05.09.2017-உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி,ஆறா வது முறையாக அணுகுண்டுச் சோதனை நடத்தி, அதைப் பெருமையுடன் பறைசாற்றியது வடகொரியா. இதை எதி ர்த்து ஐ.நாசபை, பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்ட த்தைக் கூட்டியது.
இதில் பேசிய அமெரிக்கா, 'போர் வேண்டுமென்று வடகொரியா பிச்சை எடுக்கிறது' என்று விமர்சித்துள்ளது.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தது வடகொரியா. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ள போதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை.
இந்நிலையில், ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏவுகணைச் சோதனை ஒன்றை வடகொரியா அரங்கேற்றியது.
’பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்தும் முதல் வெற்றிகர ஏவுகணைச் சோதனை. இதுபோல பல தாக்குதல்கள் பின்னாளில் தொடரும்’ என்று வடகொரியா அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.
இப்படித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நோக்கில், ஐ.நா சபையில் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
இதில், ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, ''வடகொரியாவின் நடவடிக்கை, அமெரிக்காவுடன் போர் வேண்டுமென்று பிச்சை எடுப்பதையே சுட்டிக்காட்டுகிறது.
நடந்தது எல்லாம் போதும். வடகொரியாவுடன் சுமுகமாகப் போக எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துப் பார்த்து விட்டோம். அப்படி இருந்தும் அவை எதுவும் சரிப்பட்டு வரவில்லை.
அமெரிக்கா, எந்த நாட்டுடனும் போரை விரும்பவில்லை. ஆனால், யாராவது தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாகத் திருப்பி அடிப்போம்.
இதுவரை ஐ.நா சபை நிறைவேற்றிய தீர்மானங்களும் எடுத்த நடவடிக்கைகளும் வேலை செய்யவே இல்லை.
எனவே, வடகொரியாவுக்கு வலிக்கும் வகையில் உடனடியாக கறாரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தையடுத்து, வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகளை ஐ.நா சபை சீக்கிரமே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.