குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பிச்சைக்காரனின் புலம்பல்!

சந்தனபுரி என்ற ஊரில் வணிகர் ஒருவர் இருந்தார். நேர்மையான வியாபாரி. கொள்முதல் செய்த விலையை விட சற்று கூடுதலான விலைக்கு பொருட்களை விற்று, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவியும், தான தர்மங்களும் செய்து வந்தார்.

இளம் வயதில் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று, அவர்களுக்கு தக்க வயது வந்ததும், திருமணம் நடத்தி வைத்தார். பெண் பிள்ளைகள் தங்கள் புகுந்த வீடு சென்று< பிறந்த வீட்டின் மதிப்பை உயர்த்தினர். ஆண் பிள்ளைகள் தங்கள் தந்தையின் வியாபாரத்தை நல்ல முறையில் கவனித்துக் கொண்டு, தங்கள் தந்தையை போல் வாழ்ந்து வந்தனர்.

வணிகரின் மனைவி தன் பிள்ளைகளின் திருமணம் முடிந்த சில காலத்தில், இறைவனிடம் போய் சேர்ந்து விட்டாள். இளம் வயதில் கரம் பிடித்த தன் மனைவியின் பிரிவு, வணிகரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. குடும்பத்தில் மகன், மருமகள் மற்றும் பேரன் பேத்திகளோடு வாழ்ந்த வாழ்க்கை அலுத்து விட்டது.

ஒருநாள், அவர் தன் மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளிடம் விடைப் பெற்று தனக்கென்று சேர்த்து வைத்திருந்த பொருளோடு ஒரு காட்டு பிரதேசத்தில் பல முனிவர்கள் வசிக்கும் ஆசிரமத்துக்கு சற்று தூரத்தில் ஒரு சிறிய குடிசை அமைத்து, சகல ஜீவராசிகளும் சுகமாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தார்.

ஒருநாள் இரவு இடைவெளி இல்லாமல் கனத்த மழை பெய்துக் கொண்டிருந்தது. வணிகர் தான் சமைத்த உணவை உண்டு படுக்கச் சென்று விட்டார். உறங்கும் வேளையில், அவர் குடிசையின் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு கதவை திறந்தார். வெளியே ஒரு பிச்சைக்காரன் கிழிந்த, அழுக்கடைந்த ஆடைகளுடன் மழையில் முழுமையாக நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்த வணிகர், உடனே அவனை உள்ளே வருமாறு அழைத்து புதிய துணி கொடுத்து, உடுத்திக் கொள்ளச் சொன்னார்.

பிச்சைக்காரனை சற்று நேரம் அமரச் சொல்லி அவன் பசிக்கு அந்த இரவு வேளையில் உணவு சமைக்க சமையலறை பக்கம் சென்று, சமைத்துக் கொண்டிருக்கும் போது, பிச்சைக்காரன் கடவுளை திட்டிக் கொண்டிருந்தான்.

""கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்று கூறுகின்றனர். அப்படியானால், அவர் என்னை பிச்சைக்காரனாகவும், இந்த குடிசையில் வசிக்கும் வணிகனை சர்வ சுகத்தோடும் வசிக்க வைக்கிறாரே... அது ஏன்?'' என்று சற்று கோபமாக கேட்டான்.

கடவுள் பணக்காரர்கள் பக்கம் மிக மிக பரிவோடும், ஏழைகள் பக்கம் மிகவும் அலட்சியமாகவும் நடந்துக் கொள்கிறார். ஏழையாகிய நான் கந்தலாடை உடுத்தியபடி மழையில் நனைந்து பசியால் வாடி, ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் தற்போது தங்கி உள்ள குடிசையின் சொந்தக்காரனை சகல வசதிகளோடும், நல்ல உடைகளோடும், பசிக்கு நல்ல உணவோடும் மழை குளிருக்கு பாதுகாப்பான குடிசையில் வாழ வைக்கிறான். இது தான் நியாயமா?'' என்று, குடிசையில் நுழைந்ததில் இருந்து விநாடிக் கூட இடைவெளி விடாமல் கடவுளை திட்டிக் கொண்டிருந்தான்.

பிச்சைக்காரன் கடவுளை திட்டிக் கொண்டிருப்பதை கேட்டு, விரக்தி அடைந்த வணிகர் தன் பூஜை அறைக்கு சென்று கடவுளிடம் பிச்சைக்காரன் கடவுளை இடை விடாமல் திட்டு வதை சொல்லி வருத்தப்பட்டார்.

வணிகரின் உண்மையான பக்தியையும், வேதனையையும் உணர்ந்த கடவுள் அவர் முன் தோன்றி, ""வணிகரே! பிச்சைக்காரன் என்னை திட்டுவதைப் பற்றி கவலைப்படாதே... சில நிமிடங்கள் அவன் என்னை திட்டுவதை கேட்டு பொறுத்துக் கொள்ளாமல், வேதனை அடைந்து என்னிடம் முறையிட்டாய். அவன் இடைவிடாமல் நாள், மாதம் மற்றும் வருடக் கணக்கில் என்னை திட்டிக் கொண்டிருக் கிறானே...

அதை நான் எவ்வளவு பொறுமையுடன் பொறுத்துக்கொள்கிறேன் என்று உனக்குத் தெரியாது. அவன் என்னை சர்வ சதா காலமும் திட்டும்போது, என்னை நினைத்த படிதான் திட்டுகிறான் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதனால் அவனும் என்னை சர்வ சதா காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பிச்சைக்கார வாழ்க்கை கிடைத்ததற்கு அவன் வாழ்ந்த வாழ்க்கை முறைதான் காரணம்.

இளம் வயதில் சேராத நண்பர்களோடு சேர்ந்து, கல்வி பயிலாமல் ஊர் சுற்றி கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி திரிந்ததால்தான் அவனுக்கு இந்த நிலை.

""இந்த பிறவியில் அவன் பிச்சைக்காரனாக இருந்தாலும், அவன் என்னை திட்டிய படி சர்வசதா காலமும் என் நினைவில் உள்ள படியால், அவன் அடுத்த பிறவியில் வசதியோடு வாழ்வான். நீ அவனுக்கு வயிறார உணவளித்து ஆழ்ந்து உறங்க வசதி செய்து கொடு,'' என்று கூறி கடவுள் மறைந்தார்.

வணிகனும் சுடச்சுட சமைத்த உணவை பிச்சைக்காரனுக்கு அளித்து உண்ணச் செய்து, உறங்க வழி செய்து, மறுநாள் அவனை அனுப்பி வைத்தார்.

பிச்சைக்காரனுக்கும், எல்லா காலத்திலும் உணவளித்து காப்பாற்றுவது தான் கடவுளின் கருணை. காட்டில் கனத்த மழையில் நனைந்து குளிரில் நடுங்கி பசியில் தவித்த பிச்சைக்காரனுக்கு வணிகன் மூலமாக உணவளித்து பசியை போக்கி குளிரை நீக்கி அவனை காப்பாற்றிய நன்மையை மட்டும் மனிதனும் மறந்துவிடுவதுதான் உண்மை.