குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தேவநேயப் பாவாணரின் சிறப்பைப் பற்றி அவரது மாணவன் பெருஞ்சித்தரனார் கூறுவதைக் கேளுங்கள் !

07.02.2020....மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

உலகில் 6000 மொழிகள் அறியப்பட்டன. அதில் 2600 மொழிகள் வழக்கில் இருந்தன. அவை அனைத்திற்கும் மூலம் 6 மொழிகள் என்று உலக மொழியியல் வல்லுனர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த 6 மொழிகளில் மூத்தமொழி தமிழ்மொழி என்பதை கிரேக்க, சீன மொழிகளில் ஊடுருவி உள்ள தமிழ்ச் சொற்களை எடுத்துச் சொல்லி சான்றுகளுடன் நிறுவிய ஒரே மாந்தன் தேவநேயப் பாவாணர்.

உலகில் மொழியிலுக்கு அடிப்படையான வேர்ச்சொல் ஆய்வு முறையினை தமிழிற்கு கொண்டு வந்து, தான் அறிந்த 81 மொழிகளின் வாயிலாக 'தமிழே உலகின் முதன்மொழி. தமிழனே உலகின் முதல் மாந்தன், தென்னக மொழிகளுக்கு தாயும், ஆரியத்துக்கு மூலமும் ஆனது தமிழ் மொழியே' என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூறி, தனித் தமிழின் தலைமகனாக விளங்கியவர் தேவநேயப் பாவாணர் ஆவார்.

1902 பிப்பிரவரி 7இல் திருநெல்வேலி மாவட்டத்தில் தோக்கசு ஞானமுத்தருக்கும், அவரின் இரண்டாவது மனைவியுமாகிய பரிபூரணம் அம்மையாருக்கும் 10ஆவது பிள்ளையாகவும் 4ஆவது மகனாகவும் பிறந்தார்.

1906இல் அவருடைய ஐந்தாம் அகவையில் அவரின் தந்தையும், தொடர்ந்து தாயும் மறைந்தனர். இதனால் அன்றைய வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனது மூத்த அக்காவாள் வளர்க்கப்பட்டு நடுநிலைக் கல்வியைப் பயின்றார்.

தொடர்ந்து மேல்நிலைக் கல்வி பயில அக்காவின் பொருளியல் சிக்கலால் யெங் துரைமகனார் (திருவில்லிபுத்தூரில் உள்ள ஒரு சிற்றூரின் ஆங்கிலேய அதிகாரி) என்பவரின் மேற்பார்வையில் பாளையங்கோட்டை திருச்சவை விடையூழியக் கழக உயர்நிலைப் பள்ளியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

அக்காலக் கட்டங்களில் ஆங்கில மொழி பற்றாளராக, பேச்சாளராக, மாணவ இலக்கிய மன்றச் செயலாளராகத் திகழ்ந்தார். மேல்நிலை வகுப்பு முடித்து யெங் துரைமகனாரின் பொறுப்பில் இருந்த சீயோன் மலை உயர்தரப் பள்ளியில் ஆறாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். அவர் நடுநிலைக் கல்வி பயின்ற ஆம்பூர் பள்ளியிலேயே 1921இல் தமிழாசிரியர் பணியை ஏற்றார். அங்கு மூன்றாண்டு காலம் பணிபுரிந்தார்.

1926இல் சென்னையில் திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத்தின், 'தனித் தமிழ்ப் புலவர்' தேர்வு எழுதி, அன்றைய ஆண்டில் தேர்ச்சி பெற்ற ஒரே புலவர் என்கிற சிறப்பினைப் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசை வல்லுநராகத் தேர்ச்சி பெற்றார்.

அதன்பிறகு மன்னார்குடி பின்லே (Finlay) கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் ஆறாண்டு காலம் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். அங்கு வறுமை நிலையில் இருந்த பார்ப்பன கோபாலகிருட்டிணன் பணி நீக்கம் செய்யப்படும் நிலையறிந்து, அவருக்காகத் தன் வேலையை இழந்தார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனது அக்காவின் மகளான நேசமணியை திருமணம் செய்தார். மேற்கண்ட பணியிலிருந்து விலகியதால், அவரின் வாழ்க்கைச் சூழல் மிகவும் வறுமைக்குத் தள்ளப்பட்டது.

இப்போது 20ஆம் நாளுக்குள் தயவுசெய்து 10 உரூபாய் அனுப்பி உதவுங்கள். இங்கே பணத்திற்கு பெரிய முடை. தாள் செலவுக்கும், அஞ்சல் செலவுக்கும் கூடப் பணமில்லை என்று சைவ சிந்தாந்த கழக ஆட்சியர் வ.சுப்பையாவிற்கு எழுதிய மடலில் குறிப்பிடுகின்றார் எனில்; அவருடைய வாழ்க்கைச் சூழல் எப்படி இருந்தது என்பதை அறியலாம்.

இக்காலக் கட்டத்திற்குப் பின் தமிழ் மொழி, இனப் பற்றுக்கொண்ட சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமி அவர்கள், பாவாணரின் மொழி ஆய்வுகளுக்கும் பொருளியல் தேவைகளுக்கும் உதவும் வகையில், தமது கல்லூரியிலேயே பணியமர்த்தினார். அக்கல்லூரியில் பாவாணரின் மொழிப் புலமையை அறிந்து அவரோடு தொடர்புக் கொண்ட அக்கல்லூரி மாணவரே; பின்னாளில் தென்மொழி ஆசிரியரும், தமிழ்த் தேசியத் தந்தையுமாகிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

தொடர்ந்து... சேலம் கல்லூரியில் 1944 முதல் 1956 வரை பணியாற்றினார். இக்காலக் கட்டத்தில்தான் மொழிப் போராட்டங்களும், எல்லை மீட்புப் போராட்டங்களும் நடந்துக் கொண்டு இருந்தன. எல்லைப் போராட்டத்தில் பாவாணர் பல்வேறு வகையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1956ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் திராவிட மொழி ஆய்வுத் துறையில் பணிபுரிந்தார். வேற்று மொழியினரால் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் பணியமர்ந்த பாவாணரின் கூட்ட உரைகள் பலவும் வேற்று மொழியினருக்கும், ஆங்கில ஆரிய மோகத்தில் திளைப்பவர்களுக்கும் ஒரு பதிலடியாகவே அமைந்தன. தொடர்ந்த இச்செயல்களால் ஏற்பட்ட நெருக்கடியால், 1961இல் அண்ணாமலை பல்கலைக் கழகப் பணியை விட்டு வெளியேறினார். அவரோடு அங்கிருந்து தமிழும் வெளியேறியது.

தொடர்ந்து வறுமை பாவாணரை வாட்டியெடுத்தது. ஏன் அவருக்கு இந்த வருமை? ஆம். பாவாணருக்கு தமிழ் தெரிந்தளவு மற்றவர் குடிக்கெடுக்க தெரியவில்லை. இதனை பாவாணரே, 'ஆம் எனக்கு மனைவியும் உண்டு, மக்களும் உண்டு, அதேநேரத்தில் மானமும் உண்டு' என்பதை தன் குறிப்புகளில் உணர்த்துகிறார்.

1963ஆம் ஆண்டு பாவாணர் வாழ்வில் பேரிடியாக அவரின் மனைவி நேசமணி மறைவுறுகிறார். அவரின் குறிப்புகளில் 'என் மனைவி அக்தோபர் 27இல் இறந்தார். அன்று மருத்துவ சாலைக்கு வாடகை இயங்கியில் (வண்டி) அனுப்ப என்னிடம் 10 உரூபாய் இல்லை. இருந்திருந்தால் நான் அனுப்பியிருப்பேன். என் மனைவியும் பிழைத்திருப்பார் ' என்கிற எழுத்துக்கள் கல் நெஞ்சத்தையும் கலங்க வைக்கும்.

1968ஆம் ஆண்டு அக்தோபர் 6ஆம் நாள் திருச்சிராப்பள்ளியில் உலகத் தமிழ்க் கழகம் மறுமலர்ச்சியுடன் தொடங்கியது. இதன் தலைவராகப் பாவாணர், பொதுச் செயலராக பெருஞ்சித்தரனார், துணைப் பொதுச் செயலராக புலவர் இறைக்குருவனார், மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். உ.த.க.வின் தலைவராக நான் இருந்தாலும், அதன் தலைவர் மறைமலையடிகளே, நான் அவ்வியக்கத்தை வழிநடத்தும் ஒரு தொண்டனே என்று மேடைகளில் பாவாணர் கூறுவதுண்டு. உ.த.க.வின் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் தமிழ்மொழிக் குறித்து பல்வேறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

1981ஆம் ஆண்டு சனவரி 5ஆம் நாள் மதுரை பந்தயத் திடலில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் 'மாந்தனின் தோற்றமும் தமிழர் மரபும்' என்ற தலைப்பில் பாவாணர் உரை நிகழ்த்தினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில், தமிழ் குறித்து தான் கற்றறிந்த ஆய்வுகளைச் சான்றுகளுடன் மேற்கோள் காட்டி உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

மிகவும் எழுச்சியோடு பேசிய பாவாணர், பேசி முடிக்கும்போது நினைவிழந்து கீழே சாய்ந்தார். அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செனஅறும் பயனளிக்காமல் 1981ஆம் ஆண்டு, சனவரி 15ஆம் நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு தனது 80ஆம் அகவையில் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். வாராது வந்த மாமணியை தமிழ்ச் சமூகம் அன்றைய சூழலில் இழந்து இருந்தது.

1981ஆம் ஆண்டு சனவரி 17ஆம் நாள் அனைத்து தமிழ் உணர்வாளர்களும், அரசியல் இயக்கத் தலைவர்களும் ஒன்றிணைந்து கலைஞர் கருணாநிதி நகரில் தொடங்கி, கீழ்ப்பாக்கம் கல்லறை வரை ஊர்வலமாகக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

தமிழ் இலக்கணம், இலக்கணத்தின் வரலாறு, சொல்லாய்வுக் கட்டுரைகள், திராவிடத்தாய், செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உட்பட 30க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை தனது ஐம்பது ஆண்டு மொழி ஆய்வின் மூலம் உலகிற்கு வெளிக்காட்டிய தனித்தமிழின் தலைமகன்; தமிழின் தொன்மைக் குறித்து பல்வேறு மொழிகளில் 19க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய செந்நாவலர்; 'மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் ஒரு பழந்தமிழ் நாகரிகமே' என்று விளக்கிய மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் சிறப்பைப் பற்றி அவரது மாணவன் பெருஞ்சித்தரனார் கூறுவதைக் கேளுங்கள்.