சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிதிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவை மார்க்சிசுட் கட்சித் தலைவர் ஏ. சௌந்திரராயன் பேசும்போது குறுக்கிட்டு அவர் பேசியது ரேசன் கடைகளில் உரிய அளவு மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று சௌந்திரராயன் கூறுகிறார். மண்ணெண்ணெயை நாம் மத்திய அரசிடம் இருந்துதான் பெற வேண்டும். அதனை வாங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. மண்ணெண்ணெய் மட்டுமல்ல டி.ஏ.பி. உரத்தின் அளவையும் மத்திய அரசு குறைத்துள்ளது. மொத்தத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது.
திரும்பத் திரும்பக் கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று சௌந்திரராயன் கேட்கிறார். எத்தனையோ குறைபாடுகள் இருக்கின்றன. எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படை தேவை நிதி. மாநில அரசுக்கு வருவாய் வரக்கூடிய அனைத்து இனங்களையும் மத்திய அரசு பறித்துக் கொண்டுவிட்டது.
வாட்(மதிப்புக் கூடுதல் வரி) வரி மூலம் வரும் வருவாயைக் கொண்டு வந்து அனைத்து செலவுகளையும், நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறோம். செய்ய வேண்டிய மனமும், ஆசையும் எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் என்ன கோரிக்கை வைக்கிறீர்களோ அதைவிட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ச . ஆனால் நிதிப் பற்றாக்குறை தான் எங்கள் கைகளை கட்டிப்போட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்கு எப்படியும் நன்மை செய்தே தீருவோம் என்ற வைராக்கியத்துடன் பகீரத முயற்சி செய்து ஒவ்வொரு மக்கள் நலத் திட்டமாக எடுத்துக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசு எத்தனை தடைகள் விதித்தாலும் அதனை தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்கு நன்மைகள் செய்வோம். இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சூழ்நிலையை சொல்வதற்கே வருத்தமாக இருக்கிறது.
தமிழகத்தை வாழ விடுவதில்லை என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. அதையும் மீறி சனநாயக முறைக்கு உட்பட்டு தமிழக மக்களுக்கு எங்களால் முடிந்த நன்மைகளை செய்தே தீருவோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய, ஏ. சௌந்திரராயன், கே. பாலபாரதி(மார்க்சிசுட்), ஆறுமுகம்(இந்திய கம்யூனிசுட்), யவாகிருல்லாக்(மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருச்ணசாமி(புதிய தமிழகம்), சரத்குமார், செ.கு. தமிழரசன், உ. தனியரசு ஆகியோர் மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டத்துக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிப்பதாக தெரிவித்தனர்.