இந்த நேரத்தில்,
ஊடகங்கள் தரும் அனுகூலங்கள் அனைத்தையும் மனித உயிரிகள் பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த வலைப்பின்னல் விரிக்கப் பட்டுள்ளதா..?
ஆட்சியதிகார நடைமுறைகளைச் செயல்படுத்து வதற்காக நடந்ததா..?
மனிதச் செயல்பாடுகள் அனைத்தையும் நுகர்வியச் செயல்பாட்டின் பகுதிகளாக மாற்றி விடத் தயாராகி விட்ட உலக ஒழுங்கின் இலக்குகள் ஈடேற வசதி செய்யப்படுகிறதா..?
என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் ஒற்றைப் பதில் கிடைப்பதற்கு மாறாகப் பலவிதப் பதில்களே கிடைக்கும்.
விரிக்கப்பட்டுள்ள வலைப்பின்னல்களின் வழியே தகவல்கள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. கூவி அழைக்கும் வார்த்தைகளாகவும் (oral form) அச்சிடப்பட்ட எழுத்துக்களாகவும்(printed form) நிறுத்தி வைக்கப்பட்ட காட்சிகளாகவும் ( visual form) அலையும் பிம்ப அடுக்குகளாகவும் (moving image form) நமது புலன்களைத் தாக்கும் தகவல்களை அர்த்தப்படுத்திக் கொள்ள மனிதனுக்குள்ள ஒரு மூளை போதாது என்பது மட்டுமல்ல. நிகழ்கால உலகத்தைப் புரிந்து கொள்ள இதுவரை சொல்லப்பட்ட வழி முறைகளும் போதாது என்று ஆகிவிட்டது. நம்முன் கொட்டிக்கிடக்கும் பொருட்களைப் படிநிலைப்படி வரிசைப் படுத்தி அடுக்கிக் கொள்வதன் மூலம், வகைப் படுத்துவதன் மூலம், பிரித்துப் பரப்பிக்கொள்வதன் மூலம் , உட்கூறுகளை அடையாளப் படுத்துவதன் மூலம் அர்த்தங்களை உருவாக்கியதால் பெருகியதாகக் கருதப்பட்ட மனித அறிவு உண்மையில் குறையுடைய அறிவே என நவீன ஆய்வுகளும் சிந்தனைகளும் கருவிகளும் உணர்த்தியுள்ளன.
இன்றுள்ள உலகத்தை வகைப்படுத்துவதால் மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. அதற்குப் பதிலாக,
1.அடிப்படையிலேயே இந்தப் பிரபஞ்சம், ஒற்றை நிலைப்பட்டதல்ல; பல்நிலைப்பட்டதாக இருக்கிறது.
2.பிரபஞ்சம் என்பது நிகழ்வுகளுக்கிடையே தொடர்புகளையும் தொடர்வினை களையும் கொண்டதாக இருக்கிறது. தோன்றுகிற நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றனவாகவும் வேறுபாடுகள் கொண்டனவாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றும் ஒரு சூழலில்தான் உருவாகிறது. எனவே அந்நிகழ்வில் இடம் பெறும் வார்த்தை சார்ந்த செய்திகளும் வார்த்தை சாராத செய்தி களும் நிகழ்வு உருவான சூழலோடு தொடர்புடையன மட்டுமல்ல அவற்றை அடுத்து நிற்கும் செய்திகளுடன் உள்தொடர்பு கொண்டனவும் தான்.
3. ஒரு செய்திக்குள் அல்லது சில செய்திகளுக்குள் இருக்கும் வித்தியாசங்கள் அல்லது மறுதலிப்புகள் என்பன பயன்படத்தக்க தகவல்களைத் தரவல்லன. ஏனென்றால் உள்தொடர்புகளின் ஆழத்தை அவைதான் வெளிப்படுத்தவல்லன. பைனாகுலர் வழியாக ஒரு பொருளைப் பார்க்கின்ற போது கிடைக்கும் இரு பிம்பங்கள் கட்புலனாகப் பரிமாணத்துடன் மூளையில் பதிவது போன்றது இது.
4.நடுநிலையான அல்லது புறநிலையான அர்த்தம்(Objective meaning) என்பது பயனற்றது ; ஒரு சொல்லுக்கு உலகம் முழுமைக்கும் பொருந்தக் கூடிய ஒற்றை அர்த்தம் மட்டுமே இருப்பதில்லை. தரப்படும் ஒவ்வொரு தகவலின் சிறுபகுதியும் கொடுக்கப்பட்ட சூழலில் நிற்கும் இன்னொரு தகவலின் சிறுபகுதியுடன் இணைத்துப் பார்த்த பின்பே விளக்கம் பெற்றுக் கொள்கிறது. [Magoroh Maruyama, Information and Commuication in Poly-Epistemological Systems,(Ed.Kathleen Woodward, The Myths of Information: Technology and Post industrial Culture ) ,pp. 28-29] என்ற அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். அத்தகையவர்களால் மட்டுமே அர்த்தங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நிலைமை உருவாகி விட்டது . தகவல் தொடர்புவலைப் பின்னல் மனித மூளைகளை இதற்கும் பழக்கப்படுத்திக் கொள்ளத் தூண்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை பழக்கப்படுத்தும் முறைகளுக்கு நமது மூளை ஒத்துப் போய்விடும் என்றால் அடிமைத்தனம் வேறுவகையாக நடந்தேறிவிடும் என்பது கவனிக்க வேண்டிய எச்சரிகையாகும்.
மனிதர்கள் உடல்வலிமைக்கு அடிமையானது போல், ரகசியங்களுக்கு அடிமையானது போல், விளக்கங்கள், வியாக்கியானங்கள், வித்தியாசங்கள் உள்ளிட்ட புத்திசாலித் தனங்களுக்கு அடிமையானது போல் , தகவல்களின் முன்னால் அடிமையாகி நிற்பதும் நடந்தேறி விடும். அவ்வாறு அடிமையாக்கும் முயற்சிகள் இனிமேல் தான் நடக்கப் போகின்றன என்பதில்லை. நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் அதிலிருந்து தப்பித்தவர்களாக இருப்பது சாத்தியமா..? என்று கேட்டால் ஓரளவு சாத்தியம் தான் என்று சொல்லலாம். குறைந்தபட்சம் அதனைப் புரிந்து கொண்டால் அவற்றில் பங்கேற்று விளையாடுபவர்களாக இல்லாமல் பார்வையாளர் களாகவாவது இருக்கலாம். பார்வையாளர்களாக இருப்பதன் மூலம் ‘அந்த நீதிமான்களின் ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை’ என்று சொல்லிக்கொள்ளவாவது செய்யலாம். அதற்குத் தகவல்களின் இயல்பைப் போலவே மனித மூளைகளின் இயல்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தருணங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவரின் மூளையின் பகுதியோடு இன்னொரு மூளையின் பகுதியையும் பயன்படுத்தி அர்த்தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மொத்த மனிதர்களுக்காகவும் சிந்திக்கிற சிந்தனையாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிற இந்த வேளையில் மனிதப் பகுதிகளுக்காகச் சிந்திக்கிற சிந்தனையாளர்களின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
தொடர்பியலும் தொழில் நுட்பமும்
தொடர்பியல் தனது வரலாற்றில் பல்வேறு தொழில் நுட்பங்களைக் கடந்து இன்று மின்னனுவியல் மற்றும் மின் இழைத்தொழில் நுட்பங்களுக்கு (Electronic and Cable Tecnology) வந்துள்ளது. தொடர்பியலில் ஒவ்வொரு தொழில்நுட்பம் நுழையும் போதெல்லாம் பெறுவோர் (receiver) அதிகாரம் இழப்பவர்களாகவும் தருவோர் அதிகாரம் நிரம்பியவர்களாகவும் ஆகிக் கொண்டிருந்தனர் என்பதும் அதன் வரலாறுதான்.
தொடக்கநிலைத் தொடர்பியல் என்பது பேசப்பட்ட வார்த்தைகள்(oral) தான். நேருக்கு நேராகப் பேசப்படும் வார்த்தைகளில் லாவகமும் நுட்பமும் கொண்டுவர முடிந்தவன் தன்னளவில் ஒரு சமூகப் பண்பாட்டுச் சூழலை உருவாக்கினான். ஒலியன்களின் அடுக்கு தான் அன்றைய தொழில் நுட்பம். தொடர்ந்து பேசியவன் தனது உடலைப் பயன்படுத்திய பொழுது நிகழ்த்துபவனாக (performer) மாறினான். கேட்டவன் பார்வையாளனாக (audience) ஆகிக் கொண்டதன் மூலம் தன்னைக் கூட்டத்தில் ஒருவனாக ஆக்கிக் கொண்டான். நிகழ்த்துபவன் தனக்கென நிகழ்த்துவெளி,மேடை, வெளிச்சம் என உருவாக்கிக் கொண்டதன் மூலம் அதிகாரம் மிக்கவனாக ஆகிக் கொண்டான்; கலைஞனாக ஆக்கப்பட்டான்.
எழுத்துக்கலை நிகழ்த்துபவனைப் பார்வையாளனிடமிருந்து தூரமாக விலக்கி வைத்துவிடும் ஒன்று. பேச்சுக்கவிதை (Oral poems ) எழுதியவனைச் சமூகத் திற்குள்ளேயே இருப்பவனாக வைத்திருக்க எழுத்துக் கவிதையோ (Written poems) சமூகத்திலிருந்து ஒதுங்கி நிற்கத்தக்கவனாக ஆக்கியது. எழுதியவன் மட்டுமல்லாமல் அவற்றை வாசிப்பவனையும் தனிமையில் இருக்க வேண்டியவனாக ஆக்கியது எழுத்துத் தொழில்நுட்பம். அதனால் எழுதியவனுக்கும் வாசிப்பவனுக்கும் மரபிலிருந்து விலகிக் கொள்ளும் சாத்தியங்கள் உண்டாயின. பேச்சுப்பண்பாட்டை ஒன்றிணைந்த சமூகத்தின் வெளிப்பாடு எனக் கொண்டால், எழுத்துப் பண்பாட்டின் உருவாக்கத்தை நிலமானிய சமூகத்தின் கட்டமைப்பிலிருந்து தனிமனித வாதத்தின் உருவாக்கம் என்பதாக நாம் விளங்கிக் கொள்ளலாம். இதனைச் சரியாக விளங்கிக் கொண்ட தொடர்பியல் துறை ஆய்வாளர் மார்ஷல் மெக்லுகன், அச்சுக்கலை (print)யை தனிமனிதவாதத்தின் தொழில் நுட்பம் என்றார்¢. தனிமனிதவாதத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ள எழுத்து தனது முதன்மைக் குணமாக ,’ நடுநிலை அல்லது தற்சார்பின்மை ‘ என்பதை வலியுறுத்துக் கொண்டே இருக்கும். தன்னை ஒரு மென்மையான அல்லது குளிர்ந்த ஊடகம் (Cool media) என்பதாகக் காட்டிக் கொள்வதில் அதற்கு அலாதியான பிரியம் உண்டு.
பிம்ப அடுக்கின் வழி தன்னை அடையாளப்படுத்திய சலனப்படக்கலை பார்வையாளனின் மேல் அதிகப்படியான அதிகாரம் செலுத்த இன்னொரு தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டது. பொருட்களின் /மனிதர்களின் பிம்ப உருவாக்கத்திற்கு அண்மை,மத்திய,தூரமெனக் காமிராவின் இடைவெளி களையும் கோணங்களையும், காமிரா மற்றும் பொருட்களின் அசைவுகளையும் பயன்படுத்தி மாயங்கள் நிகழ்த்தும் வேலையைச் செய்தது. அலையும் பிம்பங்களை உருவாக்கி இருட்டில் இருக்கும் பார்வையாளனின் புலன் களுக்குள் வன்மையாகத் திணிப்பதன் மூலம் அது தன்னை வலிமையான அல்லது சூடான ஊடக ( Hot media) மாகக் காட்டிக் கொண்டது.
இன்று வந்துள்ள மின்னணுவியல் தொழில்நுட்பம் வெளிப்பார்வையில் அதிகாரம் எல்லாவற்றையும் உதறிய வடிவமாகத் தோன்றுகிறது. பார்வையாளனின் இருப்பிடத்திற்கே வந்து விரியும் பிம்பங்களோடும், ஒலியன்களோடும், எழுத்துக் களோடும், அது தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. தகவல்களை அனுப்புகிறவனின் கட்டுப்பாடுகள் குறைக்கப் பட்டுப் பெறுபவனின் தெரிவுகளும் விருப்பங்களும் களிப்பும் முக்கியம் பெற்றுள்ளன. இருப்பிடத்திற்கே வருகிறது என்பதின் மறுதலையாக நிகழ்வுகள் நடக்கும் இடத்திற்கே, நேரடி ஒளிபரப்புகளின் வழியாக அவனை அழைத்துச் செல்கின்றன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. எல்லாவற்றையும் நிகழ்வுகளாக ஆக்கித் தருவதிலே தான் மின் இழைத் தொழில் நுட்பத்தின் அதிகாரம் தங்கியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். தகவல்களை நிகழ்வுகளாக ஆக்கிவிடுவதின் மூலம் இடம் பெறும் செய்தியும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் பார்வையாளனும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தப் படுகின்றனர். நிகழ்வில் பங்கேற்புப் பார்வையாளனாக இருக்கும்படி வலியுறுத்தப் படுகிறான்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில், உலகம் மற்றும் பிரபஞ்ச அழகிகள் தேர்வில், ஈழயுத்தத்தில் போரில், மத்திய மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மேற்கொள்ளும் நீண்ட பயணங்களில், இரட்டைக் கோபுரத் தகர்ப்பில், கும்பகோணத் தீவிபத்தில், ஜீவஜோதி,ஷெரினா, ஜெயலட்சுமிகளின் நீதிமன்றப் படியேற்றத்தில், வீரப்பன் அழிப்பில் , சுனாமியின் சுழிப்பில், விழா நாள் கொண்டாட்டங்களில், ஊழல்கள் நடந்ததை அம்பலப்படுத்துவதில், ஊழல்கள் நடக்கும் விதம்பற்றிப் பேசுவதில், ஊழல் ஒழிப்பு நடைமுறைகளைப் பேசுவதில், தேர்தல் ஆணையம், நீதிமன்றம், இந்திய அரசின் புலனாய்வு அமைப்பின் பங்களிப்பில் என எல்லாவற்றிலும் பார்வையாளனாக- வெறும் பார்வையாளனாக- மட்டும் இருக்காமல் பங்கேற்பாளனாக ஆகும்படியும் வலியுறுத்தப்படுகிறான். அந்தப் பங்கேற்பு அடுத்த கட்டமாக இடையிடையே வரும் பொருட்களின் விளம்பரங்கள் என்னும் நிகழ்வுகளிலும் பங்கேற்பாளனாக ஆகும்படி தூண்டுகிறது. எல்லாவற்றையும் குறைந்த கால அளவிலான நிகழ்வுகளாக ஆக்கிக் காட்டிவிடும் மின்இழைத் தொழில் நுட்பம், தகவல்களை நுகர்பொருட்களாக மாற்றிக் குடுவையில் அடைக்கப்பட்ட மாத்திரைகள் போல் புதைக்கப்பட்ட மின்னிழைக் கம்பிகள் வழியே அனுப்பிக் கொண்டிருக்கிறது. துணையாக வானத்தில் செயற்கைக் கோள்களும் கூடவே பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இனி எத்தகைய அரசாங்கமும் செயற்கைக் கோள்கைகளை அனுப்பாமலும் மின்னிழைக் கம்பிகளைப் புதைக்காமலும் நிர்வாகம் நடத்தி விட முடியாது.
மின்னணுவியல் தொழில் நுட்பத்திற்கு மிகப்பெரிய நிகழ்வுகளை விட அடுத்தடுத்து வித்தியாசங்கள் காட்டும் குறுகிய கால நிகழ்வுகளே மிக முக்கியம். அத்தகைய நிகழ்வுகளுக்காகக் காத்துக் கொண்டே இருக்கிறது இன்றைய ஊடகம். தானாகவே நிகழாத போது உருவாக்கிக் கொள்ளவும் செய்கிறது. குறைந்த கால அளவிற்குள் மகிழ்ச்சி, துக்கம், கோபம், ஆறுதல்,மூர்க்கம், அடிமைத்தனம், வெகுளி, தியாகம் , அன்பு என அனைத்து உணர்வுகளையும் பிழிந்து தரும் தொலைக்காட்சித் தொடர்கள் அத்தகைய தயாரிப்புக்களில் ஒன்று. தொலைபேசியின் வழியே பங்கேற்று தன்விருப்பங்களைக் கோரும் நிகழ்ச்சிகள் இன்னொன்று. ஏற்கெனவே வேறு நோக்கங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைப் பகுதி பகுதிகளாகப் பிரித்து காமெடி, பாடல், ஆட்டம், சண்டை எனத் தருவது மற்றொன்று. இவை எல்லாவற்றிலும் எல்லா மனிதர்களும் பங்கேற்பாளர்களாகவும் பங்கேற்கத்தக்க பார்வையாளர்களாகவும் ஆக்கப்படுகிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்தப்புரிதலோடு திரைப்படங்களின் பக்கம் போனால்..
தமிழக அரசுக்கு அதிகமாக வரி கட்டுகிற துறை திரைப்படத்துறையே. எனவே,அரசு அதற்கான சலுகைகளை வழங்கிட வேண்டும் எனக் கோருகின்றனர். திரைப்படத்தயாரிப்புக்கு ஆகும் செலவைக் கட்டுப்படுத்தா விட்டால் அந்தக் கலையை யாராலும் காப்பாற்றமுடியாது.கேட்கும் இந்தக் குரல் அதன் ஆதரவுக் குரல் . திருட்டு விசிடி-க்களின் அச்சுறுத்தல்களினால் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது திரைப்பட உலகம்.இதுவும் ஆதரவுக் குரல் தான்
இந்தக் குரல்களோடு சேர்ந்து சினிமாவைப்பார்க்கலாமா? ரசிக்கலாமா..?
தமிழ்ச் சினிமாவை விமரிசனம் செய்யலாமா...?
திரைப்படங்களைக் குறித்தும், அவற்றில் பங்கேற்பவர்கள் குறித்தும் நமது பத்திரிகைகள் முன் வைக்கும் கருத்துக்கள் எத்தகையன. அவை சினிமாவைக் காணச் செல்பவனை என்னவாக நினைக்கின்றன.
அவன் கலைஞனா.? தொழில்நுட்ப நிபுணனா..?ரசிகனா..?
தொண்டனா..வெறும் பார்வையாளனா.? அல்லது சமூகஉயிரியா..? அவனது தன்னிலை என்ன?
ஒரு படத்தின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்கிறது..? உருவாக்கத்தில் பங்கேற்பவர்கள் யார்..? யார்..?
அவர்களது நோக்கங்கள் என்னென்ன..? சினிமாவிற்கும் நடிகர்களுக்கும் என்ன உறவு..?
சினிமாவிற்கும் அரசியலுக்கும் என்ன உறவு..? சினிமா கலையா..? தொழில்நுட்பமா..?வணிகமா..?
ஆக்கசக்தியா..? அழிவுசக்தியா..? இப்படிப் பலகேள்விகள் உண்டு. பலவிடைகளும் உண்டு.
தமிழ்த்திரைப்படத்துறையின் மீதான பல வகைப்பட்ட குறிப்புக்களை தமிழ்நாட்டின் தலைநகரத்திலிருந்து வரும் வாராந்தரிகள் மட்டுமல்ல, பெருநகரங்களிலிருந்து வரும் தினசரிகளிலும் நாம் வாசித்திருக்கிறோம். திரைப்பட விமர்சனம், திரையுலகச் செய்திகள் என்கின்ற அளவில் தமிழ்ப் பத்திரிகைகளில் நாள்தோறும் சினிமாவைப்பற்றி ஏராளமாகவும் தாராளமாகவும் எழுதப்படுகின்றன.இந்த எழுத்துக்கள் எல்லாம் தமிழ்ச் சினிமாவைப் பற்றிய ஆக்கபூர்வமான ஆய்வுக்குறிப்புக்கள் எனக் கருதத்தக்கனவா? என்றால் ஓரளவு கருதத்தக்கன என்றுதான் . ஆனால் இவையே திரைப்படங்கள் பற்றிய திறனாய்வு ஆகுமா என்றால்..? ஆகாது என்றுதான் சொல்லவேண்டும்.இத்தகைய குறிப்புகள், அந்த வாசகனுக்கு திரைப்படத்தைப் பார்க்கலாமா ?வேண்டாமா?என்பதில் உதவிசெய்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இரண்டாவது நோக்கம் திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்குள்ள பொறுப்பைச் சுட்டிக் காட்டுவது.இவ்விரு நோக்கங்களும் ஒரு திறனாய்வில் வெளிப்பட வேண்டியனதான் என்றாலும் நோக்கங்கள் மட்டுமே திறனாய்வு ஆகிவிடாது என்றுதான் சொல்லவேண்டும்.
திறனாய்வு என்னும் சொல், கலை இலக்கியம் சார்ந்த ஒருசொல்லாகக் கருதப் பட்டாலும் திறனாய்வுப் பணி கலை இலக்கியம் அல்லாத பிற அறிவுத் துறைகளிலும், நடைமுறை வாழ்க்கையிலும் கணந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கலை இலக்கியத் துறையினர் மட்டுமே அதற்கான விதிகளையும் வரையறைகளையும் நோக்கங்களையும் உருவாக்கி அதனைப் பின்பற்றி வருகின்றனர். அதன் மூலம் திறனாய்வு என்றசொல்லைக் கலை இலக்கியத் துறையின் சொல்லாக ஆக்கிக் கொள்ளவும் செய்துள்ளனர். இந்தப் பின்னணியில் சினிமாவைத் திறனாய்வு செய்வதற்கான விதிகளும் வரையறைகளும் நோக்கங்களும் என்ன என்று கேட்டுக்கொள்ளலாம்.
திறனாய்வு, தன் முன்னிற்கும் ஒன்றை என்னவாகக் கருதுகின்றது என்பதும் மிகமுக்கியம். கவிதை, கதை, நடனம்,நாடகம், ஓவியம்,சிற்பம், இசை,பாட்டு எனப்பிரித்துச் சொல்வதற்குக் காரணங்கள் அந்தந்தப் படைப்புகளுக்குள்- படைப்பாளி,படைப்புமனம், படைப்புவகை,படைப்பு நோக்கம் என்பதாகச் செயல்படும் படைப்புக்குள்-மட்டுமே இருப்பதாக நம்ப வேண்டியதில்லை. எழுத்துக் கலை, பார்வைக்கலை, கேட்புக்கலை, இவைகளெல்லாம் உள்ளிணைந்த சேர்மக்கலை என்ற பாகுபாடுகள் எல்லாம் அவைகளை நுகர்பவனின் புலன்களை மையப்படுத்தியபிரிப்புக்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
திரைப்படம் என்பது என்ன?
ஒருதிரைப்படம் தனது நுகர்வோனுக்குத் தந்துள்ள பெயர் பார்வையாளன். அந்த வகையில் அது தன்னை ஒரு பார்வைக்கலையாகக் காட்டிக்கொள்ளவிரும்பியுள்ளது. ஆனால் திரைப்படம் வெறும் பார்வைக்கலை மட்டும் அல்ல;அதனை முழுமையாக நுகரக் கண்ணிற்கு நிகராகச் செவியும் அவசியம். அதேபோல் அதன் படைப்பாக்கத்தன்மையும் பிற கலைகளிலிருந்து முற்றிலும் வேறானது. தனிமனிதர்களின் படைப்பாக்கத் தன்மையிலிருந்து நாடகக் கலையே, கூட்டுக் கலையாக மாறத் திரைப்படம் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொண்டு ஒரு சேர்மக்கலையாக நிற்கிறது. தொடக்கத்தில் உள்வாங்கிய தொழில் நுட்பத்தோடு நிற்காமல் அத்துறையில் புதிது புதிதாக வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்றதாகவும், தனக்கேயுரியதாகப் புதிய தொழில்நுட்பம் தேவையென்பதை வலியுறுத்து வதாகவும் இருக்கிறது.இந்த அம்சம்தான் திரைப் படத்திற்குக் கலையென்ற பரிமாணத்திற்கும் கூடுதலாக இன்னொரு பரிமாணத்தையும் தந்துள்ளது. பார்வையாளர்களிடம் திரைப்படத்தால் தகவல்களைச் சேர்க்கவும் கருத்துக்களை உருவாக்கவும் இயலும் என்பதால் அது ஊடகம் என்ற இன்னொரு பிரிவுக்குள்ளும் நுழைந்துகொள்கிறது. எண்ணிக்கையிலடங்கா மனிதர்களை ஒரே நேரத்தில் சந்திக்கும் சாத்தியம் அதற்கு உண்டு என்பதால் வெகுமக்கள் ஊடகமாகவும் ஆகியுள்ளது.
படைப்பாளி, பார்வையாளன் அல்லது நுகர்வோன், படைப்பாக்கமுறைகள், அதில் செயல்படும் மனிதர்கள் முதலானவற்றை மனதில்கொண்டு சினிமாவை கலை மற்றும் ஊடகம் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. அதற்கு இன்னொரு முக்கிய பரிமாணமும் உண்டு. கச்சாப்பொருட்கள் மற்றும் கருவிகள், மூளை மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளிகள், சம்பளம் மற்றும் கூலி ,முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், வெளியீடுகள் மற்றும் விளம்பரங்கள்,மூலதனம் மற்றும் லாபம் சுரண்டல் மற்றும் இழப்பு என விரியும் இந்தப் பரிமாணம் திரைப்படத்தை ஒரு உற்பத்திப் பொருளாக மட்டும் கருதுகிறது. அதன் காரணமாக அதன் தயாரிப்புப் பணிகள் ஒரு தொழிற்சாலைப் பணியாகக் கருதப்படுகிறது.ஆனால் அந்தத் தொழிற்சாலை வெறும் திரைப்படங்களை மட்டும் உற்பத்தி செய்து பார்வையாளனிடம் தருவதில்லை. காட்சிகளாக விரியும் பிம்பங்களின் வழியே கனவுகளையும் உற்பத்தி செய்கிறது. ஆம் திரைப்படத்துறை ஒரு கனவுத் தொழிற்சாலையாகவும் இருக்கிறது. ஆகவே,இந்த மூன்று பரிமாணங்களையும் உள்வாங்கிக் கொள்ளாத ஒரு திறனாய்வு, திரைப்படம் பற்றிய திறனாய்வாக ஆகமுடியாது.
தமிழில் திரைப்படம்(சினிமா) திறனாய்வு செய்யப்பட்ட கதை:
ஆனந்தவிகடன், குமுதம் ,குங்குமம், இந்தியா டுடே போன்ற பொதுப்பத்திரிகைகளிலும், ஸ்டார் போன்ற திரைப்படத்துறை சார்ந்த இதழ்களிலும் அவ்வப்போது வரும் விரிவானகட்டுரைகளிலும் கூட அத்தொழில் காப்பாற்றப்படவேண்டும் என்ற விருப்பம்தான் அதிகம் உண்டு.ஏன் திரைப்படங்கள் தோல்வியடைகின்றன; அதைத் தடுப்பதற்குத் திரைப்படத்துறையினர் செய்யவேண்டியன எவையெவையென விரிவாக எழுதி ஆலோசனை வழங்குகின்றன. அல்லது தொடர்ந்து படங்கள் வெற்றியடைந்தால் அதற்கான காரணங்கள் என்ன எனக்கண்டறிந்து பாராட்டுகின்றன. இவற்றையெல்லாம் கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அதன் பின்னணியில் சந்தையின் மதிப்பீடுகளும் ஏற்ற இறக்கங்களும் இருப்பது புரியவரும்.
இந்தப்போக்கிலிருந்து மாறுபட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் சிறுபத்திரிகைக்காரர்களுக்கும் கல்வித் துறைப் பட்டங்களுக்கும் தமிழ்ச்சினிமா சரியான இலக்கியமாக மட்டும் இருக்கவேண்டும் என்பதுதான் விருப்பம். இருதரப்பாருக்கும் ஒரேவிருப்பம் என்று சொன்னாலும் சினிமாவைப்பற்றிய பார்வைக்கோணத்தில் வேறுபாடுகள் உண்டு.
கல்வித்துறைப் பட்டங்களுக்காக ஆய்வு செய்பவர்கள் திரைப்படத்தை இலக்கியத்திலிருந்து உருவாகும் மாற்று வடிவமாகக் கருதி இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் அதே ஆய்வுமுறையியலையும் நுட்பங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். திரைப்படமாக ஆக்கப்பட்ட நாவல்கள், திரைப்படமும் நாவலும் , போன்ற தலைப்புகளில் செய்யப்பட்ட ஆய்வேடுகளை வாசிக்கும் வாய்ப்புக்கிடைத்தவர்கள் இதனை உணர்ந்திருக்கக் கூடும். இத்தகைய ஆய்வேடுகளும் கட்டுரைகளும் இலக்கியப் பிரதியின் ஆதரவுக்குரலாக நின்று திரைப்படத்தைக் குறைகூறும் வேலையைத்தொடர்ந்து செய்துவருகின்றன. இந்த ஆய்வுகள் சினிமாவைத் தனித்தவொரு கலையாகக்கூட நினைப்பதில்லை; இலக்கியப்பிரதியின் நீட்சியாகவே கருதுகின்றன.
இங்கு சிறுபத்திரிகைகளின் தொடக்கக்காலக் கட்டுரைகள் -1990-வரை எழுதப்பட்ட கட்டுரைகள்- சினிமாவை இலக்கியத்தின் நீட்சியாகக் கருதவில்லை என்பதைச்சுட்டிச்சொல்லவேண்டும்.அதற்கு மாறாகத் தனித்த இலக்கணங்களும் அழகியலும் கொண்ட ஒருகலையாக மட்டும் கருதும் போக்கு காணப்பட்டது. குறிப்பாக நடைமுறை(யதார்த்தவாத) திரையின்(சினிமாவின்) ஆதரவாளர் களாகக் காட்டிக்கொண்ட இவர்களே தமிழ்நாட்டில் திரைப்படச்சங்கம், அதற்கான இயக்கம் ,அவற்றை முன்னெடுப்பதற்கான சிற்றிதழ்கள் எனச் செயல்பட்டனர். இவர்களும் சரி, திரைப்படங்களை ஆய்வு செய்யவிரும்பிய கல்வித்துறை ஆய்வாளர்களும்சரி திரைப்படத்திற்கும் அதன் இடையேயுள்ள உறவைப் பற்றிப் பேசவேண்டும் எனக்கருதியதில்லை. என்றாலும் தமிழில் திரைத்துறை( சினிமாவை) வரலாற்று நோக்கில் எழுதிப்பார்த்த அறந்தை நாராயணன் மற்றும் அரங்கபாசுகரன்(தியோடர் பாஸ்கரன் )போன்றவர்களின் முயற்சிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியன.
இப்போக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட போக்கு 1980-களின் பின்பாதியில் வெளிப்படத் தொடங்கின. இனி என்ற இதழில்வெளியான கட்டுரைகள் அதுவரைத் தமிழில் திரைத்துறை(சினிமாவைப்) பற்றி எழுதிய எழுத்துக்களிலிருந்து மாறுபட்டதாக வந்தன. திரைத்துறையை(சினிமாவைத்) தனியான ஒரு கலையாக மட்டும் பார்க்கும் பார்வையிலிருந்து விலகி, வாசகனிடம் அத்திரை(அச்சினிமா) எத்தகைய நம்பிக்கைகளை உருவாக்க முயல்கின்றன; அதற்காக என்னென்ன உத்திகள், வண்ணங்கள், கோணங்கள், எடுத்துரைப்பு முறைகள், இசைக்குறிப்புகள் போன்றன பயன்படுத்தப் பட்டுள்ளன என்று பேசின. ஆனால் அது தொடரப்படவில்லை.ஒரு பத்தாண்டு இடைவெளிக்குப்பின் காத்திரமான அரசியல், சமூக பின்புலத்துடன் 1990-களில் ஊடகம், நிறப்பிரிகை, சுபமங்களா, ஆய்வு போன்ற இதழ்களில் அதன் தொடர்ச்சி வெளிப்பட்டது. இன்று திரைப்படத்தைப் பற்றிய திறனாய்வு-அல்லது சொல்லாடல்- என்பன இத்தகைய கட்டுரைகளாகவே உள்ளன. தீராநதி, காலச்சுவடு, தீம்தரிகிட, கணையாழி, உயிர்மை, புதியகோடாங்கி,போன்ற அச்சிதழ்களும் ,பல்வேறு இணையத்தமிழ் இதழ்களும் வெளியிட்டுவரும் கட்டுரைகளும் அதனையெழுதியவர்களும் தமிழ்த்திரைத்துறையை(சினிமாவைப்) புதுவிதமாகக் காட்ட முயன்று வருகின்றனர்.
2000-க்குப்பின் தீவிரமான குமூக(சமூக), அரசியல்,பொருளாதாரச்சிந்தனைகள் புதியபுதிய கொள்கைகளின் வெளிச்சத்தில் விவாதிக்கப்படுகின்றன.மாற்று அரசியல்,மாற்றுககுமூகாயம்(சமூகம்) எனப்பேசுகிறவர்கள் அதற்கான முன் மாதிரிகளை மட்டும் முன் வைத்தால் போதாது:நடப்பு அரசியலையும் குமூகத்தையும்(சமூகத்தையும்) புரிந்து கொள்ள வேண்டும் என நம்பத் தொடங்கியுள்ளனர். நடப்பு அரசியலும் நடப்புக்குமுகாயம்(சமூகமும்) வெகுமக்கள் சார்ந்தன என்பதால் இயல்பாகவே வெகுமக்களின் பண்பாட்டுக்குரியனவாகவுள்ள அனைத்தும் -வாய்மொழி, எழுத்து முதலான இலக்கியங்கள், நிகழ்த்துக்கலை, சலனப்படங்கள் முதலான கூட்டுக்கலைகள், வீட்டுபயோகப் பொருட்கள், தகவல் தொடர்புசாதனங்கள், ஊடகங்கள், இவைகளுக்கான விளம்பரங்கள் என அனைத்தும் கவனத்துக்குரிய ஆய்வுப் பொருள்களாகின. இப்படி ஆக்கியதின் பின்னணியில் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் சிந்தனைத் தளத்தில் புதிய அலைகளையெழுப்பிய அமைப்பியல் வாதத்திற்கும் மாற்றுக்களைப் பற்றிய முன்மொழிதலைத் தொடர்ந்து தவிர்த்து வருகிற பின் -நவீனத்திற்கும் முக்கிய பங்குண்டு. அமைப்பியல்வாதமும் புதிய மார்க்சீயர்களும் பண்பாட்டு ஆய்வுகளின் போக்கை மாற்றியுள்ளனர் என்பதைப் பேச வந்த கார்நெல் பல்கலைக் கழகப் பேராசிரியரும் திறனாய்வாளருமான ஜோனதான் கல்லர் சொல்வதை இங்கே காணலாம்:
"பிரெஞ்சுமொழிப்பேராசிரியர்கள் சிகரெட்டுகளைப் பற்றியும் அமெரிக்கர்களுக்கு உள்ள கொழுப்பு மோகத்தையும் பற்றிக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சேக்சு(ஸ்)பியரில் பாண்டித்தியம் பெற்றிருந்தவர்கள் உடலை மையப்படுத்திய பாலின ஆய்வுகளுக்குள் நுழைந்து விட்டனர்.நடப்பியல் எழுத்துக்களில் ஈடுபாடு காட்டிவந்த பேராசிரியர்கள் தொலைக்காட்சித் தொடர்களைப்பற்றிய ஆய்வுப் பணிகளுக்குள் புகுந்து விட்டனர்.என்ன நடந்து கொண்டிருக்கிறது.? பல்கலைக் கழகங்களில்..? 1990-களில் கலை இலக்கியத்துறைகளில் நடக்கும் பண்பாட்டு ஆய்வுகள் ஒரு பெரும் விலகலை மேற்கொண்டு விட்டன.'மில்டனை' தள்ளி வைத்து விட்டு 'மடோனா'வைத்தழுவிக் கொண்டிருக்கின்றனர்; 'ஷேக்ஸ்பியரை'த் தூக்கிக்கடாசி விட்டு 'ஷோப் ஓபரா'வுக்குள் புகுந்து விட்டனர்."
இலக்கியத்தைப் படிப்பதற்கான கொள்கைகள் வேறு புதிதுபுதிதாய் வந்துகொண்டே இருக்கின்றன. இப்பொழுது வரும் கொள்கைகளை இலக்கியத்தைப் படிப்பதற்கான கொள்கைகள் என்ற எல்லைக்குள் சுருக்கி விடவும் முடியாது.கொள்கைகள் என்பன ஒருவிதத்தில் அனுபவங்களின் குறியீடுகள்தான்; அதாவது உற்பத்தி/ தயாரிப்பு மற்றும் பிரதிநிதித் துவப்படுத்துதலின் அனுபவங்கள் தான். சுருக்கமாகச்சொல்வதானால் மனிதத் தன்னிலைகளைக் கட்டமைக்கும் விருப்பங்கள். விரிவான அர்த்தத்தில் இக்கொள்கைகளை பண்பாட்டைப் போன்றன என்றுகூடக் கூறலாம். இவைகளே பின்னர் வளர்ந்து-குழப்பங்களுடன் வளர்ந்து-பல்துறை ஆய்வுகளை உருவாக்கிவிட்டுக் கடைசியில் கொள்கைகளாக நின்றுவிட்டன. ஆகவே இவைகளுள் ஒன்றை வெறும் கொள்கை மட்டும் தான் என்றுசுருக்கிச் சொல்லிவிடுவது இயலாத ஒன்றுதான்.இன்று பண்பாட்டுத் துறைகளில் ஆய்வு வேலைசெய்வது என்பது ஆழமாகக்கொள்கைகளைச் சார்ந்து இருப்பது தான். அதன் மூலம் அர்த்தம், அடையாளம், பிரதிநிதித்துவம், வெளிப்படுத்தும் முகவாண்மைக்கருவிகள் பற்றியெல்லாம் பேசுவதும்தான்.
இலக்கியக் கல்விக்கும் பண்பாட்டுக்கல்விக்கும் இடையேயுள்ள உறவு என்ன? என்று ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும். விரிந்த கருத்தமைவின் அடிப்படையில் பண்பாட்டுக்கல்வி என்னும் திட்டம் பண்பாட்டின் வினைகள் எத்தகையன என்பதைப் புரிந்து கொள்ளும் நோக்கம் உடையது தான்.குறிப்பாக இந்தநவீன உலகத்தில்-பிளவுபட்டதாகவும் பிரிக்கவியலாததாகவும் உள்ள குழுக்கள் அடங்கிய சமூகங்களில்-அரசுஅதிகாரம், ஊடகத் தொழில்நிறுவனங்கள், மற்றும் பன்னாட்டு மூலதனக்குழுமங்கள் போன்றன எவ்வாறு பண்பாட்டு உற்பத்தி களில் செயலாற்றுகின்றன; அவை தனிமனிதர்களுக்கிடையேயும் குழுக்களுக்கிடையேயும் கட்டி எழுப்பி உருவாக்கும் பண்பாட்டு அடையாளங்கள், அமைப்புகள் எத்தகையனவென்றும், அதன்முலம் விளையக்கூடிய சாதகபாதகங்களின் அளவுகள் எவ்வளவு என்பதையெல்லாம் விளக்குவதும் தான் எனப்பதில் சொல்லிக் கொண்டே போகலாம்.
வளர்ச்சியடைந்துள்ள பண்பாட்டாய்வுகளின் பின்னணியில் இரண்டுவிதமான சிந்தனைப் போக்குகள் உள்ளன.1960-களில் பிரான்ஸில் தோன்றிய அமைப்பியல்வாதிகளின் -குறிப்பாக ரோலண்ந் பார்த்தின் ஆய்வு முறைகளின் வழி உருவான விதிகள்,மரபுகளைப் பின்பற்றியது ஒருவகைச் சிந்தனைப் போக்கு. தொழில்ரீதியான குத்துச்சண்டை, சொகுசுக்கார்கள் போன்றவற்றிற்கு ஒயினையும் ஐன்ஸ்டீனின் மூளையையும் பயன்படுத்திச் செய்யப்பட்ட விளம்பரங்களைத் தொன்ம நீக்கம் செய்து புதிய வரலாற்றுக் கட்டமைப்பு வாதத்தை முன் வைத்திருந்தார். அதன் மூலம் பண்பாட்டுச் செயல்பாடுகளின் அடியோட்டமான மரபுகள், அதனால் உண்டாகக் கூடிய சமூக விளைவுகள் போன்றனவற்றை விளக்கியிருந்தார்.
இரண்டாவது சிந்தனைப்போக்கு பிரிட்டனின் புகழ்பெற்ற மார்க்சீயத் திறனாய்வாளர் ரெய்மாண்ட் வில்லியம்ஸின் வழியிலானது.1958-ல் வெளிவந்த இவரது பண்பாடும் சமூகமும் (culture and society ) என்ற நூலும் அதற்கு முந்திய ஆண்டில்-1957-ரிச்சர்ட் ஹோக்காட் எழுதிய கல்வியின் பயன்கள் (uses of literacy) என்ற ஆய்வுக் கட்டுரையும் பிரிட்டானிய பண்பாட்டியல் கல்வியில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளன. இவ்விருவர்களின் ஆய்வுகள் பண்பாட்டியல் கல்வியில் பயன்பட்டு வந்த-பயன்படுத்தப்படும் இரண்டு கருத் தாக்கங்களைத் தெளிவு படுத்த முயன்றன.
வெகுமக்கள் (popular)பண்பாடு, திரள்மக்கள்(mass )பண்பாடு என்ற அவ்விரு கருத்தாக்கங்கள் இன்றும்கூட குழப்பமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் உள்ளன. வெகுமக்கள் பண்பாட்டையறிய உயர்ந்த இலக்கியங்கள் உதவாது; அடித்தள மக்களின் குரல்களிலிருந்தே சாதாரண மனிதர்களின் விருப்பங்களையும் ஆசைகளையும் அறிய முடியும் என நம்பி வாய்மொழி இலக்கியங்கள், நாட்டார் வழக்காறுகள், நாட்டார் கலை இலக்கியங்கள், போன்றனவற்றைத் தொகுத்து ஆய்வுசெய்வது இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான்.ஆனால் திரள்மக்கள் பற்றிப் பேசுபவர்கள், இவைகளை ஆய்வுத் தரவுகளாகக்கொள்வதில்லை; அவர்களின் தரவுகள் நிகழ்காலம் சார்ந்தன மட்டுமே. எழுத்து, ஒலி, ஒளிவழியிலான ஊடகங்களில் இடம் பிடிக்கும் அனைத்துமே ஆய்வுத் தரவுகள்தான்.
மக்களை வெகுமக்கள், திரள்மக்கள் என ஆய்வாளர்கள் பிரித்துப்பேசுவதில் அடிப்படையான வேறுபாடுகளும் உள்ளன.வெகுமக்கள் எனப்பேசுபவர்கள் அவர்களைப் படைப்பாளிகளாகவும் விருப்பங்களையும் ஆசைகளையும் வெளிப்படுத்துகிறவர்களாகவும் கருதுகின்றனர். ஆனால் திரள்மக்கள் எனப் பேசுவதில் அவர்களை நுகர்வோர்களாகக் கணிக்கும் பார்வைதான் அதிகம் வெளிப் படுகிறது. இத்தகைய கணிப்புக்களில் பெருமளவு உண்மை உண்டு. படைப்பூக்கமுள்ள வெகுமக்கள் தன்னிலைகள் வெறும் நுகர்வோர்களாக ஆக்கப்படும் நிலையில்தான் திரளின் உறுப்புக்களாகின்றனர். வாசகராகவும் பார்வையாளராகவும் இருப்பதில் உள்ள தன்னுணர்வு நீக்கம் பெறும் நிலையில் நுகர்வோர் என்னும் திரளுக்குள் உறுப்பினராகி விடுதல் தொடர்ந்து நடக்கிறது. இதுதான் இப்போதைய ஊடக வலைப் பின்னல்களின் சாகசங்களும் சாதனைகளும் என்று கூடச் சொல்லலாம் .இதன் தொடர்ச்சியாக அரசு மற்றும் பிற அதிகாரத்துவ அமைப்புக்களின் நோக்கங் களுக்கு பணியக்கூடிய தன்னிலைகளாக மாறும் சாத்தியங்கள் உண்டு.
பண்பாட்டைப்பற்றிய இந்த இரண்டு விளக்கங்களுக்குப்பின்னால், அதனை இவ்வாறு புரிந்து கொள்ளலாம்: பண்பாட்டுச் செயல்பாடுகள் என்பது மக்களின் வெளிப்பாடுகளாக இருக்கும் அதே வேளையில் அவர்களின் மீதான திணிப்புக்களாகவும் இருக்கின்றன. இவ்விளக்கம் பண்பாட்டுக் கல்வி வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாகும். பிரிட்டனில் உருவான இக்கருத்தாக்கம் பின்னர் எல்லா நாடுகளிலும் பரவியது.அதிலிருந்து பண்பாட்டுக் கல்வி இருவிதப் போக்குகளுடனேயே வளர்ந்து வந்துள்ளது. விளிம்புநிலை மக்களின் குரல்களைக் கண்டறிந்து தொகுத்து அதனையே அவர்களின் பண்பாட்டுக் கூறுகளாக முன்னிறுத்தும் வெகுமக்கள் பண்பாட்டாய்வுப் போக்கு. அதற்கு மாறானதாகக் ஆதிக்கக் கருத்தியல் மற்றும் அடக்கி வைக்கும் சிந்தனை முறை மூலம் பண்பாடு உருவாக்கப்படுதலைக் கண்டறிந்து சொல்லும் திரள்மக்கள் பண்பாட்டாய்வுப் போக்கு.
இரு போக்குகளையும் இன்னொருவிதமாகவும் புரிந்துகொள்ளலாம். வெகுமக்கள் பண்பாட்டுக் கல்வி சாதாரண மனிதர்களின் வாழ்வுக்கான தேவைகளையும் அவர்களின் பண்பாட்டுக்கூறுகளையும் கவனித்துக் கொண்டேயிருப்பது. ஆனால் திரள்மக்கள் பண்பாட்டுக் கல்வியென்பது சாதாரண மனிதர்கள் எவ்வாறு வடிவ மைக்கப் படுகிறார்கள்; உளவியல்ரீதியில் அவர்கள் உருமாற்றம் செய்யப் படுவது எப்படி? உருமாற்றம் செய்யப் படுவதால் ஒட்டுமொத்த சமூகப்போக்கில் ஏற்படக்கூடிய விளைவுகள் எத்தகையன? பயன்படுத்தும் நோக்கங்களுடன் வினைகளாற்றும் பண்பாட்டுச் சக்திகள் எவையெவை? என்பதையெல்லாம் கண்டறிந்து சொல்லும் நோக்கங்களுடையது. பண்பாட்டுக் கல்வியிலுள்ள இருவிதப் போக்குகளின் பின்னணியில், மக்களைப் பண்பாட்டு வடிவங்களும் செயல்பாடுகளும் எவ்வாறு தன்னிலைகளாக மாற்றுகின்றன என்பதும் ஒரு குறிப்பிட்ட ஆசைகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் மட்டும் உரியவர்கள் எனச் சித்திரிக்க முயல்கின்றன என்பதும் கருத்தாக்க நிலையில் விளக்கப் படுகின்றன. இந்தக்கருத்தாக்கத்தை- உறுப்பினராக்கும் கருத்தாக்கத்தை- கோட்பாடாக முன்மொழிந்தவர் லூயி அல்தூஸர் என்னும் பிரெஞ்சு மார்க்சீயவாதி.
பண்பாட்டுக்கல்வி, பண்பாட்டை அதற்குள் செயல்படும் குறியீடுகள், செயல்பாடுகள் வழியாக ஆய்வு செய்கிறது. மக்கள், பண்பாட்டுக் கூறுகளிலிருந்தும் அவர்களின் விருப்பங்களிலிருந்தும் எவ்வாறு வெளியேற்றப் படுகிறார்கள் என்பதைச் சொல்கிற அதே நேரத்தில் சரியான பண்பாட்டு மதிப்பீடுகள் எவையென்பதைக்கண்டறிந்து சொல்லவும் முயற்சி செய்கிறது. நிகழ்கால முதலாளித்துவ சக்திகளின் கைகளிலுள்ள ஊடகத்தொழில் நிறுவனங்கள் முதலாளித்துவப் பண்பாட்டை உருவாக்கி மக்கள்மீது திணிக்க முயலும் போக்கையும் சுட்டிக் காட்டி, அதன்வழியே திரள்மக்களின் பண்பாடு மாற்றப் படுவதையும் பற்றி விவாதிக்கிறது. திரள்மக்கள் பண்பாடு பயன் படுத்தும் பண்பாட்டுக் கூறுகள், படைப்பாக்கச் செயல்பாடுகள் ஆகியவற்றின்வழியே நடைபெறும் பண்பாட்டுப் போராட்டத்தை எதிர்க்கும் நிலையில் வெகுமக்கள் பண்பாடு உருவாக்கப் படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
பண்பாட்டுக் கல்வியும் இலக்கியக்கல்வியும்:
இலக்கியக்கல்வியைக்கற்பித்து வந்த பல்வேறு நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இன்று பண்பாட்டுக் கல்வியின் பக்கம் திரும்பியுள்ளன. ஆனால் இவ்விருவகைக் கல்விக்கும் அடிப்படை யான வேறுபாடுகளும் சிக்கலான உறவுகளும் உள்ளன.கொள்கையளவில் பண்பாட்டுக்கல்வி எல்லாவற்றையும் ஒத்த தரத்தினதாகப் பார்க்கவும் உள்வாங்கிக் கொள்ளவும் செய்யும். சேக்சு(ஸ்)பியரும் இராப் இசையும் ; மேட்டுக்குடிப் பண்பாடும் பாமரர் பண்பாடும்; நிகழ்காலப் பண்பாடும் கடந்தகாலப்பண்பாடும் என எதனையும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் நடைமுறையில் எல்லா அர்த்தங்களும் பிரித்துப் பார்ப்பதிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் இலக்கியக் கல்வியோ எல்லாவற்றையும் ஒன்றாகக் கருதுவதுமில்லை; பிரித்துப்பார்ப்பதைத் தவிர்ப்பதுமில்லை.
பண்பாட்டுக்கல்வி இலக்கியக்கல்வியிலிருந்து வேறுபடும் இன்னொரு அம்சம் அதன் வளர்ச்சி. அதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் கவனித்தால் அது ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவதொன்றை எதிர்த்தே வந்துள்ளது. முதலில் மரபான இலக்கியக்கல்வியைப்பண்பாட்டுக் கல்வி எதிர்த்தது என்பது சொல்லப் படவேண்டியது.மரபான இலக்கியக்கல்வியின் படிப்பு முறைகளைப் பண்பாட்டுக் கல்வி தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. மரபான இலக்கியக்கல்வியின் மூலம் சொல்லப்படும் விளக்கங்களின் வழி கிடைப்பதென்ன? என்று கேள்வியெழுப்பிடும் பண்பாட்டுக் கல்வி, உன்னதமான படைப்புக்கள் தரும் அனுபவங்கள், அவைகளுக்குள் இருக்கும் படைப்புக் கூறுகள், அவற்றின் அழகு, படைப்பாளிகளின் சாதனைகள், படைப்பாளியின் சிந்தனை வெளிப்பாடு, அவனது உலகக்கோட்பாடு என்பனதான்.ஆனால் சாதாரண வாசகர்களுக்கு இதனால் கிடைப்பன பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறது பண்பாட்டுக்கல்வி. ஆனால் இலக்கியக்கல்வியின் இப்போதைய போக்கு அத்தகையதல்ல. புதியபுதிய இலக்கியக் கொள்கைகள் உருவான பின்பு இலக்கியக் கல்வியே இறுக்கமானதாகவும் எதனுடனும் போட்டியிடத் தக்கதாகவும் மாறிக் கொண்டுதான் வருகிறது.
இலக்கியக் கல்வியின் காத்திரமான ஆய்வுகளைத் தொடர்ந்து திரள் மக்கள் பண்பாட்டையும் அதனூடாக அறியப்படும் பரப்பியத்தின் தளங்களையும் ஆய்வு செய்யும் ஆய்வுகள் நிகழ்காலத்தின் தேவை. பொதுவாக இரட்டைகளால் -கறுப்பு x வெளுப்பு அல்லது தீமை xநன்மை, புனிதம் x தீட்டு, கிராமம் x நகரம், ஆண்மை x பெண்மை, மையம் x ஓரம், தேவதை x ராட்சசி சிறுதெய்வம் அல்லது நாட்டார் தெய்வம் x பெருந்தெய்வம், அந்நியர் x உள்ளூர், தாய்மொழி x அந்நிய மொழி போன்ற இரட்டைகளால் கட்டியெழுப்பித் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் பரப்பியம் மிகுந்த கரிசனம் கொண்டது போலவும், பெருந்திரளின் கருத்தியலை பிரதிநிதித்துவப் படுத்துவது போலவும் தரும் தோற்றம் மிகையானது; பாவனையானது என்று சொல்லலாம். இதனைப் புரிந்து கொள்ள விரும்பும் ஓர் ஆய்வாளன் திரள் மக்கள் பண்பாட்டினை ஆய்வு செய்யும் கருவிகளைக் கைக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு முன்னோடிப் பல்கலைக்கழகம் இதுபோன்ற புதிய எல்லைகளுக்குள் நகர வேண்டிய தேவைகளை உணர வேண்டும்.