27.12.2023.....தமிழராய்ப் பிறந்தும் தமிழைத் தாழ்த்தவும் பழிக்கவும் செய்வதில் பேருவகைக் கொள்ளும்வண்ணம் தொல்காப்பியத்தின் காலம் கி. பி. 800 என்றிருக்கலாமெனப் வடுகப் பிராமணரோடு சேர்ந்து ஊளையிடும் பேர்வழிகளின் பார்வைக்காகத் ‘தமிழரின் தொன்மை’ எனும் நூலின் ஒரு பகுதியான ‘தொல்காப்பியத்தின் காலத்தைச் சுட்டும் மிலங்கோவிச் கோட்பாடு’ எனும் பகுதியை அடியில் தருகிறேன். -- குணா
தொல்காப்பியத்தின் காலத்தைச் சுட்டும் மிலங்கோவிச் கோட்பாடு தொல்காப்பியம் தமிழருக்குக் கிடைத்துள்ள தொன்மையான இலக்கண நூல். தமிழருக்கு மட்டுமன்றி, இதுவரையில் கிடைத்துள்ள இலக்கண நூல்களில் உலகிலேயே தொன்மையான இலக்கண நூலும் தொல்காப்பியமாகும். தமிழ் ஆய்வு எனும் களத்தில் புகுந்துகொண்டு பேயாடிவரும் ஐராவதங்களைப் போன்ற இனப்பகைகள் தொல்காப்பியத்தின் காலத்தை வேண்டுமென்றே மீமிகப் பின்னுக்குத் தள்ளிக் குழப்படிகளைச் செய்துவருவதை வாய்மூடி ஏற்றுக்கொள்ளும் தமிழர்களில் ஆய்வாளர்களும் பல்கலைக்கழகப் பெருமான்களும் அத் தொல்காப்பியம் இற்றைக்கு 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனத் தொல் காப்பியத்தின் காலம் எனும் நூலில் நான் வழக்காடியதை ஏறெடுத்தும்கூடப் பார்ப்பதில்லை. வானியல் புலத்தில் இன்று கொற்றம் புரிந்துவருகிற மிலுட்டின் மிலங்கோவிச் (Milutin Milankovic 1879-1958) எனும் செர்பிய நாட்டு வானியலார் பருவ மாற்றங்களைப்பற்றி முன்வைத்த கோட்பாட்டை வைத்துப் பார்த்தால், தொல்காப்பியத்தின் காலம் இற்றைக்கு 11,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பது தெரிய வருகிறது. மிலங்கோவிச் பருவச் சுழற்சிக் கோட்பாட்டை எடுத்த எடுப்பில் சொன்னால், வானியலின் அடிப்படைகளை அறியாதவர்க்குப் புரியாது என்பதால், அவ் வானியலின் அடிப்படைப் பாடங்களை முதலில் சொல்லியாக வேண்டியுளது. அதனால்தான், அடுத்து வருகிற பாடங்கள். அச்சுச் சாய்கை (Axis Tilt) ஞாயிற்றைச் சுற்றி வரும் புவியின் பாதையான புவிமண்டிலத் தளத்திலிருந்து புவியின் அச்சு ஒரு பக்கம் சாய்ந்து கிடப்பதால்தான் பருவங்கள் (பெரும்பொழுதுகள்) மாறுகின்றன. ஞாயிற்றை நோக்கிப் புவியின் வடவரைகோள் (Northern Hemisphere) சாயும்போது, அவ் வடவரைகோளில் வேனில்(கோடைக்)காலமாய் இருக்கும்; அப்போது தென்வரைகோளில் பனிக்காலமாயிருக்கும். ஞாயிற்றைப் புவி இடஞ்சுழியாய்ச் சுற்றி வருவதால், ஆறு மாதங்கள் கழித்து இந்த நிலை தலைகீழாகிவிடும். அப்போது வடகோளரையில் பனிக்காலமும் தென்கோளரையில் வேனில்காலமுமாயிருக்கும். புவியின் அச்சு ஒரு பக்கம் சாய்ந்து கிடப்பதாலேயே இதுபோல் நிகழ்கிறது (படம் 1).1 சாய்மான ஊசல் (Precession of the Axis Tilt) அப் புவியச்சின் சாய்மானம், 22.1 பாகைக்கும் 24.5 பாகைக்கும் இடையில் ஊசலாடுகிறது. இந்த ஊசலாட்டம் 41,000 ஆண்டுகளுக்கு ஒரு முறையெனச் சுழல்முறையில் நிகழ்கிறது (படம் 2).2 அச்சலைவு (Precession of the Earth’s Axis) சாய்ந்த நிலையிலிருக்கிற புவியச்சு, மெல்லச் சுழன்று வட்டமிடுகிறது. இப் புவியச்சலைவு, கூம்பு வடிவத்திலிருக்கும். அவ் வட்டத்தின் ஆரம் இன்று 23.4º என்று உள்ளது. இது ஞாயிற்றுமண்டிலத்திற்கும் (Ecliptic) வான்கோளின் நடுவரைக்கும் (Celestial Equator) ) இடையிலான கோணத்தின் அளவேயாகும் (படம் 3).3 ஞாயிற்றுமண்டிலத்திற்கும் வான்நடுவரைக்கும் இடையிலான அந்தச் சாய்மானமே -- கோணமே -- ஞாயிற்றுமண்டிலச் சாய்மானம் (Obliquity of the Ecliptic) எனப்படும். இக் கோணத்தை epsilon எனும் கிரேக்க எழுத்தால் குறிப் பிடுவர். புவிமண்டிலத் தளத்தை (Earth's Orbital Plane) ஞாயிற்றுமண்டிலத் தளம் (Ecliptic Plane) ) என்றும் கூறுவர் (படம் 4).4 புவியின் அச்சலைவையே விழுக்களின் அலைவு (Precession of the Equinoxes) என்று இதுவரையில் கூறிவந்தனர். அதை நடுவரையலைவு (Precession of the Equator) என்றும் குறிப்பிடுவர். பிற கோள்களின் ஈர்ப்புவிசைகளுக்குப் புவி ஆளாவதால்தான் இந்த அச்சலைவு நிகழ்கிறது. தனக்குத் தானே சுழல்கிற புவியின் அச்சு, தலையை அசைத்து அசைத்து ஒரு சுற்றை முடிக்க ஏறத்தாழ 26,000 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது; அதாவது, 72 ஆண்டுகளுக்கு 1º என அதன் நடை இருக்கிறது. புவியச்சு தலையசைத்து அசைத்துச் சுழல நேர்ந்தாலும், அதன் சாய்மானக் கோணம் மட்டும் மீமிக மெல்லவே மாறும். இன்று அது 23.4º என்றுள்ளது.5 புவியின் வடகோளரையில் இன்று உச்சியிலிருக்கும் போலாரிசு (Polaris) என்ற வடதுருவமீன் அப் புவியின் அச்சலைவால் காலப்போக்கில் இடம் மாறிவிடும்.; இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்குப்பின் வேகா (Vega) எனும் உடு, வடதுருவமீனாகிவிடும் (படம் 5).6 தலையசைவு (Nutation) புவியச்சின் அலைவுப் பாதை, நேரிய வட்டமாயிருப்பதில்லை. அதன் தலை இப்படியும் அப்படியுமாக (பாம்பைப்போல்) வளைந்து நெளிந்து செல்வதால், அந் நடையைத் தலையசைவு (Nutation) என்பர் (படம் 6).7 இத் தலையசைவு நடையும் ஒரு சுற்றை முடிப்பதற்கு ஏறத் தாழ 26,000 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். புவிநடை ஞாயிற்றின் ஈர்ப்பு விசையையும் திங்களின் ஈர்ப்புவிசையையும் தவிர்த்துப் பிற கோள்களின் ஈர்ப்புவிசைகளுக்கும் புவி ஆளாகின்றது. கோள்களின் ஈர்ப்புவிசைகள் அவ்வளவு பெரிதாயில்லை யெனினும் ஞாயிற்றைச் சுற்றிவரும் புவியின் வட்டணையில் அவை சின்னஞ்சிறு அலைவுகளை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. ஞாயிற்றின் ஈர்ப்புவிசையாலும் திங்களின் ஈர்ப்புவிசையாலும் புவியச்சு இப்படியும் அப்படியுமாகத் தள்ளாடுகிறது(wobbles). அதாவது, அஃது இப்படியும் அப்படியும் தலையாட்டாமல் ஒழுங்காகச் செல்வதில்லை.8 இத் தலையாட்டத்தை (wobbling) முதன்முதலில் கண்டறிந்தவர் செர்பிய நாட்டு வானியலாராகிய மிலுட்டின் மிலங்கோவிச் என்பாரே என்று கூறப்படுகிறது.9 இந்தத் தலையாட்டம் போக, புவியின் ஈர்ப்புவிசையால், அப் புவியைச் சுற்றிவருகிற திங்களின் பாதை பாம்பு நகர்வதைப் போன்று நெளிந்து வளைந்து இருக்கும் (படம் 7).10 இதைக் கருதியே, தமிழ்க் கணியர்கள் திங்களைப் பாம்பாக உருவகப்படுத்தினர். இம் மெய்ம்மையினை என்றோ கண்டறிந்த அத் தமிழ்க் கணியர்கள், பாம்பு ஐந்திரம் (பாம்புப் பஞ்சாங்கம்) என்ற பஞ்சாங்கத்தை உருவாக்கினர்.11 அந்தப் ‘பாம்புப் பஞ்சாங்கம்’ மிகத் தொன்மையானது. நிலாக்கல் (Moonstone) எனப்படும் பாறையின்மீது படுத்துக்கொண்டு வானத்திலிருக்கும் உடுக்களை நோக்கியவாறு திருமாலான பெருமாள் வடிவமைக்கப்பட்டுள்ளான். கற்படுக்கையின்மீது படுத்துக் கொண்டு வான்உடுக்களைக் கூர்ந்து நோக்கியவண்ணம் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆசீவகத் துறவியின் உருவகமே பெருமாளின் அக் கோலமாகும். இதனால்தான், பெருமாள் வழிபாட்டுக்கு 'விண்ணவம்' எனும் பெயர் வந்தது. ‘விண்ணவம்’ என்ற பெயரே பின்னாளில் ‘வைணவம்’ என்றும் ‘வைஷ்ணவம்’ என்றும் திரிந்தது.12 திங்களாகிய நிலா புவியைச் சுற்றிவருகிற பாதை பாம்பு நகர் வதைப்போல் நெளிந்து வளைந்து இருப்பதால் திங்களைப் பாம்பாக உருவகப்படுத்திய தமிழ்க் கணியர்கள், ஆசீவகத் துறவிக் கோலத்தில் நிலாக்கல்லின்மேல் பள்ளிகொண்டிருக்கின்ற பெருமாளின் தலை மாட்டில், நிலவைக் குறிக்கிற பாம்பைப் படமெடுத்து நிற்கவைத்தனர். ஐந்திரமாகிய பஞ்சாங்கத்திற்கு ஐந்து உறுப்புகள் உண்டு. இதனால், பெருமாளின் தலைமீது படம் விரித்துள்ள பாம்புக்கு ஐந்து தலைகளை வைத்தனர். திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளின் தலைமாட்டில் உள்ள ஐந்துதலைப் பாம்பு என்பது பாம்புப் பஞ்சாங்கத்தின் உருவகமே அன்றி வேறில்லை என்ற உண்மை, எந்தமிழ் மூதாதையர் களின் வானியல்-கணிய புலமைக்குச் சான்று பகரும். திங்களின் பாம்பு போன்ற நடையை வைத்துப் புவியின் நடை நெளிந்தும் வளைந்தும் இருப்பதாக (Wiggles) இன்றைய வானியலார் கூறுவதையே படம் 7 தோராயமாகக் காட்டுகிறது. புவிமண்டில அலைவு (Earth’s Orbital Precession) கோள்களின் ஈர்ப்பு விசைகளால் புவியின் அச்சு வட்டமாகச் சுழல்கிறது. இதனால், புவிமண்டிலத்தில் ஓயாமலும் தொடர்ச்சியாக வும் மெதுவான மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒரு கோளின் வட்டணைத் தளத்திற்கும் ஞாயிற்றுமண்டிலத்திற்கும் இடையிலான கோணத்தைக் கோள்சாய்வு (Inclination of the Orbit of a Planet) என்கின்றனர். புவியின் கோள்சாய்வு= 0 என்றிருப்பதால், புவிமண்டிலத் தளமும் ஞாயிற்றுமண்டிலத் தளமும் ஒன்றேயா யிருக்கும்.13 ஆனால், புவிமண்டிலமும்கூடப் பிற கோள்களின் ஈர்ப்புவிசைகளால் மேலும் கீழுமாக மெல்ல நகர்வதை அண்மைக்கால ஆய்வுகள் காட்டின. புவிமண்டிலத்தின் சாய்வு(Inclination of Earth’s orbit) மாறு வதற்கேற்பப் புவிமண்டிலத் தளமும்கூட மேலும் கீழுமாக நகர்வது அதனால் கண்டறியப்பட்டது (படம் ????.14 இந்த நகர்வை ஞாயிற்றுமண்டில அலைவு (Precession of the Ecliptic) அல்லது வான்கோள் அலைவு (Planetary Precession) என்று குறிப்பிடுவர். மேற்சொன்ன நகர்வின் ஒரு நடை, 71,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றிருக்கும். இது 100,000 ஆண்டு வட்டப்பிறழ்ச்சியை (Eccentricity) ஒத்திருக்கிறது. இந்த 100,000 ஆண்டுச் சுழற்சி, பனியூழிச் சுழற்சி மாதிரியோடும் ஒத்துப்போகிறது. புவி அச்சலைவு நிகழும் 26,000 ஆண்டுக்காலச் சுழற்சியுடன் இணைந்து இந்த 71,000 ஆண்டுக்காலப் புவிமண்டில அலைவு, 41,000 ஆண்டுகளுக்கொரு முறையெனப் புவியச்சின் சாய்மானத்தை ஊச லாட வைக்கிறது. புவிமண்டில வட்டப் பிறழ்ச்சி (Orbital shape or Eeccentricity) கோள்வட்டணைகள் (Planetary Orbits) செவ்விய (Perfect) வட்டங்களாய் இல்லை. ஞாயிற்றைச் சுற்றிவரும் புவியின் பாதையாகிய புவிமண்டிலமும்கூடச் செவ்விய வட்டமாய் இல்லை. அது நீள்வட்ட வடிவில் இருக்கிறது. செவ்விய வட்டத்திலிருந்து நீள்வட்டமாகத் திரிகின்ற அளவே கோள்மண்டில வட்டப்பிறழ்ச்சி (Eccentricity) எனப்படும் (படம் 9).15 இதனை மையப்பிறழ்ச்சி என்றும் குறிப்பிடுவர். இந்த வட்டப்பிறழ்ச்சி 0 என்ற மேனியிலிருந்து மீமிக உச்சமாக 1 எனும் மேனியில் இருக்கும். 0 எனும் மேனி, செவ்விய வட்டத்தைக் குறிக்குமெனில், 1 எனும் மேனி பக்கவாட்டில் மீமிக நீட்டிய நீள்வட் டத்தைக் குறிக்கும். ஆனால், புவியின் வட்டப்பிறழ்ச்சி, 0.5 அளவுக்குப் போவதில்லை. புவியின் அடிநிலை வட்டப்பிறழ்ச்சி 0.000055 ஆகவும் அதன் உச்சநிலை வட்டப்பிறழ்ச்சி 0.0679 ஆகவும் உள்ளன (படம் 10) .16 இறங்குமுகத்திலுள்ள புவியின் இப்போதைய வட்டப்பிறழ்ச்சி 0.017 ஆகும். புவியின் இவ் வட்டப்பிறழ்ச்சி பெரும்பாலும் வியாழன், காரி (சனி) ஆகிய இரு கோள்களின் ஈர்ப்பு விசைகளாலேயே நிகழ்கிறது. வட்டப்பிறழ்ச்சி மாற்றங்களில் பெரும்பகுதி 413,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை எனும் சுழல்முறையில் நிகழ்கின்றது. இந் நிலையில், புவியின் வட்டப்பிறழ்ச்சி வேறுபாடு ஙு0.012 என்றிருக்கும். பிற சன்ன காரணங்களால் நேர்கின்ற மற்றொரு சுழற்சி, 95,000 ஆண்டுகளுக்கும் 125,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாயிருக்கும். பெருங்காரணத்தையும் சிறு காரணங்களையும் தொகுத்து, 400,000 ஆண்டுகளுக்கும் 100,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டது அந்த வட்டப்பிறழ்ச்சிச் சுழற்சியெனக் கூறுவர். மந்தோச்சம் நீள்வட்டப் பாதையில் செல்லும் புவி, ஞாயிற்றை நெருங்கவும் விலகிச் செல்லவும் செய்கிறது. ஞாயிற்றுக்கு மீமிக அருகில் புவி வருகிற நிலை இன்று சனவரித் திங்களில் நிகழ்கிறது. இம் மீயண்மை நிலையை மீயண்மை ஞாயிறு (Perihelion) என்கின்றனர். அதேபோல், ஞாயிற் றுக்கு மீமிகத் தொலைவிலிருக்கின்ற புவியின் நிலையை மீச்சேய்மை ஞாயிறு (Aphelion) என்பர். மீயண்மை ஞாயிற்றிலோ மீச்சேய்மை ஞாயிற்றிலோ புவி இருக் கின்ற நிலையைத் தமிழில் மந்தோச்சம் (மந்த+உச்சம்; Apsis) என்றனர். மீயண்மை ஞாயிறும் மீச்சேய்மை ஞாயிறும் ஒரே இடங்களில் நிலைத்து இருப்பதில்லை. அவையும் இடம் மாறுகின்றன. நீள்வட்டப் பாதையில் ஞாயிற்றைச் சுற்றிவரும் கோள்களின் வட்டணைகளும்கூட மீயண்மை ஞாயிற்றை மையமாகக் கொண்டு மெல்ல வட்டமிடுகின்றன. ஒரு கோள்மண்டிலத்தில் (Orbit) நிகழும் அது போன்ற வட்டஅலைவையே மந்தோச்ச அலைவு (Perihelion Precession or Apsidal Precession) என்கின்றனர். ஞாயிற்றின் மீயண்மை ஞாயிற்றையும் மீச்சேய்மை ஞாயிற்றையும் இணைக்கிற கோடு, ஒரு முனையில் ஊன்றிச் சுற்றுகிற போக்கே மந்தோச்ச அலைவு (Apsidal Precession or Orbital Precession) ஆகும் (படம் 11).17 மந்தோச்ச அலைவு பொதுவாக மீமிகச் சிறியதாயிருக்கும். மீமிக மெதுவான மந்தோச்ச அலைவு, ஒரு சுற்று வர 137,000 ஆண்டுகளாகும். மிலங்கோவிச் கோட்பாடு ஞாயிற்றின் ஈர்ப்பு விசையாலும் திங்களின் ஈர்ப்பு விசையாலும் புவியின் பாதையான புவிமண்டிலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களால், பருவங்கள் இடம்பெயர்கின்றன. ஒரு பருவச் சுழல் 19,000 முதல் 23,000 ஆண்டுவரையில் நீடிக்கும். புவிமண்டிலச் சாய்மானம் (Earth’s Orbital Inclination), புவியச்சுக்கும் புவியின் வட்டணைத்தளத்திற்கும் (Plane of Orbit) இடையிலான கோண அளவு முதலான அளபுகளில் (Parameters) நிகழும் மாற்றங்கள், புவியின் தட்பவெப்பத்தை-- குறிப்பாக, பனியூழிகளை-- கணக்கிட உதவுகின்றன. அதாவது, புவியின் வட்டப் பிறழ்ச்சியாலும் புவியச்சுச் சாய்கையாலும் அச்சலைவாலும் முடங்கல்களின்(Solstices) இடமாற்றங்களாலும் பருவங்களும் இடம்பெயர்ந்து சுழல்கின்றன. புவிமண்டில வட்டணையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றங்கள் (Orbital Changes) நிகழ்கின்றன. அவ் வட்டணை மாற்றங்களால் நேரும் பருவச் சுழற்சியும்கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்றது. புவியின் வட்டப்பிறழ்ச்சியாலும் (Eccentricity) சாய்மானத்தாலும்(Axis Tilt) அச்சலைவாலும் (Precession of the Axis-tilt) பருவங்கள் நீளவும் குறையவும் செய்கின்றன (படம் 12) .18 பருவங்கள் வலமிருந்து இடமாகச் சுழல்கின்றன; அதாவது, வலஞ்சுழியாகப் பெயர்கின்றன. மீயண்மை ஞாயிறு இன்று பனிமுடங்கலுக்கு முன்னால் இருக் கிறது (படம் 13).19 அதாவது, அது குளிர்காலத்தில் உள்ளது. ஆனால், 5,000 ஆண்டுகளுக்கு முன்னால் அது துலைவிழுவுக்கு அருகில் இருந்தது. இற்றைக்கு 15,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே நிலையில் அஃது இருக்கும். அவ்வாறே 5,000 ஆண்டுகளுக்குப் பிறகு அம் மீயண்மை ஞாயிறு மேழவிழுவுக்கு அருகிலிருக்கும். இன்றிலிருந்து 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு அது வேனில்முடங்கலுக்கு அருகில் இருக்கும். நீண்ட நெடிய காலவெளிக்குள் பருவங்களின் கால நீட்டங்கள் புவியின் அச்சலைவால் (Precession of the Axis Tilt) மாற்றத்திற்கு ஆளாகின்றன. புவியச்சுச் சாய்வு (Obliquity of the Earth’s Axis) அப் பருவங்களின் கடுமையைக் குறைக்கவோ கூட்டவோ செய்கிறது. ஒரே நாட்காட்டியைத் தொடர்ந்து ஆளும்போது, வேனில்காலமும் பனிக்காலமும் வெவ்வேறு மாதங்களுக்கு மாறுகின்றன. இந்த மாற்றங்களால் தான், காலப் பருவங்கள் மிதமாகவோ கடுமையாகவோ இருக்க நேரிடுகின்றன. 2015ஆம் ஆண்டில் புவியச்சுச் சாய்மானம் 23.4°என்றிருக்கிறது. ஏறத்தாழ 1,800 ஆண்டுகளுக்குப்பின், அச் சாய்மானம் மாறும். இப்போது சனவரித் திங்களில் இருக்கிற மீயண்மை ஞாயிறு, 1,800 ஆண்டு களுக்குப்பின் பிப்ருவரி மாதத்தில் இருக்கும்.20 அதாவது, ஏறத்தாழ 1,800 ஆண்டுகளுக்கு ஒரு மாதம் எனும் மேனியில் மீயண்மை ஞாயிறு பெயரும் என்று வைத்துக்கொண்டால், அதன் பெயர்ச்சியைப் பின்வருமாறு பட்டியலிடலாம்: மீயண்மை ஆண்டுகளுக்குப்பின் ஞாயிறு இருக்கும் மாதம் 1,800 பிப்ருவரி 3,600 மார்ச்சு 5,400 ஏப்ரல் 7,200 மே 9,000 சூன் 10,800 சூலை ஏறத்தாழ 11,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீயண்மை ஞாயிறு சூலைத் திங்களில் இருக்கும் என்பதை மேலேயுள்ள பட்டியல் காட்டு கிறது (படம் 14).21 இந்த மாற்றங்களைக் கணக்கிட்டுக் கூறிய மிலுட்டின் மிலங்கோவிச், அதை ஒரு தெரிவியலாக்கினார். அதை மிலங்கோவிச் வட்டணை மாற்றங்கள் (Milankovic Orbital Variations) என்றும், மிலங் கோவிச் கோட்பாடு என்றும் கூறுவர். மீயண்மை ஞாயிறு நிகழும் காலமும் மெல்ல மாறுகிறது. இன்று அம் மீயண்மை ஞாயிறு சனவரி மாதத்தின் தொடக்கத்தில் உள்ளதால், புவியின் வடகோளரையில் முன்பனிக்காலமாக இருக்கிறது; அதாவது, பனிக்காலம் அவ்வளவு கடுமையாக இல்லை. ஆனால், மந்தோச்சத்தைச் சார்ந்து பருவங்கள் 22,000 ஆண்டு களுக்கு ஒரு முறை மாறுகின்றன. இதன்படி, இன்று சனவரி மாதத்தில் இருக்கிற மீயண்மை ஞாயிறு 11,000 ஆண்டுகளுக்குமுன் சூலை மாதத் தில் இருந்திருக்க வேண்டும் என்பர். பருவக்காலத் தட்பவெப்பம் அப்போது இன்றுள்ளதைவிட வெம்மையாயிருந்தது. மீயண்மை ஞாயிறு நேர்கின்ற காலத்திற்கும் பருவங்களின் அலைவுகளுக்கும் இடையிலான இன்றியமையாத உறவை அது காட்டும். புவியச்சு ஊசலாடுகிற காலமாகிய 41,000 ஆண்டுகளும், பருவ அலைவு சுழற்சிக்கான 22,000 ஆண்டுகளும் சேர்ந்து வேனில்காலத் தினதும் பனிக்காலத்தினதும் கடுமையையும் மிதநிலையையும் பனிப் படலங்களின் அடர்த்தியையும் தீர்மானிக்கின்றன.* * The closest approach of the earth to the sun is called perihelion, and it now occurs in January, making northern hemisphere winters slightly milder. This change in timing of perihelion is known as the precession of the equinoxes, and occurs on a period of 22,000 years. 11,000 years ago, perihelion occurred in July, making the seasons more severe than today. The "roundness", or eccentri-city, of the earth's orbit varies in cycles of 100,000 and 400,000 years, and this affects how important the timing of perihelion is to the strength of the seasons. The combination of the 41,000 year tilt cycle and the 22,000 year precession cycles, plus the smaller eccentricity signal, affect the relative severity of sum-mer and winter, and are thought to control the growth and retreat of ice sheets.22 தொல்காப்பியத்தின் காலம் மேற்போந்த விளக்கங்களைக் கொண்டு தொல்காப்பியத்தின் காலத்தைத் துல்லியமாகக் கணக்கிடவியலும். தொல்காப்பியம் கூறும் ஆறு பெரும்பொழுது(பருவங்)களில் கார்காலத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். காரும் மாலையும் முல்லை23 என்று வரும் தொல்காப்பிய நூற்பாவுக்குப் பொருளுரைக்கும் இளம் பூரணர், “காராவது மழை பெய்யும் காலம். அஃது ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும்.”24 என்று வரையறுத்துக் கூறுகிறார். இளம்பூரணரின் காலம் கி. பி. 11ஆம் நூற்றாண்டு. இதனால், அவரது உரையில் கூறப்படும் கார்காலத்தில் ஆவணியும் புரட்டாசி யுமே கார்காலமாயிருந்திருக்குமோ எனும் கேள்வி எழத்தான் செய் கிறது.. ஆனால், தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தில் ஆவணியும் புரட்டாசியும்தான் கார்காலமா யிருந்ததெனக் கூறலாகாது. இன்றோ, தென்மேற்குப் பருவமழை ஏறத்தாழ சூன் 1 அன்று (வைகாசி மாத இறுதியில்) தென்சேரலத்தில் தொடங்குகிறது. அதாவது, இளவேனில் பருவத்திலேயே அது தொடங்குகிறது. சூலை 15 அன்று (ஆனி மாதத்தின் இறுதியில்) அத் தென்மேற்குப் பருவமழை இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்குமாகப் படர்கிறது.25 அதேபோன்று, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20 அன்று (ஐப்பசி மாதத்தின் பிற்பகுதியில்) தொடங்குகிறது. அதாவது, இன்று அது கூதிர்காலத் தொடக்கத்தில் பெய்யத் தொடங்குகிறது. இப் பருவ மழைக்காலங்களை மே மாதம் முதல் செப்தம்பர் (அதாவது, வைகாசி முதல் புரட்டாசி) வரையில் நீடிக்கிற கோடைப் பருவமழை (Summer Monsoon) என்றும், அக்டோபர் முதல் நவம்பர் (ஐப்பசி-கார்த்திகை) வரை நீடிக்கிற குளிர்காலப் பருவமழை (Winter Monsoon) என்றும் வகைப்படுத்துகின்றனர். தமிழர்கள் வரையறுத்த பெரும்பொழுதுகள் (பருவங்கள்) ஆறு. அவை 2014-2015ஆம் ஆண்டில் இவ்வாறு இருந்தன: 2014 சித்திரை ஏப்ரல் 14- மே 14 } } இளவேனில் வைகாசி மே 15-சூன் 14 } ஆனி சூன் 15-சூலை 16 } } முதுவேனில் ஆடி சூலை 17-ஆகத் 16} ஆவணி ஆகத் 17-செப் 16 } } கார் புரட்டாசி செப் 17-அக்டோ 17} ஐப்பசி அக்டோ 18-நவம் 16 } } கூதிர் கார்த்திகை நவம் 17-திசம்பர் 15} 2014-15 மார்கழி திசம் 16-சன 14 } } முன்பனி தை சன 15-பெப் 12 } மாசி பெப்ரு 13-மார்ச் 14} } பின்பனி பங்குனி மார்ச் 15-ஏப்ரல் 13 } வடவெல்லை வடவேங்கடம் என்பது விந்தியமலையைக் குறிக்கும். ‘வெப்பத்தைக் கடத்தும் மலை’ என்று பொருள்படுகிற 'வெம்+கடம்' என்பதே ‘வேங்கடம்’ என்றானதாம். ஆனால், 'தென்வேங்கடம்' என்பது திருப்பதி மலையைக் குறிக்கும். இதனடிப்படையில் பார்த்தால், வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து26 என்ற தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் ‘வடவேங்கடம்’ என்பது விந்தியமலையைத்தான் குறிக்கும். மிகத் தொன்மையான தொல்காப்பியத்திற்குக் கி. மு. 9ஆம் நூற்றாண்டில்தான் பாயிரம் எழுதப்பெற்று நூலின் முன்பு ஒட்டப்பட்டது. 'தொல்காப்பியத்தின் காலம்' எனும் நூலில் நான் அதைப்பற்றி விரிவாக வழக்குரைத்துள்ளேன். இதனால், தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதப்பெற்ற 9ஆம் நூற்றாண்டில் வடவேங்கடம் எனும் விந்தியமலை தமிழ்ப் பெருநிலத்தின் எல்லையாயிருந்தது புலப்படும். ஆனால், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியினைக் காரிக்கிழார் பாடிய வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்27 என்ற புறநானூற்றுப் பாடலில் இமயமலைதான் தமிழகத்தின் வடக்கெல்லை என்று கூறப்பட்டுள்ளது. “வடக்கின்கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும், தெற்கின்கண்ணது உட்குந்திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும், கீழ்க்கண்ணது கரையைப்பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும், மேல்கண்ணது பழைதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்”28 என்பதே அந்த வரிகளுக்கான பொருளென அப் புறநானூற்றுக்கான பழைய உரை கூறுகிறது. இதனால், அம் முதுகுடுமிப் பெருவழுதிக் காலத்தில் ‘வடாஅது பனிபடு நெடுவரை’ எனப்படும் இமயமலைதான் தமிழர்களின் வடவெல்லையாயிருந்தது என்பது உறுதிப்படுகிறது. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் தளைப்படுத்தப்பட்டிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங்கோழியூர்க்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலிலும், தென்குமரி, வடபெருங்கல் குணகுட கடலாஎல்லை29 என்றுள்ளது. “தென்றிசைக்கட் கன்னியும் வடதிசைக்கண் இமயமும் கீழ்த் திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக”30 எனப் புறநானூற்றின் பழைய உரை அவ் வரிகளுக்குப் பொருள் கூறுவதும் அதனை உறுதிசெய்கிறது. அதேபோல், தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலாஎல்லைத் தொன்றுமொழிந்து தொழில்கேட்ப31 எனும் மதுரைக் காஞ்சி வரிகளுக்குப் பொருள் கூறுகிற நச்சினார்க்கினியர், “தென்றிசைக்குக் குமரி எல்லையாக வடதிசைக்குப் பெரியமேரு எல்லையாகக் கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் கடல் எல்லையாக இடையில் வாழ்வோரெல்லாம் தம்முடன் பழமையைச் சொல்லி ஏவல் கேட்கும்படி”32 என்று கூறுகிறார். இதனால், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் காலத்திலும்கூட இமயமலையே தமிழர்களின் எல்லையாயிருந்தது என்பது உறுதிப்படுகிறது. இந்த நிலையே சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் வரையில் நீடித்தது என்பதைப் பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!33 எனும் சிலப்பதிகார வரிகள் காட்டுகின்றன. தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் தமிழ்தான் பேசப்பட்டிருக்க வேண்டும். அதனால், கார்காலம் எனும் மழைக்காலம் அப்போது தென்மேற்குப் பருவமழைக் காலமாகவே தமிழர்க்கு இருந்திருக்க வேண்டும். அக் கார்காலம் அன்று வைகாசி மாதத்தில் தொடங்கியிருக்கும். தென்மேற்குப் பருவமழையின் பிற்பகுதி என்றால்... இளம்பூரணரின் கூற்றின்படி ஆவணியும் புரட்டாசியுமே கார் காலம் என்று இருந்திருக்குமாயின், அது தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் பிற்பகுதியாகும். சூன் 1 அன்று தென்சேரலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை வைத்துப் பார்த்தால், வைகாசி பிற்பகுதியிலிருந்து ஆடி முற்பகுதி வரையிலான இரண்டு மாதங்களே தென்னிந்தியாவில் கார்காலமாயிருந்திருக்கும். தென்மேற்குப் பருவமழை சூலை 15 அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுதுமாகப் படர்வதை வைத்துப் பார்த்தால், அக் கார்காலம் ஏறத்தாழ ஆடியும் ஆவணியும் அடங்கிய இரண்டு மாதங்களாயிருந்திருக்கும். சூன் 1 அன்று கார்காலம் தொடங்கியதென வைத்துக்கொண்டால், இளம்பூரணர் சொல்வதைப்போல் ஆவணியும் புரட்டாசியும் கார்காலமாவதற்கு இரண்டரை மாதக் காலம் தள்ளிப் போயுள்ளது. மீயண்மை ஞாயிறு இருக்கின்ற இடத்தைத் தழுவி ஒரு பருவம் ஒரு மாதம் தள்ளிப்போவதற்கு 1,800 ஆண்டுகள் பிடிக்குமென 'மிலங்கோவிச் பருவச் சுழற்சிக் கோட்பாடு' கூறுகிறது. அதன்படி, கார்காலம் இரண்டரை மாதங்கள் தள்ளிப்போவதற்கு 4,500 (=2.5x1,800) ஆண்டுகளாகி யிருக்கும். இந்தியா முழுவதும் கார்காலம் சூலை 15 அன்று தொடங்கியதென வைத்துக்கொண்டால், இளம்பூரணரின் கூற்றுப்படி ஆவணியும் புரட்டாசியும் கார்காலம் ஆவதற்குக் அக் கார்காலம் ஒன்றரை மாதக் காலம் தள்ளிப் போயுள்ளது. இவ்வாறு ஒன்றரை மாதங்கள் தள்ளிப்போவதற்கு 2,700 ???? 1.5x1,800) ஆண்டுகள் பிடித்திருக்கும். வடகிழக்குப் பருவமழை என்றாயின் ... வடகிழக்குப் பருவமழைதான் தமிழகத்தின் தலையாய மழைக்காலமென வைத்துக்கொண்டால், அக்டோபர் 20 அன்று தொடங்கும் அக் கார்காலம் ஐப்பசி மாதத்தின் பிற்பாதியில் (அக்டோபர் முற்பாதி), தொடங்கி மார்கழி மாதத்தின் முற்பாதி (திசம்பர் பிற்பாதி) வரையில் என்ற இரண்டு மாதங்களாயிருக்க வேண்டும். இவ்வாறாயின், இளம்பூரணர் குறிப்பிடும் கார்காலம் இரண்டரை மாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. கார்காலம் இவ்வாறு இரண்டரை மாதங்கள் தள்ளிப்போவ தற்கு 4,500 (=2.5x1,800) ஆண்டுகள் பிடித்திருக்கும். கார்காலம் ஆவணியும் (ஆகத்து பிற்பாதி-செப்தம்பர் முற்பாதி) புரட்டாசியும் (செப்தம்பர் பிற்பாதி-அக்டோபர் முற்பாதி) அடங்கிய தெனக் கூறும் இளம்பூரணர், இப்போதைக்கு 900 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர். ஆகவே, இரண்டரை மாதங்கள் தள்ளிப்போவதற்கு ஆகும் 4,500 (=2.5x1,800) ஆண்டுகள், இளம்பூரணரின் காலமாகிய கி. பி. 11ஆம் நூற்றாண்டுடன் (அதாவது, 900 ஆண்டுகளுடன்) பொருந்தவில்லை. அதாவது, அவர் வாழ்ந்த காலத்திற்கும் மேற்கூறிய கணக்கிற்கும் இடையில் 3,600 (4,500 - 900 = 3,600) ஆண்டுகள் துண்டு விழுகிறது. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியின்போதுதான் தமிழகத்தின் வடவெல்லை திருவேங்கடம் (திருப்பதி) என்று தமிழறிஞர்களால் சுருக்கப் பட்டது. திருவேங்கடமே தமிழகத்தின் வடவெல்லை என்றான பிறகே ஐப்பசி மாதப் பிற்பகுதியில் (அக்டோபர் 20 அன்று) தொடங்கும் வட கிழக்குப் பருவமழைக்காலமே தமிழகத்தின் பெருமழைக் காலம் ஆனது. மேலும், அக்டோபர் 20 அன்று பெய்யத் தொடங்குகிற வடகிழக்குப் பருவமழை, வெறும் 50 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கிறது.34 இதனால், இளம்பூரணரின் காலத்தில், வடவேங்கடம் எனப் பட்ட விந்தியமலைதான் தமிழகத்தின் வடவெல்லையாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தென்மேற்குப் பருவமழையே இளம்பூரணரின் காலத்தில் தமிழரின் தாயகத்திற்குத் தலையாய மழைக்காலமா யிருந் திருக்க வேண்டும். இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமென்று இருந்த தமிழரின் தேயம் தேய்ந்து தேய்ந்து இன்று அதன் தென்கோடியில் குன்றி நிற்கிறது. இதனால், தென்மேற்குப் பருவமழைப் பொழிவு தமிழகத்தில் குறைவாயுள்ளது. ஆனால், தமிழரின் தேயம் இந்தியத் துணைக்கண்டம் முழு வதுமென இருந்தபோது, தென்மேற்குப் பருவமழைப் பொழிவே தலையாய மழைக் காலமாயிருந்திருக்கும். மீயண்மை ஞாயிறு இன்று முன்பனிக்காலத்தில் (மார்கழியில்) இருக்கிறது. 2015ஆம் ஆண்டில் அது சனவரி 3 அன்று இருந்தது. 1,800 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதத்திலிருந்து அடுத்த மாதத்திற்கு மீயண்மை ஞாயிறு இடம்பெயர்வதை ஏற்கெனவே பட்டியலிட்டுக் காட்டினோம். அதன்படி, தென்மேற்குப் பருவமழை சூலை 15 அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் படர்வதையும், 'மீயண்மை ஞாயிறு' 10,800 ஆண்டுகளுக்குமுன் சூலை மாதத்தில் இருந்ததையும் வைத்துப் பார்த்தால், மிலங்கோவிச் பருவச் சுழற்சிக் கணக்கு மெய்ப்படுகிறது. படம் 13 அதனை உறுதிப்படுத்துகிறது. தொல்காப்பியத்திலுள்ள இடைச்செருகல்களால் வரும் காலக்குழப்பத்தைத் தள்ளிவிட்டு, வானியல் விளைவிக்கும் பருவ மாற்றங்களை மிலங்கோவிச் சுழற்சிகளை வைத்து ஆராய்ந்தால், தொல்காப்பியத்தின் காலத்தைச் சரிவரக் கணிக்க முடியும். அதன்படி, தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலம் இற்றைக்கு 10,800 ஆண்டுகளுக்கு முன்பு என்று இருத்தல் வேண்டும். நூற்குறிப்புகள் 1. https://en. wikipedia.org/wiki/Axial_tilt 2. https://en.wiki pedia .org/wiki/Milankovitch_cycles 3. https://commons. wikimedia. org/wiki/File:Earths_orbit_and_ecliptic.PNG 4. http://sundialsoc.org.uk/old/HDSW.php 5. https://en.wikipedia.org/wiki/Axial_precession 6. http://www.britannica.com/topic/polestar 7. (https://en.wikipedia.org/wiki/Nutation 8. http:/www. livescience. com/17619-lasers-measure-earth-rotation-wobble. html) 9. http://www.ncdc.noaa.gov/paleo/milankovitch. html 10. http://www. collectspace.com/ubb/Forum29/HTML/001492-2.html 11-12. முனைவர் வே. பாண்டியன், தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை, Vina - yaka Worship - A great Mystery Solved, Part 2 (காணொளி) 13. https://en.wikipedia.org/wiki/Orbital_inclination 14. http://www.skepticalscience.com/Milankovitch.html 15. http://apollo.lsc.vsc.edu/.../chapter16/mil_cycles.html 16. http://www.ice-age-ahead-iaa.ca/scrp/tipb011.htm 17. http://calendars.wikia.com/wiki/Category:Astronomical_epochs 18. http://www.skepticalscience. com/co2-lags-temperature-intermediate.htm 19. https://en.wikipedia.org/wiki/Milankovitch_cycles 20. https://www.khanaca-demy.org/.../precession-causing... 21.http://www.atmo.arizona.edu/.../Lect.../Lecture7_webpost.pdf 22. Astronomical Theory of Climate Change, http://www.ncdc. noaa.gov/paleo/milankovitch.html 23. தொல்காப்பியம், பொருள் 1:6. 24. தொல்: பொருள் 1:6, இளம்பூரணர் உரை, திருநெல்வேலி, தென்னிந் திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், சென்னை-18. 25. https://en.wikipedia. org/wiki/Monsoon_of_South_Asia 26. தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம் 1-3. 27. புறநானூறு 6:1-4. 28. புறநானூறு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் ஆறாம் பதிப்பு, பப 17-18. 29. புறநானூறு 17:1-2. 30. புறநானூறு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் ஆறாம் பதிப்பு, ப 45. 31. மதுரைக் காஞ்சி 70-72. 32. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பு, தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர், நிழற்படப்பதிப்பு, 1986, ப 293. 33. சிலப்பதிகாரம் 11:19-22. 34. https://en.wikipedia.org/wiki/Monsoon_of_South_Asia (எல்லாப் படங்களையும் பதிவேற்ற இயலவில்லை!)