குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்கிறது...

கிரிக்கெட்  ஆட்டத்தை 2020 ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது. அதன் முன்னோட்டமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

அதேபோல, பவர் பெட்டிங் உள்ளிட்ட விளையாட்டு சங்கங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இயக்குநர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில், தற்போது இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இவர்களும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

மேலும் இவை ஒலிம்பிக் போட்டிகளில் சேரும் முதல் நடவடிக்கையாகவும் இது அமையும் என்றார்.

இந்த முடிவின் மூலம் 2020 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறும் எனத் தெரிகிறது. அனேகமாக அதன் 20-20 வடிவ கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெறக் கூடும். இருப்பினும் இதுகுறித்து ஒலிம்பிக் கவுன்சில் விவரிக்கவில்லை.

இந்த முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயல் தலைவர் ஹாரூன் லோர்காட் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் பெருமை தரக் கூடிய ஒன்றாகும். சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எங்களை அங்கீகரித்துள்ளதை வரவேற்கிறோம், மகிழ்கிறோம். இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது கிரிக்கெட் போட்டியை அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டியாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்தது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஒலிம்பிக் கவுன்சிலின் அங்கீகாரம் இல்லாததால் கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற முடியாத நிலை இருந்தது.

தற்போது அது நீங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில், 20-20 கிரிக்கெட் போட்டிகளை சேர்க்கலாம் என்று ஏற்கனவே ஆடம் கில்கிறைஸ்ட், ஸ்டீவ் வாக், ஸ்டீபன் பிளமிங், குமார சங்கக்காரா, செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1900ல் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. பின்னர் அது இடம் பெறவில்லை. 1998ம் ஆண்டு நடந்த கோலாலம்பூர் காமன்வெல்த் போட்டிகளிலும் கிரிக்கெட் இடம் பெற்றது. சீனாவில் இந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 20-20 போட்டி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.