குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார் 
  சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது. தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத இவர்கள் தமிழைப் பயின்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தனர். சமயப் பணியாற்ற வந்த அவர்கள் தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டனர். அவர்களுள் தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத ஒருவர் வீரமாமுனிவர்.


இத்தாலியில் இவர் பிறந்தது 1680 நவம்பர் 9ஆம் நாள். கான்சுடாண் டைன்யுசேபியுசு சோசப்பு பெசுகி என்பது இவரது இயற்பெயர். இந்தியாவில் கிறித்துவ சமயப்பணி புரிவதற்காக வந்த முனிவர், 1711 மதுரை மறைப்பணிக் களத்துக்கு வந்தார்.


மதுரைப் பகுதியில் 1606 முதல் 1645 வரை பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்தார். காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்தார். வீர மாமுனிவரும் இவரது வாழ்க்கை முறையையே பின்பற்றினார்.

 


பெசுகி என்ற தம் பெயரை 'தைரியநாதர்' என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே 'வீர மாமுனிவர்' என பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.


வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்


1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.


2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் 'ஏ' 'ஓ' போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் 'எ' 'ஒ' ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.


3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. 'தேம்பாவணி' என்னும் பெருங்காப்பியமும், 'திருக்காவலூர் கலம்பகம்' முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.


4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.


5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த 'சதுரகராதி' முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.


6.இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி', போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.


7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.


வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று

''தமிழ் உரைநடைக்குத் தந்தை தத்துவ போதகரே என்பர். அது உண்மை எனினும், இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது'' என்று தவத்திரு. தனிநாயகம் அடிகளார் கூறுவதை யாரும் மறுக்க இயலாது.


''18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்'' என்று 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார். திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சி.யு.போப்(G.U.Pope), இவரைத் 'தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்' என்று போற்றியுள்ளார்.


''திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே'' என்று செக் நாட்டுத் தமிழறிஞர் 'கமல் சுவலமில்' பாராட்டியுள்ளார். எமிலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர், ''கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்'' என்று கூறியுள்ளார்.


இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பலரும் புகழ்ந்து போற்றியுள்ளனர்.


•நன்றி:- உதயை.மு.வீரையன்