நாகர் என்பார் முதன்முதல் நாக வணக்கங் கொண்டிருந்த கீழ்த்திசை நாட்டார்.“கீழ்நில மருங்கி னாக நாடாளு மிருவர் மன்னவர்”(9 : 54- 55) என்கிறது மணிமேகலை. தமிழகத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான “முதுமக்கள் தாழி”கள் அகழ்வாராய்ச்சியாளரால் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு புதைக்கப்பட்டவர்களை அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள் புதைக்கப்பட்ட மக்கள் ‘தமிழ் நாகர்களை குறிப்பனவாக உள்ளன என கூறினர்.
நாகர்களில் பல கிளைகளாக இருந்தனர். எயினர், ஒளியர், அருவாளர், பரதவர் ஆகிய கிளையினர் இருந்தனர். அவர்களில் மறவரே வலிமை மிக்கவராயும் போர்த்திறம் மிக்கவராயும் இருந்தனர், நாலைக் கிழவன் நாகன் என்ற மறவர் கோமன் பாண்டிய மன்னனிடம் அமைச்சனாகவும்,படைத் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரைமலையை ஆண்ட பிட்டங்கொற்றன் சேர மன்னனிடம் பணிசெய்ததாக வி.கனகசபைப்பிள்ளை கூறுகிறார்.
நாகர்களில் அடக்காப் பண்புடையவர்கள் எயினர் அல்லது வேடர்களே ஆவர். நாகர்களில் இன்னொரு மரபினரான ஒளியர் கரிகால் சோழனால் வென்றெடக்கப்பட்டனர் என்று பட்டினப்பாலை மூலம் தெரிகிறது.
நாகர் இனத்தில் மற்றொரு வகுப்பினர் பரதவர் ஆவர். இவர்கள் மீன் பிடித்தல், கடல் வாணிபம் செய்தல் முதலிய தொழில்கள் செய்து வந்தனர்.ஓவிர் தேசம் ஓவியராகிய நாகர்கள் வாழ்ந்த மாந்தை நகரமாகும்.
ஆரியர்கள் எழுத்துக்களையை கற்றது நாகர்களிடமிருந்து என்பார். செ.இராசநாயகம் முதலியார் தெரிவிக்கிறார்.
நாகர்கள் பல கலைகளில் திறமை உடையவர்களாக இருந்தனர். நெசவு அவர்களின் தனித் திறமையாக இருந்துள்ளது. ஆடைகளையும், மல்மல் என்ற மெல்லாடைகளையும் ஏற்றுமதி செய்துள்ளனர். நீல நாகர்கள் தனக்களித்து மல்மல் ஆடைகளுள் ஒன்றை ஆய் எனும் வள்ள சிவபெருமான் சிலைக்கு பரிசளித்ததாக பத்துப்பாட்டு குறிப்பிடுகிறது.
நாகர்கள் புது நகரங்களைக் கட்டுவதில் நிபுணர்கள் ஆவர். அவர்கள் பல நகரங்களைக் கட்டினார்கள், மகாபாரதத்தில் வரும் “மாயசபை” இவர்களுடைய சித்திர வேலைத் திறனைக் காட்டுகிறது. பாதாளம், பிரஜயோடிஷ, தக்ஷலா, மகாத, மதுரா, விலாசபொரி முதலிய நகரங்களை அமைத்தவர்கள் நாகர்களே. உலகில் முதல் முதலில் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள், பாம்புகள், எறும்புகள் போல நிலத்தைத் தோண்டி பொன், வெள்ளி, முதலிய உலோகங்களைக் கண்டவர்கள், சிற்பக்கலை முதலிய அருங்கலைகளில் சிறந்தவர்கள் நாகர்களே. இத்தொழில்களில் இன்றுவரை நாகர் ரத்தம் உள்ளவர்களே ஈடுபட்டு வருகின்றனர்,
தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகநாதர் கோயிலில் உள்ள பல்லவர் கல்வெட்டிலும் இவ்வூர் நாகை’ என அழைக்கப்படுவதைக் காணலாம். இப்பெயர் பின்னர் ‘பட்டினம்’ (அந்நாட்களில் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகத்தைச் சுட்டும் சொல்) என்ற பின்னொட்டுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என வழங்கலாயிற்று.
மலபார் நாகர்கள் முற்காலத்திய நாகர்களின் பழக்கவழக்கங்கள் மாறாது பிரதிபலிக்கின்றனர். சில கால முன்புவரை பெண்கள் நாகப்படம் என்னும் காதணியை அணிந்தனர்.
கி.மு. 10 ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவை ஆண்ட பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது மணிபுரத்துக்கு வந்தானென்றும் அந்த நாட்டு நாக அரசனனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்தானென்றும் பாரதக்கதையில் சொல்லப்படுகிறது. அருச்சுனன் – சித்திராங்கதை இருவருக்கும் பிறந்த சித்திரவாகன் என்பான் தனது தந்தையாகிய அருச்சுனனைப் போரில் வென்றான் என்றும் அவனது கொடி சிங்கக் கொடி என்பதும் மகாபாரதத்தால் அறியப்படும். இந்த நாகநாட்டு அரசனது சிங்கக்கொடி பறந்த சிங்கைநகர் என்பது புலனாகும்.
அதே கி.மு 10 நூற்றாண்டில் வரலாற்றுக்கு முற்பட்ட இடைச்சங்க காலத்தில் குதிரைமலை வால்மீகியால் கபாடபுரம் எனப்பட்டது. அருச்சுணனுடைய வில்லுக்கு விசயன் என்ற பெயரும் நாகநாட்டு சிங்கக்கொடியும் அதன் வரலாற்றுக்கால அல்லி என்ற சாலமன் அரசரோடு ஓபிர் என்ற மாந்தை துறைமுகத்தினூடு உலகம் புகழ் வாணிபம் புரிந்த பேரரசி வரலாறும் திரிக்கப்பட்டு புனையப்பட்டதே விசயன்,குவேனி கதையுருவாக்கமாகும். இது நாக ஆரியர்களுடைய ஆட்சிக்குப் பிற்பட்ட ஆரிய கிளைகளான மெளரியர்களால் ஆரிய புராணங்களில் உள்ளவாறே அருவருக்கத்தக்க பாலியல் தகாத உறவுகளையும் சித்தரித்து புனையப்பட்ட கதாபாத்திரமாகும்.
பண்டைக்கால சேரநாட்டு நாயர் என்ற சமூகத்தினர் நாகபாம்பு வழிபாட்டின் எச்சசொச்சங்கள் அவர்களிடையே இன்றும் காணப்படுகின்றன.
இத்தகைய நாகர், இயக்கர் இனங்களே ஈழத்தின் வரலாற்றை எழுதியவர்கள் என்ற கருத்தைக் கல்வெட்டு ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
பண்டைக்கால ஈழத்தில் வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் எனவும், அவர்களுடைய நாடு ‘நாகநாடு’ எனவும் அழைக்கப்பட்டது. கி.பி 6 ஆம் நூற்றாண்டின் பின்பாக அதாவது அநுராதபுர அரசு நாகர்களுடைய ஆட்சியை இழந்த பின் ஆரிய கிளைக்குடியான மெளரியர்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பிற்பாடு நாகநாடு ஈழத்தின் வடகிழக்கு,வடமேற்கை குறித்ததாக விளங்கி வந்தது. மகாவம்சம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் புத்தர் ஈழம் வந்தபோது அனுராதபுரத்திற்கு வடக்கிலமைந்த பிராந்தியத்தை நாகதீபம் எனவும், அங்கு ஆட்சியில் இருந்த இரு நாகவம்சத்து மன்னர்களுக்கிடையிலான சிம்மாசனப் போராட்டத்தை தடுக்கவே அவர் ஈழம் போந்தார் என கூறுவது நம்பிக்கையாக (ஐதீகமாக) இருப்பினும், அந்நூல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் ஈழத்தின் வடபாகம் நாகதீபம் என அழைக்கப்பட்டதையும். அங்கு நாகவம்சத்து மன்னர்களே ஆட்சி செய்தனர் என்பதையும் இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. ஆனால் வரலாறு யாதெனில் கி.மு 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 6 நூற்றாண்டு வரையான சுமார் 1000 ஆண்டுகளும் அதற்கும் முற்பட்ட காலத்திலும் ஈழம் நாகர்களின் ஆட்சியின் கீழேயே இருந்தது. கி.பி 6 இன் பின்னான ஆரிய மெளரியர்களுடைய ஆட்சிக்காலத்திலேயே ஈழத்தில் நாகர்களின் ஆட்சி நலிவடைந்து அது வடகிழக்கு,வடமேற்கு பிராந்தியங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது.
இத்தகைய சூழலில் ஈழத்தின் வடபகுதியில் பெரிய புளியங்குளம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 1 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நான்கு தமிழிக் கல்வெட்டுக்கள் வடபகுதியில் நாகச் சிற்றரசர்களது ஆட்சியிருந்ததாகவும் அதேவேளை அக்காலப் பகுதிக்குரிய இன்னொரு தமிழிக் கல்வெட்டு “நாகநகர்” என்ற பெயரில் ஒரு தலைநகர் இருந்ததாகக் கூறுகிறது. கி.பி. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க நாட்டவரான தொலமியின் குறிப்பில் “நாகதீபோய்” என்ற இடப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலியார் இராசநாயகம் (1926) இவ்விடப்பெயரை மகாவம்சத்தில் வரும் மேற்கூறப்பட்ட நாகதீபம் என்ற பெயருடன் தொடர்புபடுத்திக் காட்டுகிறார். இக்கூற்றுக்கு மேலும் சான்றாக 1936ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் கிடைத்த கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொற்சாசனத்தில் குறிப்பிடப்படும்"நாகதீபம்” என்ற பெயரைப் பிற்கால ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சற்றுப் பிற்பட்ட காலத்தில் ஈழத்தில் எழுந்த சூளவம்சம் என்ற பாளி நூலில் நாகதீபம்) என்ற பெயர் உத்தரதேசம்) என்ற பெயராலும் அழைக்கப்பட்டதற்குச் சில சான்றுகள் காணப்படுகின்றன.இதற்கு கி.பி 7ஆம்நூற்றாண்டில் அனுராதபுரத்தில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த சிங்கள மன்னனுக்கு எதிராக உத்திரதேசத்தை சேர்ந்த சிறிநாக தலைமையில் படையெடுப்பொன்று நிகழ்ந்ததாக இந்நூல் கூறியுள்ளதை ஆதாரமாகக் காட்டலாம், ஆனால் இதே பாளி நூலில் கி.பி.10ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மன்னர் ஒருவர் நாகதீபத்தின் மீது படையெடுத்தான் என்ற செய்தியும் காணப்படுகிறது (Culavamsa 53:12-6). இவற்றை நோக்கும்போது அநுராதபுரத்திற்கு வடக்குப் பக்கமாக நாகதீபம் இருந்ததால் அது உத்தரதேசம் (பாளிமொழியில் “உதர” என்ற சொல்லுக்கு வடக்கு என்ற கருத்துண்டு) என அழைக்கப்பட்டது எனலாம்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்களக் கல்வெட்டில் வடபகுதியை “உதகர” அதாவது ‘வடகரை” என அழைக்கப்பட்டதை இவ்விடத்தில் குறிப்பிடலாம். இக்காலத்தில் நாகதீபத்தின் மீது படையெடுத்த தென்னிந்திய மன்னன் முதலாம் பராந்தக சோழனாக இருக்கலாம் என்பதை அவனது 37வது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் வரும் "ஈழமும், மதுரையும் கொண்ட கோப்பரகேசரிவர்மன்” என்ற சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது (South Indian Inscriptions. 11:35). இந்த ஈழத்து வெற்றி என்பது நாகநாட்டு வெற்றியைக் குறித்திருக்கலாம் என்பதற்கு இப்படையெடுப்பைத் தொடர்ந்து முதலாம் பராந்தக சோழன் வெளியிட்ட நாணயங்களில் வரும் “உரக” என்ற பெயர் சான்றாக உள்ளது (Pushparatnam 2002). உரக என்ற வடமொழிச் சொல் நாகபாம்பை,நாகரின மக்களை,அம்மக்கள் வாழ்ந்த நாட்டைக் குறிப்பது இவ்விடத்தில் நோக்கத்தக்கது. வடமொழியில்"நாகதீப" அல்லது"உரக” எனஅழைக்கப்பட்ட இத்தமிழர் பிராந்தியம் தமிழில் “நாகநாடு” என அழைக்கப்பட்டதற்கு சமகாலத்தில் பல சான்றுகள் காணப்படுகின்றன.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் நாகநாடு பற்றிப் பேசுகின்றன. அவ்விலக்கியங்களில் நாகநாட்டோடு தொடர்புபடுத்திக் கூறப்படும் வரலாற்றுச் சம்பவங்கள் இதற்கு சான்றாக உள்ளன. கி.பி.8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் செப்பேடு ஒன்று பல்லவ இளவரசன் ஒருவன் “நாகநாடு” சென்று அங்குள்ள இளவரசியை மணந்ததாகக் கூறுகிறது.
தமிழ்நாட்டில் குடுமியாமலை என்ற இடத்தில் கண்டுபிடித்த கி.பி.1262 ஆம் ஆண்டுக்குரிய பாண்டியக் கல்வெட்டு ஒன்று ஈழத்தைச் சேர்ந்த சிங்கள அமைச்சன் ஒருவன் பாண்டிய மன்னனிடம் சென்று உதவி கேட்டதன் பேரில் வீரபாண்டியன் என்ற மன்னன் தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும், அப்படை சிங்கள மன்னனுக்குச் சார்பாக நாகநாட்டின் மீது படையெடுத்து அங்கு ஆட்சி செய்துகொண்டிருந்த சாகவ மன்னனைக் கொன்று அவன் மகனை ஆட்சியில் அமர்த்தியது கூறுகின்றது.இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சமகால ஈழத்துப் பாளி, சிங்கள இலக்கியங்கள் இச்சாகவனது ஆதிக்கம் நிலைத்திருந்த இடமாக வடஇலங்கையையும், கிழக்கிலங்கையிலும் உள்ள பல இடங்களைக் குறிப்பிடுகின்றன (Culavamsa Ch. 82-83). மேற்கூறப்பட்ட சான்றுகளில் இருந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட அரசின் ஆதிக்கம் வடபகுதியில் பரவ முன்னர் இப்பிராந்தியம் வடமொழியில் நாகதீப எனவும். தமிழில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளமை தெரிகிறது.
இது பிற்காலத்திலும் தொடர்ந்ததற்குப் போத்துக்கேயரது ஆவணங்களில் வரும் சில குறிப்புகள் சான்றாக உள்ளன. ஆனால் பண்டைய கால வரலாற்றில் ஓர் இடத்தின் பெயர் காலப்போக்கில் அந்த நாட்டின் பெயராக மாறியதற்கும், ஓர் நாட்டின் பெயர் பிற்காலத்தில் ஒர் இடத்தின் பெயராக அழைக்கப்பட்டதற்கும் பல சான்றுகள் உண்டு. ஆயினும் நாகதீப அல்லது நாகநாடு என்ற பெயர் குறித்து நிற்கும் பிராந்தியம் பல சந்தர்ப்பங்களில் தற்கால வடகிழக்கு,வடமேற்கு சில வட்டாரங்களையும் (உதாரணமாக பதவியா, திருகோணமலை உள்ளடக்கியிருந்ததற்குப் பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்களிலும்,சோழ,பாண்டிய,விசு(ஜ)யநகரக் கல்வெட்டுக்களிலும் சான்றுகள் காணப்படுகின்றன.
பாளி இலக்கியங்கள் ஆதிகால இலங்கையில் வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் எனக் கூறுகின்றன. ஆனால் சிங்கள மக்களின் மூதாதையினர் கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் வடஇந்தியாவிலிருந்து வந்து குடியேறிய ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்துடைய பேராசிரியர் பரணவிதாரன இயக்கர், நாகர்களை மனிதப்பிறவிகளற்ற அமானுசர்கள் எனக் கூறினார். ஆனால் இதுவரை கிடைத்த சான்றுகளிலிருந்து வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததற்கான பாளி இலக்கியங்கள் கூறும் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனிதன் வாழ்ந்ததற்கான சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்ட மக்களைப் பழைய கற்காலப் (Plaeolothic), புதிய கற்காலப் (Neolithic) பண்பாட்டுக்கு உரியவர்கள் எனத் தொல்லியலாளர் குறிப்பிடுகின்றனர்.
கி.மு. 28000 ஆண்டிலிருந்து இடைக் கற்காலப் பண்பாட்டிற்குரிய ஆதி ஒசு(ஸ்)ரலோயிட் மக்கள் மலைநாடு தொட்டுத் தாழ்நிலம் வரை வாழ்ந்ததற்கான சான்றுகளே பரவலாகக் கிடைத்துள்ளன. அவற்றுள் வடபகுதியில் மாதோட்டம், பூநகரி, மாங்குளம் போன்ற இடங்களில் இப்பண்பாட்டிற்குரிய கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Ragupathu 1987, புசுபரட்ணம் 1993). இப்பண்பாட்டிற்குரிய மக்களும், தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு தேரி மணற்குன்றுப் பகுதியில் வாழ்ந்த மக்களும் மானிடவியல், மொழியியல், தொல்லியல் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஒரே இன மக்கள் என்ற கருத்துப் பல நிலையிலும் இன்று வலுப்பெற்று வருகிறது.
தமிழ்மொழி பயன்பாட்டிலிருந்ததை இப்பண்பாட்டு மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்களும், தமிழ்ப் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் அப்பண்பாட்டு வழிவந்த மக்களும்"நாக” என்ற பெயரைப் பெற்றுள்ளனர் என்பதைப் பூநகரியிற் கிடைத்த மட்பாண்டச் சாசனம் உறுதிப்படுத்துகிறது.
ஈழத்தில் இப்பண்பாட்டுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலேயே பெரும்பாலும் தமிழிக் கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கி.மு.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 80-க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் “நாக”என்ற பெயர் குலம், அரசன், அரசவம்சம், தனிநபர் சார்ந்த பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது (Paramavithana1970, புஷ்பரட்ணம் 2001அ). நாக” என்ற பெயர் ஆதிகாலம் தொட்டு வழக்கிலிருந்து வருவதற்கு அறிஞர்கள் பல்வேறு காரணங்களைக் கொடுத்து வருகின்றனர். அவற்றுள் மத வழிபாட்டில் நாகபாம்பை குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்ததே காரணம் என்ற விளக்கமே முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்படுகிறது. இப்பெயர் இலங்கையில் மட்டுமன்றி ஆசியாவின் பல வட்டாரங்களிலும் பயன்பாட்டிலிருந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள நாகபட்டினம் என்ற இடம் நாகர்களின் தலைநகர் என்ற ஐதிகமும் உண்டு சங்ககாலத்தில் குறுநிலத் தலைவர்களுடனும், புலவர்களுடனும், நாடு, பட்டினம், ஊர் ஆகிய இடப்பெயர்களுடனும் இப்பெயர் இணைந்து வருவதனைக் காணலாம் (Pillai 1975: 37, Mahadevan 1966).
ஈழத்தில் இப்பெயர் இடைக்கற்காலப் பண்பாட்டிற்குரிய தமிழ் மக்களைக் குறித்ததாகக் கூறுகின்றனர். தொடக்க காலத்தில் நாகர்களை மனிதர்கள் அல்ல என வாதிட்ட பரணவிதானாகூடப் பிற்காலத்தில் அக்கருத்தை மாற்றி அவர்கள் தமிழர்களை குறிக்க என திராவிடர் என மறைமுகமாக ஒத்துக்கொண்டாடார் (Ray 1960).
ஈழத்தில் பெளத்தத்தை தழுவிய நாகர்களான தமிழர்களிடமிருந்து இப்பெயர் படிப்படியாக மறைந்து போக தமிழரிடம் தற்காலத்திலும் அப்பெயர் ஆட்பெயராகவும் (நாகன், நாகி, நாகராசா, நாகநாதன், நாகமுத்து, நாகவண்ணன், நாகம்மா, நாகம்மாள்), இடப்பெயராகவும் நாகர்கோயில், நாகபடுவான், நாகமுனை, நாகதேவன்துறை, நாகதாழ்வு இன்றும் நிலைத்திருப்பதைக் காணமுடிகிறது
இச்சான்றுகள் இலங்கைத் தமிழரிடையே நாக மரபின் எச்சங்கள் இன்னும் மறையவில்லை என்ற உண்மையைக் காட்டுகின்றன. நாக மன்னர்கள் பண்டைய ஈழத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்களில் கணிசமானோர் “நாக” என்ற பெயரைப் பின்னொட்டுச் சொல்லாகக் கொண்டிருந்ததற்கு கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் பல சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு துல்லநாக (கி.மு. 119) கல்லத்நாக (கி.மு. 109-103), சோறநாக (கி.பி. 63-51), மகாநாக (கி.பி.7-19), இளநாக (கி.பி.33-43), மல்லகநாக (கி.பி.136-143), குச(ஜ)நாக (கி.பி.186-187), குஞ்சநாக (187-189), பூரீநாக (கி.பி.189-209), அபயநாக (கி.பி. 231-240), பூரீநாக (கி.பி. 240 - 242) போன்ற மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம்.
இதில் “சிறிநாக” என்ற பெயர் வரலாற்றில் மாறி மாறி வருவதை நோக்கும்போது “நாக” என்பது வழித்தோன்றல் (வம்சப்) பெயராகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ் அரசு பற்றி ஆராய்ந்த முதலியார் இராசநாயகம் (1926) சுவாமி ஞானப்பிரகாசர் (1928) போன்ற அறிஞர்கள் இலக்கியங்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு பண்டுதொட்டு வடபகுதியில் கதிரைமலையைத் தலைநகராகக்கொண்ட நாக அரசர்களின் ஆட்சி இருந்ததென்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் பிற்காலத்தில் இவ்வரசு பற்றி ஆராய்ந்த தமிழ், சிங்கள அறிஞர்கள் இலங்கையில் முதலாவது தமிழ் அரசு பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடஇலங்கையில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டே தோற்றம் பெற்றதென்ற கருத்தை முன்வைத்தனர் (Paranavithana 1961; 174-24, இந்திரபாலா 1972).
அவ்வாறு கூறப்பட்டதற்கு இக்காலப்பகுதிக்கு முன்னர் செறிவான தமிழர் குடியிருப்புகள் இருக்கவில்லை என்ற ஆணித்தரமான நம்பிக்கையும் ஒரு காரணமாகும்.
ஆனால்இக்கருத்துஅண்மைக்காலத்தொல்லியற் கண்டுபிடிப்புகளால் பல நிலையிலும் மறுதலிக்கப்படவேண்டும் என்பதைப் பேராசிரியர் இந்திரபாலாவே 1999-இல் வெளியிட்ட தனது நூல் ஒன்றில் சூசகமாகத் தெரிவிக்கின்றார்.
ஆதிகால இலங்கையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இனக்குழுக்கள் வாழ்ந்தன என்பதும், அவர்களிடையே தமிழர்கள் செல்வாக்குப் பெற்றனர் என்பதும், தேசத்தின் பல பகுதிகளிலும் குடியிருந்தனர் என்பதும், ஆங்காங்கே அதிகாரம் செலுத்தினர் என்பதும் இப்போது இவரது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. பழைய சிந்தனைகள் வலுவற்றுப் போகின்றன. வரலாற்றாராய்ச்சியிலும் புதிய பார்வையும், புதிய சிந்தனையும், புதிய உத்தியும் அழுத்தம் பெறப் போகின்றன.
வரலாற்றுக்கால ஈழத்தில் அரசு உருவாக்கம் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து அநுராதபுரம் பலம் மிக்க அரசியல் மையமாக விளங்கியபோது அதற்கு தெற்கிலும், வடக்கிலும் இன குழு நிலையில் இருந்து அரசு தோன்றுவதற்கு இடைக்கட்டமாக குருசில்கள். நிலக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் என்போரது ஆட்சி நடைபெற்றதை சமகாலப் பாளி இலக்கியங்கள், பிராமிக் கல்வெட்டுக்கள், நாணயங்கள் என்பன உறுதிப்படுத்துகின்றன.
இதில் சங்க காலத்திற்குச் சமமான காலத்தில் இலங்கைத் தமிழரிடையே அரச மரபு தோன்றியதை கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டிற்கு வந்த தமிழிக் கல்வெட்டுக்களில் வரும் வேள், ஆள், பெருமகன் (பருமகன், பருமகள், பருமக) போன்ற பட்டப் பெயர்கள் உறுதி செய்கின்றன: வடமொழியில் “ராஜா” என்ற பட்டம் என்ன கருத்தைக் கொண்டிருந்ததோ அதே கருத்தை தமிழ்மொழிக்குரிய “வேள்” என்ற பட்டமும் கொண்டிருந்ததாக றோமிலாதபார் குறிப்பிடுகின்றார் (1995). ஆனால் பண்டைய ஈழத்தின் அரசியல் வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்து பின்னர் அநுராதபுர மன்னனாக வந்த சிங்கள மன்னர்களை இந்நாட்டுக்குரிய சுதேசிகள் எனக் கூறும் அதேவேளை சேனன், குத்திகன், எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களை வர்த்தகர், படையெடுப்பாளர், சோழர், பாண்டியர், அக்கரையில் இருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிட்டு அவர்களை இந்நாட்டுக்குச் சொந்தமற்ற அந்நியர்களாகவே கூறுகின்றன. அதேவேளை நம்பகரமான தொல்லியற் சின்னங்களை ஆதாரம் காட்டி சிங்கள மக்களைப் போல் தமிழருக்கும் இந்நாட்டில் தொன்மையான வரலாறு உண்டு என வாதிடும் ஆய்வாளர்கள்கூட அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த மேற்கூறப்பட்ட தமிழ் மன்னர்களைத் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் என அழுத்தி கூறுவதே பொருத்தமெனவும் வாதிடுகின்றனர். இத்தனைக்கும் புராதன காலம் தொட்டு ஈழத்துடன் தமிழகத்திற்கு இருந்த வர்த்தக, பண்பாட்டு உறவுகள் பற்றிக் கூறும் தமிழக வரலாற்று மூலங்களில் இக்காலத்தில் நிலவிய அரசியல் உறவுகள் பற்றியோ, படையெடுப்புகள் பற்றியோ எந்தச் சான்றுகளும் காணப்படவில்லை.
காதலையும், வீரத்தையும் புகழ்ந்து பேசும் சங்க இலக்கியம், சேரன் செங்குட்டுவன் இமயம்வரை படையெடுத்துக் சென்று கல் கொண்டுவந்து கண்ணகிக்கு சிலைவடித்ததாகப் பெருமை பேசும் சங்க இலக்கியம் கற்பனைப்படுத்தியாவது ஏன் தமிழகத்தின் எல்லைக்கோட்டில் அமைந்திருந்த இலங்கையுடனான அரசியல் உறவு பற்றிக் கூறமுற்படவில்லை என்பது புரியவில்லை.
இத்தனைக்கும் தமிழகத்தில் அழகர்மலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமிக் கல்வெட்டு ஒன்று (வேங்கடசாமி 1983:53) ஈழத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனான“ஈழத்துவாவிராயன்” தமிழகம் வந்து அங்குள்ள சமணத்துறவிக்கு தானம் அளித்ததாகக் கூறுகிறது. இந்த வேறுபட்ட ஆதாரங்களை நோக்கும்போது அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ்மன்னர்களின் பூர்வீக வரலாற்றிற்குரிய சான்றாதாரங்களை தமிழகத்தில் தேடுவதைவிட ஈழத்தில் தேடுவதே பொருத்தமாகத் தெரிகிறது. கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த சேனன், குத்திகன், எல்லாளன், புலகதன், பாகியன், பழையமாறன், பிழையமாறன், தாதிகன், நீலியன், வடுகன், திசயன் போன்ற தமிழ் மன்னர்களது பெயர்கள் பாளி இலக்கியத்தில் அதன் மொழிக்கு ஏற்ப சேன, குத்திக, எலாரா, புலகத, பாகிய, பழையமாற பிழையமாற, தாதிக, நீலிய, வடுக, திஸ என மாறுதல் அடைந்து காணப்படுகின்றன. ஆயினும் திசயன் தவிர இதையொத்த வேறு பெயர்கள் சமகாலத்தில் தமிழகத்தில் பயன்பாட்டிலிருந்ததற்கு சான்றுகள் காணப்படவில்லை. ஆனால் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் மேற்கூறப்பட்ட பெயர்களில் குறுநிலத் தலைவர்கள், வணிகர், அரச அதிகாரிகள், கப்பல் தலைவர்கள், கப்பலோட்டிகள் என சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ்ந்ததற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம் 2001). இப்பின்னணியில் வைத்து பார்க்கும்போது அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களை இந்நாட்டிற் குரியவர்கள் எனக் கூறுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
சமகாலத்தில் தமிழ்ச் சிற்றரசுகள் வடபகுதியில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் ஆட்சிபுரிந்ததை மேற்கூறப்பட்ட சான்றாதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இங்கே தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்த சிங்கள மன்னர்களே காலப்போக்கில் அநுராதபுரத்தை வெற்றிகொண்டு ஆட்சி செய்தனர் எனப் பாளி இலக்கியங்கள் கூறுவதை உண்மையான வரலாறு என ஏற்றுக்கொண்டால், ஏன் தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் சிற்றரசர்களாக ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களே காலப்போக்கில் அநுராதபுரத்தை வெற்றிகொண்டு ஆட்சிபுரிந்த ஈழத்து மன்னர்கள் எனக் கொள்ளமுடியாது? இக்கூற்று கற்பனையாகாது என்பதற்கு அண்மையில் தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்திலும், வடபகுதி கந்தரோடை, உடுத்துறை, பூநகரி போன்ற இடங்களிலும் கிடைத்த நாணயங்கள் உறுதியான சான்றாக விளங்குகின்றன. தென்னிலங்கையில் எழுத்துப் பொறித்த 40-க்கு மேற்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. அவையனைத்தும் இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை (Bopearachchi 1999). அவற்றுள் சில நாணயங்களில் உதிரன், மகாசாத்தன், என்பவை தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் அரச மரபு இருந்ததைக் காட்டும் நாணயங்கள்.
கபதிகய(ஜ)பன், தய(ஜ)பியன், சடநாகராசன் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இப்பெயர்களின் இறுதி தமிழில் ஆண்மகனைக் குறிக்கும் “அன்” என்ற விகுதியில் முடிவதால் இவை தமிழரால் வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இவ்வகை நாணயங்களை வடிவமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சுடுமண் அச்சுக்கள் பல தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு இங்கிருந்த தமிழரால் இவை வெளியிடப்பட்டவை என்பது உறுதியாகிறது (Pushparatnam2000).
பண்டையகால நாணயங்கள் பொதுவாக அரச வம்சத்தால் அல்லது சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்களால் மட்டும் வெளியிடப்பட்டிருந்தன. இங்கே நாணயத்தில் வரும் பெயர்கள் தமிழருக்கு உரியதாக இருப்பதால் அவை ஈழத்தில் அரசமைத்திருந்த தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்டவை என்பதைக் காட்டுகின்றன. இதை நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள திசு(ஸ)புரசடநாகராசன்” என்ற பெயர் பொறித்த நாணயம். “சடநாகராசன்” என்ற பெயர் (சடநாகராசன்) மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது (புஷ்பரட்ணம் 2001) (படம் - 2). இந்நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்குரிய பெருங்கற்காலப் பண்பாட்டுச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன், இங்கு கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்களில்தான் நாட்டின் ஏனைய வட்டாரங்களைவிட அதிக அளவில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களும், தமிழ்ப் பெயர்களும் காணப்படுகின்றன. இவ்வாதாரங்கள் சங்ககாலத் தமிழகத்திற்குச் சமமான காலத்தில் தென்னிலங்கையிலும் தமிழ் அரச மரபு தோன்றியிருந்தன என்பதைக் காட்டுகின்றன.
இந்த இடத்தில் மகாவம்சம் என்ற பாளி இலக்கியம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் எல்லாளனுக்கும் துட்டகாமினிக்கும் நடந்த போராட்டம் பற்றிக் கூறும்போது துட்டகாமினி எல்லாளன் என்ற தமிழ் மன்னனை அநுராதபுரத்தில் வெற்றிகொள்வதற்கு முன்னர் அவனுக்குச் சார்பாக தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த 32 தமிழ் மன்னர்களை வெற்றிகொள்ள நேரிட்டதாகக் கூறும் செய்தியை நினைவுபடுத்துவதும் பொருத்தமாகும்.
இவ்வாதாரங்களை வைத்து நோக்கும்போது சிங்கள மன்னர்களைப் போல் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களில் பலரும் தொடக்க காலத்தில் தென்னிலங்கையிலோ அல்லது வடஇலங்கையிலோ சிற்றரசர்களாக இருந்தே பின்னர் அநுராதபுர மன்னர்களாக ஆட்சிக்கு வந்தனர் எனக் கூறலாம் (புஷ்பரட்ணம் 2000). அவ்வாறு ஆட்சிக்கு வந்தோர் தாம் வெளியிட்ட நாணயங்களில் தம் இனத்தை அல்லது மதத்தை அடையாளம் காட்டும் தனித்துவமான சின்னத்தையும், நாட்டைக் குறிக்கும் பொதுவான சின்னத்தையும் பயன்படுத்தினர் எனக் கூறலாம். அதில் சிங்கள மன்னர்கள் சிங்கத்தையும், தமிழர்கள் காளையையும் பயன்படுத்தியதற்குப் பொருத்தமான சான்றுகள் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம் 2001) தமிழ் மன்னரது நாணயம் சிங்கள மன்னரது நானயம் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் சிங்கள மன்னர்களது நாணயங்களில் காணப்படும் ஒற்றுமையும், வேற்றுமையும்.
வடஇலங்கையும் நாகச் சிற்றரசர்களும் வடஇலங்கையை நாகதீபம் எனக் கூறும் மகாவம்சம் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் புத்தர் இலங்கை வந்தபோது நாகதீப மன்னர்களிடையே ஏற்பட்ட சிம்மாசனப் போரைத் தீர்த்து வைத்ததாகக் கூறுகிறது (8:54). இதில் புத்தர் வருகை பற்றிய செய்தி ஓர் ஐதிகமாக இருப்பினும் இந்நூல் எழுந்த காலமாகக் கருதப்படும் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வடஇலங்கை நாக மன்னர்களுடன் தொடர்புடைய பிராந்தியமாக இருந்ததை நினைவுபடுத்துவதாக எடுத்துக்கொள்ளலாம். இதை உறுதிப்படுத்தும் வகையில் வடஇலங்கையில் கிடைத்த கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நான்கு கல்வெட்டுக்கள் நாகச் சிற்றரசுகளது ஆட்சிபற்றிக் கூறுகின்றன (Paramavithana 1970 nos 38-41). இருப்பினும் நாக மன்னர்களுடைய ஆட்சி பண்டைய காலத்தில் வடஇலங்கையில் மட்டுமே இருந்ததெனக் கூறமுடியாது. மாறாக கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களையும், நாணயங்களையும் எடுத்து ஆராய்ந்தால் நாட்டின் பல வட்டாரங்களில் இச்சிற்றரசுகள் ஆட்சிபுரிந்ததைக் காணமுடிகிறது. இதில் தமிழ்ச் சிற்றரசர்களும் அடங்குவர். தென்னாசியாவின் பல வட்டாரங்களில் “நாக” என்ற பெயர் வடமொழியில் நாஹ என்றே எழுதப்பட்டது.
ஆனால் சமகாலத்தில் இலங்கையிலும், தமிழகத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இது தமிழில் “நாக” என்றும் ‘ணக” என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது (Mahadevan 1066,புஷ்பரட்ணம் 2). இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் தொல்லியல் ஆய்வின்போது உடுத்துறையில் கிடைத்த நாணயத்தில் வரும் பெயர் அமைந்துள்ளது. உடுத்துறை ஒன்றாகும். இக்கிராம மக்கள் 1994ஆம் ஆண்டு கிணறொன்றை வெட்டும்போது எதிர்பாராத விதமாக கிணற்றின் ஆழமான மையப் பகுதியில் மிகப் பழமையான நந்தி விக்கிரகத்துடன், புராதன குடியிருப்புகள் இருந்ததை உறுதிப்படுத்தும் மட்பாண்டங்கள், சங்கு சிற்பி, கூரை ஓடுகள் மற்றும் செங்கற்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்தனர். அவற்றுள்“நாக” என்ற பெயர் குறித்து நிற்கும் நாணயம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
மிகச் சிறிய இச்செப்பு நாணயம் 0.7 சென்டிமீட்டர் விட்டமும், 15 கிராம் நிறையும் உடையது. இதன் முன்புறத்தில் விளிம்பை ஒட்டி சுவச்(ஷ்)திகா சின்னமும், இதற்கு கீழே வலப்புறமாக குத்துவிளக்கும், இடப்புறமாக பிறைச்சந்திரனும், சூரியனும் இந்தஅடையாளங்களும்(இச்சின்னங்களுக்கு) மத்தியில் பக்கவாட்டாக இரு மீன் சின்னமும் காணப்படுகின்றன. இவ்விரு மீன் சின்னங்களுக்கு கீழே நாணயத்தின் விளிம்பை ஒட்டியவாறு நான்கு பிராமி எழுத்துக்கள் சிறிதும், பெரிதுமாக பொறிக்கப்பட்டுள்ளன நாகபூமியா? நாகவம்சமா? உடுத்துறையில் கிடைத்த நாணயம் இவற்றின் எழுத்தமைதி கொண்டு இந்நாணயம் கி.பி.1-2ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டிருக்கலாம் எனக் கூறமுடியும். இதில் “நாக” என எழுதப்பட்டுள்ள முதலிரு பிராமி எழுத்தும் தெளிவாக உள்ளன. ஏனைய இரு எழுத்துக்களும் சற்று தேய்வடைந்து இருப்பதால் அதன் வாசகத்தை நிச்சயப்படுத்திக் கூறமுடியவில்லை. அவற்றை இரு எழுத்தாக எடுத்தால் “பூமி” எனவும், ஓர் எழுத்தாக எடுத்தால் “ஹ” எனவும் வாசித்து நாணயத்தில் உள்ள வாசகத்தை நாகபூமி அல்லது நாகஹ' அதாவது நாகனுடைய நாணயம் எனப் பொருள் கொள்ளமுடியும். ஆனால் தமிழகத் தொல்லியற் பேராசிரியர் சுப்பராயலுவும், இந்திய தொல்லியல் அளவீட்டுத் திணைக்கள முதுநிலைக் கல்வெட்டாய்வாளர் இராசவேலுவும் அதிலுள்ள மூன்றாவது எழுத்தை “வ” என எடுப்பதே பொருத்தம் எனக் கூறியுள்ளனர். அப்படியானால் நாணயத்தில் உள்ள வாசகத்தை நாகவம்சம்) எனப் பொருள் கொள்ளமுடியும். நாணயத்தின் பின்புறத்தில் வலப்புறமாக விளிம்பை ஒட்டி சுவச்(ஷ்)திகா அடையாளமு( சின்னமும்,) மத்தியில் கிடையான அமைப்பில் ஒரு மீன் சின்னமும், இச்சின்னங்களுக்கு கீழே பிராமி எழுத்தில் பொலம் என்ற தமிழ்ச் சொல்லும் காணப்படுகின்றன. இதில் பொறிக்கப்பட்டுள்ள “பொலம்” என்ற சொல்லுக்கு பொன், பொன்னிறமான காசு, அழகு சிறந்தது எனப் பல கருத்துகள் உண்டு. இச்சொல் சங்ககாலம் தொட்டு நாணயத்தோடு தொடர்புடைய பெயராகக் பயன்படுத்தப்பட்டதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன.
அதற்கு ஐங்குறுநூற்றில் (310 : 1) பொலம்பசு பாண்டிற்காசு என்றும், குறுந்தொகையில் 66:41,48:3). பொலங்கல ஒரு காசு எனவும், பொலஞ்செய் கிண்கிணி காசு எனவும், அகநானூற்றில் (293 7, 315 12) பொலஞ்செய்காசு எனவும் வரும் குறிப்புகளைச் சான்றாகச் சுட்டிக்காட்டலாம். ஆயினும் இச்சொல் சமகாலத்தில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் அல்லது சங்ககால மன்னர்கள் வெளியிட்ட நாணங்களில் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இச்சொல் உயர்ந்த என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளதற்கு சான்றுகள் காணப்படுகின்றன (Parana-vithana 1970: no. 216). “பொலம்” என எழுதப்படவேண்டிய இச்சொல் அக் கல்வெட்டுக்களில் அதன் பிராகிருத மொழிக்கு ஏற்ப “பொல” என்றே எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கிலிருந்த பல தமிழ்ப் பெயர்கள் சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் அதன் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப பிராகிருத மயப்படுத்தப்பட்டிருந்தாலும் அப்பெயர்கள் நாணயங்களில் தமிழில் எழுதப்பட்டதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. அதை மேலும் உறுதிப்படுத்துவதாக மேற்குறித்த உடுத்துறை நாணயத்தில் வரும் “பொலம்” என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம். நாணயத்தின் முன்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள“நாக” என்ற பெயர் இவ்விடத்தில் சிறப்பாக ஆராய்ந்து பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும். கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தென்னாசியாவில் புழக்கத்தில் இருந்த பிராமிக் கல்வெட்டுக்களில் இப்பெயர் பிராகிருத மொழியில் “நாஹ” என்றே எழுதப்பட்டுள்ளன (Mahavamsa 1950, Culavamsa 1953, Paranavithana 1970). ஆனால் விதிவிலக்காக தமிழகத்தில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்களிலும், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சில பிராமிக் கல்வெட்டுக்களிலும் இப்பெயர் தமிழில் “நாக’ என்றும் “ண கா’ என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம் (Mahadevan 1961. no. 33). அதேபோல் தென்னிலங்கையில் கிடைத்த சில நாணயங்களிலும் இப்பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம் (Bopearachchi 1999; no. 19, 25). இந்த வேறுபாடு இப்பெயருக்கு உரியவர்கள் தமிழர்கள் அல்லது இப்பெயரை எழுதியவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தவர்கள் எனக் கூறலாம்.
இவற்றின் அடிப்படையில் உடுத்துறையில் கிடைத்த நாணயத்தை தமிழ் மன்னன் அல்லது தமிழ்ச் சிற்றரசனே வெளியிட்டான் என எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்நாணயத்தை தமிழ் மன்னன் வெளியிட்டதாகக் கொள்ளும்போது அவன் எந்த நாட்டைச் சேர்ந்த தமிழ் மன்னன் என்பது முக்கிய கேள்வியாக எழுகின்றது. தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சங்ககாலத் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘நாக’ என்ற பெயர் கொண்ட மன்னன் அல்லது வழித்தோன்றல்(வம்சம் )நாணயங்களை வெளியிட்டதற்கோ அல்லது நாணயங்களை வெளியிடும் அளவுக்கு அப் பெயர் கொண்ட மன்னர்களது ஆட்சி அங்கு இருந்ததற்கோ இதுவரை எந்தச் சான்றுகளும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் தமது அரச அடையாளமான(இலட்சனையான ) மீனைத் தமது நாணயங்களில் பொறித்ததற்கு தமிழகத்திலும், இலங்கையிலும் (கந்தரோடை, பூநகரி, அநுராதபுரம், அக்குறுகொட) கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் சான்றாக உள்ளன. ஆயினும் அந்த நாணயங்கள் சதுரவடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நாணயத்தின் பின்புறத்தில் மட்டும் ஒரேயொரு மீன் சின்னம் அதுவும் கோட்டுருவமாகவே பொறிக்கப்பட்டுள்ளது (Krishnamurthy 1997).
ஆனால் உடுத்துறையில் கிடைத்த நாணயம் வட்டவடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் அதன் இருபுறத்திலும் மூன்று மீன்கள் கோட்டுருவத்திற்கு பதிலாக முழு உருவமாக வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அதேவேளை உடுத்துறையில் கிடைத்த நாணயத்தில் காணப்படும் சின்னங்களை ஒத்த வடிவமைப்பில் தமிழகத்தில் அதிலும் குறிப்பாகச் சங்ககாலத்தில் நாணயங்கள் வெளியிடப்பட்டதற்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இலங்கையில் இதே வடிவமைப்பில் பல நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் என்பதற்கு அவற்றை வடிவமைப்பதற்குப் பயன்படுத்திய சுடுமண் அச்சுக்களே சான்றாகக் கிடைத்துள்ளன (Bopearachchi 1999).
இவை உடுத்துறை நாணயம் இன்னொரு நாட்டிலிருந்து கொண்டு வரப்படாது இலங்கையிலேயே வடிவமைக்கப்பட்டதென்பதற்கு சிறந்த சான்றாக உள்ளது. இவற்றின் அடிப்படையில் இந்நாணயத்தை இலங்கையில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனே வெளியிட்டான் எனக் கூறமுடியும். மேற்கூறப்பட்ட சான்றுகள் நாட்டின் ஏனைய வட்டாரங்களைப் போல் வடஇலங்கையிலும் நாகச் சிற்றரசுகள் பண்டைய காலத்தில் இருந்ததைக் காட்டுகின்றன. தென்னிலங்கைச் சிற்றரசுகளுக்கும் இடையே இருந்த அரசியல் தொடர்புகளை விரிவாகக் கூறும் பாளி நூல்கள் அநுராதபுரத்திற்கு வடக்கே மிகக் கிட்டிய தொலைவில் இருந்த நாகநாட்டு சிற்றரசுகளுடனான அரசியல் உறவு பற்றிக் குறைந்த அளவுதானும் கூறவில்லை.
பிற்காலத்தில் ஏற்பட்ட ஒருசில அரசியல் உறவுகள் பற்றி இந்நூல்கள் கூறியிருந்தாலும் அவை நாகநாட்டிலிருந்து அநுராதபுர அரசிற்கு எதிராக ஏற்பட்ட படையெடுப்புகள், கிளர்ச்சிகள் பற்றியதாகவே உள்ளன. இச்சான்றுகள் அநுராதபுரத்தின் அரசியல் வட்டத்திற்குள் உட்படாத வகையில் நாகநாட்டில் தமிழ் அரசமரபு தோன்றி வளர்ந்திருக்கலாம் என எண்ணத் தூண்டுகிறது.
நாகநாட்டில் தமிழ் இராசதானி பண்டைய காலத்தில் ஏனைய சிற்றரசர்கள் அல்லது குறுநிலத் தலைவர்களது ஆட்சியைப் போல் தமிழர்களின் ஆட்சியும் நாட்டின் பல வட்டாரங்களில் இருந்தமை மேற்கூறப்பட்ட ஆதாரங்களில் இருந்து தெரிகிறது. ஆயினும் இவையனைத்தும் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததாகத் தெரியவில்லை. கால ஓட்டத்தில் இவ்வாட்சியாளரிடம் ஏற்பட்ட ஆள்புல வேட்கையால் வலிமை மிக்க அரசுகளால் வலிமை குன்றிய அரசுகள் பல வெற்றி கொள்ளப்பட்டன. வேறுசில தம் பாதுகாப்புக் கருதி தமது அரசியல் மையங்களை இடம் மாறிக்கொண்டன. இதில் தமிழர்கள் தமது ஆட்சிக்குரிய மையமாக நாகநாட்டைத் தெரிவுசெய்திருப்பார்கள் என்பதற்குச் சாதகமான பல காரணங்களைக் காட்டலாம்.
அவற்றுள் பக்தி இயக்கத்திற்கு முக்கிய பங்குண்டு. தமிழகத்தில் ஏற்பட்ட இப்பக்தி இயக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியபோது அது இங்கு வாழ்ந்த தமிழ், சிங்கள மக்களிடையே இன முரண்பாட்டையும், இந்து, பெளத்தம் என்ற சமய வேறுபாட்டையும் ஏற்படுத்தக் காரணமாகியது. பேராசிரியர் கே.எம்.டி. சில்வா பக்தி இயக்கத்தின் செல்வாக்கே இலங்கைத் தமிழர் இன அடிப்படையில் தமது தனித்துவத்தை இட்டு முனைப்புப் பெறக் காரணம் எனக் கூறுகிறார் (1981). இதற்குப் பிரதேசஅடிப்படையில் தமிழர் தம் தனித்துவத்தைப் பேணுவதற்கும் நாகநாடு சாதகமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பக்தி இயக்கத்தின் செல்வாக்கு ஏற்படும் முன்னரே நாகநாட்டில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையோர் தமிழர்களாக இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. நாகநாட்டில் நிலவிய இப்பண்பாடு பெருமளவுக்கு தென் தமிழ்நாட்டை ஒத்ததாகக் காணப்படுகின்றன. இப்பண்பாட்டு வழிவந்த மக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர் என்பதற்கு பூநகரி வட்டாரத்தில் உள்ள மண்ணித்தலை, வெட்டுக்காடு, பரமன்கிராய், ஈழவூர், வீரபாண்டியன், முனை போன்ற இடங்களிலும், யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை, கந்தரோடை போன்றஇடங்களிலும் பெருங்கற்கால மட்பாண்டங்களில் பெறப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்களும், தமிழ்ப் பெயர்களும் சான்றாக உள்ளன (புஷ்பரட்ணம் 1993. கிருஷ்ணராஜா 1995, Ragupathy 1987). அவற்றுள் பூநகரி வட்டாரத்தில் பெறப்பட்ட சாசனங்களில் வரும் பெயர்கள் தமிழில் ஆண்மகனைக் குறிக்கும் “அன்” என்ற விகுதியுடன் முடிவடைவது சங்க இலக்கியத்தில் வரும் பெயர்களை நினைவுபடுத்துகின்றன. இதையொத்த பெயர்களே தமிழகத்தில் கொடுமணல், அழகன்குளம், வல்லம், திருக்காம்புலியூர், காவேரிபூம்பட்டினம், அரிகமேடு போன்ற இடங்களில் கண்டுபிடித்த பெருங்கற்கால மட்பாண்டங்களிலும் பெறப்பட்டுள்ளன (Rajan 1994,Subbarayalu1991). இவ்வொற்றுமை இலங்கையின் ஏனைய வட்டாரங்களைக் காட்டிலும் நாகநாடு தமிழகத்தோடு நெருங்கிய ஒற்றுமை கொண்டிருந்ததைக் காட்டுகின்றன.
பூநகரியில் கிடைத்த 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்கள். தமிழகத்தில் பெளத்த மதம் வீழ்ச்சியடைந்தமைக்கு அது நிறுவன ரீதியாக வளராமை முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டு வருகிறது. இக்காரணம் நாகநாட்டிற்கும் பொருந்தும், இங்குக் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்களை நாட்டின் எனைய வட்டாரங்களில் கிடைத்த கல்வெட்டுக்களுடன் ஒப்பிடுகின்றபோது அவற்றிடையே பிரதான வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்கலாம். நாகநாட்டில் கிடைத்த அறுபதுக்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் பெளத்த குருமாருக்கு கொடுத்த குகை அல்லது கற்படுக்கை பற்றியே அதிகம் பேசுகின்றன.
இந்த அம்சம் நாட்டின் ஏனைய வட்டாரங்களில் உள்ள ஆரம்பகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும், அங்குள்ள பிற்பட்ட காலக் கல்வெட்டுக்கள் பலவற்றில் தனிப்பட்ட பெளத்த குருமாருக்குப் பதிலாக பெளத்த சங்கத்திற்கு, விகாரைக்கு நிலம், குளம், கால்வாய், நில வருவாய் போன்றவை தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தி காணப்படுகின்றன. அதில் மக்கள் சொத்தான குளமும், நிலமும் படிப்படியாக மன்னன் சொத்தாக மாறும் நிலையையும், இவற்றை தானமாகப் பெற்ற பெளத்த சங்கங்கள் சொத்துடைய நிறுவனமாக மாறுவதையும் காணமுடிகிறது. இதனால் பொருளாதார ரீதியில் பெளத்த சங்கத்தின் நிலங்களையும், குளங்களையும் நம்பி பெருமளவு மக்கள் வாழும் சூழ்நிலை உருவாகியது. இவை அரசுக்கு சமனாக பெளத்த சங்கமும் வளரக் காரணமாகியது. அதேவேளை பெளத்த குருமாரும் சமயக் கடமைகளில் மட்டுமன்றி பல சமூகக் கடமைகளில் ஈடுபட்டு மக்களோடு இணைந்து வாழ முற்பட்டதைக் காணமுடிகிறது. இந்த வளர்ச்சிப் போக்கை நாகநாட்டில் காணமுடியவில்லை.
சமகாலப் பாளி இலக்கியங்கள்கூட கி.பி.5- ஆம் நூற்றாண்டின் பின்னர் நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் புதிதாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்கள் பற்றிக் கூறியதுபோல் நாக நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்கள் பற்றி அதிகம் கூறவில்லை. இந்த வேறுபாடுகள் நாகநாட்டில் பெளத்தமதம் நிறுவனரீதியில் வளரவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் செல்வாக்கு இலங்கையிலும் ஏற்பட்டமை நாகநாட்டில் பெளத்தமதம் மேலும் வீழ்ச்சியடையவும், சைவ மதம் மறுமலர்ச்சியடையவும் காரணமாக இருந்தது.
பக்தி இயக்கத்தில் சைவமதத்தையும், தமிழ் மொழியையும் முதன்மைப்படுத்திப் பாடிய நாயன்மார்கள் சமகாலத்தில் இலங்கையில் நாகநாட்டிற்கு வெளியே பல இந்து கோவில்கள் இருந்தும் நாகநாட்டில் உள்ள திருக்கேதீஸ்வரத்தையும், கோணேசுவரத்தையும் மட்டுமே பலவாறு புகழ்ந்து பாடியிருப்பது அக்காலத்தில் நாக நாட்டோடு தமிழருக்கிருந்த உறவையும், உரிமையையும் புலப்படுத்துவதாக உள்ளது.
இலங்கையின் பண்பாட்டு வரலாறு பாரதத்துடன் இணைந்து வளர்ச்சியடைந்தாலும் அரசியல் ரீதியான உறவுகள் தமிழகத்துடன் மட்டுமே நீண்டகாலத்திற்கு இருந்து வந்தது. இதனால் தமிழகத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட அரசியல் மாறுதல்கள் சமகாலத்தில் இலங்கை அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தின. இச்செல்வாக்கு அரசியல் ரீதியாக மட்டுமன்றி பண்பாட்டு ரீதியாகவும் சிங்கள மக்களை பெரிதும் பாதித்தமைதான் பாளி இலக்கியங்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் அன்னியராக, கொடியவர்களாக, படையெடுப்பாளர்களாக வருணிப்பதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். இதில் இலங்கைத் தமிழர்கள் புவியியல் அடிப்படையில் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் மொழி, மதம், பண்பாடு என்பவற்றால் தமிழக மக்களோடு ஒன்றுபட்டவர்களாக இருந்ததால் தமிழ்நாட்டின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் தமிழருக்குச் சாதகமாகவே இருந்தன.
இதில்நாகநாடு தமிழக இலங்கைப்பண்பாட்டு உறவின் குறுக்கு நிலமாகவும், அதன் தொடக்கவாயிலாகவும் இருப்பதால் தமிழர்களின் தனித்துவம் இங்கு தொடர்ந்தும் பாதுகாக்கப்பட அதிக வாய்ப்பாகியது. மேற்கூறப்பட்ட காரணங்கள் நாகநாட்டில் சிற்றரசுக்குப் பதிலாக ஒரு மன்னர் ஆளுகைக்கு உட்பட்ட இராசதானி தோற்றம் பெறச் சாதகமாக இருந்தன எனக் கூறலாம். அதற்கான ஆக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்பட்டிருக்க வேண்டும். அதைத் தொல்லியற் சான்றுகள் மட்டுமன்றி சமகால இலக்கியங்களும் சூசகமாகக் கோடிட்டுக்காட்டுகின்றன.
இக்காலகட்டத்தில் இருந்துதான் இதுவரை காலமும் பாளி இலக்கியங்களால் மறக்கப்பட்ட அநுராதபுர-நாகநாட்டு அரசியல் உறவு ஓரளவுக்கு கூறப்பட்டு வருகின்றன. அந்த உறவுகூட நாகநாட்டிலிருந்து அவ்வப்போது அநுராதபுர அரசிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள், கிளர்ச்சிகள் பற்றியதாகவே உள்ளன. இந்த இடத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு கால இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பாக வெளிநாட்டு யாத்திரிகரான கொஸ்மஸ் , இன்டிகோபிளியஸ்டிஸ் கூற்றினைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். அவர் கூற்றிலிருந்து இலங்கையில் இரு அரசுகள் இருந்தமையும் ஓர் அரசின் மன்னனிடம் செந்நிற மணிகள் காணப்படும் நிலப்பகுதியும், இன்னொரு மன்னனிடம் மிகப்பெரிய வாணிப நகரத்தை உள்ளடக்கிய துறைமுகமும் இருந்தமை தெரிகிறது.இதனை முதலியார் இராசநாயகம் பெரிய துறைமுகமான மாதோட்டத்தை உள்ளடக்கிய பிராந்தியம் யாழ்ப்பாண அரசுக்கு உட்பட்ட பகுதியெனவும், மற்றயது அநுராதபுர அரசு எனவும் குறிப்பிடுகிறார். சிங்கள இராசதானிகளின் வரலாற்றை முதன்மைப்படுத்திக் கூறும் பாளி இலக்கியங்கள் இக்காலத்தில் தென்னிலங்கையைக் காட்டிலும் நாகநாட்டிலிருந்து தமிழரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளும், நடவடிக்கைகளும் அநுராதபுர அரசை ஆட்டம் காணச் செய்தன எனப் பொருள்படும் வகையில் பல செய்திகளைத் தருகின்றன. கொஸ்மஸ் இலங்கை வந்த காலத்தில்தான் சிறிநாக என்பவன் (கி. பி. 619 - 25) தமிழர் படையுடன் நாகநாட்டைக் கைப்பற்ற முனைந்தான் எனப் பாளி நூல்கள் கூறுகின்றன. முதலியார் இராசநாயகம் இவனை ஒரு தமிழ் மன்னன் எனக் குறிப்பிடுகிறார். இதை தொடர்ந்து கி.பி. 8 - 9ஆம் நூற்றாண்டுகளில் மேலும் பல கிளர்ச்சிகள், படையெடுப்புகள் நாகநாட்டிலிருந்து அநுராதபுர அரசிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. அவை அடக்கப்பட்டதாகப் பாளி இலக்கியங்கள் கூறினாலும் அதே பாளி இலக்கியங்கள் அப்படையெடுப்புகள் தொடர்ந்தும் நிகழ்ந்ததாக கூறுகின்றன. இதே காலப்பகுதியில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த சிங்கள அரச வம்சத்தைச் சார்ந்த ஹட்டதத்தனே அரசனாக வரவேண்டும் என விரும்பிய மாதோட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தமிழகப் படைவீரர்களுடன் இணைந்து அவனை கி.பி. 661இல் மன்னனாக்கியதாகச் சூளவம்சம் கூறுகிறது. (45 17 - 20).
கி.பி.9ஆம் நூற்றாண்டில் முதலாம் சேன மன்னன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது (கி.பி. 833 - 853) பாண்டிய மன்னன் சிறிமாற சிறிபல்லவன் இலங்கை மீது படையெடுத்தான் எனவும், அப்போது மாதோட்டத்தில் வாழ்ந்த தமிழர்களும் அவர்களுடன் இணைந்து சிங்கள அரசை வெற்றிகொண்டு பாண்டியரின் மேலாண்மையை ஏற்கச் செய்தனர் எனவும் சூளவம்சம் கூறுகிறது (49:84-5). இப்பாளி இலக்கியச் செய்திகளையும், பிற சான்றாதாரங்களையும் ஒப்பிட்டு இக்காலத்தில் மாதோட்டத்தில் இருந்து அநுராதபுரம் வரையான பிரதான மையங்களில் தமிழர் குடியிருப்புகளே இருந்தன என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் உண்மை எதுவாக இருப்பினும் இக்காலத்தில் அநுராதபுர மன்னனைத் தீர்மானிக்கும் அளவிற்கு நாகநாட்டில் தமிழரின் செல்வாக்கு அதிகரித்திருந்தது என்பது தெளிவாகத் தெரியவருகிறது.
இதற்கு மேலும் ஒரு சம்பவத்தை பாளி இலக்கியத்தில் இருந்து எடுத்துக்காட்டலாம். கி. பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழர்களது ஆதரவுடன் ஆட்சியைப் பெற்ற ஹட்டதத்தனுக்குப் பயந்த “மான” என்னும் சிங்கள இளவரசன் நாகநாட்டில் அடைக்கலம் பெற்றப் பின்னர் தமிழ்நாடு சென்றான் எனக் கூறுகிறது. இலங்கையின் பண்டைய கால வரலாற்றில் அநுராதபுரத்திற்கு தெற்கே மகாகமையில் சிற்றரசர்களாக ஆட்சிபுரிந்த சிங்கள அரசர்கள் பின்னர் அநுராதபுர மன்னர்களாக வருவதும், அநுராதபுரத்தில் பதவி இழந்தவர்கள் பின்னர் மகாகமையில் அடைக்கலம் பெறுவதும் பொது வழக்கமாக இருந்தது. ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் அநுராதபுரத்திற்கு வடக்கே நாகநாட்டிலிருந்து சிங்கள மன்னர்கள் ஆட்சிக்கு வந்ததற்கோ அல்லது பதவி இழந்த சிங்கள மன்னர்கள் நாகநாட்டில் அடைக்கலம் பெற்றதற்கோ எந்தச் சான்றுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு விதிவிலக்காக முதன் முறையாக “மான” என்ற சிங்கள இளவரசன் மகாகமையை விட நாகநாடு பாதுகாப்பெனக கருதி அங்கு அடைக்கலம் பெற்றுப் பின்னர் தமிழ்நாடு சென்றமை நாகநாட்டில் ஓர் அரசமரபு இருந்ததையே குறிக்கும்.
நன்றி.