இளைஞர்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பதற்கு மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.கோடைகால விடுமுறை இப்போது ஆரம்பமாகியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து கோடைகால விடுமுறைக்காக தமது சொந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.
கோடைக்கால விடுமுறைக்காக தாம் பிறந்த நாட்டிற்கு செல்வதும் தமது பிள்ளைகளை அழைத்து சென்று உற்றார் உறவினர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்து வைப்பதும் தமது பாரம்பரிய இடங்களுக்கு அழைத்து சென்று இளைய தலைமுறையினருக்கு காட்டுவதும் வரவேற்க வேண்டிய விடயமே.
ஆனால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பெரும்வசதி வாய்ப்போடு வாழ்கிறோம் என காட்டும் வகையிலேயே அங்கு நடந்து கொள்கின்றனர். விடுமுறைக்காக செல்பவர்களில் 80வீதமானவர்கள் கடன்பட்டே செல்கின்றனர் என்ற உண்மையை இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு சொல்வதில்லை.பணத்தை அள்ளி வீசி பந்தா காட்டுவதால் வெளிநாடு என்பது பணம் காய்க்கும் தேசம் என இளைஞர்கள் நம்புகின்றனர்.
அரைகுறை ஆடைகளுடன் இதுதான் நாங்கள் வாழும் நாட்டின் நாகரீகம் என கூறிக்கொண்டு ஊரில் நிற்கும் இரண்டு அல்லது மூன்று கிழமைகளும் இவர்கள் போடும் ஆட்டத்தால் நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் கூட பணப்பைகளுடன் வெளிநாட்டிற்கு அனுப்பும் முகவர்களை தேடி அலைகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் இளைஞர்கள் வர விரும்பும் சுவிட்சர்லாந்து, பிரித்தானியா போன்ற நாடுகள் கடந்த வாரத்தில் குடிவரவு சட்டங்களில் கடுமையான இறுக்கங்களை கொண்டு வந்துள்ளன.
முக்கியமாக இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு அகதிகளாக வருபவர்களுக்க அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை பிரயைகளுக்கு அகதி அந்தசுதை வழங்கும் நடவடிக்கையில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுவிஸ் குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.
சுவிசுவெளிவிவகார அமைச்சு, சுவிசு குடிவரவு திணைக்களம் ஆகியன இணைந்து இலங்கையில் மேற்கொண்ட ஆய்வை அடுத்து சுவிட்சர்லாந்தில் இலங்கையர்கள் அகதி தஞ்சம் கோருவது, அவர்களை அகற்றுவது தொடர்பாக 47 பக்க அறிக்கை ஒன்றை சுவிசு குடிவரவு திணைக்களம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முதல் இலங்கைக்கு விசயம் செய்த சுவிட்சர்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழு வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று அங்குள்ள நிலமைகளை ஆய்வு செய்தனர். வடக்கு முதலமைச்சர் விக்னேசுவரன், குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்திருந்தனர்.
இதனையடுத்தே இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கில் 2015க்கு முன்னர் இருந்த நிலைமைகளும் அதன் பின் உள்ள சூழல்கள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் ஈ.பி.டி.பியும் கிழக்கில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கமும் ஆட்கடத்தல் கொலை, கொள்ளை, அச்சுறுத்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் இந்த இரு இராணுவ துணைக்குழுகளின் செயல்பாடுகளும் செயலிழந்துள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானும், வேறு ஒரு கொலை சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் பிரசாந்தனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால் இந்த இயக்கத்தின் வன்முறைகள் இப்போது கிழக்கில் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் களநிலவரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலும் இப்போது நீங்கியிருப்பதாக யாழ்ப்பாணத்திற்கு விசயம் செய்த சுவிஸ் அதிகாரிகளிடம் யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் பாரிய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் காணப்படுவதாகவும் இந்த நிலை மகிந்த ஆட்சிக்காலத்தில் காணப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் காணப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் நிலைமை மாறியிருப்பதாகவும் எனவே ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோர் அரசியல் அகதிகள் என்ற நிலைக்கு விண்ணப்பிப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளதாக சுவிசு குடிவரவு செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்பதால் தமக்கு இலங்கையில் இப்போதும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சிலர் அகதி தஞ்சம் கோரி வருகின்றனர். ஆனால் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களுக்கு சுவிசில் பாதுகாப்பு அவசியம் இல்லை என சுவிசு குடிவரவு திணைக்களம் அறிவித்திருக்கிறது. யுத்தம் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகள் அரச படைகளிடம் சரணடைந்தனர். இவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்தை சாரும். எனவே விடுதலைப்புலிகளுக்கோ அல்லது விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களுக்கோ சுவிட்சர்லாந்து அரசாங்கம் பாதுகாப்போ அடைக்கலமோ அகதி தஞ்சமோ வழங்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாடு கடத்தப்படுபவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதாக செய்யப்பட்ட முறைப்பாடுகளை தமது அதிகாரிகள் ஆய்வு செய்யதாகவும் இந்த கைதுகள் குடிவரவு சட்டத்தின் கீழ் சகல நாடுகளிலும் இடம்பெறும் சாதாரண நடைமுறை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு சட்டத்தை மீறி நாட்டை விட்டு வெளியேறியவர் உரிய ஆவணம் இன்றி அவசரகால பத்திரங்களுடன் நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவது சகல நாடுகளிலும் உள்ள விதியாகும். எனவே நாடு கடத்தப்படுபவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது குடிவரவு சட்டத்தின் கீழ் உள்ள விடயம் என்றும் அதனை அச்சுறுத்தல் என கருத முடியாது என்றும் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் இலங்கையர்களுக்கு அகதி தஞ்சம் வழங்குவதில் இறுக்கமான நிலை இருந்தாலும் உண்மையாக அச்சுறுத்தல் உள்ளவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அந்த செயலகம் குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் என்ற காரணங்களுக்காக தமக்கு இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் என சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கோர முடியாது என்பதை அந்த அறிக்கை தெளிவு படுத்தியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கோரிய இலங்கையர்களில் 2016ம் ஆண்டு மே மாதம் இறுதிவரை 1316 இலங்கையர்களின் விண்ணப்பங்களுக்கு முடிவுகள் வழங்கப்படவில்லை. 1613 பேர் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர்.
போர் நடைபெற்ற கிளிநொச்சியில் பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் விருப்பத்தோடு இருப்பதாகவும் அவர்கள் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்வதற்கே விரும்புகின்றனர் என சுவிசுஅதிகாரிகளுடன் கலந்துரையாடிய அப்பிரதேச பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்பவர்கள் மாதாந்தம் 40ஆயிரம் இலங்கை ரூபாய்களையே தமது குடும்பங்களுக்கு அனுப்ப கூடியதாக இருக்கிறது. ஆனால் சுவிட்சர்லாந்தில் மாதாந்தம் சராசரியாக 3500 பிறாங் சம்பளம் பெறுகின்றனர். இதில் சிலர் மாதாந்தம் ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சம் ரூபாய்களை தமது குடும்பங்களுக்கு அனுப்புகின்றனர். இதனால் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்வதற்கு இளைஞர்கள் பலரும் விரும்புகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதற்கு சுமார் 38 அல்லது 40 இலட்சம் ரூபாய்களை முகவர்கள் அறவிடுகின்றனர்,
சில குடும்பங்கள் தங்கள் காணிகள் நகைகளை விற்று வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர். சிலருக்கு வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் பணம் கொடுக்கின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் விபரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து சுவிஸ் குடிவரவு திணைக்களம் இலங்கையர்களுக்கு அகதி தஞ்சம் வழங்குவதை கூடுமானவரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து குடிவரவு திணைக்களம் எடுத்திருக்கும் இந்த முடிவுகளை அறியாத பல இளைஞர்கள் வெளிநாட்டு முகவர்களுக்கு பணத்தை கொடுத்து சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு வந்த வண்ணமே உள்ளனர்.
பெரும்பாலானவர்களுக்கு சுவிட்சர்லாந்திற்கு வந்த பின்னரே அகதி தஞ்சம் வழங்குவதில் இந்த நாடு இறுக்கமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கின்றனர்.
இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு வருவதற்கு 38 இலட்சத்தை முகவருக்கு கொடுத்து வந்து விட்டால் போதும் அங்கு சென்று அதை உழைத்து விடலாம் எண்ணும் இளைஞர்களுக்கு சுவிட்சர்லாந்து வந்த பின்னர்தான் பல அதிர்ச்சிகளை சந்திக்கின்றனர்.
சுவிட்சர்லாந்திற்கு வந்த பின்னர் அகதி தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அல்லது விண்ணப்பத்திற்கு முடிவு அறிவிக்கப்படாது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அந்த வழக்குகளை முன்னெடுப்பதற்கும் மீள்மனுவை தாக்கல் செய்வதற்கும் சட்டத்தரணிகளுக்கு பெருந்தொகை பணம் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் போலி முகவர்களை போல சுவிட்சர்லாந்திலும் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றும் தமிழர்கள் உள்ளனர். லுசேர்ண் மாநிலத்தில் தன்னை சட்டத்தரணி என அறிமுகப்படுத்திக்கொண்ட தமிழர் ஒருவர் பல இளைஞர்களிடம் தலா 2ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரையான சுவிசு பிறாங்குகளை அறவிட்டு கொண்டு அவர்களை ஏமாற்றிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவர் சட்டத்தரணி இல்லை என்பது பலருக்கும் தெரியாது.
சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்ச கோரிக்கை தொடர்பான மனுவை மேன்முறையீடு செய்வதாக இருந்தால் சட்டத்தரணி ஒருவருக்கு ஆரம்ப செலவாக குறைந்தது 2ஆயிரம் பிறாங்குகள் செலவாகும். வுழக்கு முடியும் போது 10ஆயிரம் பிறங்குகளுக்கு மேல் செலவாகும். இலங்கையில் 38 இலட்சம் ரூபாய்கள் சுவிட்சர்லாந்தில் 10 ஆயிரம் பிறாங் என சுமார் 50 இலட்சம் ரூபாய்களை செலவு செய்த பின்னரும் அவர்களின் அகதி தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட சம்பங்கள் பல உண்டு.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த மார்ச் மாதம் சுவிட்சர்லாந்திற்கு வந்து சுவிஸ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இலங்கை அகதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அமைச்சர் மங்கள சமரவீரவின் விசயமும் இலங்கை அகதிகள் தொடர்பில் சுவிசு குடிவரவு திணைக்களத்தின் இந்த முடிவுக்கு ஒரு காரணமாகும்.
சுவிட்சர்லாந்தை போலவே பிரித்தானியாவிலும் குடிவரவு சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பிரித்தானியாவின் குடிவரவு சட்டம் 2016 என்ற இந்த சட்டத்தின் கீழ் பிரித்தானிய குடியுரிமை அல்லது வதிவிட உரிமை அற்றவர்கள் தொழில் பார்த்தல், வாடகைக்கு வீடு ஒன்றை பெறுதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுதல், வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்தல், அல்லது கணக்கை பேணுதல் போன்ற விடயங்களில் கடுமையான விதிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு 5 ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். இச்சட்டமானது இம்மாதம் 12ம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது.
வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான அனுமதி பத்திரங்களை பெறுவதற்கும் நிபுணத்துவ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் தயக்கம் காட்டலாம்.
பிரித்தானியாவில் குடிவரவு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் வருபவர்களை வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு சரியான முறையினை பின்பற்றி வெளியேற்ற வேண்டும்.
இச்சட்டத்தை பேணாத வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடத்துக்கு உட்பட்ட சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும்.
பிரித்தானிய வசிப்பிட உரிமை இல்லாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்துசெய்யப்படும். மேலும் வசிப்பிட உரிமை இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களின் வாகனம் அரசினால் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒட்டுநருக்கு 11கிழமைக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
பிரித்தானியா வசிப்பிடவுரிமை இல்லாமல் வசிப்பவர்களின் வங்கிக் கணக்குகள் நிறுத்தப்படும் அல்லது நீதிமன்ற அனுமதியுடன் குறிப்பிட்ட கணக்குகளை அரசு கையகப்படுத்தி கொள்ளும்.
இச்சட்டமானது பிரித்தானிய காவல்துறைக்கு உள்ள அதிகாரத்தை விட மேலதிகமான அதிகாரத்தினை பிரித்தானிய வதிவுடமை இல்லாதவரை பிடித்தல் அவரது உடமைகளை தேடுதல் மற்றும் உடமைகளை கைப்பற்றுதல் தொடர்பாக வழங்கியுள்ளது.
ஒரு காலத்தில் வெளிநாட்டவர்களுக்கு குறிப்பாக இலங்கையர்களுக்கு அகதி தஞ்சமும் அடைக்கலமும் கொடுத்த சுவிட்சர்லாந்து பிரித்தானியா போன்ற நாடுகள் இப்போது குடிவரவு சட்டங்களை இறுக்கி தங்கள் கதவுகளை மூடியுள்ளன.
இரா.துரைரத்தினம்