குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ஏமாற்றாதே! ஏமாறாதே! குட்டி கதை !!

செல்வன் ஒருவன் தன் பணப்பையை எங்கோ தொலைத்துவிட்டான். அதில் நூறு பொற்காசுகள் இருந்தன.என் பணப்பையைக் காணவில்லை! அதை கண்டுபிடித்து தருபவருக்கு பத்து பொற்காசுகள் தரப்படும் என்று ஊரெங்கும் தெரியப்படுத்தினான்.

அந்த பணப்பையை ஏழைச் சிறுவன் ஒருவன் கண்டெடுத்தான். நேர்மையாளனாகிய அவன் அந்த பையை செல்வனிடம் கொண்டுவந்து கொடுத்தான். தன் பணப்பையை பார்த்தவுடன் செல்வனுக்கு மகிழ்ச்சி. இந்த சிறுவனுக்கு ஏன் வீணாக பத்துப் பணம் தர வேண்டும் என்று மனதிற்குள் கணக்குப் போட்டான். சிறுவனைப் பார்த்து, சிறுவனே இந்த பையில் நூற்றிருபது பொற்காசுகள் வைத்திருந்தேன். இருபது காசுகள் குறைவாக உள்ளது மரியாதையாக கொடுத்துவிட்டால் உன்னை விட்டு விடுகிறேன் என்று மிரட்டினான்.

சிறுவனோ அஞ்சவில்லை!ஐயா இந்த பையில் இருந்து ஒரு பைசா கூட நான் எடுக்கவில்லை! எனக்குத் தரவேண்டிய பத்து காசுகளை தந்து விட்டால் நான் சென்று விடுகிறேன் என்றான்.பணக்காரனோ என்னுடைய காசுகளை திருடியது மட்டுமில்லாமல் கூலி வேறு கேட்கிறாயா? வா நீதிமன்றத்திற்கு என்று அழைத்து சென்றான்.

நீதிபதிமுன் வழக்கு வந்தது. பணப்பையை வாங்கி பார்த்தார் நீதிபதி. அந்த பையினுள் நூறு பொற்காசுகள் மட்டுமே வைக்கமுடியும் என்று அறிந்தார்.பணக்காரனின் ஏமாற்று புத்தியை அறிந்து தக்க பாடம் புகட்ட நினைத்தார் நீதிபதி.`

பணக்காரனைப்பார்த்து. உம் பையில் நூற்றிருபது பொற்காசுகள் இருந்தது உண்மைதானே என்றார். செல்வனும் ஆம் நீதிபதி அவர்களே பையினுள் நூற்றிருபது பொற்காசுகள் இருந்தன. இவன் தான் திருடிக் கொண்டு தர மறுக்கிறான் என்றான்.

நீதிபதி, புன்னகையுடன் கூறினார். செல்வனே இந்த பையினுள் நீ சொன்னது மாதிரி நூற்றிருபது பொற்காசுகள் வைக்க முடியாது. நூறு பொற்காசுகள் வைக்கும் அளவுதான் பை தைக்கப்பட்டுள்ளது. எனவே நீ தொலைத்த பை இதுவல்ல! வேறு யாரோ தவற விட்ட பைதான் இது. ஆனால் இதுவரை யாரும் பையை தவற விட்டதாக இங்கு வரவில்லை!

எனவே இந்த பை உன்னுடையது அல்ல. இதைக் கண்டெடுத்த இந்த சிறுவனே இதன் உரிமையாளன். இந்த பொற்காசுகள் அவனுக்கே சொந்தம். உன் பணப்பையை யாராவது கண்டெடுத்து கொடுத்தால் உன்னிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

சபையோர் நல்ல தீர்ப்பு என்று புகழ ஏமாற்ற நினைத்து தனது பணத்தை இழந்தேனே என்று வருத்தமுடன் அங்கிருந்து சென்றான் பணக்காரன். சிறுவனோ நீதிபதியை வணங்கி மகிழ்வுடன் வீட்டிற்கு சென்றான்.

ஏமாற்றாதே! ஏமாறாதே!