குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 15 ம் திகதி புதன் கிழமை .

செந்தமிழ்த் தோட்டம் - மொழிபெயர்ப்பு மெல்லியம் சங்கொலி வாரஏடு கணினித்துறையில் தமிழ்ப்புரட்சி...

 2-11-2007 கணினி இல்லாத வாழ்க்கை இனி இல்லை எனும் அளவிற்கு எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துவிட்ட கணினித் துறையை ஆங்கிலமே ஆட்சி செய்து வந்தது. அந்த நிலையை மாற்றி இனி தமிழ்மொழி கோலோச்சும் என்கிற அளவுக்கு புதுப்புது ஆய்வுகளின் மூலம் தமிழ்ப் புரட்சியை நிகழ்த்தி வருகிறது கணியத் தமிழ் சாஃப்ட்வேர் என்கிற நிறுவனம். ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே கணிப்பொறி அறிவை மென்மேலும் பெருக்கிக் கொள்ளமுடியும்; ஆங்கிலத்தால் மட்டுமே கணிப்பொறியை ஆளமுடியும் என்கிற மாயைகளைத் தவிடு பொடியாக்கி உள்ளது. இந்நிறுவனம் தயாரித்து வழங்கியிருக்கும் 'வரியுருமா' எனும் தமிழ் மெல்லியம்(Software)

கணியத்தமிழ் சாஃப்ட்வேர் நிறுவனத் தலைவர் சி.கபிலன் ஆழ்ந்த தமிழ்ப் புலமை மிக்கவர். சிவநெறிச் சங்கம் நிறுவி ஆன்மிகப் பணியில் ஈடுபடுவதுடன் நில்லாது, அந்நாளைய சிவனடியார்களைப் போலவே தமிழ்ப் பணியில் தம்மை முழுக்க ஈடுபடுத்திக் கொண்டவர். ஆழ்ந்த தமிழ்ப் புலமை மிக்கவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுகளை சமர்ப்பித்து எம்.ஏ., எம்.ஃபில்., பட்டம் பெற்றவர். இலயோலா கல்லூரியின் தங்கப்பதக்கம் வென்றவர். (இவரது தந்தையார் சிவஞானசுந்தரம் யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். இடதுசாரி சிந்தனையாளர்.  ரா.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய தமிழ் அறிஞர்களின் நண்பர். நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் இவரது உற்றத் தோழர்.)

தமிழ் ஆர்வலரான கபிலன் அறிவியலிலும் மிகுந்த திறமை பெற்றவர். நவீனத் தொழில்நுட்ப அறிவுடன் மொழியை இணைத்து, தமிழ் மொழியை அறிவியல் நோக்கில் பயன்பாட்டு மொழித் தளமாய் மாற்றிடும் ஆய்வுகளில் பெரும் வெற்றி கண்டு வருகிறார்.

'வரியுருமா' மெல்லியத்தின் புதுமை பற்றி கபிலன் கூறுகிறார்:

"இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த தமிழ் விசைப் பலகை (keyboard) அமைப்பில்தான் தமிழை தட்டச்சு செய்ய வேண்டும் என்ற பிரச்சினை இனி இல்லை. நீங்கள் விரும்பிய அமைப்பை நீங்களே வடிவமைத்து தட்டச்சு செய்ய வரியுருமா உதவுகிறது.

கம்ப்யூட்டர் குறித்த போதிய அறிவு இல்லாதவர்கள்கூட - விண்டோஸ் தொழில்நுட்பம் பற்றிய போதிய அறிமுகம் இல்லாதவர்கள் கூட - கம்ப்யூட்டரில் நேரடியாக வரியுருமாவைத் திறந்து தட்டச்சு செய்யலாம்.

ஒவ்வொரு எழுத்துருவுக்கும்(Fonts) வெவ்வேறு விதமான தட்டச்சு முறை என எழுத்துருக்கள் எத்தனை விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. வரியுருமா மூலம் நீங்கள் தேர்ந்தெடுத்த - அல்லது நீங்களே வரையறுத்த விசைப் பலகை ஒழுங்கில் எல்லா எழுத்துருக்களையும் தட்டச்சு செய்யலாம்.

ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்ததை இன்னொரு எழுத்துருவில் அச்சிட முடியாது என்கிற நிலை இனி இல்லை.

எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு இருந்தாலும், அதை நாம் விரும்பும் எழுத்துருவுக்கு மாற்றித் தருகிறது 'வரியுருமா.'

விருப்பம்போல் மின்னஞ்சல் (E - mail) அனுப்புவதற்காக யூனிகோட் வடிவத்தில் தட்டச்சு செய்வதற்கான பிரத்தியேகமான எழுத்துருக்களைத் தேடி இனி அலைய வேண்டாம். இதில் நீங்கள் விரும்பும் எந்த எழுத்துருவையும் பயன்படுத்தி யூனிகோட் வடிவத்தில் தட்டச்சு செய்து கொள்ள முடியும்.

நமக்கு வருகிற மின்னஞ்சல் செய்திகள் படிக்க முடியாத வடிவத்தில் வந்து நம் தலையைப் பிய்த்துக் கொள்ளச் செய்வதுண்டு. இனி அது குறித்தும் கவலை இல்லை. மின்னஞ்சல் செய்தி எந்த எழுத்துருவில் உள்ளது என்று கண்டறிந்து எளிதில் படித்து அறியுமாறு மாற்றித் தருகிறது வரியுருமா.

இதுவரை வெளியான எழுத்துருக்கள் மட்டுமல்ல, இனி வரப்போகும் எழுத்துருக்களையும் வரியுருமாவில் நாமே இணைத்துக் கொள்ளுமாறு அமைந்து, தன் பயன்பாட்டு எல்லையை விரித்துக் கொண்டே செல்கிறது வரியுருமா.

வரியுருமா இருந்தால் எந்த ஒரு எழுத்துரு மூலமும் ஒரு முறை தட்டச்சு செய்த செய்தியை மீண்டும் தட்டச்சு செய்யாமலேயே நாம் விரும்பும் எழுத்துருவுக்கு மாற்றிக் கொள்ளலாம் - அச்சிடவும் செய்யலாம் என்பது பத்திரிகை உலகில் பெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது.

ஆங்கிலம் மட்டும் தட்டச்சு செய்து பழகியவர்கள்கூட வரியுருமா மூலம் தமிழையும் தட்டச்சு செய்யலாம், 'Amma Inge vaa' என்று தட்டச்சு செய்தால் 'அம்மா இங்கே வா' என்று வரியுருமா தமிழில் மாற்றிக் கொடுக்கும். தமிழ் தட்டச்சு தெரிந்த நபரைத் தேடி அலைய வேண்டியதில்லை.

கணிப்பொறித் துறைக்கும் இது மிகவும் பயன்பாடு உள்ளதாக விளங்குகிறது. தமிழில் இணையத் தளத்தை (Websites) வடிவமைப்போர் யூனிகோட் வடிவில் பலவகையான இணையத் தளங்களை வடிவமைக்குமாறு HTML வகை சேமிப்பு வசதி வரியுருமாவில் உள்ளது.

வரியுருமாவின் சிறப்பு இணைப்பாக தமிழ் எழுத்துருக்கள் மற்றும் யுனிகோட் வடிவங்கள் பலவற்றுடன், தமிழ் அறிஞர் வா.செ.குழந்தைசாமி வடிவமைத்துள்ள புதிய தமிழ் வடிவ எழுத்துகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய தமிழ் வடிவம், தமிழ் எழுத்துகளை 107 இல் இருந்து 39 ஆகக் குறைக்கிறது. இம்முறை நடைமுறைக்கு வந்தால் குழந்தைகள் தமிழ் பயில்வது மிக மிக எளிதாகிப் போகும்." என்றார் கபிலன்.

இன்று முன்னணிப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் வரியுருமா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பெருமையுடன் குறிப்பிடும் கபிலன், தமது அடுத்த வெளியீடான 'செந்தமிழ்த் தோட்டம்' என்னும் ஆங்கிலல - தமிழ் மொழி பெயர்ப்பு மெல்லியத்தைப் பற்றிக் கூறும்போது மலைத்துப் போகிறோம்.

இந்திய மொழிகளிலேயே இதுவரை இல்லாதவாறு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால், அதை முழுமையான தமிழ் வடிவில் மாற்றித் தரும் மொழிப்பெயர்ப்பு மெல்லியத்தை கணியத் தமிழ் சாஃப்ட்வேர் நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டு பணிகளில் இறங்கி உள்ளது.

மொழிப் பெயர்ப்பு மென்பொருள் தயாரிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கென புதிய வழிமுறைகள், விதிகள், கோட்பாடுகள் மூலம் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக கபிலன் அறிவிக்கிறார். இதற்காக 'தொஇலக்கணம் (Tho grammer) - நுண்பொருள் அகராதி - ஆங்கில தமிழ் மாற்றிலக்கணம்' ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்ட மொழிப்பெயர்ப்பு இலக்கணம் ஒன்றை இவர் வடிவமைத்து இருப்பதும் வியப்புக்குரிய செய்திதான்.

1991 ஆம் ஆண்டு 'Tho Grammer' என தாம் ஆங்கிலத்தில் வெளியிட்ட தொல்காப்பிய அடிப்படையில் அமைந்த பொருண்மை இலக்கணத்தைப் பின்பற்றி மொழிப்பெயர்ப்புக் கோட்பாட்டை வகுத்திருப்பதாகவும் கபிலன் கூறுகிறார்.

இது உருவாகி, அரங்கேறி கணினித் துறையில் தமிழ்ப் புரட்சி நிகழ்த்தும் நாளுக்காக தமிழ் கூறும் நல்லுகம் காத்து இருக்கிறது.
 
- ரதன்