சீர்செய்யும் விதத்தில் தீர்க்கதரிசனம் மிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.உதாரணமாக,ராஜீவ் காந்தி கொல்லப்பட முன்பு ஈழத் தமிழர்களுக்கு மிக ஆதரவாக காணப்பட்ட தமிழகத்தின் இடதுசாரிச் சிந்தனையாளர்களில் ஒருவரான எஸ்.வி. ராஜதுரை போன்றவர்கள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் ஈழத்தமிழர்களை நோக்கி இன்றுவரையிலும் முன்னரளவுக்கு நெருங்கிவரவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.
இவ்வாறான பாரதூரமான ஒரு வெற்றிடத்தில் தமிழகத் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்று ஒரு பகுதி ஈழத்தமிழர்கள் எதிர்பார்கிறார்கள்.தமிழகத் தலைவர்கள் மட்டுமல்ல தென்னிலங்கையில் இருக்கும் கட்சித் தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் பொறுத்தும் ஒருபகுதி ஈழத்தமிழர்களின் நோக்குநிலை அணுகுமுறை அவ்வாறுதான் இருக்கிறது.உலகிலுள்ள எல்லாருமே எங்களை நேசிக்க வேண்டும் எங்களுக்காகத் தியாகம் செய்யவேண்டும் என்று ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் விரும்புகிறார்கள். ஆனால் அது ஒரு அப்பாவித்தனமான விருப்பம். ஏனெனில் தாயகத்துக்கு வெளியே இருப்பவர்களும் ஈழத்தமிழர்கள் அல்லாத வெளி இனத்தவர்களும் அவரவருக்கேயான அரசியல் சூழ்நிலைகளில் கைதிகளே.அவரவர் தங்களுடைய நிலைமைகளுக்குள்ளிருந்துதான் ஈழத்தமிழர்களுக்காக எதையும் செய்யமுடியும்.
உதாரணமாக மனோகணேசன். அவர் ஒரு தென்னிலங்கை மைய அரசியல்வாதி.அவர் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அவர் இனவாதத்துக்கு எதிரான ஒரு தமிழ் அரசியல்வாதியாக இருந்தாலே போதும்.அதுவே ஈழத்தமிழர்களுக்கு ஒரு பலம்.
அடுத்த உதாரணம் சிங்கள திரைக்கலைஞர்கள் மற்றும் மனித உரிமைவாதிகள். இவர்கள் இனவாதத்துக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தாலே போதும். அவர்கள் தமிழ்தேசியவாதிகளாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?
இது தமிழகத்திற்கும் பொருந்தும். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஒரு பின்தளமாக இருந்தது.இது வரையிலும் 19பேர் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள்.இவைகாரணமாக ஈழத்தமிழர்கள் இந்தியாவை தாயகம் என்று அழைத்துக் கொண்டு அளவுக்குமிஞ்சி நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள் ; அளவுக்கு மிஞ்சி தமிழகத்தலைவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.இது ஒருவகையில் வெளியாருக்காக காத்திருக்கும் அரசியலில் ஒரு கிளைதான். வெளியாருக்காகக் காத்திருப்பது என்பதே தன் பலமிழந்து வெளிநோக்கி காத்திருப்பதுதான். அது அடிப்படையிலேயே பலவீனமான அரசியல். அந்த பலவீனம்தான் மற்றவர்கள் எல்லாரும் தங்களுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பதும் ஆகும்.
ஆனால் அரசியல்உறவுகள் அவ்வாறு உண்மையானவை அல்ல. நலன்சாரா உறவுகளும் அல்ல. அவை முழுக்கமுழுக்க நலன்சார் உறவுகளே. இதைப் புத்திபூர்வமாக விளங்கிக் கொண்டால் ஈழத்தமிழர்கள் தமிழகத் தலைவர்களிடம் அளவுக்குமிஞ்சி எதிர்பார்க்க மாட்டார்கள். அவ்வாறு எதிர்பார்த்து அதில் ஏமாற்றம் அடையும்போது அளவுக்குமிஞ்சி வெறுக்கவும் மாட்டார்கள். கடந்த 12 ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களை தொகுத்துப் பார்க்கும் எவருக்கும் இது தெளிவாகத் தெரியும்.சமூகவலைத்தளங்கள் இது விடயத்தில் முழுத் தமிழர்களையும் பிரதிபலிக்கவில்லை என்பதனை இக்கட்டுரை ஏற்றுக் கொள்கிறது. எனினும் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரின் எதிர்பார்ப்பு அது என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
இவ்வாறான ஒரு பின்னணியில் இப்போது தமிழகத்தில் ஒரு புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.அந்த அரசாங்கத்தை எப்படி நெருங்க வேண்டும்? எந்த அடிப்படையில் நெருங்க வேண்டும்?யாருக்கூடாக நெருங்க வேண்டும்?யாரை வைத்து யாரை கையாளவேண்டும்? போன்ற எல்லா உபாயங்களை முதலில் ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் ஈழத்தமிழர்கள் இதுதொடர்பில் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது ஒரு விதத்தில் எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்பக் கூறுவது போல ஈழத்தமிழர்களுக்கான வெளியுறவு கட்டமைப்புத்தான். அந்த வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தை எவ்வாறு கையாள்வது என்பதற்கும் ஒரு வழி வரைபடம் தெளிவாக உருவாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தின் புதிய அரசாங்கத்தில் ஈழத் தமிழர்களோடு தொடர்ச்சியாக நெருக்கமாக நிற்கும் வைகோவிற்கு நான்கு ஆசனங்கள் உண்டு. மற்றொருவர் திருமாவளவன்.அவருடைய கட்சிக்கும் 4 ஆசனங்கள் உண்டு. இது தவிர திமுகவிற்குள்ளும் மருத்துவர் எழிலனைப் போல பலர் ஈழத்தமிழர்களோடு நெருக்கமான மானசீகமான உறவை கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதாவுக்குள்ளும் வானதி சிறினிவாசன் புலம்பெயந்த தமிழர்களோடு நெருக்கமாயுள்ளார்.அவர்களைப்போல மேலும் புதிய ஆளுமைகளை எப்படி சம்பாதிக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
இடதுசாரி மரபில் வந்த ஒரு தமிழக நண்பர் அடிக்கடி கூறுவார் தமிழகத்தில் ஈழத்தமிழ் ஆதரவு என்பது ஒரு உள்ளுறையும் சக்தி. அதை ஒரு தூலமான சக்தியாக மாஸ் போர்ஸ் ஆக மாற்ற வேண்டும் என்று. ஆம்.அதை ஈழத்தமிழர்களின் ஒத்துழைப்போடு தமிழக தலைவர்களும் செயற்பாட்டாளர்களும்தான் செய்ய முடியும்.அதை ஈழத்தமிழர்கள் நேரடியாக செய்ய முடியாது.