புதிய சட்டப் பேரவை வளாகத்திற்குள் தாராளமான இட வசதியுடன் அமைச்சர்களும், அவர்களுடைய அலுவலகங்களும் பணியாற்றத் தக்க வகையில் அதிகக் கவனத்துடன் அமைத்த பிறகு, அந்தக் கட்டிடத்தை வேறு காரணத்திற்காகப் பயன்படுத்தப் போகிறேன் என்று கூறுவதுதான் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தாராளமாக இடத்தை ஒதுக்கியிருக்கிறோம். ஆனால் குருவிக் கூட்டிலேதான் இருப்போம் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருப்பார்களே யானால் அது அவர்கள் பாடு, அவர்களை நம்பி வந்தவர்கள் பாடு’ என்று விளக்கமாக எனது பேச்சினை வெளியிட்டுள்ளது. இதற்குப் பெயர் தான் இடத்தை மாற்றுவது குறித்து எனக்கு அதிருப்தி இல்லை என்று பொருளா?
புதிய தலைமைச் செயலக இடத்தில் மருத்துவமனை அமைக்கப் போவதாக ஜெயலலிதா அறிவித்ததைப் பாராட்டிப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.சவுந்தரராஜன், ‘புதிய தலைமைச் செயலகம் கோபாலபுரம் பணத்தில் கட்டப்படவில்லை’ என்று சொல்லியிருக்கிறாரே?
புதிய தலைமைச் செயலகம் கோபாலபுரம் பணத்தில் கட்டப்பட்டதாக நான் எங்கும், எப்போதும் சொல்லவில்லை. அங்கே இவருடைய ‘அம்மா’ கட்டப் போகும் மருத்துவ மனைக்கான செலவுத் தொகை ^200 கோடி தான் தோழர் சவுந்தரராசன் மார்க் சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்போகிறார். கோபாலபுரத்தில் உள்ள எனது வீட்டையே பதிவாளர் முன்னிலையில் நான் மருத்துவமனைக்காக அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன்.
தலைமைச் செயலகத்திற்கான அந்தக் கட்டிடத்தினை மாற்றி மருத்துவமனை அமைக்கப் போகிறேன் என்றால் அதற்கு மேலும் எவ்வளவு செலவாகும்? தற்போது செலவழிக்கப்பட்ட நிதியும் வீணாகும் அல்லவா? மருத்துவமனையிலே அறுவை சிகிச்சை அறைகள் எல்லாம் அமைக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு தக்கவாறு தொடக்கத்திலிருந்தே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். மின்சார தொடர்புகளை மீண்டும் ஆரம்பித்திலிருந்து அடியோடு மாற்ற வேண்டும். ஏட்டிக்குப் போட்டி என்ற வகையில், பிடித்த பிடிவாதத்திலிருந்து இறங்கக் கூடாது என்ற தன்மையில் மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடந்தையாக இருக்க முயற்சிக்கலாமா?
சென்னை பொது மருத்துவ மனைக்கு அருகில் இருந்த மத்திய சிறைச் சாலை புழல் பகுதிக்கு மாற்றப்பட்ட பிறகு, மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் பொது மருத்துவமனையின் விரிவாக்கமும் மருத்துவக் கல்லூரிக் கட்டிடமும் அமைக்கப்படும் என்று ஏற்கனவே நீங்கள் அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்ட பிறகு, தற்போது புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை மருத்துவ மனையாகவும்,
பிளாக் பி கட்டிடத்தில் புதிய மருத்துவக் கல்லூரியும் அமைக்கப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பு செய்திருக்கிறாரே? அதைத்தான் நான் ‘துக்ளக் தர்பார்’ என்று சொன்னேன். அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காரணத்தால் அவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அதிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட எதையும் மாற்ற வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அதனால் மக்கள் பணம் தான் விரயமாகுமே தவிர, திமுகவிற்கு எந்த இழப்பும் இல்லை.
புதிய தலைமைச் செயலகம் சரியாகக் கட்டப்படவில்லை, இடம் போதாது, தரம் சரியில்லை என்றெல்லாம் கூறி அங்கே தலைமைச் செயலகம் அமைவது சரியல்ல என்று சொன்னவர்கள், அந்தக் கட்டிடத்தில் புதிய மருத்துவமனை அமைத்தால், அப்போது அந்தக் கட்டிடத்தின் தரம் சரியாகி விடுமா? மருத்துவமனையை அங்கே நடத்தலாம், தலைமைச் செயலகத்தை நடத்த முடியாது என்றால் அது வேண்டுமென்றே காழ்ப்புணர்வோடு நடத்தப்படும் செயல் தானே?
அதிமுக அரசு, கழக அரசு காலத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் 2006ஐ விவாதமின்றியே பேரவையில் ரத்து செய்திருக்கிறதே; என்ன காரணம்? எந்தக் காரணமும் இல்லை, கழக அரசு கொண்டு வந்தது என்ற ஒன்று தான் காரணம்.
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்,
விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறை அமைச்சரின் தலைமையில் 18.1.2007 அன்று விவசாயத் தொழிலாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. அந்த வாரியத்தின் கீழ் 1 கோடியே 74 லட்சத்து 65 ஆயிரத்து 498 தொழிலாளர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 8 லட்சத்து 72 ஆயிரத்து 981 விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு கழக ஆட்சியிலே ^684 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரத்து 686 உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் விவசாயிகளின் உதவிக்கு வழிவகுக்கக் கூடிய ஒரு சட்டத்தை கழக அரசு நிறைவேற்றலாமா என்றுதான் அதிமுக அரசினர் வந்ததும் வராததுமாக அந்தச் சட்டத்தை ரத்து செய்திருக்கிறார்கள். அதிமுக அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கூட இதனை ஏற்காமல், இந்தச் சட்டத்தை ரத்து செய்வது சரியல்ல என்றும், சமச்சீர் கல்வியில் செய்த தவறைப் போலவே இந்தச் சட்டத்தை ரத்து செய்வதிலும் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அவர்களுடைய கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.