யப்பான், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யிம்னாசுடிக், டேபிள் டென்னிஸ், யிடோ போன்ற விளையாட்டுகளில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் தடகளத்தில் அதிக அளவில் சாதித்தது கிடையாது.
ஆனால், யப்பான் வீரர் ஒருவர் முதன்முறையாக 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்து சாதனைப் படைத்துள்ளார். டோயோ பல்கலைக்கழக மாணவரான யோஷிஹை (21 வயது) ரியோவில் நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றவர்.
இவர் இன்று யப்பானில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் கலந்து கொண்டார். அப்போது 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.98 வினாடிகளில் இலக்கை எட்டி சாதனைப் படைத்துள்ளார். ஜப்பான் வீரர் ஒருவர் 10 வினாடிக்குள் இலக்கை எட்டியது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன் கோயி இடோ என்பவர் கடந்த 1998-ம் ஆண்டு 10 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. 2007-ம் ஆண்டு வரை இதுதான் ஆசிய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யமைக்கா வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக உள்ளது.