விண்ணுந்து-விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து கிடைத்த சில பாகங்கள் ரசுயாவின் தரையில் இருந்து வானத்தில் தாக்கும் பக் (BUK) ஏவுகணையின் பாகங்களுடன் பொருந்துவதாகவும் கிடைக்கப்பெற்ற ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில் மலேசிய விமானமானது ரஷ்யாவின் பக் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் நெதர்லாந்து தேசிய புலனாய்வுத்துறை தலைவரும் விமான விபத்து விசாரணை அதிகாரியுமான வில்பர்ட் பவுலிசென் தெரிவித்துள்ளார்.
உக்ரெய்னின் சுனிசுனி கிராமத்துக்கு தெற்கே 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விவசாய நிலப்பரப்பிலிருந்து ஏவுகணை செலுத்தி மூலம் எறிகணை ஏவப்பட்டதாகவும் தாக்குதலுக்கு பின்னர் ஏவுகணை மீண்டும் செலுத்தி ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விமானம் தாக்குதலுக்கு இலக்கான வேளையில் குறித்த பகுதி ரசுய ஆதரவு ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் அவர் கூறி உள்ளார்.
நெதர்லாந்து தலைநகர் அமசுடர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடந்த 2014 யுலை மாதம் 17ம் தேதி புறப்பட்ட விமானம் உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 15 விமான பணியாளர்கள் உட்பட அதிலிருந்த 298 பேர் உயிரிழந்திருந்தனர்.