குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருசேத்திரம பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

05 .08.2011  முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருசேத்திரம். இறுதியில் எங்களுக்கு நீதி கிடைக்கும்' என நம்பிக்கை வெளியிடுகிறார் வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகத் தெளிவாகக் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார் (ஆ.ர்) முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருசேத்திரமாகும். அது தர்மஷேத்திரமாக எங்களுக்கு நீதி கிடைக்க வழிசமைத்துள்ளது. அன்று எமது தமிழ்த் தேசிய இனம் கொட்டிய இரத்தத்திற்கும், இழந்த அவலங்களுக்கும் கணக்கில்லை. கைவிடப்பட்ட உடைமைகள் உட்பட எல்லாவற்றையும் இழந்த பரிதாப நிலைக்கு உட்படுத்தப்பட்ட இனமாகிவிட்டது. இதனால் நாம் தோற்றுப் போன இனம் என்று சிலர் கூறுவதும் வழக்கம். ஆனால் பேசித் தீர்க்க வேண்டிய அரசியல் பிரச்சினையை இராணுவமயமாக்கி ஈற்றில் நாட்டையே இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தி அரசு வென்றதும் தமிழர் தோற்றதும் உண்மைதான். இந்தத் தியாகத்தின் தோல்விக்குப் பின்னால் தொடரான ஒரு கதை இருப்பதை நாம் மறந்து விடுவது வழக்கம்.
 
1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடையும் போது அருகிலுள்ள இந்தியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளை விட வலுவான பொருளாதாரக் கட்டமைப்பு நம்மிடம் இருந்தது. ஆனால் இன்று அவ்வரசகள் வெற்றி பெற்ற அரசுகளின் வரிசையில் வீறு நடை போடுகையில் நமது நாடோ எனில் ஒரு தோல்வி கண்ட அரசின் பட்டியலில் இணைக்கப்பட்டது மட்டுமன்றி உலக ஸ்தாபனமான ஐ.நாவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு நாடாகவும் மாறியுள்ளது.
 
1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி எழுப்பிய உரிமைக்குரல்:
இதன் பின்னணியினை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலங்கை பல்தேசிய இனங்கள் வாழும் ஒரு நாடாகும். ஓவ்வொரு இனத்தினதும்; தனித்துவத்தை அங்கீகரித்து அரசியல் கட்டமைப்பில் அவர்களைச் சேர்க்காததே இந்தப் பரிதாப நிலைக்குக் காரணமாகும். இன்னொரு கோணத்தில் அன்று முதல் இன்று வரை அதிதீவிர சிங்கள பௌத்த தேசிய வாதமும் அதனைப் பயன்படுத்தி வந்த சுயலாப அரசுகளும் இதற்குக் காரணமாகும். இதனைத் தெளிவாக உணர்ந்த தலைவர் தந்தை செல்வநாயகம் அன்று கூறியது இதுதான், 'இப் பிரச்சினையில் தமிழருக்கு இரண்டு வழிமுறைகள் உண்டுளூ ஒன்று அற்பசொற்ப சலுகைகளுக்காகப் பௌத்த சிங்கள தேசிய வாதத்திற்குத் தங்களது தனித்தன்மையை இழப்பது - இது கோழைக்குரிய வழிளூ இரண்டாவது உரிமைக்காகப் போராடுதல் - அதுவும் சாத்வீக அடிப்படையில்தான்' என்றார்.
 
கடந்த அறுபது ஆண்டு கால வரலாறு தந்தையின் கருத்து தீர்க்க தரிசனமானது தான் என்பதனை நிரூபித்துவிட்டது. அரசை அரவணைத்துச் சலுகையைப் பெற்றுங் கூட எமது உரிமை கிடைக்கவில்லை. இருந்ததையும் இழந்து விட்டோம். தந்தையவர்கள் எமது உரிமைக்காகத் தனித்தேசிய இனமாகச் சாத்வீக ரீதியில் போராடுவது மட்டுமன்றி எமது பிரச்சினைக்குத் தீர்வு எது என்பதையும் இனங்கண்டிருந்தார். அதாவது, ஒன்று தமிழர் தனித்தேசிய இனம்ளூ இரண்டாவது வரலாற்று ரீதியாக வடக்குக் கிழக்கு மாகாணத்தைத் தாயாகமாகக் கொண்ட இனம் - இதன் பின்னணியில் தனது தலைவிதியை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமைக்கு அருகதையான இனம்.
 
விடிவை நோக்கிய ஒப்பந்தங்களும் போராட்டங்களும்:
மேற்கூறியவை தான் 1951 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் முன்மொழியப்பட்டன. இதனை அடைவதற்குத் தான் பேச்சுவார்த்தையும் ஒப்பந்தம் செய்வதும் ஒருபடிமுறையாகக் காணப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் பண்டா – செல்வா ஒப்பந்தம், 1965 இல் டட்லி – செல்வா ஒப்பந்தம் ஆகியன விளங்கின. இதன் மற்றோர் படியாக 1985 ஆம் ஆண்டு திம்பு மாநாட்டிலும் பின்னர் 2002 இல் ஒஸ்லோவிலும் திருகோணமலைத் தீர்வே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக வலுப்பெற்றது. இன்னமும் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதென்றால் இதன் அடிப்படையில்தான் அந்தத் தீர்வு அமைய வேண்டும் என்பதோடு இதன் தனித்தன்மையைப் புரிந்து கொள்ளும் நிலைக்குள் சர்வதேசம் தள்ளப்பட்டுள்ளது.
 
இவ்வாறு சர்வதேசம் தள்ளப்பட்டதன் பின்னணி என்னவென்றால் தந்தை செல்வநாயகமும் அவரோடு இணைந்த தமிழ் மக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவரது தளபதிகளும் ஆகும். 1956 இல் காலி முகத்திடலில் அரசுக்கு எதிராச் சாத்வீகரீதியில் போராடிய தலைவர்கள் தாக்கப்பட்டனர். அதிலும் அமிர்தலிங்கம் போன்றோர் தலையில் இரத்தம் சொட்ட சொட்டப்  பாராளுமன்றம் செல்லும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டது. 1961 ஆம் ஆண்டில் சத்தியாக்கிரகப் போராட்டம் வலுப்பெற்ற வடக்குக் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 3 மாதகாலம் அரசியல் நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்தது.
 
சாத்வீக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் 1961 ஆம் ஆண்டு ஏப்பிரல் 17 ஆம் திகதி இரவு இராணுவம் ஏவி விடப்பட்டு அது அடக்கப்பட்டது. தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர் இதன்போது பல்கலைக்கழக மாணவனாயிருந்த என் போன்றோரும் சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட அனைவரதும் பங்களிப்பும் இருந்தது.
 
தமிழரது உரிமைப் போரை அடக்க இன்னமும் பலவழிகள் பயன்படுத்தப்பட்டன. தென்னிலங்கையில் தமிழர்களை அடக்கி ஒடுக்க வகுப்புக் கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. 1957, 1977, 1978, 1980 என்பவற்றோடு 1983 ஆம் ஆண்டுக் கலவரம் தான் சர்வதேச கவனத்திற்கும் இந்தியத் தலையீட்டிற்கும் வழிவகுத்தது. இதன் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இருந்தும் எமது மக்கள் கலங்கவில்லை. சாத்வீகப் போராட்டமும் பின்னர் ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்ற போதும் மக்கள் தமது உரிமைக் குரலை மறக்கவில்லைளூ சலுகைக்காக விலை போகவுமில்லைளூ என்பதை 1956 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை வடக்குக் கிழக்கில் நடைபெற்ற பாராளுமன்றம் மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்கள்; வெளிப்படுத்தியிருந்தன. அன்று இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று அவர்களது கரங்களைப் பலப்படுத்தியிருந்தனர். 1972 ஆம், 1977 ஆம் ஆண்டுகளில் புதிய யாப்புக்களைத் தயாரித்த போது ஒட்டுமொத்தத்தில் வடக்குக் கிழக்கு மக்கள் ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பவற்றைப் பெரும்பாண்மை வாக்குகளால் நிராகரித்திருந்தனர்.
 
முள்ளிவாய்க்கால் அவலங்கள்:
இறுதியாக நடந்த முள்ளிவாய்க்கால் யுத்தம் இதுவரை நடந்திராத இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. போரில் கொலை செய்யப்பட்டுள்ளோர் பெயர்ப்பட்டியல் மிக நீண்டு கொண்டிருக்கின்றது. குழந்தைகள், கர்ப்பிணிகள் முதியோர் என அனைவருமே ஒரு பிரதேசத்திற்குள்ளே முடக்கப்பட்டு உயிர் துறக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தமிழ் மக்கள் செய்த தியாகங்களின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்கால் ஆகும். வெறும் உச்சக்கட்டமல்ல, மாறாக நீண்ட காலப் போராட்டத்தின் இறுதிக்கட்டம் மட்டுமன்றி, இன்று சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவும் வைத்துள்ளது. இவ்வாறு இழப்புகள் ஏற்படுவதற்குச் சர்வதேச அரசுகளும் காரணமாக இருந்த போதும், இழப்புக்கள் பற்றிய விபரங்கள் அவர்களுக்குத் தெரியாது. இதனைத்தான் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமராவ் யாழ். நகர் வந்த போது அவர் முன்னிலையில் சுருக்கமாச் சில வார்த்தைகளால்; சொன்னேன். அண்மைக்கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இந்தியா மட்டுமன்றி ஏனைய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களைப் புரிந்து கொண்டுள்ளன என்று தெரிய வருகின்றது.
 
இலங்கையில் இறுதிப் போரின் போது நடைபெற்றது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதுடன் இனப்படுகொலை எனவும் பேசப்படுகின்றது. இதனை ஏற்றுக் கொண்டு தான் சர்வதேச மட்டத்திலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மனித உரிமை மீறல் மற்றும் ஏனைய உரிமை மீறல்களுக்கான போராட்டங்களை ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேசமும் புரிந்து கொண்டு இவ் உரிமைகளை மீறும் அரசுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் காலமாக இக்காலம் விளங்குகின்றது. இதற்கு லிபியா ஒரு நல்ல உதாரணமாகும்.
 
சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினை:
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களது அயராத உழைப்பும் அந்தந்த நாடுகளில் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள செல்வாக்குமே எமது பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாக அங்கீகாரம் பெறுவதற்கு வலுவூட்டி நிற்கின்றது. உதாரணமாக கனேடிய பாராளுமன்றத்திற்குத் தெரிவான தமிழரான ராதிகா சிற்சபேஷன்; தனது பேட்டியின்போது மனித உரிமைகள் பற்றிக் கூறிய கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
 
அப்போது அவர் கூறியது இதுதான். 'மனித உரிமை ஒரு இனத்திற்குச் சொந்தமானது அல்ல. அது மனித இனத்திற்கே சொந்தமானது. இதனைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசினதும் கடமையாகும். இதில் தான் சார்ந்த கட்சி இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை வருவதற்கு முன்; அக்கறை காட்டியது நினைவுபடுத்தத் தக்கது' என்றார். ஆபிரிக்க தேசிய காங்கிரசும் இப்பிரச்சினையில் மிகக் காத்திமான நடவடிக்கைக்குச் சுட்டிக் காட்டுகின்றது. ஏன் இந்தியாவின் நிலையில் கூட மாற்றம் ஏற்பட்டள்ளது. இந்தியாவும் உள்நாட்டு நெருக்கடியால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் போர்க்குற்றம் பற்றியும் விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டவை பற்றி விசாரணை செய்யப்பட வேண்டுமென அண்மையில் டில்லிக்கு விஜயம் செய்த பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்சிற்கு அறிவுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில் ஐ.நாவின் அறிக்கையின் பின்னணியில் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி சர்வதேசம் சரியான புரின்துணர்வுடன் செயற்படும் நிலையில் அரசுடன் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகத் தெளிவாகக் காய்நகர்த்தரல்களை மேற்கொள்வேண்டிய பாரிய பொறுப்புக்கு உள்ளாகியிருக்கின்;றது.
 
சமஷ்டிப் பாதையில் தந்தை செல்வா:
தந்தை செல்வா 1949 டிசம்பர் 18 இல் மருதானையில் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த போது வடக்குக் கிழக்கு உள்ளடக்கிய தமிழர் அரசும், ஏனைய பகுதிகளை உள்ளடக்கிய சிங்கள அரசும், இரண்டிற்கும் பொதுவான மத்திய அரசும் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு முன்னர் கண்டிச் சிங்களவர்கள் இலங்கை மூன்று அலகாகப் பிரிக்கப்பட்ட பூரண சமஷ்டி அமைய வேண்டும் என்று கூறியது மட்டுமன்றி நாடு சுதந்திரம் அடையும் வரையில் இக்கோரிக்கையை வலியுறுத்தியும் வந்தனர். இதில் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் அலகு, மேல், தென்மாகாணங்களை உள்ளடக்கிய கரையோரச் சிங்கள அலகு, ஏனைய இடங்களை உள்ளடக்கிய மலைநாட்டுச் சிங்கள அலகு என்று மூன்றாக வகைப்படுத்தியிருந்ததுடன் இவை பூரண சுயாட்சியுள்ள - சமஷ்டி அதிகாரமுள்ள அரசுகளாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இம் மூன்று அரசின் பிரதிநிதிகளும் தான் மத்திய அரசாக அமைய வேண்டும் என்பதும் இவர்களே நாட்டை ஆள வேண்டும் என்பதும் அவர்களின் கருத்தாகும்.
 
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் 1944 இல் சமஷ்டியை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றிப் பூரண சுயாட்சியுள்ள தமிழ் அரசை அங்கீகரித்தது. இப்பிரச்சினையில் எமது தியாகத்தின் பின்னணியில் தனிநாட்டுக்கு மாற்றீடாக எது அமையப் போகின்றது என்பதே எம் முன்னர் உள்ள முக்கியமான கேள்வியாகும். தீர்வுப்பாதையில் பூரண சுயாட்சியுள்ள வடக்குக் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய  அரசுதான் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் தீர்வு என்பதை மறுப்பதற்கு இல்லை. அதே நேரம் 60 ஆண்டு கால வரலாற்றில் சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் நாட்டை ஆழ்வதற்கான அதிகாரம் கிடைக்கவில்லை. மாறாகச் சலுகைகள் தான் கிடைத்தன. இதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.
 
சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜி. ஜி. பொன்னம்பலம் மத்தியில் பாராளுமன்ற அங்கத்துவத்தில் பொரும்பான்மையினர் 50 சதவீதம் இருப்பது போல் சிறுபான்மைச் சமூகத்திற்கும் 50 சதவீதம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடினார். எமது பிரச்சினையை ஓர் அரசியல் பிரச்சினையாக அணுகிப் பிரச்சினைகளுக்குப் பின்னாலுள்ள ஆழமான குறைபாடுகளை உணர்ந்து சாத்தியமான ஒரு தீர்வை நல்க அரசு தயங்குகின்றது என்பது தெட்டத் தெளிவாகி விட்டது.
 
புதியதீர்வு பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை என்று அரசு யோசிக்கின்றது. இற்றைவரை மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்வுகள், அரசு நியமித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகள், வட்டமேசை மாநாட்டின் பரிந்துரைகளைப் பார்க்கும் போது இவை வெறுங் கடதாசித் தீர்வுகளாகவே இருந்தன. ஒரு காத்திரமான நடவடிக்கைகளுக்கு மாறி மாறி வந்த அரசுகள் விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ள பொறுப்பு:
எனவே பேச்சு வார்த்தையில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுத் தொடர்பான விடயங்களைத் தம்மைத் தெரிவு செய்த மக்களுக்கு வரைமுறையில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு நிலையில் உள்ளனர். தியாகம் செய்த மக்களுக்குத் தமது தீர்வுத் திட்டம் என்ன என்பதை அதுவும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு மாற்றீடானதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டிற்குள் உள்ளனர்.
 
ஐ. நா வின் நிபுணர் குழுவின் அறிக்கையின் பின்புலத்திலும் எமது புலம்பெயர் மக்களது செயற்பாட்டின் பின்னணியிலும் எமது பிரச்சினை பற்றிச் சர்வதேச அரசுகள் தெளிவாக அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் காணப்படும் ஒழுங்கில் எமது தீர்வுத் திட்டத்தைப் பகிரங்கப்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
 
இத்தீர்வுத் திட்டம் 1951 ஆம் ஆண்டில் திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதல் தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனம், தாயகம், சுயநி;ர்ணய உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அமைய வேண்டும். இது தான் 1985 இல் திம்புவிலும் 2002 இல் ஒஸ்லோவிலும் அரங்கேறியது. தமிழரசுக் கட்சியினால் பல்வேறு மகாநாடுகளில் மொழியப்பட்ட அமெரிக்க, கனடா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் இன்று காணப்படும் சமஷ்டி முறையாகவும் இருக்கலாம். அல்லது அரசாகவும் இருக்கலாம். கண்டியர் கோரிய சமஷ்டி முறையாக மூன்று சுயாட்சி அலகு கொண்டதும் மத்தியில் சமபங்கு வகிக்கும் சமஷ்டி அரசாகவும் இருக்கலாம்.
 
இவற்றைப் பரிசீலிக்கும் போது வடக்கு – கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களும் மத்திய மலைநாட்டிலுள்ள மலையகத் தமிழருக்கும் தன்னாட்சி உரிமை பெறுவதற்கான அலகுகளைப் பரிசீலிக்கவும் மேல், தென் மாகாணங்களில் வாழும் சிறுபான்மையினங்களின் தனித்துவத்தைப் பேணும் அலகுகள் பற்றியும் சிந்திக்கவும் நேரிடும்.
 
முள்ளிவாய்க்கால் தமிழ்த் தேசியத்தின் அஸ்தமனமல்ல:
முள்ளிவாய்க்கால் தமிழ்த் தேசியத்தின் அஸ்தமனமல்ல. எனவே முள்ளிவாய்க்கால் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் முடிவல்ல. தமிழர் இன்னமும் தோற்றுப் போன இனமுமல்ல. இன்று நம்பிக்கையுடன் தமிழ் இனம் செயற்படுவதற்கான காலம் கனிந்துள்ளது. எமது பிரச்சினை இன்று சர்வதேசப் பிரச்சினையாகியுள்ளது. இதனைத் தக்கவாறு பயன்படுத்தும் பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.
 
பாண்டவர்கள் அரசில் பாதி கேட்டுப் பின்னர் ஐந்து கிராமமும், ஐந்து வீடுகளும் கேட்டும் அவை கிடைக்காது விட்டதால் இறுதியாக யுத்தத்திற்குச் செல்ல அதில் தர்மம் வென்றது. அதுபோலத் தான் எமது பிரச்சினைக்கும் தீர்வாகத் தர்மம் வெளிப்பட்டு நிற்கின்றது. இதன் செயல்வடிவம் தான் ஐ.நாவின் அறிக்கை.
 
'ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்' என்ற ஆன்றோரின் பழமொழி போல் முள்ளிவாய்க்காலில் இருந்த மக்களின் அவலம் தான் இந்நிலையை உருவாக்கியுள்ளது.
 
தீர்வின் அமுலாக்கம் சர்வதேசத்தின் மேற்பார்வையில்:
 
சர்வதேசப் பிரச்சினையாகவுள்ள எமது பிரச்சினைக்குக் கிடைக்கும்; தீர்வையும் சர்வதேச மேற்பார்வையில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நியமிக்கும் குழு இதன் அமுலாக்கத்தை மேற்பார்வை செய்தல் வேண்டும். இக்குழுவில் பிரித்தானியா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அங்கம் வகித்தல் வேண்டும்.
 
இதன் அடிப்படையில் ஒரு தீர்வுக்குப் போவது தான் கடந்த 60 வருடம் எமது மக்கள் செய்த தியாகத்திற்கான ஒரு உண்மையான அஞ்சலியாகும். 'தர்மம் தலைகாக்கும்' என்பது போல் முள்ளிவாய்க்கால் அழிவும் எமது விடிவுக்கான கதவுகளை அகலத் திறந்து விட்டது. அதனை இனி எவரும் இறுக்கி மூடிவிட முடியாது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.