குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

"மார்க்சியம் என்பது மேலேமேலே பாயும் நதி, அது பின்னோக்கிக் பாய்வதில்லை" - பேரா.கா.சிவத்தம்பி நினைவாக

  06.08.2011.த.ஆ.2042--இன்னுமொரு இணையத்திலிருந்து.01. என்னால் எந்தவகையிலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் ஒருவர் பற்றி நான் என்னத்தைப் பெரிதாகச் சொல்லிவிட முடியும். பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்ததும் கவி உமர்கயாமின் வரிகள்தான் நினைவை ஆக்கிரமித்தது.

‘ஒருநாள் அந்த மரம் விழவே செய்யும்’ – நான் முன்னர் பேராசிரியர் குறித்து எழுதிய கட்டுரையொன்றிற்கு இந்த வரிகளைத்தான் தலைப்பிட்டிருந்தேன். அந்தக் கட்டுரை, அவர் குறித்து வெளிவந்த ஆவணப்படம் பற்றியது.

இன்று அந்த மரம் உண்மையிலேயே வீழ்ந்தே விட்டது.

என்னளவில் தமிழ்ச் சிந்தனையுலகில் அவர் ஒரு பெருவிருட்சம். எனது அறிவுக்கு எட்டியவரை அவரை நிகர்த்த ஒருவர் நம்மிடமில்லை.

பேராசிரியர் குறித்து எனது மதிப்புக்குரிய கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தனக்கேயுரித்தான கவிநடையில் அழகாகச் சொல்லுவார் - “இன்றும் இவர் இருக்கின்றார் என்ற துணிவில்தான் தமிழ் அழாமல் இருக்கின்றாள்”

நான் அவரை முதல் முதலாக எனது பாடசாலைக் காலத்தில் காண நேர்ந்தது. அப்போது அவரது முக்கியத்துவம் உணர்ந்து அவரை நெருங்கக் கூடிய அறிவோ அனுபவமோ எனக்கிருக்கவில்லை.

ஒரு தடித்த மனிதர் கைத்தடியை ஊன்றியவாறு மேடைக்கு வந்தார். அவர் அன்று என்ன பேசினார் என்றும் எனக்கு நினைவில்லை.

பிற்காலங்களில் இப்படியொரு பெரும் சிந்தனையாளருடன் நட்புக்கொள்ளக் கூடிய வாய்ப்பு என் போன்றதொரு சாதாரணனுக்கு வாய்க்குமா என்றெல்லாம் கிஞ்சித்தும் யோசித்துப் பார்க்க முடியாத வயதின் காலமது. ஆனால் அது பின்னர் வாய்த்தது.

அவருடன் ஒரு பத்தாண்டு காலத் தொடர்புண்டு. இந்தத் தொடர்பை நட்பு என்று சொல்லவே நான் விரும்புவேன். இப்படியாவது அவரை நெருங்க முடிந்ததே என்னும் திருப்தியாவது மிஞ்சட்டும்.

நான் அறிந்தவரை ஈழத் தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வு குறித்து சிந்திக்கும் அனைவருமே அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தனர். எல்லோருக்குமே அவர் ஓர் உரைகல்லாக இருந்தார்.

இந்த பின்னணியில்தான் அவருடனான தொடர்பும் நட்பும் எனக்கு வாய்த்தது. எனது கருத்தியல் நண்பரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கத்தின் மூலம் அவர் எனக்கு அறிமுகமானார்.

முதலாவது சந்திப்பிலேயே அவர் குறித்து நான் வைத்திருந்த அபிப்பிராயங்கள் எல்லாம் தலைகீழானது. ஒரு முதுபெரும் பேராசிரியர், சிந்தனையாளர், அறிவுஜீவி என்று எந்தவித பெருமையற்றும் பழகிய அவரது இயல்பு முதல் சந்திப்பிலேயே என்னை ஆட்கொண்டது, கூடவே அவர் குறித்து ஓர் உயர்வான மதிப்பும் மனதில் உருக்கொண்டது.

சிந்தனை ஆழத்தில் மட்டுமல்ல மற்றவர்களுடன் பழகும் தன்மையிலும் அவருக்கு இணை அவரே! சிவத்தம்பி அவர்களை ஒருமுறை சந்திப்பவர் நிட்சயம் மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டுமென்ற ஆர்வத்திற்கு ஆட்படுவார். எனக்கும் அவ்வாறுதான் நிகழ்ந்தது.

நான் மிகவும் குறைவாக கொழும்பிற்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை சந்திக்கத் தவறுவதில்லை. அவர் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கூட தொலைபேசியில் உரையாடியிருந்தேன். மிகவும் தளர்ந்த குரலில் பேசினார்.

முன்னர் நான் பேசும் போதெல்லாம் "அடிக்கடி கோல் [call] எடடாப்பா" என்பார்.

இறுதியாக அவர் வாசிப்பதற்குக் கூட மற்றவர்களின் தயவை நாடியிருந்த கடந்த சில ஆண்டுகளில் நண்பர்கள் தன்னுடன் பேசுவதையும் சந்திப்பதையும் அவர் அதிகம் விரும்பியிருக்கிறார் போலும். நான் பேசிய சந்தர்பங்களில் எல்லாம் "அவன் சோதி [யோதிலிங்கம்] இப்ப என்னோட கதைக்கிறான் இல்லடாப்பா அவனுக்கு என்னோட கோபம் போல" என்று ஒரு சிறு பையன் போல உருக்கமாகச் சொல்லுவார்.

இந்தக் காலத்தில் அவர் ஒரு சர்ச்சையில் அகப்பட்டுக் கிடந்தார் – கருணாநிதி அரசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில் அவர் பங்குகொள்ளக் கூடாது என்பது பலரதும் எதிர்ப்பார்ப்பாக இருந்தது ஆனால் இறுதியில் கருணாநிதி தனது நட்பு வலைக்குள் அவரை வீழ்த்திவிட்டார்.

எவரது முகத்தையும் முறிக்கத் தெரியாத சிவத்தம்பி என்னும் ஆளுமை கருணாநிதியின் விருப்பங்களுக்கு இசைந்ததொன்றும் ஆச்சரியமல்லதான்.

இது பலருக்கும் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியது என்பது உண்மையே.

இங்கு கோபம் சிவத்தம்பி செம்மொழி மகாநாட்டில் பங்குகொண்டது தொடர்பானதல்ல கருணாநிதியின் அரசியல் சித்துவிளையாட்டில் நாங்கள் போற்றும், சிவத்தம்பி எப்படிப் பங்கு கொள்ளலாம் என்ற ஆதங்கம்தான் அது.

இது பற்றி ஒரு முறை பேசும் போது நான் கேட்டேன் - அதற்கு அவர் சொன்ன பதில் "அடேயப்பு, இது பற்றி எவர் என்ன சொன்னாலும் நான் அது பற்றியெல்லாம் கவலைப்படயில்லடாப்பா, தமிழ் அறிஞர்கள் எல்லோரும் இருக்கிற இடத்தில் நானும் இருக்க விரும்பினன், அவ்வளவுதான்! இது பற்றி மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். அது பற்றி நான் கவலைப்படவில்லை" என்றார்.

இன்று சிவத்தம்பி என்னும் சிந்தனையாளரின் ஆளுமையை எண்ணிப் பார்க்கும் போது அவர் செம்மொழி மகாநாட்டில் பங்கு கொண்டதெல்லாம் என்னளவில் ஒரு விடயமே அல்ல.

சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் பங்கு கொள்ளாது விட்டிருந்தால் என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது என்ற கேள்விதான் எஞ்சிக்கிடக்கின்றது.

முன்னர் ஒரு முறை அவரே பிறிதொருவருக்குச் சொன்ன விடயத்தைத்தான் இந்த இடத்தில் என்னாலும் கேட்க முடியும் - நாங்கள் என்ன கருணாநிதியை நம்பியா எழுபதுகளில் போராடப் புறப்பட்டோம்.

இதனை பிறிதொரு வகையிலும் நான் பார்க்க விழைகிறேன் - செம்மொழி மாநாடு எவரால் நடாத்தப்பட்டது அதன் உள்நோக்கம் என்ன என்பதற்கு அப்பால் பேராசிரியர் கா.சிவத்தம்பி என்னும் தமிழ்ப் பேரறிஞரை விட்டுவிட்டு அந்த நிகழ்வை நடாத்த முடியாமல் இருந்தது என்பதுதான் உண்மை.

ஏனெனில் அவர் அன்றைய நிலையில் ஈழத்து தமிழ்ச் சிந்தனையுலகின் குறியீடாக திகழ்ந்தார். அவரின் இடத்தை பிறிதொருவர் கொண்டு கருணாநிதியால் நிரப்ப முடியாமல் இருந்தது.

ஈழத் தமிழ்ச் சிந்தனையுலகு என்றால் அது சிவத்தம்பி, சிவத்தம்பி என்றால் அது தமிழ்ச் சிந்தனையுலகு என்று குறிப்பிடுமளவிற்கான சிறப்பை அவர் பெற்றிருந்தார். இத்தகையதொரு சிறப்பை, அவர் வாழ்ந்த காலத்தில் ஈழத்து சிந்தனை மரபில் தோன்றிய பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள் எவராலும் எட்ட முடிந்திருக்கவில்லை.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் ஆளுமை குறித்தெல்லாம் என்னால் விபரிக்க முடியாது. அந்தளவிற்கு நான் புலமைபெற்றவனல்ல. அவரின் துறைசார் பங்களிப்புக்கள் தமிழியல், சமூகவியல், சமயம், பொருளாதாரம், இலக்கியம், நுண்கலைகள், அரசியல் என்று பரந்தது.

இந்தளவிற்கு தமிழ்ச் சிந்தனையுலகில் தாக்கம் செலுத்திய ஒருவர் கடந்த காலங்களில் இருந்ததற்குச் சான்றில்லை. அவர் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். நமது கெட்டகாலமோ அல்லது சாபக்கேடோ தெரியவில்லை சமீபகாலமாக வெற்றிடங்களை வெறித்துப் பார்ப்பதே நமது வாழ்வாகிவிட்டது.

02.

நான் அவரைச் சந்திக்கும் போது பொதுவாக அரசியல் விடயங்கள் பற்றிப் பேசுவதுதான் வழமை.

மார்க்சிய சிந்தனையாளரான சிவத்தம்பி அவர்கள் பிற்காலங்களில் தமிழ்த் தேசிய அரசியலை ஆதரித்து நிற்பவராக மாறினார். அவரின் இந்த மாற்றம் எங்களைப் போன்றவர்களை அவருடன் அதிகம் நெருங்கிச் செல்வதற்கான ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.

சிவத்தம்பி அவர்களின் இந்த மாற்றம் இளம் தலைமுறை மார்க்சிய செயற்பாட்டார்களைப் பொறுத்தவரையில் ஓர் உவப்பான விடயமாக இருந்தது.

அவரது இந்த சிந்தனை மாற்றம் ஜந்து தலைமுறைகளுக்கு அப்பால் மார்க்சியத்தை நோக்கத் தெரியாத அல்லது நோக்க விரும்பாத மார்க்சியர்கள் என்போருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அவ்வாறானவர்கள் சிவத்தம்பி குத்துக் கரணம் அடித்துவிட்டார். அவர் ஒரு பச்சோந்தி என்றெல்லாம் வசைச் சொற்களை அவர் மீது வீசினர்.

அவ்வாறானவர்கள் கைலாசபதியை தூக்குவதன் மூலம் சிவத்தம்பியை ஓரம்கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

பொதுவாகவே ஈழத்து இலக்கிய விமர்சனம் என்றால், அது கைலாசபதி-சிவத்தம்பி என்றே பொருள். இவர்கள் பற்றி பொதுவாகக் குறிப்பிடும் போது விமர்சன இரட்டையர் என்று சொல்லப்படுவதே வழமையானது ஆகும்.

ஆனால் இந்தப் போக்கை உடைத்து கைலாசபதி மட்டுமே ஒரேயொரு சிறந்த மார்க்சியர் என்று நிறுவுவதன் மூலம் சிவத்தம்பியை புறம்தள்ள முற்பட்டனர் சிலர்.

சிவத்தம்பி என்னும் ஆளுமையை ஈழத்தின் கிணற்றுத் தவளை மார்க்சியர்களால் இறுதிவரை விளங்கிக் கொள்ள முடியாமலேயே இருந்தது. இது பற்றி எனது முன்னைய கட்டுரையில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.

பின்னர் ஒருமுறை நாங்கள் சந்தித்துக் கொண்ட போது "நீ தெரிந்தோ தெரியாமலோ ஒரு முக்கியமான விடயத்தை சொல்லியிருக்கிறாய்" என்றார். தனிப்பட்ட தாக்குதல்களில் எப்போதுமே ஈடுபட்டிராத பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தனது பிற்காலப் பதிவுகளில் இது குறித்து தெளிவாகப் பேசியிருக்கின்றார்.

"தமிழ் மாக்சிஸ்டுக்களைப் பொறுத்தவரையில் 1977, 1983ம் ஆண்டுக் கலவரங்களும் வடக்கு-கிழக்கில் அவிழ்த்துவிடப்பட்ட படையினரின் அட்டூழியங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளைப் பற்றிப் பேசுவதை தமிழினவாதம் என்று கொள்ளப்படுவதுமாகியவை ஒரு கருத்து முரண் நிலையை ஏற்படுத்தின.

தமிழ் இளைஞர்களிடத்து இது இத்தகைய தேசநிலைப்பட்ட மார்க்சியப் போக்கு தமிழ்நிலை மார்க்சியம் பற்றிய தேடலுக்கு வழிதேட – முதுநிலை மார்க்சிஸ்டுக்களுக்கு இதுவொரு இருதலைக்கொள்ளி எறும்பு நிலையாகவே மாறிற்று" – [முன்னுரை - புதுவை இரத்தினதுரையின், பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்]

இதே முன்னுரையில் விடுதலைப்புலிகள் குறித்து பேசும் போது, புலிகளை ஒரு அரசியல் தளைநீக்க இயக்கம் என்றே அவர் குறிப்பிடுகின்றார்.

"மக்கள் எதிர்பார்ப்புக்களையும் இசைவுகளையும் கொண்டியங்கும் ஒரு தளைநீக்க இயக்கத்தை அதிகார வலுவைக் கொண்டியங்கும் அரசு நிறுவனத்துடன் இணைத்து நோக்க முடியாது. நோக்குதலும் கூடாது" - விடுதலைப்புலிகள் தொடர்பான சிவத்தம்பியின் நிலைப்பாடு குறித்து பெருமளவு சர்ச்சைகள் எழுந்தது உண்மை.

ஜந்து தலைமுறைக்கு முந்திய மார்க்சியர்கள் மத்தியிலிருந்து மட்டுமல்ல புலிகளால் தடைசெய்யப்பட்ட ஏனைய இயக்கங்களின் கருத்தியலாளர்கள், புலிகளால் பாதிக்கப்பட்ட சிந்தனையாளர்கள் எனப் பலரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இது பெரும்பாலும் பேராசிரியர் கா.சிவத்தம்பி என்னும் தமிழறிஞரை எல்லோருக்கும் பொதுவான அறிஞராகப் பார்க்கும் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு தலைமுறையின் மீது பெரும் செல்வாக்குச் செலுத்திய இயக்கம். தொண்ணூறு வீதமான தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்திருந்தார்கள் என்பதும் விமர்சனங்களுக்கு அப்பால் புலிகளின் காலத்தில் ஏதாவது விமோசனம் கிடைக்கும் என்று நம்பியவர்களுமே அதிகம்.

புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள், புலிகளை ஓரு போதுமே எற்றுக் கொள்ளாதவர்கள் போன்றோர்கள் கூட புலிகளின் அழிவால் கதிகலங்கிப் போயினர்.

இத்தகையதொரு பின்புலத்தில்தான் சிவத்தம்பி என்னும் அறிஞரின் தலையீட்டையும் நாம் நோக்க வேண்டும்.

ஒரு தலைமுறையின் மீது செல்வாக்குச் செலுத்திய ஒரு இயக்கத்தை, பெரும்பான்மையான மக்களால் நேசிக்கப்பட்ட இயக்கத்தை எழுந்தமானமாக ‘குட்டி முதலாளித்துவம்’ என்று சொல்லிவிட்டுப் போகக் கூடியதொரு மார்க்சியராக சிவத்தம்பியால் இருக்க முடியவில்லை என்றே நாம் அவரது நிலைப்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

சிவத்தம்பி என்னும் மார்க்சிய சிந்தனையாளர் சரியானதொரு மார்க்சிய நோக்கு உள்ளவராக இருந்தார் என்றே நான் சொல்லத் தலைப்படுகிறேன்.

அது என்ன சரியான மார்க்சிய நோக்கு என்று ஒருவர் இடைமறிக்கலாம் - சூழ்நிலைமைகள் மாறும் போது தன்னையும் அதன் ஒரு பகுதியாகக் கருதிக் கொண்டு அந்த மாற்றங்களை தனக்குள் உள்வாங்கிச் சிந்திப்பதே சரியான மார்க்சிய நோக்கு என்பேன்.

இவ்வாறான நோக்குள்ளவர்கள் பலர் பிற்காலங்களில் தோன்றியிருந்தனர். ஆனால் மரபுவழி மார்க்சிய [Orthodox Marxists] பின்புலத்தில் தோன்றிய சிந்தனையாளர்களில் மாற்றங்களை உள்வாங்கிச் சிந்திப்பவராக சிவத்தம்பியே எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார் என்றால் அது மிகையல்ல.

எப்போதுமே தனது வாழ்நிலைச் சூழலிருந்து, கற்பனைத்தனமாக தன்னை விலக்கிக் கொள்ளாத ஒருவராகவே இறுதிவரை சிவத்தம்பி அவர்களின் வாழ்வு கழிந்திருக்கிறது.

புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் அவர் 'பீஸ்மர்' என்ற பேரில் தினக்குரல் பத்திரிகையில் அரசியல் பத்திகளை எழுதிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் கூட இவர் பேசுவதற்கு எவ்வளவு விடயங்கள் இருக்கின்றன பின்னர் ஏன் இது பற்றியெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றார் என்று சிலர் ஆதங்கப்பட்டதுண்டு. இது பற்றி ஒரு நண்பர் அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதிலிலிருந்து அவர் எந்தளவுக்கு தனது வாழ்நிலைச் சூழல் குறித்த அவதானத்துடன் இருக்க விரும்பியிருக்கிறார் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

"தம்பி, என்ட கண்ணுக்கு முன்னால் நூறு தலைகள் கிடக்கும் போது எப்படியடாப்பா அது பற்றி பேசாமல் இருக்க முடியும்" இந்த உந்துதல்தான் அவரை தமிழ்த் தேசியத்தின் பக்கமாகவும் புலிகளின் பக்கமாகவும் கொண்டு வந்தது.

அவரை மட்டுமல்ல இந்த காலத்தில் வாழ்ந்த பலரும் இவ்வாறுதான் புலிகளின் பக்கமாக தங்களைக் காண்பிக்க விழைந்தனர். இது எங்களளவில் தவிர்த்துச் செல்ல முடியாத ஒன்றாகவே இருந்தது. இதற்குள் சிவத்தம்பி என்னும் அறிஞரை மட்டும் எவ்வாறு பிரித்து நோக்க முடியும் என்று எனக்கு விளங்கவில்லை.

அதற்காக அவருக்கு புலிகள் குறித்து விமர்சனங்களே இல்லை என்பதல்ல பொருள். அவர் புலிகள் குறித்து விமர்சனங்கள் உள்ளவராகவே இந்தார். ஆனால் தனது விமர்சனங்களை மற்றவர்கள் தங்களின் நிகழ்சிநிரலுக்கு பயன்படுத்திவிடக் கூடாது என்னும் அவதானத்துடன் பூடகமாக அவற்றை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

குறிப்பாக சமாதான ஒப்பந்த காலத்தில் புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தும் வகையில் செயலாற்ற வேண்டும் என்ற தொனியில் அவர் பேசியிருக்கிறார். அரசியல் மயப்படுத்தல் என்பதில் பல அர்த்தங்கள் பொதிந்திருந்தன. ஆனால் தான் சொல்லுவதை புலிகள் செவிமடுக்கின்றனரா என்பதில் அவருக்கு சந்தேகம் இருந்தது.

ஒரு முறை பேசும்போது கேட்டார் – அவங்கள் நான் [பீஸ்மர்] சொல்லிவாற விடயங்களைக் கவனிக்கிறாங்களா? ஏதாவது மாற்றங்கள் நிகழ்கிறதா? நான் பொய்யாக 'ஆம்' என்றே பதில் சொன்னேன் - புலிகள் இயக்கம் தங்களுக்கு வெளியில் இருந்து சொல்லப்படும் எதனையுமே கருத்தில் கொள்வதில்லை என்ற உண்மையை மறைத்துக் கொண்டு.

புலிகளுக்கென்றொரு வெளி அதில் அவர்களது தலைவரால் வகுப்பட்ட உண்மை - இதுதான் புலிகள் இயக்கத்தின் இயங்கு முறைமை. ஒரு அறிவுஜீவி என்ற வகையில் புலிகள் இயக்கம் திரும்பிவர முடியாத பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அவர் உணராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

03.

சமீபத்தில் பேராசிரியரின் மறைவையொட்டி எஸ்.துரைராஜா குறிப்பிட்ட விடயமொன்றை இங்கு எடுத்தாள்கிறேன் – காத்திகேசு சிவத்தம்பி அவர்கள், நமது காலத்தின் முதன்மையான முற்போக்கு சிந்தனையாளராகவும் பல்துறைசார் அறிஞராகவும் இருந்தார் என்று குறிப்பிட்டிருப்பது சிவத்தம்பி அவர்கள் பற்றி மிகவும் சரியான கணிப்பாகும். [Karthigesu Sivathamby -1932-2011, was one of the great progressive thinkers and versatile scholars of our tim. – Frontline-2011.]

இங்கு துரைராஜா எடுத்தாண்டிருக்கும் versatile scholars என்பது சிவத்தம்பியின் அளுமையை குறிப்பதற்கு சரியான சொற் தொடராகும். versatile scholars – இதனை தமிழில் பொருள் கொள்வதானால் ஒரு விடயத்திலிருந்து பிறிதொரு விடயத்திற்கு இலகுவாக மாறிச் செல்லக் கூடிய ஆற்றல் என்று குறிப்பிடலாம்.

அவரின் இந்த ஆற்றல்தான் புதிய நிலைமைகளை கண்டு அச்சம் கொள்ளாமல் அதனை எதிர்கொண்டு தேவையானவற்றை உள்வாங்கிச் சிந்திக்கக் கூடிய ஒருவராக அவரை வெளிப்படுத்தியது. மரபுவழி மார்க்சிய மரபில் தோன்றிய பலரிடம் காணக்கிடைக்காத ஒரு பண்பு இது. இத்தகைய அறிவுசார் பண்பால்தான் அவரால் தமிழ்த் தேசியத்திலிருந்து பின்நவீனத்துவம் வரை இலகுவாக விவாதிக்க முடிந்தது.

இது பற்றி அவர் இவ்வாறு கூறுவார்- "மார்க்சியவாதிகளான நண்பர்கள் தோழர்கள் பலர் அமைப்பியல்வாதம், பின் அமைப்பியில்வாதம், பின் நவீனத்துவம் ஆகியன பற்றிப் பேசுவதே ‘பாபச் செயல்’ என்று கருதுகின்றார்கள். இது ஒரு தவறான அணுகுமுறை. இது மார்க்சியத்தை மதவெறியாக்கும் மடமை" இது பற்றி அவர் மேலும் குறிப்பிடும் போது – புதிய சூழலுக்கு முகங்கொடுக்க நமது கருத்துநிலையில் [Ideology] சில புதிய முனைப்புக்களும் வலுவான பேண்நிலைத் துணிபுகளும் [Determination for the preservation of the self indentiity] அவசியமாகின்றன. இது ஒரு சவாலாக மாத்திரமிருக்கலாமேயொழிய, அஞ்சுவதற்கான, பதற்றப்படுவதற்கான மனநிலையை ஏற்படுத்துவதாக அமைதல் கூடாது. நாம் வழித்துணையாகவும் நமது பாதையாகவும் கொள்ளும் மார்க்சியம் இத்தகைய ஒரு சிக்கல்நிலைத் தீர்வையே அதன் அடித்தளத் தொழிற்பாடாகக் கொண்டது."

சீன-ரஷ்ய சார்பு அரசியல் பிளவின் போது தன்னை ரஷ்யசார்பு மார்க்சியராக இனம்காட்டிக் கொண்ட சிவத்தம்பி அவர்கள் பிற்காலங்களில் அணிவகைப்பட்ட மார்க்சிய நோக்கிலிருந்து தன்னை முழுமையாக துண்டித்துக் கொள்கிறார். இதன் பின்னர்தான் அவர் சீன-ரஷ்ய மரபுவகைப்பட்ட மார்க்சிய புரிதலுக்கு அப்பால் பிற்கால ஜரோப்பிய சிந்தனை வளர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்கின்றார். இது பற்றி அவரே இவ்வாறு கூறுவார்…

“மார்க்சீய விமர்சன முறைமை கடைப்பிடிக்கப்பட்ட மட்டங்களிற் பெரும்பாலும் சோவியத் ரஷ்ய, சீன விமர்சன மரபுகள் எடுத்தாளப்பட்டு வந்தனவே தவிர, சமகாலத்து ஜரோப்பிய மார்க்சிய வளர்ச்சிகள் பற்றி அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த சோவியத் சார்பு சீன சார்பில் ஒரு அரசியலும் இருந்ததால் அந்தந்த வட்டங்களை விட்டு வெளியே போவதென்பது அரசியற் பிரச்சினைகளை உருவாக்கக் கூடியவையாகவுமிருந்தன.

இவற்றுக்கு மேலாக இன்னுமொரு காரணமும் இருந்தது. நமது கொலனித்துவ பாரம்பரியம் காரணமாக நாம் ஆங்கிலம் வழியாகவே மேனாட்டு அறிவு வளாச்சிகளைப் பெற்றுக் கொண்டோம் பிரஞ்சு மொழிப் பரிச்சயமோ ஜப்பானிய மொழிப் பரிச்சயமோ அம்மொழிகள்வழிக் கையளிப்புகள் பற்றிய பரிச்சயமோ நமக்கு இருக்கவில்லை.”

போராசிரியர் சிவத்தம்பி அவர்களின் இந்த புரிதல் மாற்றம்தான், அவர் ஈழத்து மார்க்சியர் என்போர் மத்தியில் தனித்துத் தெரிவதன் காரணம். இந்தப் புரிதல் மாற்றம்தான் மரபுவழி மார்க்சியர்கள் அவரைத் திட்டவும் காரணமாகியது. பிற்கால மார்க்சிய சிந்தனைப் போக்கில் தாக்கம் செலுத்தியவர்கள் குறித்து நமது சூழிலில் ஆழ்ந்த புரிதல் அவசியம் என்பதை அவர் ஆங்காங்கே சுட்டிக் காட்டி வந்திருக்கிறார். குறிப்பாக அல்தூசர், கிறாம்சி, ஜோர்ஜ் லூக்கஸ் போன்றோரின் பார்வைகள் நமது சிந்தனைகளை வளர்த்துச் சொல்ல எந்தளவு முக்கியமானது என்பதை அவர் அடிக்கோடிட்டிருக்கின்றார். கிறாம்சி பற்றிச் சொல்லும் போது – கிறாம்சி பற்றி தமிழில் ஒரு விரிவான நூல் எழுத வேண்டும். அது தமிழிலுள்ள மார்க்சிய எழுத்தாளனுக்குப் பாடப்புத்தகம் போல் அமைதல் வேண்டும் என்பார்.

இன்று தொகுத்து நோக்கும் போது, அவர் நமது புலமைத்துவ தலைமுறைக்கு ஒரு பரந்த அடித்தளத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார்.

மார்க்சிய சார்பு அல்லது வேறு எந்தவொரு கோட்பாடு சார்ந்து நோக்குவதானாலும் மாற்றங்களில் இருந்து எவ்வாறு கற்றுக் கொள்வது, மாற்றங்களில் வேர்கொண்டு எவ்வாறு நமது சிந்தனையை வளர்த்துச் செல்வது என்னும் ஆய்வு வழியை நமக்குக் காட்டிச் சென்றிருக்கின்றார்.

நமது புதிய புலமைத்துவ தலைமுறை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முதன்மைப் பாடம் இது என்றே நான் சொல்வேன்.

அவர், அவரை வளப்படுத்திச் செல்லும் புலமைத்துவ செல்நெறியை வளர்க்க வேண்டிய பாரிய சவாலொன்றையும் நம் முன் விட்டுச் சென்றிருக்கிறார்.

அது எவ்வாறு அமைய வேண்டும் என்றும் அவரே கூறியுமிருக்கிறார் – "நான் எனது ஆசிரியர்களின் தோளில் நின்று பார்க்கிறேன் அவர்களுக்குத் தெரியாத பல விடயங்கள் எனக்குத் தெரிகின்றன. நாளை எனது மாணவன் எனது தோளில் நின்று பார்ப்பான் எனக்குத் தெரியாத பல விடயங்கள் அவனுக்குத் தெரியும்."

தமிழியல், சமூகவியல் மற்றும் கோட்பாடுசார் ஆய்வுகளில் கரிசனை கொள்ளும் இனிவரப் போகும் நமது எந்தவொரு தலைமுறையும் ஆசான் சிவத்தம்பியை தொட்டுச் செல்லாமல் பயணிக்க முடியாது.

இந்த இடத்தில் ஒரு வேண்டுகோளுடன் நிறுத்திக் கொள்கின்றேன். தமிழ்ப் பேராசான் சிவத்தம்பி அவர்களின் பேரில் ஆய்வு நிலையம் [Sivathamby Research Foundation] ஒன்றை உருவாக்க வேண்டிய பொறுப்பு உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் புலமையாளர்களுக்கு உண்டு.

நமது காலத்தின் உயிர்ப்பான பல்துறைசார் சிந்தனையாளராகத் திகழ்ந்த சிவத்தம்பி அவர்களின் பேரில் நமது ஈழத்து புலமைத்துவ உலகு அணிதிரள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

பன்மொழிச் சிந்தனைகளால் தமிழ்ச் சிந்தனையை வளப்படுத்தக் கூடிய ஏதுநிலையைக் கொண்டிருக்கும் நாம் இது குறித்துச் சிந்திப்பது கட்டாயமானது.
 
 
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.