ஹாங்காங் : சீனாவில் மிங் அரச பரம்பரையில் கையினால் எம்ப்ராய்டரி மூலம் தயாரிக்கப்பட்ட திரைச்சீலை ஒன்று நேற்று ஹாங்காங்கில் ஏலம் விடப்பட்டது. அந்த பழங்கால திரைச்சீலையை ஒருவர் ரூ.280 கோடிக்கு ஏலம் எடுத்தார்.
சீனாவில் கடந்த 15ம் நூற்றாண்டில் மிங் அரச பரம்பரையினரின் ஆட்சி நடைபெற்றது. அப்போது மண்பாண்டங்கள், திரைச்சீலைகள் மற்றும் பல்வேறு உபயோகப் பொருட்களில் திபெத்திய சித்திர வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தில் எம்ப்ராய்டரி மூலம் திரைச்சீலையில் நம்மூர் பத்ரகாளியை போல் அந்த ஊர் ரக்தாயமாரியை ஒரு கலைஞர் வடிவமைத்தார். அந்த திரைச்சீலை சீனாவில் உள்ள லாங் அருங்காட்சியகத்தில் இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சீன அருங்காட்சியகத்தில் சிவப்பு மற்றும் பொன்நிறங்களால் வடிவமைக்கப்பட்ட 600 ஆண்டு கால பழமைவாய்ந்த திரைச்சீலை நேற்று ஹாங்காங்கில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் ஏலத்துக்கு வந்தது. சர்வதேச அளவில் நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த திரைச்சீலைய சீனாவை சேர்ந்த லீயு யுகியான் என்ற கோடீஸ்வரர் ரூ.280 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார். இதுவரை நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்ச ஏலத்தொகையில் எடுக்கப்பட்ட பொருளாகும். பழங்கால பொருட்களின் மீது சீனர்கள் எந்தளவு ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது இந்த ஏலத்தின்போது தெரியவந்தது என்று கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவிக்கிறது.கடந்த ஏப்ரல் மாதம் ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் சீன களிமண்ணால் செய்யப்பட்ட மிங் அரச பரம்பரையின் மதுக்கோப்பை ரூ.220 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.