இளம் குருத்திலிருந்து, "பதநீர்' மற்றும், "கள்' கிடைக்கின்றன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு, சிறந்த பானமாக விளங்குகின்றன. பனை ஓலை கூரை வீடு கட்ட வேயப்படுகிறது. கோடை வெயிலுக்கு பனை ஓலை குடிசை இதமாக இருக்கும். விசிறி, பெட்டி போன்ற பல பொருட்கள் தயாரிக்கவும் பனை ஓலை பயன்படுகிறது.
பனை மரம் வீட்டின் உத்தரத்திற்கும் உபயோகப்படுகிறது. இம்மரங்கள் பல வனப்பகுதிகளிலும், பிற நிலங்களிலும் இயற்கையாக வளர்ந்தும், நட்டு வளர்க்கப்பட்டும் வருவதால், இம்மரங்களைப் பாதுகாக்க தனிக்கவனம் செலுத்த வேண்டிய நிலை இல்லை.
செங்காந்தள் மலர்: செங்காந்தள் மலர் வனப்பகுதிகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் இயற்கையாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட செடியாக இருக்கிறது. சிவப்பு, மஞ்சள் நிறம் கொண்ட இந்த மலர், கள்ளிச் செடி மேல் படரும். இம்மலர் அனைவரும் ரசிக்கும் அழகு கொண்டது. இலக்கியங்களில் கவிஞர்கள் இந்த மலரை வர்ணித்துப் பாடல்கள் பாடியுள்ளனர்.திருச்சி, புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. சேலம் ஆத்தூர் பகுதியில் விவசாய நிலங்களிலும் பயிரிடப்படுகிறது. இந்தப் பூவின் விதை நாட்டு மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
வரை ஆடு: வரை ஆடு, மேற்கு தொடர்ச் மலையில் காணப்படுகிறது. இந்த ஆடுகள் அழிந்து வரும் உயிரினமாக உள்ளன. இவை, செங்குத்தான பாறைகளில் மட்டுமே வாழும். பாறைகளுக்கு அருகே உள்ள புல்வெளிகளில் மேய்ந்து விட்டு, பாறை இடுக்கில் உள்ள குகைகளில் தங்கும். மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. மனிதர்களை விட்டு விலகி இருப்பதையே விரும்பும்.
நீலகிரியில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்காவில், வரை ஆடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி, ஆனை மலை, கொடைக்கானல், மேல் பழனி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சேர்த்து நூறுக்கும் குறைவான ஆடுகள் தான் இருக்கின்றன. கேரளாவில் மூணாறில் உள்ள பூங்காவில், இந்த வகை ஆடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மரகதப் புறா: மரகதப் புறா அரிய வகை பறவை இனமாகக் கருதப்படுகிறது. இவை, ஒரு சில வனப்பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன. தமிழகத்தின் பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள மரகதப் புறா மைனாவை விட பெரியது. இப்பறவையின் சிறகுகள், மரகத நிறத்திலிருப்பதால் இதற்கு மரகதப் பறவை என பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சி வனப்பகுதியில் இப்பறவைகள் வாழ்கின்றன.
இவை, பெரும்பாலான நேரங்களில், மரங்களில் வசிக்கும். பச்சை நிறத்தைக் கொண்டுள்ளதால், எளிதாக காண முடிகிறது. காலை, மாலை வேளைகளில் உணவுக்காக பறந்து செல்லும் போது மட்டுமே, இதை காண முடியும். உணவுக்காக தரைப்பகுதிக்கு இறங்கி வரும். உணவு எடுத்த பின், மிக வேகமாகப் பறந்து சென்று விடும். பார்ப்பதற்கு மிக அழகாகத் தோன்றும்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில் காணப்படும், 17 ஆயிரத்து 672 வகையான தாவரங்களில், தமிழகத்தில் மட்டும் 5,640 வகைகள் காணப்படுகின்றன. தாவர உயிர்ப்பன்மை மற்றும் விலங்கின உயிர்பன்மையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.விலங்கினங்கள் அமைப்பை பொறுத்து, ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில், பறவைகள் ஒரு தனி பிரிவாக விளங்குகின்றன. பூமியில் 8,600 பறவை வகைள் இருக்கின்றன. இதில், "சாரஸ் பெருங்கொக்கு' என்னும் மிகப்பெரிய பறவை முதல், "டிக்கல் மலர்க்கொத்தி' என்னும் பெருவிரல் அளவுள்ள பறவையும் அடங்கும்.
பறவைகள் ஒன்றுக்கொன்று பேசிக் கொள்ளாவிட்டாலும், ஒலி மூலம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளும் தன்மை கொண்டவை.
பல பறவைகள் எழுப்பும் ஒலி, பாடுவதைப் போல் இருக்கும். மலை மைனா, கிளி ஆகிய பறவைகள், ஓரளவிற்கு பேசும் திறன் கொண்டவை. எனவே தான் கவிஞர்கள் பேசும் கிளி, பாடும் குயில் என குறிப்பிடுகின்றனர்.இயற்கையின் படைப்பில், பறவைகளுக்கு தனி இடம் உள்ளது. பல பறவைகள், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி புரிகின்றன. உணவுப் பயிர்களை தாக்கக் கூடிய, பல பூச்சிகளை உண்பதால் பறவைகள் வேளாண் உற்பத்திக்கு உதவி செய்கின்றன. எனவே, பறவை இனங்களை பாதுகாப்பது மனிதனின் கடமை. வாழும் நினைவுச் சின்னங்களாக கருதப்படும் மரகதப் புறா, வரை ஆடுகளை அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு வனத்துறை அதிகாரி கூறினார்.
எசு.சிந்தா ஞானராசு