குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

மூதாதையர் பெயர்கள்:பேராசிரியர் எசு.சிவலிங்கராயா

 21.08.2011த.ஆ.2042-சமூகத்திலே உயர் நிலையில் இருந்த மணியம், உடையார் , முதலியார் முதலியோரின் பரம்பரையிலே வந்தவர்கள் தமது குடும்பப் பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலே பெயரிடுவதும் வழக்காறாக இருந்துள்ளது.  புவிராசசிங்கம், பரராசசிங்கம், செகராசசிங்கம், முதலான பெயர்கள் யாழ்ப்பாண அரச பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலே ஆரம்ப காலத்தில் இடப்பட்டன. யாழ்ப்பாணக் குடியேற்றத்துடன் தொடர்புடைய முதலியார்களின் பெயர்களையும் பரம்பரையை நினைவு கூரும் வகையிலே சூட்டியுள்ளனர்.

வண, தனிநாயகம் அடிகளார் ரோமில் கல்வி பயிலும் பொழுது தனது மூதாதையரின் பெயரான (தனிநாயக முதலி) தனிநாயகம் என்பதைத் தனது கிறிஸ்தவப் பெயருடன் சேர்த்துக் கொண்டமையை ஆய்வாளர்கள் அறிவர். இன்றும் நெடுந்தீவிலே தனிநாயகம் என்ற பெயர் அவரது மரபினர் பலருக்கு வழங்கி வருவதை அவதானிக்கலாம். இவ்வாறே மழவராயர், குமாரசூரியர் முதலான பெயர்கள் பரம்பரையை நினைவுகூர்வதைக் கண்டு கொள்ளலாம்.

தமிழகத்திலே முதலியார் என்ற பெயர் சாதிப் பகுப்போடு தொடர்புடையதாக அமைய, யாழ்ப்பாணத்திலே அதிகார மேலாதிக்கம் பெற்ற பதவியுடன் தொடர்புடையதாகவே வழங்கியது. முதலியார் பதவி வகித்தவர்களிற் பெரும்பாலானவர்கள் உயர் சாதியைச் சேர்ந்தவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதாரணக் குடும்பத்தில் உள்ளவர்களும் தமது மூதாதையாரை நினைவுகூரும் வகையிலே பெயர் சூட்டியதும் உண்டு. உதாரணமாக முருகேசு வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை முருகேசு, முருகேசு வேலுப்பிள்ளை எனப் பரம்பரையாகப் பெயர்கள் வழங்குவதைக் குறிப்பிடலாம். பழைய கால உறுதிகளைப் பார்ப்பவர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வர். பெயரை (பேரை) உடையவன்தான் பேரன் என்று கூறும் வழக்காறும் யாழ்ப்பாணத்திலே உண்டு.

காப்பிய புராணப் பெயர்கள்
யாழ்ப்பாணத்திலே காப்பியங்கள், புராணங்கள் இரண்டு வகையிலே பொது மக்களிடம் செல்வாக்கை செலுத்தின எனக் கொள்ளலாம். ஒன்று; புராணபடனம், இரண்டு; கூத்துகள், நாடகங்கள் ஆகும். புராணபடத்தின் செல்வாக்கினாலே தமது பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும்போது காப்பிய, புராண கதை மாந்தர்களின் பெயர்களையும் சூட்டினர். கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், இராமாயணம், மகாபாரதம் முதலானவற்றின் செல்வாக்கினாலும் பெயர்கள் சூட்டப்பட்டன எனலாம்.

இப்பெயர்களிலும் குல ஒழுங்கு முறையொன்று பேணப்பட்டது எனக் கருத முடிகிறது. உதாரணமாக:
தருமன் - தருமராசா, தருமலிங்கம்
நகுலன் - நகுலராசா
இராமன் - இராமநாதன், இராமசாமி, இராமேஸ்வரன்
விஜயன் - விஜயராசா, விஜயநாதன், விஜயசுந்தரம்
இவ்வாறு பலவற்றைச் சுட்டிக் காட்டலாம். காப்பிய புராணங்களில் வரும் கெட்ட பாத்திரங்கள்அல்லது தோற்ற பாத்திரங்களைப் பெரும்பாலும் பெயராகச் சூட்டுவதில்லை.


உதாரணமாக:


சகுனி, துச்சாதனன், துரியோதனன், சூர்ப்பனகை, தாடகை, நாரதர், அசமுகி, காந்தாரி முதலானவற்றைக் குறிப்பிடலாம். இவை சிலருக்குப் பட்டப்பெயர்களாக அமைவதுண்டு. பட்டப்பெயர்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இவை பற்றிக் குறிப்பிடுவோம்.

சினிமா, நாவல் மற்றும் சிறுகதைப் பெயர்கள்
காப்பிய, புராண, கூத்து, நாடக ஈடுபாட்டினால் பெயர்கள் சூட்டப்பட்டது போலவே சினிமா ஈடுபாட்டினாலும் பெயர்கள் சூட்டப்பட்டதும் உண்டு.


உதாரணமாக ;


மெற்றாஸ்மயில் (மெயில்), சிவாஜி, சந்திரலேகா, பத்மினி, ராகினி, சரோஜாதேவி முதலானவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
புகழ் பெற்ற நாவல், சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையும் சிலர் தம் பிள்ளைகளுக்குச் சூட்டினர். குறிப்பாக மு.வ. அகிலன், காண்டேகர், ஜெயகாந்தன், மணிவண்ணன் முதலானவர்களின் நாவல்களில் வரும் பாத்திரங்களின் பெயர்களைச் சூட்டினர்.


உதாரணமாக அகிலன், ஜெயகாந்தன், மணிவண்ணன் முதலான பெயர்களைச் சுட்டிக் காட்டலாம். நாவலாசிரியர்களினது, நாவல்களில் வந்த கதாபாத்திரங்களின் பெயர்களையுடைய பலரை இன்று யாழ்ப்பாணப் பிரதேசத்திலே காணலாம்.
தனித்தமிழ் இயக்கத்தின் செல்வாக்கினாலே பெயர் இட்டவர்களையும் பெயர்களை மாற்றிக் கொண்டவர்களையும் யாழ்ப்பாணத்திலே ஒரு காலத்திற் காணமுடிந்தது. பாலசுப்பிரமணியம் இளமுருகனாக மாறியமை தனித் தமிழ் இயக்கத்தின் செல்வாக்கினாலேயே எனலாம்.


இந்திய சுதந்திரப் போராட்டத்தினால் ஈர்க்கப்பட்ட இப்பிதேச மக்கள் இந்திய சுதந்திரத்திற்காக உழைத்த தலைவர்களின் பெயர்களையும் சூட்டியுள்ளனர். சுபாஸ்சந்திரபோஸ், மோதிலால் நேரு முதலான பெயர்கள் இச்செல்வாக்கினால் ஏற்பட்டவையே எனலாம்.


தமிழ் இலக்கிய இலக்கணப் பரிச்சயமுடையவர்கள், ஈடுபாடுள்ளவர்கள் தமது பிள்ளைகளுக்கு இலக்கிய கர்த்தாக்களின், உரையாசிரியர்களின் பெயர்களையும் சூட்டியுள்ளனர். இளங்கோ, இளம்பூரணர் , நச்சினார்கினியர் முதலான பெயர்களை இந்த வகைக்கு உதாரணமாகச் சுட்டலாம்.


அத்துடன் தமிழ் இலக்கியங்களிலே இடம்பெறும் அரசர்களின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. சேரன், மாறன், வழுதி, செழியன், அகளங்கன் முதலான பல பெயர்களைச் சுட்டிக்காட்டலாம்.
புகழ் பெற்றவர்களின், சாதனையாளர்களின் பெயர்களைச் சூட்டுவதும் வழக்காறாகவுள்ளது. விவேகானந்தன், இராமகிருஸ்ணன், பாரதி, இராதாகிருஸ்ணன், ராஜாராம் முதலான பெயர்களை இந்த வகைக்கு உதாரணமாகச் சுட்டலாம்.
தி.மு. கழகத்தின் புகழ் பரவத் தொடங்க அதனால் ஈர்க்கப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தி.மு.க. தலைவர்களின் பெயரையும் சூட்டினார். உதாரணமாக கருணாநிதி, மதியழகன், நெடுஞ்செழியன், கண்ணதாசன் முதலான பெயர்களைச் சுட்டிக் காட்டலாம்.


மேலைப் புலத்தவரின் வருகையாற் பரவிய கிறிஸ்தவத்தின் செல்வாக்கினாலே பாரம்பரியப் பெயர்கள் கைவிடப்பட்டுப் பொதுவான பெயர்கள் சூட்டப்பட்டன. தமிழ் மக்கள் சைவக் கடவுளரின் பெயரைச் சூட்டுவதை அக்காலக் கிறிஸ்தவத் தலைமை விரும்பவில்லை என்றும் அறியமுடிகிறது. கிறிஸ்தவ ஞானஸ்நானப் பெயரோடு பொதுவான பொருள் தரும் பெயர்களையே சூட்டினர். உதாரணமாக ஜெபநேசன், ஜெயசீலன், ஜெயசிங்கம், ஜெயமோகன் முதலான பெயர்களைச் சுட்டிக் காட்டலாம். கிறிஸ்தவத்திலும் ரோமன் கத்தோலிக்க மதத்தினரின் பெயர்களுக்கும் புரட்டஸ்தாந்து மதத்தவர்களின் பெயர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமை தனியே ஆராயப்பட வேண்டியது. பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தவர்கள் தமது சமயத் தொண்டர்கள், இறை தூதர்கள் முதலானோரின் பெயர்களைத் தமிழ் மரபுக்கு இயைவாக இட்டுள்ளனர். உதாரணமாக அந்தோனிப்பிள்ளை, செபஸ்ரியாம்பிள்ளை, யேசுராசா முதலிய பலவற்றைக் குறிப்பிடலாம். இவை தனியான ஆய்வுக்கு உட்படத்தவேண்டியவை.


யாழ்ப்பாணத்திலே செல்லப் பெயர்கள் வைத்து அழைக்கும் வழக்காறு இன்று வரை நின்று நிலைக்கின்றது. மிக நீண்ட காலமாகவே இம்மரபு தொடர்ந்து வருகின்றது. கிளி, குஞ்சு, குட்டி, கட்டி முதலானவற்றைச் சான்றாகக் காட்டலாம். இயற்பெயர் மறைந்து ஊர்களிலே செல்லப் பெயர்களை நின்று நிலைப்பதும் உண்டு.


குடும்ப உறவு நிலையடிப்படையில் வழங்கும் பெயரே இயற்பெயரை மறைத்து, நின்று நிலைப்பதும் உண்டு. உதாரணமாகப் பெரியதம்பி, பெரியராசா, சின்னராசா (இவை இயற்பெயராக அமைவதும் உண்டு) சின்னத்தங்கச்சி முதலியவற்றைச் சுட்டிக் காட்டலாம். இன்றும் இவ்வழக்கு உண்டு.


செல்லப் பெயர்களைப் போலவே இயற்பெயரோடு இணைந்து பட்டப் பெயர்களும் வழங்குவதுண்டு. பட்டப் பெயர்கள் வழங்குவதற்குப் பல காரணங்கள் உளவேனும் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை எனலாம்.
ஒன்று, குணவியல்புகளோடு பொருத்திக் கூறுவது;
ஊரிலே கிராமத்திலே ஒருவரின் குணவியல்புகளை அவதானித்த ஒருவர் ஒரு பட்ட பெயரைச் சூட்டி இருப்பார். அப்பெயர் பிரசித்தி பெற்று ஊர் முழுவதும் வழங்கும். நாளடைவில் இயற்பெயர் மறைந்து பட்டப் பெயரே நிலைப்பதும் உண்டு. உதாரணமாக எதிரி பொன்னயா (எந்த விடயத்தையும் துணிச்சலாக, தைரியமாக எதிர்த்து நிற்பவர்), காடர் சிதம்பரப்பிள்ளை (சண்டித்தனம், முரட்டுச் சுபாவம் உடையவர்), விகட சுப்பு (நகைச்சுவையாகப் பேசுபவர், செயற்படுவர்) முதலான பலவற்றைச் சுட்டிக் காட்டலாம்.


இரண்டு உடலுறுப்புக்கள், தோற்றம் முதலியவற்றைக் கொண்டு வழங்கும் பட்டப்பெயர்கள்;
உதாரணமாக குறுட்டுக் குமாரு, நுளம்புச் சின்னையா, கொசு வல்லியார், ஓட்டைச்சுப்பர் (இவருக்கு முன்பல்லு இல்லை) சொத்திச் சின்னத்துரை, கறுவல் கந்தையா முதலான பலவற்றைக் குறிப்பிடலாம். ஊரிலே இப்பட்டப் பெயர்கள் நிலைபெற்று விடும். பட்டப் பெயருக்குரியவர் இறந்ததின் பின்னரும் இப்பெயர்கள் அழியாது வழங்குவதுண்டு. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வழங்கும் பட்டப் பெயர்களைத் தொகுத்து ஆராய்வது சுவை பயப்பதாக அமையும்.
பட்டப் பெயர்களோடு தொடர்புடையதாக அமையும் இன்னொரு வகைப் பெயர்களும் கிராமங்களிலே வழங்குவதுண்டு. குடும்பம், குறிச்சி, காணி இவைகளை முன்னொட்டாகச் சேர்ந்து இப்பெயர்கள் வழங்கும். பெரும்பாலும் இவை காலப்போக்கில் மறைந்து விடுவதும் உண்டு.


தற்போது யாழ்ப்பாணப் பிரதேசத்திலே இடப்படும் பெயர்கள் புலம் பெயர் வாழ்வினாலும் எண் சாத்திர முறைமையினாலும் பெரு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. இப்பெயர்கள் எமது சூழலுக்கு இயைவுபடாமலும், பொருளற்றவையாகவும், எதிர்ப் பொருளைத் தருபவையாகவும் அமைவதை அவதானிக்கலாம். உதாரணமாக டிவிசன், டிவிசி, டிலூசன் என்று பெயரிட்டுவிட்டு வீட்டிலே டிலூசன, லூசன் என்று குறிப்பிடுவார்கள். இத்தகைய அவதானிப்பே இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.


பெற்றோர் தமது பிள்ளைகளுக்குப் பெயரிடும் பொழுது ஏதோ ஒரு வகையிலே தமது மனநிறைவை மனங்கொண்டே செயற்படுகின்றனர். பிள்ளைகளின் பெயருக்கும் பெற்றோரின் உள நிலைக்கும் நெருக்கமான உறவுண்டு எனலாம்.