குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இராவணனுக்கு இலங்கையில்அமைக்கப்பட்ட கோயில்...N.k.s.திருச்செல்வம்..

09 . 04.  2018. 15.05.2020....பண்டைய காலத்தில் இலலங்கையில் சில இடங்களில் இராவண னுக்கு மக்கள் கோயில் கட்டி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. உகந்தை, திருகோணமலை, மன்னார், எல்லை பர்வதம், பொல்தும்பை, கதிர்காமம் ஆகிய இடங்களில் இக்கோயில்கள் இருந்ததாகக் கூறுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு “யார் இந்த இராவணன்” எனும் நூலை நான் எழுதிக் கொண்டிருந்தபோது இராவ ணன் பற்றிய விபரங்களை இலங்கை முழுவதும் தேடி ஆராய்ந்து கொண்டிருந்தபோது “மவ்பிம” எனும் சிங்களப் பத்திரிகையில் ஓர் வியப்பான செய்தியைப் படித்தேன்.

அது சிவ பக்தன் இராவணனுக்கு முதன் முதலாக கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது எனும் செய்தி. ஆச்சரியமான இந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அக்கோயில் கட்டப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும் என எண்ணினேன்.

கொழும்பில் இருந்து புதிய பாதை ஊடாக அவிசுசாவளைக்குச் செல்லும் வீதியில் 16 கி.மீ.தூரத்தில் பன்னிபிட் டிய சந்தி அமைந்துள்ளது. இங்கிருந்து பத்தரமுல்லைக்குச் செல்லும் வீதியில்  4 கி.மீ தூரத்தில் தேவுரம் விகாரை எனும் பெளத்த விகாரை அமைந்துள்ளது. இந்த விகாரை வளாகத்தில் இராவணன் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்தியைப் படித்தேன். பின்னேரம் தெவுரம் விகாரைக்குச் சென்று விட்டேன். அங்கு சென்று பார்த்த போது என் கண்களையே நம்ப முடியவில்லை. இராவணன் கோயில் கம்பீரமாகக் காட்சி யளித்தது. மூன்று தளங்களையும், இரண்டடுக்கு கோபுரங்களையும் கொண்டதாக அந்தக் கோயில் கட்டப் பட்டி ருந்தது. கோயிலின் உள்ளே சென்று பார்த்த போது மனதுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

இராவணின் அமர்ந்த நிலையில் சிலை ஒன்று அங்கே வைக்கப் பட்டிருந்தது. தீவிர சிவபக்தன், மாவீரன் எனப் போற்றப்பட்ட இராவணனின் நெற்றியில், கைகளில் விபூதிப் பட்டைகளைக் காணவில்லை. நெற்றியில் போட்டு இல்லை. முறுக்கிய மீசை இல்லை. மொத்தத்தில் நாம் இதுவரை கண்ட இராவணனை அங்கே காணவில்லை.

அங்குள்ள அலுவலகத்தில் இருந்த முக்கியசுதர் ஒருவரிடம் இக்கோயில் பற்றி விசாரித்தேன். கோயில் பற்றிய சில அபூர்வமான தகவல்களைக் அவர் கூறினார்.

“இராவணன் மீது ஆழ்ந்த பற்று கொண்ட இந்த விகாரையின் பிரதம பிக்கு, இராவணனுக்கு ஓர் கோயில் கட்ட வேண்டும் எனும் இலட்சியத்துடன் இருந்தார். இங்குள்ள பெளத்த மக்களின் உதவியுடன் இக்கோயிலைக் கட்டினார். இராவணனால் இலக்கல மலையில் வழிபடப்பட்ட ஓர் கல் இருந்தது. அக்கல் பின்பு இராவணனின் பாட்டனான புலசுதியரின் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள குளத்தில் போடப்பட்டிருந்தது. அக்கல் அங்கிருந்து எடுக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு, இராவணனின் சிலையின் பின்பக்கம் உள்ள  கருவறையில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

இதைக் கேட்டவுடன் மேலும் மன வேதனையாக இருந்தது. நடிகர்களுக்கெல்லாம் கோயில் கட்டிய நாங்கள், எமது முழுமுதல் கடவுளான சிவனை வணங்கிய தீவிர சிவ பக்தன் இராவணனுக்கு ஓர் கோயிலை இதுவரை கட்டவில்லையே! நாம் செய்யாததை அவர்கள் செய்து விட்டார்களே! என ஆதங்கமடைந்தேன்.

அதன் பின்பு இங்கு கருவறையில் வைக்கப்பட்டுள்ள கல்லைப் பற்றி ஆராய்ந்தேன். அங்கிருந்த பிக்குவிடம் அப்புனித கல் பற்றிக் கேட்டபோது சில குறிப்புக்களைக் காண்பித்தார். அது 3 அடி அகலமும், 6 அடி உயரமும் கொண்ட முட்டை வடிவமான கல் எனத் தெரிந்தது. ஆம், சந்தேகமே இல்லை, அது ஓர் பிரமாண்டமான காசி லிங்கம் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

இராவணன் பற்றிய நல்ல ஆர்வம் உங்களுக்கு உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை. இராவணனின் கோயிலில் மாலை 6 மணிக்கு பூசை நடக்கும். கலந்து கொள்ளுங்கள். என்றார் பிக்கு.

தினமும் வெவ்வேறு நேரங்களில் இக்கோயிலில் இராவணனுக்கு பூஜை நடப்பதாகவும் சொன்னார்.

கோயிலை சுற்றிப் பார்த்தேன். கோயிலின் பின்புறம் இராவணனின் தாய், தந்தையின் சந்நிதி காணப்பட்டது. இராவணனுடன் தொடர்புடைய புலத்தியர், அகத்தியர், விபீசணன் உட்பட பலரது சிலைகள் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்தன. சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போதே நேரம் 6 மணியானது.

பூசை ஆரம்பமானது. வழிபாட்டில் கலந்து கொண்ட எல்லோருக்கும் ஓர் புத்தகம் கொடுத்தார்கள். அதில் சிங்கள மொழியில் இராவணன் ஸ்தோத்திரம், இராவணன் கவி, இராவணன் ஆரசா மந்திரம் போன்றவை காணப்பட்டன. கப்புறாளை அவற்றை ஒவ்வொன்றாகப் படிக்க பக்தர்கள் எல்லோரும் புத்தகத்தைப் பார்த்து திரும்பப் படித்தனர். நானும் படித்தேன். வாழ்க்கையில் முதன் முதலாக இராவணனை வணங்கி, இராவண மந்திரத்தை படித்தேன். ஒரு மணி நேரத்தில் பூசை நிறைவு பெற்றது.

அந்த மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் எல்லாம் சிங்களம், சமஸ்கிருதம், பாளி மொழி கலந்தவை போல் இருந்தன. எப்படியோ இராவணனை வணங்கிய திருப்தியை மட்டும் மனதில் நிறைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

என்.கே.எசு.திருச்செல்வம்

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை