பணக்கார நாடுகள் கடந்த கால பாவ செயல்களில் இருந்து தப்பி விட முடியாது என்றும் எனவே, பச்சை வீடு வாயு வெளியீட்டால் பருவகாலத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பினை அடுத்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பருவகால மாநாட்டில் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.
பெரு நாட்டின் தலைநகரில் நடந்து வரும் பருவகால மாநாட்டின் 3வது நாளான இன்று மத்திய சுற்று சூழல் துறையின் கூடுதல் செயலாளரும் இந்திய குழுவின் இடைக்கால தலைவருமான சுஷீல் குமார் பேசுகையில், ஒரு நாடு தற்பொழுது எவ்வளவு வாயுக்களை வெளியிடுகிறது என்பது குறித்து பேசுவது அழகல்ல. ஏனெனில் அந்த நாடு வெளியீட்டு அளவை தற்பொழுது குறைத்திருக்க கூடும்.
வளர்ந்த நாடுகளே பொறுப்பு
இந்த உண்மையானது அவர்களது (பணக்கார நாடுகள்) அனைத்து (கடந்த கால) பாவங்களில் இருந்தும் தப்பிக்க விடாது என்று கூறியுள்ளார். அதிக அளவிலான வாயு வெளியீட்டால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு தீங்கு ஏற்பட்டுள்ளதற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பொறுப்பு ஆனது இழப்பீடு மற்றும் 2015ம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்த வடிவில் வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தகவமைப்பிற்கு தேவையான நீண்ட கால உலகளாவிய இலக்கானது தரம் மற்றும் அளவு அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்பதையே நாங்களும் விரும்புகிறோம். வளர்ந்து வரும் ஒரு நாட்டிற்கு தகவமைப்பு (குறைப்பதை காட்டிலும்) என்பது மிக அதிகமான உடனடியான தேவை ஆகும். பாகுபாடு இல்லாத நிலை என்பதில் இந்தியா எப்பொழுதும் ஒரு வலிமையான சாம்பியனாகவே இருந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பருவகால அபாய குறியீடு
உலக அளவில் வானிலை தொடர்பான நிகழ்ச்சிகளால் எந்த நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன என்பது குறித்து 1994௨013ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தின் தகவல்களை அடிப்படையாக கொண்டு உலகளவிலான பருவகால அபாய குறியீடு 2015 ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.
தகவமைப்பை அளவிடும் ஒரு வழியாக இதனை மேற்கோள் காட்டி அவர் பேசுகையில், இந்தியா அபாய நிலையில் பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்.
எனினும், மற்ற இரு நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் அதிக அளவிலான மக்கள் தொகை குறித்து இந்த குறியீட்டில் கணக்கில் கொள்ளப்படவில்லை. பாராளுமன்றத்தில் 29 மாநிலங்கள் தாக்கல் செய்து உள்ள மாநில பருவகால செயல்பாட்டு திட்டங்களுடன் சேர்த்து, தேசிய தகவமைப்பு நிதி உதவியுடன், கட்டிடம், தொழில் நுட்பம் மற்றும் உள்நாட்டு தகவமைப்பு திட்டங்களுக்கு நிதி ஆதாரம் வழங்குவது தொடர்பான விசயங்களை இலக்காக கொண்டு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சுஷீல் குமார் குறிப்பிட்டு பேசியுள்ளார்