குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு-2

08.05.2020.....செ.பொ.கோபிநாத் அவர்களின் இணயப் பக்கத்திலிருந்துபழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி.பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009)  கடைப்பிடிக் கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.

பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்த அவர், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை வந்தார்.

கைலாசபதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் தமது உயர்கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் தமிழைச் சிறப்பு பாடமாக கற்று B.A (Hons) முதல் தர மாணவனாகச் சித்தியெய்தினார் (1957).

பல்கைலக்கழகக் கல்வியின் பின்னர் இலங்கையின் அரச பத்திரிகையான தினகரனில் உதவி ஆசிரியராக1957 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1961-62).1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான் நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில் தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரை பணிபுரிந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும்(1978-82) பணிபுரிந்தார்.

பல்கலைக்கழகப் பணிகளில் மாத்திரமின்றி இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார். யுனெஸ்கோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்(1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்துள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார். க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

கைலாசபதி அவர்கள் ய(ச)னமகன், உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி, அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்..

மாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய லெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார். சீன அரசின் அழைப்பில் இவர் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார்.   இடைச்செருகல் கருத்து  இக்கடிதம் (மடல்) தமிழினத்தையும்,சீன அரசையம் மீண்டும்  மீட்டுப்பார்த்து தமிழினத்தை சீனம் நட்போடு  அலுகவாய்ப்பிருக்கும் பயன்படுத்த வேண்டும், பேராசிரியரின் துணைவியாரும் ,பிள்ளைகளும் சீன அரசிற்கு அவர் நினைவுகாலத்தில் மடல் வரைய லாம். சீனர் தமிழர் உறவைப்புதுப்பிக்கலாம்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு 06.12.1982 இல் இயற்கை எய்தினார். முப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதி அவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார்.