11.01.2016-சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட வந்த இத்தாலி நாட்டு வாலிபர்கள் இருவர் எதிர்பாராமல் நேர்ந்த விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் வாலைசு(ஸ்) மாகாணத்தில் உள்ள Maederluecke என்ற பனிமலை பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டு மிக பிரபலம்.
இந்த விளையாட்டில் ஈடுபட இத்தாலி நாட்டை சேர்ந்த 20 மற்றும் 24 வயதான 2 வாலிபர்கள் நேற்று வந்துள்ளனர்.
இவர்களுடன் மற்ற நாட்டை சேர்ந்த மற்றொரு நபரும் வந்துள்ளார். இந்த வேளையில், 3 வாலிபர்களும் காலை 11.30 மணியளவில் உற்சாகமாக பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது, சுமார் 8,200 அடி உயர்த்திலிருந்து 300 மீற்றர் பரப்பளவு உடைய பனிமலை உடைந்து அதிவேகமாக சிதறியுள்ளது.
இந்த பனிச்சரிவில் 3 நபர்களும் அடித்துக்கொண்டு சென்றுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர், மோப்ப நாய்கள் மற்றும் ஹெலிகாப்டருடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
எனினும், 2 இத்தாலி வாலிபர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.
3வது நபர் உயிர் பிழைத்திருந்தாலும், அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை மீட்பு குழுவினர் வெளியிடவில்லை.
இந்த பனிமலை பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால், விளையாட்டு போட்டிகளில் யாரும் ஈடுப்பட வேண்டாம் என பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமையே எச்சரிக்கை விடுத்தும் தற்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
2014 மற்றும் 2015ம் ஆண்டில் வாலைஸ் மாகாணத்தில் மட்டும் பனிச்சரிவு விபத்துக்களால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.