குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

தமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்

14.12.2018-இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 84 வயது முதியவர் சுப்ரமணியன். இவர் தனது சுப்பிரமணியன் என்ற பெயரை ஈழம் தமிழப்பன் என்று மாற்றி கொண்டவர். தற்போது, கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பின்னர், தமிழ் மொழி மீது கொண்ட அன்பால் பல தமிழ் நூல்களை படிக்க தொடங்கினார்.

தனது பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஈழம் தமிழப்பன், தமிழில் இளங்கலை முனைவர் பட்டம் பெற்றார். இதனைத்தொடர்ந்து பல தமிழ் நூல்களை படித்து கொண்டிருந்த அவர், உலகில் உள்ள அனைத்து தமிழ் நூல்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளார். தற்போது உலகம் முழுவதும் தமிழ் நூல்களை சேகரிக்க உலக தமிழ் நூல் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு தற்போது 84 வயதான போதிலும், தனது முயற்சியில் சிறிதும் தொய்வின்றி ஆர்வமுடன் உழைக்கும் இவர், உலகில் மிகவும் பழமை வாய்ந்த தமிழ் நூல்களை பற்றி பலருக்கும் தெரியாததால், தமிழரின் ஆதிக்கம் பற்றியும் யாருக்கும் தெரிவதில்லை என கூறுகிறார். தமிழ் மொழியின் ஆளுமையை பற்றி எடுத்து கூறவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன் என்று கவலை கூறுகிறார். தமிழ் நூல்களின் வடிவங்களான ஓலைச்சுவடிகள், நாளிதழ், புத்தகம் என 5000திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் நூல்களை தனது கணினியில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த நூல்களை இணையத்தளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது, இவரின் முதிர்ச்சி காரணமாக கணினியை பயன்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தனது பணியை தொடர முடியவில்லை என கவலையுடன் கூறுகிறார். தமிழ் மொழியின் மீது தீவிர பற்றுகொண்டவர்கள் இந்த உதவியை செய்ய முன்வரவேண்டும் என தெரிவிக்கிறார். தமிழ் நூல்களை மிகவும் நேர்த்தியான முறையில் கற்கும் வகையில் இணையதளத்தை உருவாக்க உள்ளதாகவும், உலகில் உள்ள அனைத்து பயனற்ற நூல்களாக வைத்திருக்கும் தமிழ் பொக்கிஷங்களை தந்து உதவுமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

தமிழ் மொழியின் மேல் தீராத காதலை கொண்ட இந்த முதியவர், மிக சரியான உச்சரிப்போடு ஆங்கிலத்திலும் சக்கைபோடு போடுகிறார். மேலும், தமிழை தன்னுடைய மூச்சாக கருதி வாழ்ந்து வரும் இவர் தமிழுக்கு கொடுக்கும் இவரின் அன்பு, தனது தாயிக்கு இணையான அன்பாக கருதுகிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.