குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தமிழ்ப்பணிகள்

1. அறிமுகம்

19.04.2020 ..தமிழ் கூறும் நல்லுலகில் போற்றப்படும் பேராசிரியர்களுள் க.கணபதிப்பிள்ளை முதன்மையானவர். யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை புலோலி கிழக்கில் 1902 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஆரம்பக்கல்வியை வேலாயுதம் மகா வித்தியாலயம், ஹார்ட்லி கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பண்டிதர் பிரம்ம சிறி முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழையும், இசையையும் கற்றுக்கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்து, 1930 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தேர்வில் சங்கத மொழியைச் சிறப்புப் பாடமாகவும், பாளியைத் துணைப் பாடமாகவும் கற்று முதல் வகுப்பில் சித்தியெய்தினார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தினையும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். 1936 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவரது பெரு முயற்சியால் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வு ஏற்படுத்தப்பட்டமையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைத்தேர்வு தொடங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். நாடகப் பணி, கவிதை, சிறுகதை ஆக்கமுயற்சிகள், இலக்கிய, வரலாற்று, கல்வெட்டு ஆய்வுகள் எனப் பல துறைகள் சார்ந்து பணியாற்றினார்.

2. நாடகப் பணி

பேராசிரியரவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடங்கி அதனைத் தொடர்ந்து நடத்த வழி செய்ததுடன் தமிழ்ச் சங்கத்திற்கென பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தினார். 'உடையார் மிடுக்கு', 'கண்ணன் கூத்து', 'நாட்டவன் நகர வாழ்க்கை', 'முருகன் திருகுதாளம்'; என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். இந்நாடகங்கள் 'நானாடகம்'(1940) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. மேலும் 'பொருளோ பொருள்', 'தவறான எண்ணம்' ஆகிய இரு நாடகங்களும் பேராசிரியரால் எழுதப்பட்டதுடன் அந்நாடகப்பிரதிகளும் 'இரு நாடகம்'(1952) என்ற தலைப்பில் அச்சுருப் பெற்றன.

ஏட்டுத் தமிழை விடவும் பேச்சுத் தமிழே ஒரு மொழியின் உயிர்ப்பை அறிய உதவும் என்று கருதி, செந்தமிழ் நடையில் நாடகங்கள் எழுதப்பட்டு வந்த சூழலில் பேச்சுமொழியைக் கையாண்டு நாடகங்களை ஆக்கினார். குறிப்பாக யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைக் கையாண்டு பல நாடகங்களை எழுதினார். மேற்கூறிய நானாடகம், இரு நாடகம் ஆகிய இரு நாடக நூல்களும் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். நாடகங்களை படிப்புக்காக மட்டுமன்றி நடிப்புக்காக பயன்படவும் வழி செய்து நெறிப்படுத்தினார். இவரது சங்கிலி(1956) என்ற வரலாற்று நாடக நூல் பாடநூல் புத்தகமாக வெளி வந்தது. இந்நூல் வரலாற்றை அறியச் செய்வதாக உள்ளது. மாணிக்கமாலை, கணபதிப்பிள்ளை நாடகத் திரட்டு, கற்பின் கொழுந்து என்பனவும் இவரது நாடக நூல்களாகும்.

3. கவிதை, சிறுகதை ஆக்கத்துறை

இவர் நாடகத்துறையில் மாத்திரமன்றி, கவிதை, சிறுகதை முதலான துறைகளிலும் ஈடுபாடுகாட்டினார். பழைய இலக்கிய வடிவத்தைப் புதுமைப் பொருளுக்குப் பயன்படுத்தினார். குறிப்பாக இவருடைய கவிதைகள் பழைய பாணியில் புதிய பொருளில் அமைந்துள்ளமையைக் காணலாம். இவரது காதலி ஆற்றுப்படை என்ற நூல் சங்க கால ஆற்றுப்படை இலக்கிய வடிவத்தினைக் கையாண்டு பழமையும் பதுமையும் கலந்த இலக்கியமாக அமைந்துள்ளது. ஒரு காதலிக்கு அவளது காதலன் இருக்கு மிடத்தையும் அங்கு செல்வதற்குரிய பாதையையும் இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. பூஞ்சோலை, வாழ்க்கையின் விநோதங்கள் முதலானவை இவர் எழுதிய புதினங்களுக்கு எடுத்துக் காட்டுக்களாகும்.

4. மொழிபெயர்ப்புப்பணி

பேராசிரியரவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, ஜேர்மன், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியுடையவராகக் காணப்பட்டமையினால் மொழி பெயர்பு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளிலும் ஈடுபட்டு பணியாற்றினார். ஜேர்மன் மொழியிலிருந்து மொழி பெயர்த்து இவர் எழுதிய நீரரமகளிர் என்ற கதை நீரில் வாழும் ஒரு பெண் நிலத்தில் வாழும் ஒருவனைக் காதலிப்பதனையும் அதனால் அடைந்த சோகத்தினையும் எடுத்துக் கூறுகின்றது. எகிப்திய கதை ஒன்றை 'விந்தை முதியோன்' என்ற தலைப்பில் கவிதை வடிவில் மொழி பெயர்த்துள்ளார்.

5. கல்வெட்டாய்வு

பேராசிரியரவர்கள் கல்வெட்டாய்விலும் தன்னை ஈடுபடுத்திப் பணியாற்றியுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியபோது இலங்கைத் தமிழ்க் கல்வெட்டியல் துறையில் போற்றத்தகுந்த பணியினை ஆற்றினார். கல்வெட்டிலுள்ள மொழியைக் கொண்டு தமிழில் புதியதோர் துறையில் ஆராய்ச்சியை மேற்கொண்டார். மகனை, மொரகாவலை, பாண்டுவஸ்னுவர போன்ற இடங்களில் கண்டு பிடிப்பபட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் பற்றி கட்டுரைகளை எழுதினார். இவ் ஆராய்ச்சிப் பணியைத் தொடர தமது மாணவர்களுக்கும் வழிப்படுத்தினார்.

6. ஏனையவை

இலங்கை வாழ் தமிழர் வரலாறு, ஈழத்து வாழ்வும் வளமும் ஆகிய நூல்கள் இவரது தமிழ்ப் பற்றினையும் தமிழர் வரலாறும் பண்பாடும் பேணப்படவேண்டுமென்பதையும் எடுத்துக் கூறுகின்றன. இவர் சிறந்த மாணவர் பரம்பரையை உருவாக்கிய நல்லாசானாகவும் மதிக்கப்படுகின்றார். பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, பொன்.பூலோகசிங்கம், அ.சண்முகதாஸ், ஆ.வேலுப்பிள்ளை என்போர் அவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

7. முடிவுரை

பொதுவாக நாடக ஆசிரியராக மாத்திரமன்றி கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் கல்வெட்டு ஆய்வாளர் என்று பல தளங்களில் தன்னை நிலை நிறுத்திய ஒருவராக பேராசிரியரவர்கள் முக்கியம் பெறுகின்றார் எனலாம்.