கொல்கத்தாவில் இன்று காலை தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் காலையில் அபாரமாக பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு மளமளவென சரிந்து துவண்டு போய் விட்டனர்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஸ்மித்தும், பீட்டர்சனும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். விரல் வலியால் அவதிப்பட்டு வந்த ஸ்மித், 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜாகிர்ன் கான் பந்தில் வீழ்ந்து வெளியேறினார்.
இருப்பினும் பின்னர் வந்த அம்லா, பீட்டர்சனுடன் இணைந்து ரன் குவிப்பில் குதித்தார். இருவரும் இணைந்து அபாரமாக ஆடி ஆளுக்கு ஒரு சதம் போட்டனர்.
மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி ஸ்மித்தை மட்டும் இழந்து 153 ரன்களை எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய அம்லாவும், பீட்டர்சனும் சதத்தைப் பூர்த்தி செய்தனர். அம்லா 114 ரன்களைக் குவித்தார். பீட்டர்சன் 100 ரன்களை எடுத்தார். இருவரையும் ஜாகிர்கான் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
இவர்கள் இருவரும் ஆடிக் கொண்டிருந்தவரை தென் ஆப்பிரிக்கா சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு திடீர் திருப்பமாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் படு வேகமாக அவுட் ஆகத் தொடங்கினர்.
கல்லிஸ் 10, வில்லியர்ஸ் 12, பிரின்ஸ் 1 என சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங்கும், அமீத் மிஸ்ராவும் தங்களது சுழலால் தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை மட்டுப்படுத்தி சுருண்டு போகச் செய்தனர்.
ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மிஸ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. ஜாகிர் கான் தன் பங்குக்கு 3 விக்கெட்களை சாய்த்தார்.
இன்றைய ஆட்ட நேர இறுதியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்களை இழந்து 266 ரன்களை பெற்றது. பர்னல் 2, மார்க்கல் 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது.
தென் ஆப்பிரிக்காவை 300 ரன்களுக்குள் சுருட்டியுள்ளதன் மூலம் இந்தியா சற்று நிம்மதி அடைந்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டும். மாறாக தென் ஆப்பிரிக்கா டிரா செய்தாலோ அல்லது வென்றாலோ, டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா அதை இழக்க வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.