குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சிவன் பாதம் பதித்தசிவனொளிபாத மலையும் அதன் வரலாற்று உண்மைகளும் பகுதி 1 என்.கே.எசு.திருச்செல்வம்

மூன்று தொடர்களும் இப்பகுதியில் உண்டு. 07.05.2020 இன்று மேளம் (சித்திரை) முழுநிலா நாள். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பெளர்ணமி தினத்தன்று சிவனொளி பாத மலையில் ஏறி சிவனின் பாதத்தை தொட்டு வணங்கி வருவேன். இந்த ஆண்டும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. அந்த மனவருத்தத்தோடு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

22 ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் சைவம் மற்றும் தமிழர் பாரம்பரியம் ஆகியவற்றை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும் என நான் எண்ணியபோது, முதல் முதலாக என் முழுமுதற் கடவுளான சிவனின் பாதத்தைத் தொட்டு வணங்கி விட்டு இந்தப் பணியை ஆரம்பிக்க வேண்டும் என எண்ணினேன். அதற்கு நான் தேர்ந்தெடுத்த இடம் சிவனொளி பாதமலை. 1998 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதலாவது தடவையாக மலை உச்சிக்குச் சென்று சிவனின் பாதத்தைத் தொட்டு வணங்கி எனது ஆய்வுப்பணியை த் தொடங்கினேன். பின்பு இடையிடையே சென்று வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று வருகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் மலையேறும் போது தமிழ் மக்களைக் காணாதது பெரிய மனக்குறையாக இருக்கும். ஓரிருவரைத் தவிர, இலங்கை சைவ மக்கள் சிவனின் பாதத்தை வணங்க சிவனொளிபாத மலைக்கு வருவதில்லை. நான் சிவனொளிபாதம் சென்று வந்த பின் முகநூலில் அந்த விபரங்களைப் பதிவிட்டு தமிழ் மக்களை வரும்படி கூறுவேன். எனது பதிவைப் பார்த்து பலர் என்னோடு தொடர்பு கொண்டு மலைக்குச் செல்வது பற்றி தெரிந்து கொள்வார்கள். சென்று வந்த பின் எனக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

சிவன், ஒளி, பாதம் இந்த மூன்றையும் ஒரே இடத்தில் தரிசிக்கக் கூடிய இடமே சிவனொளிபாதம். இலங்கை சைவ மக்கள் அனைவரும் அவசியம் சென்று வழிபட வேண்டிய திருத்தலமே சிவனோளிபாத மலையாகும். இம்மலையில் எங்கும் இல்லாத வகையில் சிவ வழிபாடும், ஒளி வழிபாடும், பாத வழிபாடும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இதன் காரணமாகவே இவ்விடம் சிவன் ஒளி பாதம் எனப் பெயர் பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள

இம்மலை சிவனொளிபாதமலை 2243 மீற்றர் உயரமானது. இம்மலையை ஓட்டியே இரத்தினபுரி மாவட்டத்தின் வட எல்லை உள்ளது. கொழும்பிலிருந்து கட்டன் செல்லும் வீதியில் உள்ள கினிகத்தேனையை அடுத்து வரும் கரோலினா சந்தியிலிருந்து தெற்கு நோக்கி நோட்டன் பிரிட்ச், லக்சபான, மவுசாக்கல ஊடாக நல்லதண்ணிஎனும் மலையடிவாரம் வரை ஓர் பாதை செல்கிறது. நல்லதண்ணியில் இருந்து கால்நடையாக மலைக்கு செல்ல வேண்டும். இதுவே சிவனொளிபாத மலைக்கு செல்லக் கூடிய இலகுவான பாதையாகும். இன்னுமோர் வழியும் இம்மலைக்குச் செல்வதற்கு உள்ளது. கொழும்பிலிருந்து இரத்தின புரிக்குச் செல்லும் வழியில் உள்ள குருவிட்ட என்னுமிடத்திலிருந்து கிழக்கு நோக்கி எக்னெலிகொட, எம்புல்தெனிய, குருளுவான ஊடாக பாலபெத்தலே என்னுமிடத்தை அடைந்து அங்கிருந்து கால்நடையாக மலைக்கு செல்வதாகும்.

கிறிசுதுவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து சிவனொளிபாதம் தமிழர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்து வந்துள்ளது. இலங்கை சைவ மக்களால் வழிபடப்படும் மலைக்கோயில்களில் மிகவும் உயரமானதும் வரலாற்று சிறப்புமிக்கதும் இம்மலையே. இம்மலையில் புராதன காலத்தில் சிவனாலயம் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இமய மலைத்தொடரில் உள்ள திருக்கைலாயமலை சிவன் பார்வதியின் வாசல் தலமாகும். லிங்க வழிபாடு நிலவிய காலத்திலிருந்து இம்மலையை இந்துக்கள் தமது புனித மலையாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், இம்மலை லிங்கத்தைப் போன்ற அமைப்பை உடையதாகும். இதனால் இம்மலை சிவனுக்குரிய மலையாக கருதப்படுகிறது. சிவனொளிபாத மலையும் கைலாயமலையைப் போன்ற லிங்க அமைப்பையுடையதால் திருக்கைலாய மலைக்கு நிகராக இந்துக்களால் வழிபட்டு வந்தது.

சிவனொளிபாதமலை எனும் பதம் சிவனுடைய ஒளியை அடைய வழிகாட்டும் மலை எனப் பொருள்படுவதாகும். இந்துக்கள் முதலில் சிவலிங்கத்தை உருவகப்படுத்தும் மலையை வணங்கி, பின்பு மலை உச்சியை அடைந்து சூரியனை வழிபடுவர். இது ஆதிகாலத்திலிருந்து வந்த சிவசூரிய வழிபாடாகும்.

இம்மலை உச்சியில் விசாலமான, மனித உருவிற்கு அப்பாற்பட்ட ஓர் பாதச்சுவடு காணப்படுகின்றது. இப்பாதத்தை இந்துக்கள் சிவனின் பாதச்சுவடு எனக்கருதி வழிபடுகிறார்கள். இதன் காரணமாக இது ‘சிவனடிபாதம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

பௌத்தமதம் அறிமுகமாவற்கு முன்பிருந்தே சிவனொளிபாத மலையில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். புத்தபகவான் இலங்கைக்கு மூன்று தடவைகள் விசயம் செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. இதில் முதல் தடவை இலங்கைக்கு வந்தபோது சிவனொளிபாத மலை இலங்கையின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியிருந்தது. இம்மலையில் மகாசுமன் எனும் தேவகுமாரன் இருந்ததாகவும், அவனுக்கு பௌத்த நெறிகளைப் போதிக்க வேண்டியே புத்தபகவானின் முதல் விசயம் அமைந்திருந்தாகவும் பாளி நூல்கள் கூறுகின்றன.

இதன்மூலம் புத்தர் வருகைக்கு முன்பு சிவனொளிபாதம் ஓர் சிவவழிபாட்டுத் தலமாகவும், இங்கிருந்த மகாசுமன் சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுடையவனாகவும், இம்மலையிலிருந்த சிவ வழிபாட்டை போதிப்பவனாகவும் இருந்தான் எனக் கூறலாம்.

இதனை அறிந்த புத்தபகவான் மகாசுமன் போன்ற சிவசூரிய வழிபாட்டை கடைப்பிடிக்கும் ஒருவனை பௌத்த நெறிக்குள் கொண்டுவருவதன் மூலம் இத்தீவில் உள்ள பலரை இந்நெறியை கடைப்பிடிக்கச் செய்யலாம் என்ற எண்ணத்துடன் சிவனொளிபாதம் சென்று மகாசுமனுக்கு பௌத்த நெறிகளைப் போதித்து சென்றிருக்க வேண்டும்.

புத்தபகவான் தனது மூன்றாவது விசயத்தின்போது மீண்டும் ஒரு தடவை சிவனொளிபாத மலைக்கு சென்று மகாசுமனின் பௌத்த நெறி மாற்றத்தை உறுதிசெய்து கொண்டதோடு மகாசுமனை பௌத்த மதத் தவர்கள் வணங்க வேண்டுமென்றும் கூறிச் சென்றுள்ளார். அன்று முதல் பௌத்தராக மதம் மாறியவர்கள் சிவனொளிபாதத்திற்குச் சென்று மகாசுமனை வழிபட்டு வந்துள்ளனர். இதனால் இம்மலை பெளத்தர்களால் ‘சுமண கூடபர்வதம்’ என அழைக்கப்பட்டது.

பொ.ஆ..மு. 5 ஆம் நூற்றாண்டில் வியயன் இலங்கைக்கு வரும்போது இந்நாட்டில் இந்திய குடியேற்ற வாசிகள் இருந்துள்ளதாகவும் இவர்கள் எல்லோரும் இந்துக்கள் எனவும் வரலாற்று ஆசிரியர்களான சேர். வில்லியம் யோன்சு கிளப், பெக் கோலொக்கி பென்னெற் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். இதேகாலப் பகுதியில் இங்கு பெளத்தர்கள் இருந்தார்கள் என்பதற்கு எந்தக்குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதன்படி புத்தபகவான் இலங்கைக்கு வந்து சென்ற பின்பும் இங்கு பௌத்தம் பரவவில்லை என்பது புலனாகிறது. புத்தபகவான் இங்கு வந்து சென்ற காலத்திற்கும் விசயன் இங்கு வந்த காலத்திற்குமுள்ள இடைவெளி சுமார் 50 ஆண்டுகளே.

இக்காலப் பகுதியில் பௌத்தர்கள் இங்கு இருக்கவில்லை என்பதும் இக்காலப் பகுதியின் பின்பும் சுமார் இரண்டரை நூற்றாண்டுகளுக்கு பௌத்த மதம் இங்கு பரவியிருக்கவில்லை என்பதும் உறுதியாக தெரிகிறது. ஆக, புத்தபிரான் இலங்கைக்கு வந்து சென்று 280 ஆண்டுகளின் பின் தேவநம்பியதிசுசன் காலத்திலே தான் பௌத்தம் இங்கு பரவியது என்பது சரியான கூற்றாகும்.

தற்போது சிவனொளிபாதமலையை இந்துக்களும், பௌத்தர்களும் பிற சமயத்தவரும் எந்தவித தங்குதடையுமின்றி வழிபட்டு வருகின்றனர். இது பண்டைய காலத்தில் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் பௌத்தர்கள் புத்த பெருமானின் கூற்றுக்கிணங்க மகாசுமனை இம்மலையில் வழிபட்டு வருகின்றனர்.

இருப்பினும் தொன்றுதொட்டு இங்கு நிலவிய சிவசூரிய வழிபாடு இன்றும் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இங்கு செல்லும் எல்லா மதத்தவர்களும் சூரிய வழிபாடு செய்த பின் மலையை விட்டு இறங்குவதும், பண்டைய காலம் முதல் சிவவழிபாடு நிலவிய இம்மலை உச்சியில் சிவ சின்னங்களான விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவை இங்கு வரும் சகல மதத்தவர்களுக்கும் இன்றும் வழங்கப் படுவதும் மிகச் சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

மிகப்புராதன காலம் முதல் சிவனொளிபாத மலையில் மூன்று முக்கிய வழிபாடுகள் நிலவியதாக நம்பிக்கை. ஒன்று சிவவழிபாடு இரண்டாவது ஒளி வழிபாடு (சூரிய வழிபாடு) மூன்றாவது பாதச்சுவடு வழிபாடு (பாதவழிபாடு), இம்மூன்று வழிபாடுகளும் நிலவியதால் இம்மலை சிவன்+ஒளி+பாதம் (சிவனொளிபாதம்) என சைவமக்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இம்மூன்று வழிபாடுகளில் சிவவழிபாடு இராவணன் காலம் முதல் இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன. விசயன், பண்டுகாபயன் காலத்தில் இலங்கையில் சிவ வழிபாடே நிலவியது.

ஒளி வழிபாடு எனப்படும் சூரியனை நோக்கி வழிபடும் முறை மனிதன் முதன் முதலில் கைக்கொண்ட வழிபாட்டு முறையாகும். மனிதன் இயற்கையாகத் தோன்றிய சூரியனை வணங்கிய போதும் பிற்காலத்தில் சூரியனை உருவகப்படுத்தி அதற்கு கோயில்கள் அமைத்து பூசை வழிபாடுகள் நடத்தி வந்தான்.

மத்திய அமெரிக்காவில் மெக்சிக்கோ பகுதியில் வாழ்ந்த ‘அசுடெக்’ இனத்தவர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ‘பிரமிட்’ எனும் மிகப் பிரமாண்டமான கோயில்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்தியாவிலே ஒரிசா மாநிலத்தில் உள்ள “கோனார்க்” சூரிய பகவான் கோயிலும், குயராத் மாநிலத்தில் உள்ள ‘மொதெரா’ சூரியனார் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

பாதவழிபாடு என்பது ஓர் தெய்வத்தின் அல்லது மகானின் பாதத்தை புனிதமானதாகக் கருதி வழிபடும் முறையாகும். உலகில் மிக அரிதாகக் காணப்படும் இவ்வழிபாட்டு முறையானது வட இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்னுமிடத்தில் சிறப்புற்றுக் காணப்படுகிறது. கயாவிற்கு அடுத்தபடியாக பாதச்சுவடு வழிபாடு மேலோங்கிக் காணப்படுவது சிவனொளி பாதத்திலே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவனொளிபாத மலையில் உள்ள பாதத்தை இந்துக்கள் சிவனின் பாதம் எனவும், பௌத்தர்கள் புத்தரின் பாதம் எனவும், இசுலாமியர்கள் ஆதாமின் பாதம் எனவும், கிறிசுதவர்கள் சாந்த தோமசின் பாதம் எனவும் தத்தமது மதத்திற்குரியதென வழிபடுகின்றனர். இலங்கையில் உள்ள நான்கு மதத்தவர்களும் எந்தவித தடையுமின்றி சுதந்திரமாக வழிபாடு செய்யும் ஒரே இடமாக சிவனொளிபாதமலை அமைகிறது. உலகின் முக்கிய மதத்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வழிபடும் ஒரே வழிபாட்டுத்தலம் உலகத்திலேயே இது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

எனினும், சிவனொளிபாதமலை சிவனின் பாதம் பதிக்கப்பட்ட மலை தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

(இன்னும் வரும்...)

என்.கே.எசு.திருச்செல்வம்

வரலாற்று ஆய்வாளர் இலங்கை

சிவன்பாதம்பதித்த சிவனொளிபாத மலையும்அதன் வரலாற்று உண்மைகளும் பகுதி 2 என்.கே.எசு.திருச்செல்வம்

8.05.2020 சிவனொளிபாதமலையில் சிவவழிபாடு தொடர்பான பல வரலாற்று உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. அவை பற்றி இந்துக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அங்கு சென்று சிவனின் பாதச் சுவட்டை தொட்டு வணங்கி வரவேண்டும் என்பதால் தான் இவ்வளவு நீண்ட வரலாற்றுக் கட்டுரையை எழுதிகிறேன். இதைப் படிப்பது மட்டுமல்லாமல், அங்கு சென்று வர வேண்டும். சிவனொளிபாதமலையின் வரலாற்று உண்மைகள் பற்றி நேற்று நான் பதிவிட்ட கட்டுரையின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பகுதி.

சிவனொளிபாதம் ஆரம்பத்தில் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்தபோதும் காலத்துக்குக் காலம் பௌத்தர்களின் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளது. மீண்டும் இந்துக்களின் செல்வாக்கு மேலோங்கியும் காணப்பட்டுள்ளது. பொ.ஆ. 1345 இல் அரேபிய யாத்திரிகரான இபின் பதூதா இலங்கைக்கு வந்தபோது சிவனொளிபாதம் ஆரியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் இந்து மதத்தின் செல்வாக்கு பெற்ற இடமாக இருந்துள்ளது. இபின் பதூதா மலையைத் தரிசிக்க ஆரியச் சக்கரவர்த்தியிடம் விருப்பம் தெரி வித்தபோது 15 பிராமணர்களையும், 4 யோகிகளையும், உதவிக்கு மேலும் 50 பேரையும் மன்னன் அவருடன் அனுப்பி வைத்ததாகவும், மலையில் இசுலாமியர்களையும், கிறிசுதவர்களையும் தான் கண்டதாகவும் இபின் பதூதா தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஆரியச் சக்கரவர்த்தியின் காலத்தில் இந்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் சிவனொளிபாதமலை இருந்தபோதும் இஸ்லாமியர்களுக்கும், கிறிசுதவர்களுக்கும் இங்கு வழிபடுவதற்கு எந்த தடையும் இருக்க வில்லை என்பதும் இபின் பதூதாவின் குறிப்பின் மூலம் தெரிகிறது. இபின் பதூதா அரேபியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அரபு மொழியில் எழுதிய நூற்குறிப்புகளில் இத்தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவனொளிபாத மலையிலுள்ள பாதம் புத்த பகவானுடையது அல்ல என்பது ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்ட முடிவாகும். ஏனெனில் புத்த பகவான் இலங்கைக் வரவில்லை என்பதே பல ஆய்வாளர்களின் ஏகோபித்த கருத்தாகவுள்ளது. புத்த பகவான் இந்திய கரையை ஒருபோதும் கடந்ததில்லை எனவும் இந்தியாவின் விந்திய மலைகளுக்கு தெற்கே ஒருபோதும் வரவில்லை எனவும் ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர். சமகால இந்திய நூல்களிலும் இலக்கியங்களிலும் புத்த பகவான் இந்தியாவிற்கு வெளியே சென்றமை பற்றிய எந்த குறிப்புக்களும் காணப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.

சிவனொளிபாத மலையில் உள்ள தெய்வம் பற்றி பேராசிரியர் பரணவித்தான இருவேறு கருத்துக்களைக் கூறியுள்ளார். இங்கிருந்த மலைக் கடவுளை மகாயான பௌத்தர்களால் வணங்கப்பட்ட ‘சமந்த பத்திர’ எனும் தெய்வம் எனக் குறிப்பிடுகிறார். அதேவேளை இக்கடவுள் ஓர் யக்‌ச தெய்வமாகிய சுமண எனவும், சுமண என்பதே “சமன்” எனும் தெய்வமாக மாற்றம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமண எனும் பாளி சொல்லின் சமஸ்கிருத வடிவம் ‘யமன்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவனொளிபாதமலையில் இருக்கும் பௌத்த மலைத்தெய்வம் பற்றியோ, புத்தரின் பாதச்சுவடு பற்றியோ பொ.ஆ. 11 ஆம் நூற்றாண்டு வரை மகாவம்சத்தை தவிர வேறு எந்தப் பாளி நூல்களிலும் எந்தவித குறிப்புகளும் காணப்படவில்லை என பரணவித்தான தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவிலிருந்து இங்குவந்து குடியேறிய பண்டைய சிங்கள மக்கள் வழிபட்ட தெய்வங்களில் சுமணவும், உற்பலவனும் இடம் பெற்றிருக்கின்றனர். பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டில் சிங்கள மக்கள் பௌத்தத்தை தழுவிய பின்னர் (பௌத்த மதத்தோடு இயைபை ஏற்படுத்தும் பொருட்டுத்தான்) மகாவம்சத்தில் இத்தெய்வங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் கட்டுக் கதைகள் இணைக்கப்பட்டன என்று கொள்வதே தர்க்க ரீதியானதாகும்’ என பேராசிரியர் பரணவித்தான தெரிவித்துள்ளார்.

பரணவித்தானவின் மேற்கண்ட கருத்தானது சிங்கள மக்கள் பொ.ஆ.மு. 500 ஆம் ஆண்டளவில் வட இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்தபோது வழிபட்ட தெய்வம் ‘சுமண’ (யமன்) என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆனால், அண்மைக்காலத்திற் கிடைத்த தொல்லியற் சான்றுகள் இத்தகைய வட இந்தியக் குடியேற்றம் வெறும் நம்பிக்கையே எனவும், பௌத்த மதத்தோடு பரவிய வட இந்தியக் கலாசாரமே இவ்வாறு வட இந்தியக் குடியேற்றமாக இனங்காணப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளன. அத்துடன் பரணவித்தானா கூறும் ‘யமன்’ என்ற தெய்வம் வட இந்தியக் குடியேற்றம் இங்கு நடை பெற்றதாகக் கருதப்படும் காலத்தில் வட இந்தியாவிலோ அன்றி ஈழத்திலோ ஒரு செல்வாக்குள்ள வழிபாட்டுத் தெய்வமாகக் காணப்படவில்லை. இதனை ஈழத்தப் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. வெறும் திசைக் கடவுளாக விளங்கிய இவ் யமன் மலையுறை தெய்வமாக எழுச்சி பெற்றதற்கான நம்பிக்கைகளோ பிற மரபுகளோ சிங்கள மக்கள் பௌத்தர்களாக மாற முன்னர் கடைப் பிடித்த சைவசமயத்திற் கூடக் காணப்படவில்லை. மாறாகப் பரண வித்தானா வட இந்தியாவிலிருந்து சிங்கள மக்களாற் கொண்டு வரப்பட்ட தெய்வமெனக் குறிக்கும் உப்புல்வன், தமிழ் நூல்கள் கூறும் ‘மாயோனே’ என்பதனை இலக்கிய, தொல்லியற் சான்றுகள் உறுதிப் படுத்துவதால் மகாவம்சம் கூறும் சுமணனை இத்தகைய இந்துத் தெய்வங்களில் ஒன்றாக இனங்கண்டு கொள்வதே பொருத்தமுடைய தாகவுள்ளது.

‘புத்தரது பாதவழிபாடு’ பற்றிய மரபும் கூட இந்துத் தெய்வ வழிபாட்டு மரபிலிருந்துதான் பௌத்தத்துடன் இணைந்தது எனக் கொள்ளுவதும் பொருத்தமுடையதாகும். இவ்வழிபாட்டுக்குரிய மலை இன்று ‘சிவனொளிபாத மலை’ என அழைக்கப்படும் மரபைக் கொண்டு சிலர் இத்தெய்வம் ‘சிவன்’ எனவும் இங்கு காணப்படும் பாதம் சிவனுடையதே எனவும் கொள்வர். ஆனால் பரணவித்தானாவோ எனில் ‘சிவனொளி’ என்ற வடிவம் காலத்தாற் பிற்பட்ட வடிவம் என்று கூறி, இதன் மூலம் சிவனுடன் இம்மலையை இணைக்கும் மரபும் பிற்பட்டதே எனவும் எடுத்துக் காட்டியுள்ளார். இதற்கு ஆதாரமாகக் பொ.ஆ. 5ஆம், 6ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட மணிமேகலையிற் காணப்படும் ‘சமனொளி’ என்ற வடிவத்தைச் சுட்டிக்காட்டி, இது தான் மூல வடிவமெனவும் வாதிடுகின்றார்.

எனினும் கிரேக்க அறிஞரான தொலமியின் பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டிற்குரிய இலங்கை பற்றிய குறிப்பில் இம்மலை ‘ஒளிபாத’ எனக் காணப்படுவதாக எடுத்துக் காட்டும் சின்னத்தம்பி இதன் மூலம் இம்மலையைச் சிவனுடன் இணைத்துள்ளார். அவரின் கருத்து யாதெனில் இப்பதத்திற் காணப்படும் ‘ஒளி’ என்பது ஒரு தமிழ் வடிவம் என்பதாகும். சிவன் மட்டுமன்றி முருகனும் ஒளிக் கடவுளே. சிவந்த மேனியரான இவர்கள் மலையுறை தெய்வங்களே.

சிவனொளிபாத மலையில் உள்ள பாதச்சுவட்டை புத்தபகவான் தனது மூன்றாவது இலங்கை விசயத்தின் போது மலையில் பதித்துச் சென்றார் என நம்பிக்கையாகக் கூறப்படுகிறது. பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் நம்பிக்கை. அதே சமயம் சிவன் தனது பாதத்தை மலையில் பதித்தது இராமாயண காலத்தில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பொ.ஆ.மு.50 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இராம, இராவண யுத்தத்தின் பின், இராமர் சீதையை இராவணனிடமிருந்து மீட்டெடுக்கும் காட்சியைக் காண வந்த சிவன் இம்மலையில் தனது பாதத்தைப் பதித்துச் சென்றார் என ஆய்வாளர் காமினி புஞ்சிகேவா இராவணன் சம்பந்தமான இடப்பெயர்கள் பற்றிய ஆய்வுக்குறிப்பிலே தெரிவித்துள்ளார்.

எல்லாளன் காலத்தில் அவனது படைத் தளபதியான தீகயந்து என்பவன் மலை உச்சியில் செங்கம்பளம் விரித்து அழகு படுத்தினான் எனவும், இங்கிருந்த ஆலயத்திற்கு சிவப்பு நிறக்கூரை அமைத்து தனது நேர்த்தியை நிறைவு செய்தான் எனவும் கிறிசுதுவுக்கு முற்பட்ட இரு குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ் மன்னன் எல்லாளனின் காலத்தில் சுமணகூட மலையில் நிச்சயமாக சிவவழிபாடு நிலவியிருக்க வேண்டும் எனலாம்.

எல்லாளன் இலங்கையை ஆட்சி செய்த பொ.ஆ.மு. 145-101 காலப் பகுதியில் சிவனொளிபாத மலையில் சிவவழிபாடு நிலவியதோடு இப்பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துள்ளமையும் தமிழர்கள் சிவனொளிபாத மலைக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளமையும் குறிப்புக்கள் மூலம் தெரிய வருகிறது. எல்லாளனை வெற்றி கொண்ட பின்பு துட்டகைமுனுவின் படையில் இருந்த பத்து இராட்ச தளபதிகளில் ஒருவனான தேரபுத்தபயன் என்பவன் சுமண கூட மலைக்குச் சென்று அங்கு சிறி பாதத்தை வழிபட்டு விட்டு கீழே இறங்கி வந்து அங்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்த ‘மருகந்த’ எனும் தமிழ் ஊரை அழித்து அங்கு தமிழர்களின் ஆதிக்கத்தை இல்லாதொழித்தான் எனவும் நூற் குறிப்புகள் கூறுகின்றன. சிவ னொளிபாத மலைப்பகுதியில் தமிழர்கள் புராதன காலம் முதல் வாழ்ந்து வந்துள்ளமை இதன் மூலம் தெரிய வருகின்றது.

இம் மலையின் உச்சிக்குச் செல்வதற்கு மொத்தமாக ஏழு வழிகள் உள்ளன. இவ்வழிகளில் உள்ள இடப்பெயர்களில் பல பண்டைய காலம் முதல் தமிழ்ப் பெயர்களாக உள்ளமை இங்கு தமிழர்கள் வாழ்ந்தமையை உறுதி செய்கிறது. இரத்தினபுரி-குருவிட்ட வழியில் கிளிமலை, ஆண்டியமலை, இராமகல்லு, குங்குமம், ஊசிமலை, மோகினி அருவி, இராயமலை ஆகிய இடங்களும் , கட்டன் வழியில் நல்ல தண்ணி, சாமி மடம், காசி ஆறு, செம்மடம், உமைச்சாமி மேடம், ஊசி மலை போன்ற இடங்களும் மலையைச் சுற்றிக் காணப்படுவதால் புராதன காலம் முதல் இப்பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்திருந்தமை இந்த இடப் பெயர்கள் மூலம் உறுதியாகிறது.

பொ.ஆ. 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இரண்டு சமசுகிருத நூல்களில் சிவனொளிபாத மலையில் அல்லது மலைக்குச் செல்லும் வழியில் அகசுதியரின் ஆச்சிரமம் இருந்தமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆச்சிரமம் எவ்வளவு காலம் இருந்தது என்பத் தெரியவில்லை. இருப்பினும் பொ.ஆ. 8ஆம், 9ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அகசுதியர் வழிபாடு இங்கு செல்வாக்குப் பெற்று விளங்கியதாகவும், அகசுதியர் ஆச்சிரமம் இருந்த இடங்களில் சைவர்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டதாகவும் சமசுகிருதக் குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது.

சிவனொளிபாத மலை சைவர்களால் சிவனடி பாதம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் ‘சிவனடி பாதம்’ என்ற பெயர் பிரசித்தி பெற்று விளங்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இக்காலப் பகுதியில் சிவனொளிபாத மலையை அண்டிய பகுதிகளில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் சிவனடிபாதம் என்ற பெயரே எழுதப் பட்டுள்ளது. நோட்டன் பிரிட்ச், மசுகெலியா, கட்டன் போன்ற இடங்களில் ‘சிவனடி பாதம்’ என்ற பெயருடன் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை இன்றும் நாம் காணக் கூடியதாகவும் உள்ளது.

மேலும் இக்காலப் பகுதியில் இந்துத் துறவிகளால் பாடப்பட்ட வழிநடைப் பாடல்களில் ‘சிவனடி பாதம்’ என்ற பெயர் காணப்படுகிறது. ‘சிவனடிபாத வழிநடைச்சிந்து’ என்ற பெயரில் நூல்கள் உள்ளன. சிங்கள மக்கள் இம்மலையை ‘சிறிபாத’ என அழைக்கின்றனர். சிறிபாத என்ற பெயர் இந்துக்களுக்கும் உகந்த பெயராக உள்ளது. இந்துக்கள் பயன்படுத்தும் புனித எழுத்தாக ‘சிறி அமைகிறது. சிறிபாதம் என்பது துாய்மைமிகுபாதம், திருப்பாதம், திருவடி எனப் பொருள் படுகிறது.

தட்சிண கைலாய மான்மியத்தில் சிவனொளிபாதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவனொளிபாத மலையில் உள்ள சிவனின் பாதத்தின் கீழ் மகாவலி கங்கை, மாணிக்க கங்கை, காவேரி கங்கை ஆகிய மூன்று கங்கைகள் உற்பத்தியாகின்றன எனவும், மகாவலிகங்கை வடக்கு நோக்கிப் பாய்ந்து திருக்கோணேசுவரத்தை தரிசித்து கடலில் கலப்பதாகவும், மாணிக்க கங்கை கிழக்கு நோக்கிப் பாய்ந்து கதிர்காமத்தை தரிசித்து கடலில் கலப்பதாகவும், காவேரி கங்கை மேற்கு நோக்கிப் பாய்ந்து மன்னாரில் உள்ள திருக் கேதீச்சரத்தை தரிசித்து கடலில் கலப்பதாகவும் பல நூற்றாண்டுகளுக்கு முன் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(இன்னும் வரும்..)

என்.கே.எசு.திருச்செல்வம்

வரலாற்று ஆய்வாளர் இலங்கை

சிவன்பாதம் பதித்த சிவனொளிபாத  மலையும் அதன் வரலாற்று உண்மைகளும் பகுதி 3 என்.கே.எசு.திருச்செல்வம் 09.05.2020

கடந்த இரண்டு நாட்களாக சிவனொளிபாதமலையில் உள்ள சிவவழிபாடு பற்றியும், அதன் வரலாற்று உண்மைகளைப் பற்றியும் எழுதி வந்தேன். மலையகத் தமிழர்களில் பலரும், ஏனைய பிரதேசங்களில் உள்ள உள்ள ஓரிரு தமிழர்கள் மட்டுமே சிவனொளிபாத மலைக்குச் சென்று சிவனின் பாதத்தை தரிசிக்கின்றனர். இந்த நிலை மாறி, பண்டைய காலம் போல ஏராளமான சைவ மக்கள் இம்மலைக்கு யாத்திரை செல்ல வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த நீண்ட கட்டுரையை எழுதியுள்ளேன். அந்தக் கட்டுரையின் முத்தாய்ப்பான இறுதிப் பகுதி இது.

சோழர் காலத்தில் சிவனொளிபாதமலை.

சோழர் இலங்கையை ஆட்சி செய்த பொ.ஆ. 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டில் சிவனொளிபாத மலையை சிவ வழிபாடு மேலோங்கிக் காணப்பட்டுள்ளது. சோழரை வெற்றி கொண்ட விசயபாகுவின் கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது. சோழர் காலத்தில் மலையில் நிலவிய சிவ வழிபாட்டின் தொடர்ச்சியே விசயபாகுவின் கல்வெட்டு செய்தி மூலம் தெரிகிறது.

விசயபாகு அமைத்த சிவ வழிபாட்டு மண்டபம்.

சோழரை வெற்றி கொண்டு பொ.ஆ. 1055 முதல் 1110 வரை பொலநறுவையிலிருந்து இலங்கையை ஆட்சி செய்து வந்த முதலாம் விசயபாகு அம்பகமுவ என்னுமிடத்தில் ஓர் கல்வெட்டைப் பொறித்துள்ளான். மேலும் பாணகடுவ எனும் இடத்தில் செப்பேடு ஒன்றையும் எழுதினான். இவற்றில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வசதி கருதி அவர்கள் தங்குவதற்கு அம்பலங்கள் கட்டுவித்ததாகவும், அவற்றின் மூலம் உணவு, குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது.

விசயபாகுவின் இந்திய மனைவியான திலோகசுந்தரி சிவவழி பாட்டில் ஈடுபாடுடைய இந்து இளவரசியாவாள். திலோக சுந்தரியின் வேண்டுகோளின்படி விசயபாகு சிவனொளிபாதமலை உச்சியில் ஒர் மண்டபத்தைக் கட்டினான் என கல்வெட்டு மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இங்கிருந்து திலோகசுந்தரி சிவத்தொண்டு புரிந்தாள் எனவும் தெரிகிறது. விசயபாகு மூலம் திலோகசுந்தரிக்குப் பிறந்த 5 பெண் பிள்ளைகளான சுபத்ரா, சுமித்திரா, லோகநாதா, ரத்னாவள்ளி, ரூபாவதி ஆகியோரில் நான்காவது பெண்ணான ரத்னாவள்ளியின் மகனே மகா பராக்கிரமபாகுவாகும். சிங்கள மன்னர்களில் அதிகமான இந்துக் கோயில்களை புனர் நிர்மாணம் செய்தவனும் இம்மன்னனே என்பதும் குறிப்பிடத்தக்கது.

திலோகசுந்தரி விசயபாகு கட்டிய மண்டபத்தில் இருந்து சிவத்தொண்டு புரிந்தாள் என்பதை நோக்கும் பொழுது சோழர் காலத்தில் சிவாலயம் ஒன்று இங்கு இருந்திருக்க வேண்டும் எனவும், இதன் காரணமாகவே இராணி மண்டபத்தை மட்டும் அமைக்க ஏற்பாடு செய்தாள் எனவும் கூறலாம். சிவனொளிபாத மலை உச்சி சுமார் 70 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்டதாகும். இது கீழ்த்தளம் என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தின் நடுவில் சுமார் 8 அடி உயரத்தில் ஓர் கற்பாறை உள்ளது இப்பாறையின் மீதுதான் எல்லா சமயத்தவரும் வணங்கும் புனித பாதம் பொறிக்கப் பட்டுள்ளது. பாதம் உள்ள பாறை மேல் தளம் என அழைக்கப் படுகிறது. கீழ்த்தளம் ‘பகள மளுவ’ எனவும், மேல் தளம் ‘உட மளுவ’ எனவும் சிங்கள மொழியில் அழைக்கப்படுகிறது. இந்த கீழ்த்தளத்தில் தான் விசயபாகு ஓர் மண்டபத்தைக் கட்டினான்.

சோழர் காலம் முதல் முக்கியத்துவம் பெற்ற சிவனொளிபாத மலை.

மிகப் புராதன காலம் முதல் சிவனொளிபாத மலை இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்தபோதும் பொ.ஆ. 10ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்தின் பின்பு தான் மிக முக்கிய வணக்கத் தலமாக மாறியது எனலாம். சோழர் காலம் தொடக்கம் இம்மலை வெளிநாட்டு யாத்திரிகர்களின் கவனத்தையும், முக்கியத்துவத்தையும் பெற்றது. வெளிநாட்டு யாத்திரீகர்கள் மலையைத் தரிசிப்பதில் ஆர்வம் காட்டினர். இந்தியாவிலிருந்து வந்த ஏராளமான யோகிகளும், துறவிகளும் மலையைத் தரிசித்த அதே சமயம் ஐரோப்பிய, அரேபிய யாத்திரீகர்களும் மலையைத் தரிசித்தனர்.

சோழர் இலங்கையைக் கைப்பற்றிய பொ.ஆ. 993 ஆம் ஆண்டு முதல் கீர்த்தி சிறி இராசசிங்கன் ஆட்சிப் பீடமேறிய பொ.ஆ. 1747 வரையான 754 வருடங்களில் (சுமார் 7 ½ நூற்றாண்டுகளில்) இடையிடையே சில ஆண்டுகளைத் தவிர மற்ற எல்லாக் காலங்களிலும் சிவனொளிபாதமலைசைவர்களின் செல்வாக்குடன் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்தின் ஆட்சி பீடமேறிய விசயபாகு, பராக்கிரமபாகு, நிசங்கமல்லன், கலிங்க மாகன், 2 ஆம் பராக்கிரமபாகு, 4 ஆம் விசயபாகு, வீர அழகேஸ்வரன், 5 ஆம் பராக்கிரமபாகு, 6 ஆம் பராக்கிரமபாகு, ஆரியச் சக்கரவர்த்தி, முதலாம் இராயசிங்கன் போன்ற அரசர்களின் ஆதரவுடன் சிவனொளிபாத மலையில் சிவ வழிபாடு நிலவியது எனத்தெரிய வருகிறது. இவர்களில் கலிங்க மாகன், ஆரியச்க்கரவர்த்தி, முதலாம் இராயசிங்கன் ஆகியோரின் காலத்தில் இந்துக்களும், பௌத்தர்களும் ஏனைய மதத்தவர்களும் மலையை வழிபட்டு வந்தனர்.

இரண்டாம் பராக்கிரமபாகுவின் திருப்பணி.

பொ.ஆ. 1236-1271 வரை தம்பதெனியவில் ஆட்சி செய்த இரண்டாம் பராக்கிரமபாகு பௌத்த மன்னான போதிலும் சைவசமயத்தையும் ஆதரித்து வந்தான். பெந்தோட்டையில் காளிகோயிலை அமைத்ததோடு, தெவி நுவரவில் கிட்டணர் கோயிலையும் புனரமைத்த இம்மன்னன் சிவனொளிபாத மலையின் உச்சியில் ஓர் மண்டபத்தையும் கட்டினான்.

6ஆம் பராக்கிரமபாகு காலத்தில் சிவனொளிபாத மலை.

பொ.ஆ. 1412-1467 வரை கோட்டை இராச்சியத்தை 55 ஆண்டுகள் ஆட்சி செய்த 6 ஆம் பராக்கிரமபாகுவின் காலத்தில் சிவனொளிபாத மலையில் இந்துக்களின் செல்வாக்கு அதிகமாகக் காணப்பட்டது.

இம்மன்னன் காலத்தில் தென்னிலங்கையில் பல இந்துக் கோயில்களும் அமைக்கப்பட்டதோடு பல கோயில்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டன. இந்துக்களின் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டது. இக்காலப் பகுதியில் எழுதப்பட்ட சந்தேச நூல்கள் மூலம் தென்னிலங்கையில் இருந்த பல இந்துக் கோயில்கள் பற்றிய விபரங்களை அறியக்கூடியதாக உள்ளது.

முதலாம் இராயசிங்கன் காலத்தில் சிவ வழிபாடு மேலோங்கிக் காணப்பட்ட சிவனொளிபாதம்.

பொ.ஆ. 1581-1593 வரை சீதாவக்கையை ஆட்சி செய்த முதலாம் இராயசிங்கன் காலத்தில் சிவனொளிபாத மலையில் சிவ வழிபாடு மீண்டும் செல்வாக்குப் பெற்று விளங்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. தனது தந்தையைக் கொன்று விட்டு ஆட்சியைக் கைப்பற்றிய இராயசிங்கன் தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் சைவ சமயத்தை தழுவினான்.

சிவபக்தனாக மாறிய இராயசிங்கன் சோழ நாட்டிலிருந்து ஏழு சுவாமிகளை அழைத்து வந்து முக்கிய ஏழு இடங்களில் சிவாலயங்களையும், ஆச்சிரமங்களையும் அமைத்து அவர்களைக் குடியமர்த்தினான். இந்த ஏழு இடங்களில் சில ஏற்கனவே சிவ வழிபாடு செல்வாக்குப் பெற்று விளங்கி பின்பு அவ்வழிபாடு குன்றிப் போயிருந்த இடங்களாகவும், வேறு சில இடங்கள் இராயசிங்கனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாகவும் இருந்தன.

இராயசிங்கன் சிவவழிபாட்டை மேம்படுத்திய இவ்வேழு இடங்களில் முதன்மையானது சமனலகந்த எனும் சிவனொளிபாதமே. இவ்வேழு இடங்களின் பெயர்கள் இராயசிங்கன் காலத்தில் விக்ரமாச்சார்ய பண்டிதர் என்பவரால் எழுதப்பட்ட ‘மந்தாரம்புர புவத்த’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிவனொளிபாத மலையின் நிர்வாகம் இக்காலப்பகுதியில் இந்துக் குருமார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கிருந்த பௌத்தர்கள் வெளி யேற்றப்பட்டனர். சமனலகந்தையில் சைவசமயம் மீண்டும் மேலோங்கியது. மன்னனின் ஆதரவுடன் பிராமணர்கள் சிவ பூசைகள், யாகங்கள் போன்றவற்றை நிகழ்த்தினர். மலையெங்கும் சிவனடியார்களும், ஆண்டிகளும், யோகிகளும் நிறைந்து காணப்பட்டனர்.

இமயமலை அடிவாரத்தில் தியானம் புரிந்து வந்த நூற்றுக் கணக்கான சிவயோகிகளும், அடியார்களும் சிவனொளிபாத மலைக்கு வந்து சிவனைத் தரிசித்ததோடு மலைச்சாரலிலும், அடிவாரத்திலும் காணப்பட்ட குகைகளில் தங்கியிருந்து தியானம் செய்தனர். இமயமலை அடிவாரத்தில் கனிகளையும், மூலிகைகளையும் உண்டு வந்த ஏராளமான யோகிகளும், சித்தர்களும் சிவனொளிபாத மலையில் நித்திய வாழ்வு தரும். சஞ்சீவினிச் செடியை தேடிக் கண்டுபிடித்து உட்கொண்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

சுமணகூட மலையின் நிர்வாகத்தை இராயசிங்க மன்னன் இந்துமதத் துறவிகளிடம் ஒப்படைத்தான் என சூளவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் இராயசிங்கன் காலமான பொ.ஆ. 1581 முதல் புகழ்(கீர்த்தி) சிறி இராயசிங்கன் காலம் வரையான பொ.ஆ 1747 ஆம் ஆண்டு வரையான 165 ஆண்டுகள் சிவனொளிபாத மலையில் சிவ வழிபாடு செல்வாக்குப் பெற்று விளங்கியதோடு இந்துக் குருமார்களின் ஆதிக்கத்தின் கீழ் சிவனொளிபாத மலை இருந்தமையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

சுவர்க்கா ரோகணம் என சைவர்களால் போற்றப்பட்ட சிவனொளிபாதம்.

இக்காலப்பகுதியில் சிவனொளிபாத மலை ‘சுவர்க்கா ரோகணம்’ என சைவர்களால் போற்றப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இறுதிக் காலத்தில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் குடியமர்ந்த இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற சிவதலமான காசிக்கு ஒப்பாக சிவனொளிபாதத்தைப் போற்றி வணங்கினர். காசிக்குச் சென்று நிறைவேற்றும் நேர்த்திக் கடன்களை இம்மலைக்குச் சென்று பூர்த்தி செய்தனர். தங்கள் பாலகர்களின் தலைமுடியை சிவனொளிபாத மலையில் அர்ப்பணித்தனர்.

சிவனொளிபாத மலையிலிருந்து அகற்றப்பட்ட சிவனடியார்கள்.

முதலாம் இராயசிங்கனின் ஆட்சிக் காலத்திலிருந்து சிவனொளிபாத மலையில் சுதந்திரமாக தங்கி சிவபூசை, யாகங்களில் ஈடுபட்டிருந்த சிவனடியார்கள் பொ.ஆ. 1635-1687 வரையான இரண்டாம் இராயசிங்கனின் காலத்தில் ஒரு தடவை மலையிலிருந்து அகற்றப்பட்டமை பற்றி குறிப்புகள் கூறுகின்றன. அப்போது தங்களிடம் இருந்த யானைத் தந்தங்களை 2 ஆம் இராயசிங்க மன்னனுக்கு சிவனடியார்கள் பரிசாகக் கொடுத்தனர். இவை 1827 இல் ஆங்கிலேயருக்குக் கையளிக்கப்பட்டன. இந்த யானைத் தந்தங்கள் கடலாதெனியாவில் உள்ள கோயிலில் வைக்கப்பட்டது என H.V. இரவிங் தனது நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்ற முக்கியத்துவம் பெற்ற சிவனொளிபாத மலைச்சாரல் குகைகள்.

சிவனொளிபாத மலைச்சாரலிலும் மலையடிவாரத்திலும் ஏராளமான கற்குகைகள் உள்ளன. இவைகளில் பல புராதன சரித்திர முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. முக்குவத்தை வழியாக சிவனொளிபாத மலைக்குச் செல்லும் பொழுது பாதையின் வலது பக்கத்தில் உள்ள ஒர் இடம் “ இராம கல்லு” என அழைக்கப்படுகிறது. சீதையை மீட்க வந்த இராமர் இங்குள்ள குகையில் தங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அகசுதியர் இலங்கைக்கு வந்த சமயம் சிவனொளிபாத மலையில் ஓர் குகையில் தங்கிச் சென்றுள்ளார்.

சிவனொளிபாத மலையின் முழுமுதற் கடவுள் யார்?

இன்று சிவனொளிபாதமலையைத் தரிசிக்க இந்து, பௌத்த, இசுலாமிய, கிறிஸ்தவ சமயத்தவர்கள் சென்று வருவது வழக்கம். ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது கடவுளர்களுக்குரியதாகவே நினைத்து இம் மலையைத் தரிசித்து வருகின்றனர். இருப்பினும் சிவனொளிபாத மலையின் முழுமுதற் கடவுள் யார் என ஆராய்ந்து பார்க்கும் பொழுது ஒவ்வொரு மதமும் இலங்கையில் எக்காலப் பகுதியில் அறிமுகமாயின என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

பௌத்த, இசுலாம், கிறிசுதவம் போன்ற மதங்கள் இலங்கையில் அறிமுகமான காலம், ஆண்டு, மாதம், திகதி வாரியாக அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் இம் மூன்று சமயங்களும் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்பு இங்கிருந்த ஒரே சமயம் சைவ சமயமே என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். கிறிசுதுவுக்கு முற்பட்ட காலங்களில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் இதற்கு சான்றாக அமைகின்றன. இக்கல்வெட்டுக்களில் 283 கல்வெட்டுகள் சைவ கடவுளர்கள் சம்பந்தமான கல்வெட்டுக்களாகும். இவற்றில் அதிக எண்ணிக்கையில் காணப்படுவது சிவன் சம்பந்தமான கல்வெட்டுகளே.

இலங்கையில் ஏனைய மதங்கள் அறிமுகமாவதற்கு முன்பு சைவ சமயமும், சிவ வழிபாடும் செல்வாக்குப் பெற்று விளங்கியுள்ளமை இப்பிராமிக் கல்வெட்டுகள் மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே, சிவனொளிபாத மலையின் முதற்கடவுள் சிவன் தான் என உறுதியாகக் கூறக்கூடியதாக உள்ளது.

சமனல என மருவிய சிவன்-ஒல (சிவாலயம்)

சிவ வழிபாடு பொ.ஆ.மு. 11,300 ஆம் ஆண்டளவில் இலங்கையில் செல்வாக்குப் பெற்று விளங்கியதாகவும், சிவன் முதன் முதலில் கதிர்காமத்தில் உள்ள கதிரமலைப் பகுதியில் தான் (ஏழுமலை) உறைந்திருந்தார் எனவும் அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. அதன் பின்பே சிவனொளிபாத மலையில் சிவன் குடிகொண்டதாகவும், பின்பு இங்கு சிவாலயம் அமைந்திருந்த தாகவும், சிவன் கோயில் என்பதே பின்பு மருவி சிவன்-தெவொல எனவும் பின்பு சிவன்-ஒல எனவும் பின்பு சமன்-ஒல எனவும் அழைக்கப் பட்டதாகவும், பௌத்த மதம் பரவிய பின் சமனொல எனவும், இறுதியில் சமனல கந்த, சமன கூட எனவும் திரிபடைந்ததாகவும் ஆய்வாளர் தனேஷ் கொடிப்பிபி ஆராய்ச்சி கூறியுள்ளார்.

இதன் பின்பு பொ.ஆ.மு. 5000 ஆம் ஆண்டளவில் இலங்கை வேந்தனான இராவணன் காலத்தில் இலங்கையில் சிவ வழிபாடு மேலோங்கிக் காணப்பட்டமை பற்றி நம்பிக்கைகளும், இராமாயணக் குறிப்புகளும் கூறுகின்றன.

இக்காலப்பகுதியின் பல நூற்றாண்டுகளின் பின்பே பொ.ஆ.மு. 543 இல் புத்தபகவான் இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது.

இவற்றைத் தவிர பொ.ஆ.மு. 10 ஆம் நூற்றாண்டு காலத்திற்குரிய ஆதி தமிழர் வாழ்ந்த தொல்பொருள் மையங்கள் இரண்டு இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஏனைய மதங்கள் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்பு சைவ சமயமே இங்கு வாழ்ந்த மக்கள் கைக்கொண்ட சமயம் என்பதை உறுதிப் படுத்துகின்றன.

இலங்கையின் வரலாற்றுதய காலத்தின் முதல் மன்னனான விசயன் சிவ வழிபாட்டில் ஈடுபாடுடையவன் என்பதை யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் நான்கு ஈசுவரங்களைப் புணரமைத்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது காலம் பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டாகும்.

இதன் பின்பு பொ.ஆ.மு. 5 ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயன் காலத்தில் இருந்த சிவலிங்கக் கோயில்கள் மூலம் இம்மன்னன் சிவ வழிபாட்டில் கொண்ட ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதன் காரணமாகவே தனது மகனுக்கு மூத்த சிவன் என்ற பெயரை சூட்டினான் பண்டுகாபயன். மூத்தசிவனின் மகனான தேவநம்பிய திசுசன் காலத்தில் தான் பௌத்தம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது.

பௌத்த சமயம் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்பு, பொ.ஆ.மு. 437-367 வரையான பண்டுகாபயன் ஆட்சிக் காலத்தில் சிவிகா சாலா, சொத்தி சாலா ஆகிய சிவலிங்கக் கோயில்கள் இருந்தமை பற்றிய வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

இச்சிவலிங்கக் கோயில்கள் அமைந்திருந்த காலத்திலிருந்து 75 ஆண்டுகளின் பின்பு பொ.ஆ.மு 308 இல் தேவநம்பியதீசன் காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, சிவனொளி பாதத்தின் முழு முதற்கடவுள் சிவன் என்பது உறுதியாகத் தெரிகிறது.

நான் ஒவ்வொரு வருடமும் சித்ரா பெளர்ணமி அன்று சிவனொளிபாத மலைக்குச் சென்று வருவது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஒரு தடவை அப்படி சென்று வந்த பின் எனது அலுவலகத்தில் உள்ள பட்டதாரி நண்பர் ஒருவர் என்னிடம் ஓர் கேள்வியைக் கேட்டார். ஒவ்வொரு வருடமும் சிறிபாத மலைக்கு சென்று வருகிறீர்களே, அங்கு புத்தரின் பாதம் தானே உள்ளது. நீங்கள் இந்து தானே, நீங்கள் புத்தரின் பாதத்தை வணங்குவீர்களா எனக் கேட்டார். இல்லை நான் சிறிபாத மலையில் வணங்குவது எங்கள் சிவனின் பாதத்தை, அப்படித்தான் நான் நூறு வீதம் நம்புகிறேன் என பதில் சொன்னேன். உடனே அந்த நண்பர் இல்லை நீங்கள் சொல்வது தவறு, அது புத்தரின் பாதம் தான் என்று என்னுடன் வாதாடினார். உடனே அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

உலகில் உள்ள கடவுளர்களில் ஒற்றைக் காலில் நின்ற கடவுள் சிவன் மட்டும் தான். ஏனைய கடவுள்கள் யாரும் ஒற்றைக் காலில் நிற்கவில்லை. ஆனால் சிவனொளிபாத மலையில் உள்ளது ஒற்றைப்பாதமே, எனவே அப்பாதத்தை ஒற்றை காலில் நின்ற சிவன் பதித்த பாதம் என்று நான் ஆழமாக நம்புகிறேன். இலங்கையில் புத்தரின் பாதச்சுவடுகள் பல இடங்களில் காணப்படுகிறன. அங்கெல்லாம் இரண்டு பாதச்சுவடுகளே உள்ளன. புத்தபகவான் எப்போதாவது ஒற்றைகாலில் நின்றுள்ளாரா? எனக் கேட்டேன். அந்தப் பட்டதாரி நண்பர் எந்த பதிலும் சொல்லாமல் மெளனமாக நகர்ந்து சென்றார். எனவே சிவனொளிபாத மலையில் உள்ள பாதம் சிவனின் பாதம் தான் என்பது நிறூபணமாகிது.

என்.கே.எசு.திருச்செல்வம்

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை