சீன அரசின் காவல் உள்ளிட்ட அமைப்புகள் குடிமக்களைக் கடத்திச் செல்வதும், அவர்களைக் கறுப்புச் சிறைகள் என்றழைக்கப்படும் அறைகளில் சட்டத்திற்குப் புறம்பாக பல நாட்கள் அல்லது மாதங்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்து வருவதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம் சாற்றியுள்ளது.
கடத்தப்படும் சீன குடிமக்கள் சீன அரசி்ற்குச் சொந்தமான விடுதிகளிலும், உடல் நல மையங்களிலும், உளவியல் மருத்துவக் கூடங்களிலும் உள்ள அறைகளில் வைத்து சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவின் ஆலோசகர் சோபியா ரிச்சார்ட்சன் கூறியுள்ளார்.
மனித உரிமைகளை மேம்படுத்துவதாகவும், சட்டத்தின் ஆட்சியை மதிப்பதாகவும் கூறும் சீனத்தில் உள்ள இப்படிப்பட்டக் கறுப்புச் சிறைகளை சீனா உடனடியாக மூடிட வேண்டும் என்று சோபியா ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.
கறுப்புச் சிறைகளை சீன அரசு மூடிட வேண்டும், இவைகளை நடத்துபவர்களை விசாரிக்க வேண்டும், குடிமக்களை அவமானப்படுத்தும் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று சோபியா ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.