குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு 17 பேராசிரியர்.சி.மெளனகுருஅவர்களின் முகநூல் பதிவொன்றிலிருந்து

பேராசிரியர் கைலாசபதி மாதம்   பதிவு 17 ..பேராசிரியர்.சி.மெளனகுரு அவர்களின் முகநூல் பதிவொன்றிலிருந்து

கருத்துக்களின் களம் என்ன?அக் காலத்தில் மறைந்த பேராசிரியர். கைலாசபதியின் கட்டுரை ஒன்று பலரிடம் ஒரு பலத்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.1962ஆம்ஆண்டு நாங்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பல்கலைக் கழகத் தமிழ் மன்ற வெளியீடான இளங்கதிரில் அக்கட்டுரை பிரசுரமாகி இருந்தது. ஆணிவேரே அசைந்து விட்டது போல் பலர் அந்தரப்பட்டனர்.

'நாடும் நாயன்மாரும்'

என்ற தலைப்பில் பேராதனை பல்கலைக்கழகச் சஞ்சிகை ஒன்றில் வந்த கட்டுரை அது.

பல்லவர் கால பக்தி இலக்கியத்தின் ஊற்றுக் கண்களைப் பற்றி அதில் அவர் ஆராய்ந்திருந்தார்.

பல்லவர் காலம்

கி.பி.6ம் நூற்றாண்டுக்கும் 9ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி.

தமிழ் நாட்டிலே சமணர் ஒரு பக்கமாகவும்

சைவ வைச்ணவர்கள் மறுபக்கமாகவும் நின்று

சமயப் போர் புரிந்த காலம் அது.

இப் போரில் சைவ வைணவர் வெற்றி பெற்றனர்.


சமண-பௌத்தர்கள் பெரும் தோல்வி கண்டனர்

தேவாரங்கள், திவ்ய பிரபந்தங்கள் உருவான காலமும் இதுவே.

சமயப் போரின் விளைவுகள் அவை.


இந்தப் பின்னணியில் பேராசிரியர் சுப்பிர மணியப் பிள்ளை எழுப்பிய சில கேள்விகளை கைலாசபதி எழுப்பி அதற்கு விடையும் காண முயன்றிருந்தார்.

கேள்விகள் இவைதாம்.

'அன்பையும் சாத்வீகத்தையும் போதித்த சைவ மதக் குரவர்கள் சமணர் பதினெண்ணாயிரவரைக் கழுவேற்றிக் கொன்றது ஏன்?'

'திருமாலுக்கு எதிராக பேசுபவர்களின் சிரத்தை அறுப்பேன் என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியது ஏன்?

'சம்பந்தர் சமணர்களை மண்ணார் மேனியர்

என்றும் உண்டுடுக்கை கைவிட்டார் என்றும் போகமறியார் என்றும் வசை பாடியது ஏன்?

இத்தகைய தீவிர கோபங்களுக்கேல்லாம் காரணம் என்ன?

சமணருக்கும் சைவருக்கும் இடையில் ஏன் போர் வந்தது?

அது ஏன் ஆளை ஆள் அழிக்கும் அளவிற்கு போனது?

இதற்கு பல்வேறு ஆதாரங்களை நிரல் படுத்திய பேராசிரியர் கைலாசபதி

சமணம் வணிகரைச் சாந்திருந்தது என்றும்

சைவம் நில உடமையாளரை சாந்திருந்தது என்றும்

சமூகத்தின் அடிக்கட்டுமானத்தில் வணிகருக்கும் நிலஉடமையாளருக்கும் நடைபெற்ற போரே மேற்தளத்தில் சமண சைவப் போராக வெளிக்கிளம்பியது என்றும்

சமூக அதிகாராத்தை கைப்பற்றும் போட்டியில் இருவர்க்கமும் ஆளையால் அழிக்கும் அளவிற்கு சென்றமையின் வெளிப்பாடுகளே இவைகள் என்று விளக்கியிருந்தார்.

அக்கட்டுரை பற்றி அன்று பலரிடமிருந்து அவதூறுகள் வந்தனவே ஒழிய

ஆதாரபூர்வமான பதில்கள் வரவில்லை

அந்த அவதூறுக்கு பதில் தரும் வகையில் கைலாசபதி இன்னுமோர் கட்டுரை எழுதினார்

அதுவே

'பேரரசும் பெரும் தத்துவமும்' (மெய்யியலும்)

என்ற கட்டுரை.

நிலஉடமையாளர்களான சோழப் பெருமன்னர்கள் 10ஆம் நூற்றாண்டில் ஒரு பேரரசை அமைத்து கங்கையும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்தில் இருந்தபோது எவ்வாறு சைவ சித்தாந்தம் ஒரு மெய்யியலாக (தத்துவமாக) வளர்ந்து பேரரசு ஒன்றை உருவாக்க உதவியது என்பதை விளக்கியிருந்தார்.

சைவ சித்தாந்த மெய்யியலுக்கும்(தத்தவத்திற்கும்) நிலஉடமையாளர்களுக்கும் இடையே இருந்த அத்தியந்த உறவுகளை அவர் நுணுக்கமாக விபரித்திருந்தார்.

சரித்திர போக்கிலே ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் கருத்துப் போர்கள் நடைபெறுகின்றன

இக் கருத்துப் போர்கள் பலமட்டங்களில் பல தளங்களின் நடைபெறும்

இக்கருத்துப் போரின் பின்னணி அதிகாரத்தைக் கைபற்றமுனையும் இரண்டு வர்க்கங்களுக்கிடையேயான போரே என்பது சமூக அசைவியக்கம் பற்றிய ஒரு விஞ்ஞான நோக்கு

'ஒவ்வொரு கருத்துக்கும் பின்னாலும் ஒரு வர்க்கம் உண்டு'

என்பது பிரசித்தமான வாக்கியம்

கருத்துப் போரை வர்க்கப் போராக இனம் கண்டு இலக்கியச் சான்றுகள் மூலம் அதனை வெளிக் கொணர முயன்றவர் கைலாசபதி.

அன்று கைலாசபதியின் நாடும் நாயன்மாருக்குமான பதில் கட்டுரை நா. வானமாமாலையிடமிருந்துதான் வந்தது.

அது மறுப்பல்ல அதில் வான மாமாலை கைலாசபதியின் கருத்து அடிப்படையை ஏற்று மேலும் சில விளக்கங்கள் அளித்திருந்தார்

அண்மையில் தான் அது சம்மந்தமாக அழமான வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பித்துள்ளன.

இவற்றில் இருந்து நாம் அறிவது என்ன?

சமூகத்திற்கும் இலக்கியத்திற்கும் அல்லது கருத்துக்களுக்கும் இடையே இடையேறாத ஒரு தொடர்பும் இயக்கமும் நடந்து கொண்டிருக்கின்றன

சமூகத்தின் அசைவியக்கம் இலக்கியத்தில், தத்துவத்தில் பிரதிபலிக்காமல் விடாது

சமூகம் மாறாதது ஒன்றல்ல

அது என்றும் மாறிக் கொண்டிருப்பது

சமூகத்தில் மாற்றத்தை விரும்பாத சக்தியும் உண்டு,

மாற்றத்தைவிரும்பும் சக்தியும் உண்டு

இந்த இரண்டையும் சமூகம் உள்ளடக்கியிருக்கும்

இந்த இரண்டு போக்குகளுக்குமிடையே நடைபெறும் இடையறாத போராட்டமே சமூகத்தை இயக்கும் போராட்டமாகும்.

இப்போரில் அறிஞர்கள், கலைஞர்கள் ,சமயக்குரவர்கள் அனைவரும் ஏதோ ஒரு பக்கம் நிற்பர்.

அது அவரவர் அப் போராட்டம் மூலம் பெறும் சுயலாபங்களையும்,

அவர்களின் வர்க்கச் சார்பையும்

, அறிவையும்,

சார்ந்த மெய்யியலையும்( தத்துவத்தையும்)

பொறுத்துள்ளது ஒவ்வொருவரும் தாம் செய்வதே சரி எனவும் விவாதிப்பர்.

அவ்வண்ணம் சமுகத்தின் அடிக் கட்டுமானத்தையும் மேற்கட்டு மானத்தையும் தொடர்பு படுத்தி கருத்துக்களின் ஊற்றுக்களை கண்டு பிடித்த ஆராய்வாளர்கள் தமிழாராய்சியாளர்களிடையே மிகச் சொற்பமே.

இத்தகைய ஆய்வுகள் மேற்கு நாடுகளில் நிறைய வந்துள்ளன.

இவ்வாய்வுகள் சமூகத்தை விளங்கிக் கொள்ள மிகவும் உதவுவன.

இந்திய வரலாற்றையும் முக்கியமாக இந்தியாவின் காலத்துக்குக் காலம் எழுந்த பல்வேறு மெய்யியல்களையு(தத்துவங்களையும்) இவ்வண்ணம் கண்டு ஆராய்ந்து வெளிப்படுத்தியவர்களுள்


ராகுல்யி சாங்கிருத்தியான்,

டாங்கேய, தேவிபிரசாத் சட்டோபாத்யா,

ரொமிலாதாப்பர்,

முகர்யி

போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்

ராகுல்யியின் நூல்

'வால் காவிலிருந்து கங்கை வரை'

தமிழில் வந்துள்ளது.

இந்திய சரித்திரத்தை 20 கதைகளில் இதில் அவர் கூறுகிறார்.

சரியான வரலாற்ற( சரித்திர) ஆதாரங்களுடன் ஒவ்வொரு கால கட்டத்தில் உருவான கருத்துக்களை சமூகப் போராட்டப் பின்னணியில் விளக்குகிறார்

.டாங்கேயின் நூல்

'பண்டைக்கால இந்தியா'

என்ற பெயரில் தமிழில் வந்தது.

இந்தியாவில் வேதங்களின் தோற்றமும், பாரதப் போரின் பின்னணியும் சமூக வளர்சிப் பின்னணியில் இதில் விவரிக்கப்படுகின்றன.

தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூல்

இந்திய தத்துவத்தில் இருப்பனவும் இறந்தனவும்

என்ற பெயரில் தமிழில் வந்தது.

இதில் அவர் இந்திய வரலாற்றுப் போக்கில் எந்த வகையான மெய்யியல்கள்(தத்துவங்கள்) எழுந்தன என்றும் எவை இறந்தன என்றும் விளக்கி அதன் பின்னணியில் வர்க்கங்களைக் கண்டு குறிப்பிட்ட வர்க்கங்களின் அழிவும், எழுச்சியுமே மெய்யியல்களின்(தத்துவங்களின்) எழுச்சிக்கும் இறப்பிற்கும் காரணம் என விளக்குகிறார்.

ரொமிலா தாப்பாரின் நூல்

'வரலாறும் வக்கிரங்களும்'

என்ற தலைப்பில் தமிழில் வெளி வந்துள்ளது

வரலாற்றில் உண்மையற்ற சில ஐதிகக் கருத்துக்கள் உருவாகி அவை மக்களை ஆட்டும் விதத்தினை இதில் அவர் விளக்குகிறார்.

முகர்யியின் நூல்

'மகாத்மா காந்தி'

என்ற பெயரில் தமிழில் வெளி வந்தது. மகாத்மா காந்தியின் கருத்துக்கள் உருவான பின்னணியை இது விளக்குகிறது.


கோசாம்பியின் நூல்களுள் சில தமிழில் வந்துள்ளன

பண்டைய இந்திய அதன் பண்பாடும் நாகரீகமும்

என்ற நூலும் மாயையும் யதார்த்தமும் எனும் நூலும்

அவற்றுள் சில

அவரது சில கட்டுரைகளும் தமிழில் வந்துள்ளன

பகவத் கீதையின் கருத்துக்கள் எழுந்த சமூகப் பின்னணி பற்றிய அவர் கட்டுரை முக்கியமானது.

இவர்கள் அனைவரும் ஒன்றைச் செய்ய முனைகின்றனர்.

கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன?

அவற்றின் மூல வேர்கள் எந்த வர்க்கத்தைச் சார்ந்திருக்கின்றன ?

என்பதைக் கண்டு பிடித்து கருத்துக்களின் வர்க்க மூலங்களைக் காட்டுகின்றனர். அக்கருத்துக்களின் வர்க்க நலன்களை அம்பலமாக்க முனைகின்றனர்.

அதன் மூலம் சமூகத்தை நல்ல திசை நோக்கி முன்னெடுக்கின்ற. சக்திகளுக்குத் மெய்யியல் (தத்துவ) பலம் அளிக்கவும் முயல்கின்றனர்.

இக்கட்டுரை நான் 1990 இல் எழுதிய கட்டுரையாகும்

1 ஆம் படம் கைலாசபதி

2ஆம் படம் கோஸாம்பி

3 ஆம் படம் ராகுல்ய சாங்கிருத்யாயன்

4ஆம் படம் சட்டோபாத்யாய

5 ஆம் படம் றொமீலா தாப்பர்