குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, தை(சுறவம்) 21 ம் திகதி வியாழக் கிழமை .

கீழடிச் சான்றுகள்: தமிழ்ப் பழைமையின் அறிவியல் ஆதாரங்கள் 03,10.2019

20.11.2020......நவீன மனிதனாக வாழ்ந்து கொண்டே பழைமையின் மீதான பற்றை வெளிப்படுத்துவது மனித இயல்பு. இது ஒருவித பாவனையாகக்கூட இருக்கலாம். தனிமனிதர்களுக்குள்ள இந்த இயல்பு குழுவாகவும் கூட்டமாகவும் அடையாளப்படுத்தப்படும் போதும் வெளிப்படுகிறது. என் தாத்தா 100 வயதைத் தாண்டியவர் என்பதைச் சொல்லும்போது இருக்கும் பெருமிதத்தின் தொடர்ச்சிகளே ஊரின் பழைமை; மொழியின் பழைமை இனத்தின் பழைமை என நீள்கிறது. அண்மையில் வெளியிடப்பெற்ற கீழடித் தொல்லியல் ஆதாரங்கள் தமிழர்கள் கொண்டிருக்கும் பழைமை குறித்த பெருமிதங்களில் உண்மை இருக்கிறது என்பதை அறிவியல் முறைப்படி அறிவிக்க உதவியிருக்கிறது.

எந்தப் புலத்தின் ஆய்வு முடிவுகளும் தேடலின் விளைவுகளே. மனிதர்கள் தாங்கள் இருக்கும் பிரபஞ்சத்தை நிரப்பியிருக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்னும் ஐந்து மூலங்களையும் பயன்படுத்திக் கொண்டே யிருக்கிறார்கள். அதற்காக அவற்றின் தோற்றம் மற்றும் இருப்புநிலைகளை அறிய முயல்கிறார்கள். அவையே இப்போது அறிவியல் ஆய்வுகளாக அறியப்படுகிறது. இயற்கை மூலங்களை அறிய முயன்றது போல மனிதர்களின் தோற்றம் மற்றும் இருப்புநிலைகளையும்கூட அறிந்து அறிவியல் சில முடிவுகளைச் சொல்லியிருக்கிறது.

தொடர்ச்சியாக மனிதர்களைப் பற்றி ஆய்வு செய்யும் மானிடவியல் என்னும் அறிவுத் துறைக்குள் உடற்கூறு மானிடவியல் (Physical Anthropology), சமூக மானிடவியல்(Social Anthropology), பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthropology) என்று மூன்று பிரிவுகள் உண்டு. உடற்கூறு மானிடவியலுக்கான சான்றுகளைத் தேடித்தரும் வேலையைச் செய்வது தொல்லியல். தொல்லியல் ஆதாரங்களே வரலாறு எழுதுவதற்குகான அடிப்படை ஆதாரங்களாகவும் இருக்கின்றன. பனிப் பிரதேசங்களிலும் குகைகளுக்குள்ளும் புதையுண்ட தாழிகளுக்குள்ளும் கிடைத்த மனித உயிரிகளின் உடல் நிறம், முக அமைப்பு, ரோமங்களின் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் மூன்றுவிதமான இனங்களாகப் பிரிக்கிறது உடற்கூற்று மானிடவியல். நீக்ரோவியர்கள், மங்கோலியர்கள், காகேசியர்கள் என்பன அந்த இனங்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் இம்மூவகை இனத்தில் இருவகை இனத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது இருக்கிறார்கள். காகேசிய இனத்திற்குள் அடங்கும் இந்தோ – ஆர்யர்களும் வட இந்தியாவில் கூட்டமாக இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்கள் நீக்ரோவியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவ்விரு இனத்தைச் சேர்ந்தவர்களில் யார் இந்தியாவின் பூர்வகுடிகள் என்பது குறித்தும், யார் வந்தேறிகள் என்பது குறித்தும் முரண்களும் மோதல்களும் இருக்கின்றன. இந்தப் பின்னணியில் தான் கீழடியில் கிடைக்கும் சான்றுகளுக்கு அறிவியல் ஆய்வகம் தந்த அறிக்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

உலகெங்கும் நகர நாகரிகங்கள் நதிக்கரைகளில் தோன்றி வளர்ந்தன. இந்தியாவிலும் நகர நாகரிகங்கள் நதிக்கரைகளில் தோன்றியுள்ளன என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. வட இந்தியாவில் சிந்து நதிக்கரையில் கங்கைக்கரையிலும் நகரங்கள் இருந்தன. இவற்றுள் சிந்து நதிக்கரை நாகரிகமே, ஹரப்பா நகர நகரம் என உறுதி செய்யப்பட்டது. அதன் காலம் பொதுக்கணக்காண்டுப்படி 4000 (கி.மு.2000-1900) ஆண்டுகள் பழைமையானது என ஏற்றுக் கொள்ளப்பட்டது. கங்கைக்கரையிலும் பாடலிபுத்திரா போன்ற நகரங்கள் இருந்தன எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தென்னிந்தியாவிலும் நதிக்கரை நாகரிகங்கள் இருந்தன என்பது தொல்லியல் துறையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் பொதுக் கணக்காண்டுப்படி 2200 ஆண்டுக்கு முன்பு இருந்ததில்லை என்று தொல்லியலாளர்கள் சொல்லி வந்தனர். இதையெல்லாம் மறுத்துப்பேசுவதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் தமிழில் உண்டு. ஆனால் தொல்லியல் சான்றுகள் இல்லாமல் இருந்தன. அதனைத் தோண்டி எடுத்துக்காட்டுவதற்காகப் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 40 இடங்களில் அகழாய்வுகள் நடந்துள்ளன. அவைகளும் நதிக்கரை யோரங்களிலேயே நடந்தன. தாமிரபரணிக்கரையில் செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு முக்கியமான ஒன்று. அதேபோல புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையில் இருக்கும் அரிக்கமேட்டு அகழ்வாய்வும் முன்னர் செய்யப்பட்ட ஆய்வாகும்.

காவிரி நதியின் முகத்துவாரத்தில் இருந்த பூம்புகார் நகரம் கடலுக்குள் புதையுண்ட நகரமாக இருக்கிறது. அதன் அமைப்பைக் கண்டுபிடிக்கவும், அந்நகரத்தில் இருந்த பொருட்களின் பழைமையை ஆய்வுக்குட்படுத்தவும் செய்த முயற்சிகள் முழுமையாக சாத்தியமாகவில்லை. அதன் பிறகு தர்மபுரிக்கருகில் கொடுமணலில் அகழாய்வுகள் செய்யப்பட்டுத் தொல்லியல் சான்றுகள் எடுக்கப்பட்டுச் சோதனைச் சாலைகளுக்கு அனுப்பப்பட்டன. கொடுமணல், அழகன் குளம், பொருந்தல் போன்ற இடங்களில் கிடைத்த சான்றுகளின் காலம் 2500 ஆண்டுப்பழைமை என முன் வைக்கப்பட்டது என்றாலும் அதன் மீது சர்ச்சைகளும் இருந்துகொண்டே இருந்தன. அத்தோடு ஹரப்பாவைப் போல, பாடலிபுத்திராவைப் போலத் தென்னிந்தியாவில் நகரங்கள் இருந்ததில்லை; இங்கிருந்ததெல்லாம் வேளாண் நாகரிகமே தவிர வணிகத்தையும் தொழிற்சாலைகளையும் கொண்ட நகர நாகரிகம் அல்ல என்பதும் வாதங்களாக இருந்தன. அத்தோடு நிர்வாக முறை தெரிந்த அரசு உருவாகவில்லை என்றும் எழுத்தும் கல்வியும் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகவும் சொல்லப்பட்டது. தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்கள் மீது எழுதப்பட்டிருக்கும் எழுத்து வடிவம் பிராமி எழுத்துகள் எனவும், தமிழுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் வாதங்கள் உண்டு. அதனை மறுப்பவர்கள் இவை தமிழ் -பிராமி வடிவங்கள் என்றும் சொல்லிவந்தனர்.

இந்நிலையில் தான் வைகை நதிக்கரையில் இருந்த நகர நாகரிகத்தை வெளிக்கொண்டுவரும் தொல்லியல் ஆய்வுக்குத் திட்டமிடப்பட்டது தமிழக அரசின் தொல்லியல் துறை. அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடமே கீழடி. அந்த இடத்தில் பழைய நகரம் இருந்தது என்பதைத் தரை ஊடுருவல் தொலை உணர்வி மதிப்பீடுகள் உறுதிசெய்துகொண்டே அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. மும்பையிலுள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம். அண்ணா பல்கலைகழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு துறை போன்ற புகழ் பெற்ற நிறுவனங்கள் இதற்குத் துணை செய்துள்ளன..

தமிழ்நாட்டரசின் தொல்லியல் ஆய்வுத்துறை மதுரையிலிருந்து கிழக்கே 13 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கீழடி என்னும் கிராமப்பகுதியை அகழ்வாய்க்கான பகுதியாகத் தேர்வு செய்து 2016 இல் பணியைத் தொடங்கியது. அதில் ஒவ்வொரு கட்ட ஆய்விலும் கிடைத்த ஆய்வுகளை முறைப்படியான அறிவியல் சோதனைகளுக்கு அனுப்பி வந்தது. அண்மையில் (செப்டம்பர்,19) அன்று நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளை முறைப்படி அறிவித்துள்ளது.

கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு ((Beta Analytic Testing Laboratory) அனுப்பப்பட்டன. பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப் பெற்ற கரிமத்தின் காலம் கி.மு. 580 என்று கணக்கீடு செய்யப்பட்ட ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. இக்காலக் கணிப்பின்படி, கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1-ஆம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

என்பது அறிக்கையில் இருக்கும் முன்வைப்பு. அந்த ஆய்வில் கிடைத்த பொருட்கள் நகரக்கட்டமைப்பையும் வேளாண் நாகரிகத்தையும் வணிகச் செயல்பாடுகளையும் தொழில்நுட்ப அறிவையும் முன்வைக்கின்றன. தொல்லியல் துறையின் அறிக்கை தரும் முக்கியமான கண்டுபிடிப்புகளைக் கீழே காணலாம்

கீழடி அகழாய்வில் செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு ஆகியன கிடைத்துள்ளன. இவை ஒவ்வொன்றிலும் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றின் கலவை மற்றும் தன்மை குறித்து விரிவான அறிக்கை பெறப்பட்டுள்ளது.

இவை தவிர விலங்குகளின் எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவைஎன்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்கள் 53 சதவீதம் இடம்பெற்றுள்ளன. எனவே, இவ்விலங்கினங்கள் வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டுள்ளன எனக் கருதலாம். கலைமான், வெள்ளாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் சில எலும்பு மாதிரிகளில் வெட்டுத் தழும்புகள் காணப்படுகின்றன என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளதால், இவ்விலங்கினங்களை அக்கால மனிதர்கள் உணவிற்காகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. இப்பகுப்பாய்வு முடிவுகள் மூலம் சங்க காலச் சமூகம், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு, கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறியீடுகளுக்கு அடுத்து காணக் கிடைக்கின்ற வரிவடிவம் தமிழ்-பிராமி எழுத்து வடிவமாகும். இவ்வெழுத்தை தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் வரலாற்றுத் தொடக்ககாலத்தைச் சார்ந்த இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துப் பொறிப்பு பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மோதிரங்கள் முந்தைய அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன. தமிழகத்தில் 32-க்கும் மேற்பட்ட ஊர்களில் சங்ககாலத்தைச் சார்ந்த தமிழ்பிராமி எழுத்துப்பொறிக்கப்பட்ட 110 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்களால் படித்தறியப்பட்டுநூலாக வெளியிடப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் தமிழ் (தமிழ்பிராமி) எழுத்துப்பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வில் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.

கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட தொல்பொருட்கள் இதுவரை தமிழக வரலாற்றில் கடைபிடிக்கப்பட்டு வந்த கருதுகோள்களைச் சீர்தூக்கி பார்க்க வேண்டிய அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ளன என்றால் மிகையாகாது.

பொதுவாக ‘சங்க காலம்’ என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த காலக்கணிப்புகள் தமிழகத்தின் எழுத்தறிவை கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு எடுத்து செல்வதால் சங்ககாலத்தின் காலவரையறையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் கிடைத்த தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற மட்பாண்டங்களின் காலம் கி,மு.5 ஆம் நூற்றாண்டுவரை பின்நோக்கி தள்ளப்பட்டன. ஆனால், கீழடியில் கிடைத்த அறிவியல் சார்ந்த கால கணிப்புகள் இதன் காலத்தை மேலும் ஒரு நூற்றாண்டு பின் நோக்கி தள்ளி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிலை நிறுத்தியுள்ளதே கீழடி ஆய்வுகளின் சிறப்பு அம்சமாகும்.

இந்தியாவில் கங்கை சமவெளி பகுதியில் கி.மு.ஆறாம் நூற்றாண்டளவில் தோன்றிய இரண்டாம் நகரமயமாக்கம் தமிழகத்தில் காணப்படவில்லை என்ற கருதுகோள் இதுவரை அறிஞர்களிடையே நிலவிவந்தது. ஆனால் கீழடி அகழாய்வு கி.மு.ஆறாம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதை நமக்கு உணர்த்துகிறது.

அறிக்கையை அளித்துள்ள தொல்லியல் துறை இவை அனைத்தையும் சங்க காலம் என்னும் கற்பிதமான காலப்பகுப்போடு இணைத்துக் கூறியுள்ளது. இப்போது அறிவியல் ஆய்வகத்தின் வழி கீழடி என்னும் இடத்தில் கிடைத்துள்ள தரவுகள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டக் கட்டட அமைப்பும், நகரஅமைப்பும், வாழ்க்கைக்கான வசதிகளும் கொண்ட நகரம் ஒன்று இருந்தது என்பதற்கான ஆதாரங்கள். அங்கு வாழ்ந்தவர்கள் மண்பாண்டங்களில் எழுதினார்கள்; விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வரிவடிவங்களாகத் தீட்டினார்கள் என்பதோடு உலோகங்களால் செய்த கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. தங்கத்தில் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் செய்தார்கள். அவை விற்பனைப்பண்டங்களாக இருந்தன. தங்களுக்குள் தொடர்புகளைச் செய்ய எழுத்துப் பயன்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்று விவரிப்பதற்கான பருண்மையான ஆதாரங்கள்.

இந்த ஆதாரங்கள் கிடைத்துவிட்டதால் மட்டுமே வைகைக் கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது என்பதல்ல. அதற்கும் சில ஆயிரங்களுக்கு முன்பே தோன்றி வளர்ந்த நாகரிகம். ஏனென்றால், கீழடிச் சான்றுகள் வழி உறுதியாகியுள்ள தகவல்களைத் தமிழின் தொல்லிலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஏற்கெனவே தந்துள்ளன. மதுரை நகரத்தின் தெருக்களின் அமைப்பையும் மக்களின் நகர வாழ்க்கை பற்றிய தகவல்களையும் மாங்குடி மருதன் எழுதிய மதுரைக்காஞ்சியும், நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையும் விரிவாகச் சொல்கின்றன. இவை இரண்டும் பத்துப்பாட்டு என்னும் நெடும்பாடல் தொகுப்பில் இருக்கும் நூல்கள். இன்னொரு தொகையான எட்டுத்தொகையில் இருக்கும் பரிபாடலில் மதுரையை உரசிக்கொண்டு ஓடும் வையைப் பற்றிய பாடல்கள் அதிகம் இருக்கின்றன.

இன்னொரு கடல் நகரமான காவிரிப்பூம்பட்டினத்து வாழ்க்கையைப் பட்டினப்பாலை விவரித்திருக்கிறது. அந்நகரம் வணிக நகரமாகவும் துறைமுக நகரமாகவும் இருந்துள்ளது. அதனைச் சுற்றி வேளாண்மை செழுத்து வளர்ந்ததையும் விரிவாகப் பேசியுள்ளது. இவையெல்லாம் நகர அமைப்பு, அரண்மனை அமைப்பு, வீடமைப்பு பற்றிய தகவல்களைப் பேசும் - நகரவாழ்க்கையின் பதிவுகளைத் தரும் நூல்.இவற்றிற்கிணையாகக் கிராமப் புறங்களையும் மலைப் பாதைகளின் பயணங்களையும் ஆற்றுப்படைகள் விவரித்திருக்கின்றன. 99 பூக்களை வரிசைப்படுத்தும் குறிஞ்சிப்பாட்டு வன அறிவைக் கொண்டிருந்ததையும் மலைவளத்தைப் பயன்படுத்திக்கொண்டதையும் தருகின்றது.

நெடும்பாடல்களுக்கு முன்னால் எட்டுத் தொகையிலிருக்கும் குறும்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை எழுதப்பெற்ற காலம் சில ஆயிரங்களுக்கு முன்பு. அவற்றிற்கும் முன்னால் வாய்மொழித் தன்மை கொண்ட ஐங்குறுநூற்றுப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன. அதில் முல்லைப் பாடல்களை எழுதிய ஓரம்போகியார் ‘வாழி ஆதன் வாழி அவினி’ எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இந்தப் பெயர்கள் கீழடியிலும் கிடைக்கும் பெயர்கள். ஐங்குறுநூற்றின் மொழியமைப்புக்கும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவற்றின் மொழி நடைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. வாய்மொழிப் பாடல்களில் இறுக்கம் ஏற்படச் சில நூற்றாண்டுகள் அல்லது சில ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பது இலக்கியவரலாறு சொல்லும் செய்தி.

இலக்கியங்கள் தரும் தகவல்களைப் போலப் பன்மடங்கு செய்திகளையும் தமிழர்களின் இயற்கை அறிவியல் பார்வையையும் மொழிபற்றிய கோட்பாட்டையும் நூலாக்கம், சமூக அமைப்பு குறித்த கருத்துகளையும் தொல்காப்பியப் பனுவல் குறிப்பிடுகின்றது. உயிரினங்களின் தோற்றவியல் பற்றிப் பேசுகிறது. உயிர்களுக்குப் பெயரிடுதல் பற்றிப் பேசுகிறது. அறிவுத்தோற்றம், குடும்பம், அரசு, கோட்டை, காப்பரண் போன்றவைகளை உருவாக்குதல் பற்றியெல்லாம் அது விரிவாகப் பேசியுள்ளது. ஐரோப்பியச் சிந்தனை மரபுக்கு ஆதாரமாக இருக்கும் அரிஸ்டாடிலின் பனுவலையொத்த பனுவலாக இருக்கிறது தொல்காப்பியப் பனுவல்.

இவையெல்லாம் இருந்தாலும் இவற்றின் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ்த் தொல்நூல்களின்- காலத்தை அறிவியல் பூர்வமாக உறுதிசெய்ய முடியவில்லை என்பதுதான். இப்போது கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் ஆய்வுகள் வழி உறுதிசெய்யப்பட்டுள்ள உண்மைகள், இலக்கியங்கள் பேசும் உண்மைகளை உறுதி செய்கின்றன என்பதில்தான் நாம் மகிழும் காரணங்கள் இருக்கின்றன.

மகிழ்ச்சியோடு, கீழடிச் சான்றுகளை முன்வைக்கும்போது சங்ககாலச் சான்றுகள் எனச் சொல்வதைத் தவிர்க்கவேண்டும் என நினைக்கிறேன். ஒய்.சுப்பராயலு போன்ற முன்னோடித் தொல்லியல் ஆய்வாளர்கள் அதனை ஏற்கமாட்டார்கள். கிடைத்துள்ள ஆதாரங்கள் ஒரு பழைய நாகரித்தின் ஆதாரங்கள் என்பதும், வைகைநதிக்கரையில் இப்போதும் இருக்கும் பழம்பெருமை மிக்க மதுரையின் ஒருபகுதியையே கீழடி அகழாய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பதும் உண்மையாக மாறலாம். அதன்மூலம் இந்தியத்துணைக்கண்டத்தில் சிந்துவெளியிலும் கங்கைக்கரையிலும் நகரங்கள் உருவாகி வளர்ந்ததற்கிணையாக நகரங்கள் இருந்தன; துறைமுகங்கள் இருந்தன; வணிகம் வளர்ந்திருந்தது என்பதை உறுதிசெய்யலாம். அதற்குத் தொல்லியல் ஆதாரங்களோடு சமநிலையில் இலக்கியச்சான்றுகளையும் பொருந்தச்செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் சங்க காலம் என்ற சொல்லாடலை வரலாற்றாய்வில் தவிர்க்கவேண்டும் என்று எச்சரிக்கையும் சொல்லவிரும்புகிறேன். ஏனென்றால், சங்கங்கள் பற்றிய செய்தியைத் தரும் இறையனார் களவியல் உரை காலத்தால் பிந்தியது. இறையனார் களவியல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் அகப்பொருள் இலக்கணம் சொன்ன நூல். திருவிளையாடற்புராணக் கதைகளை உள்வாங்கிச் செய்யப்பெற்ற இறையனார் களவியலே ,முச்சங்கம், இறையனார் அமர்ந்து தமிழாய்ந்தது போன்றனவற்றைச் சொல்லிப் புராணிகத் தன்மையைப் புகுத்தியுள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு கீழடித் தரவுகளைச் சங்க காலச் சமூகத்தின் தரவுகளாக நிறுவும் முயற்சிகள் கிடைத்த அறிவியல் ஆதாரங்களையும் புராணிகத்தன்மை கொண்டவைகளாக மாற்றிவிடும். கீழடிச் சான்றுகளைச் சங்கம் என்ற சொல்லோடு இணைக்காமல் பேசுவதே சரியானது என்பதே நான் சொல்ல விரும்பும் எச்சரிக்கை.

மொழி, இலக்கிய ஆய்வியல் காத்திரமான பங்களிப்புச் செய்த பலரும் சங்ககாலம் என்பதை ஏற்றுப் பேசுவதில்லை. சான்றோர் இலக்கியங்கள், வீரநிலைக்காலம், வீரநிலைக்கவிதைகள், செவ்வியல் கவிதைகள், செவ்வியல் இலக்கியக்காலம் போன்றவற்றையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு காத்திரமான ஆய்வுகளைச் செய்த க.கைலாசபதி (தமிழ் வீரயுகக் காலம்), கா.சிவத்தம்பி(பல ஆய்வுக்கட்டுரைகள்) கோ.கேசவன் (மண்ணும் மனித உறவுகளும்) போன்றவர்களின் ஆய்வுகளை வாசித்தவர்கள் இதனை ஏற்பார்கள்.

- அ.ராமசாமி at Thursday, October 03, 2019

பண்பாட்டுவெளி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.