குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுதந்திர தேர்தலுக்கு வழியில்லை மக்களே தீர்ப்பு கூற வேண்டும்.பேராசிரியர் இரா.சிவசந்திரன்

 18 .07. 2011-நேர்காணல்:-வி.தேவராச்  வடக்கில் சுதந்திரமான தேர்தல் நடைபெறும் நிலையில் இல்லை. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சுதந்திரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நிலையிலும் இல்லை. இந் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றோர் தேர்தல் பிரசாரத்தின் போது முகம் கொடுக்கும் இன்னல்கள் பல. இத்தகைய சூழ்நிலையில் மௌனப்புரட்சி மூலம் மக்களே தேர்தல் தீர்ப்பை வழங்க வேண்டுமென்று பேராசிரியர் இரா.சிவசந்திரன் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றோருக்கு மக்களே துணைநிற்க வேண்டும். இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் மாற்றத்திற்கு வித்திடப் போவதில்லை. ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்கின்றோம். என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் செய்தியாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
01. தேர்தல் நிலைமை எவ்வாறு இருக்கிறது?
 
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், உள்ளுராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என இலங்கை மக்கள் அடிக்கடி தேர்தல்களை சந்தித்து வந்தாலும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இம்முறை என்றுமில்லாத வகையில் உள்ளுராட்சித் தேர்தல் சூடு பிடித்துள்ளதென்றே கூற வேண்டும். பொதுவாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக  தமிழர் அரசியலை முழுமையாக ஆயுதமேந்திய இளைஞர் கைகளில் ஒப்படைத்துவிட்டு பெரும்பாலானோர் ஒதுங்கிப் பார்வையாளராகவே இருந்தனர். தங்களுக்குள் ஒரு நியாயத்தை கற்பித்துக்கொண்டு அதனைப் பிரலாபித்துக் கொண்டு தம்மையும் ஏமாற்றி, இளைஞர்களையும் சரியாக வழிநடத்தாது அரசியலை ஒரு 'பேசாப் பொருளாக்கிக்' காலத்தைக் கடத்தினர். இதன் விளைவாக எமது இனம் சமகால சர்வதேச உலகம் அதிர்ச்சியடையத்தக்க கொடூரமான, மனித நாகரிகவரலாறு சகிக்கமுடியாத முள்ளிவாய்க்கால் முடிவை எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டது. அங்கும் என்ன நடந்ததென நாமறியாத, பெயர்தெரியாத எம்முடன் எந்தத்தொடர்புமற்ற யாரோ தான் காண்பிக்க வேண்டியிருந்தது.
 
                    பாலைவனத்தில் வாழும் எலிகள் தம் எதிரிக்குப் பயந்து பொந்தில் இருந்து வெளியே எட்டிப் பார்ப்பது...., மெல்ல வெளியே வருவது...., ஏதாவது சரசரப்பு ஏற்பட்டால் மீண்டும் பொந்துக்குள் ஓடி மறைவது.... பின் 'கீச் கீச் கீச்' என கத்தி இரண்டு மூன்று எலிகள் சேர்ந்து வெளியே வருவது......... யாழ்ப்பாண மக்களின் அரசியல் நடவடிக்கையைப் பார்க்கும் போது இக் காட்சியே என் மனக் கண்ணில் தோன்றுகின்றது. அரசியல,; தேர்தல் என தம் நிலை உணர்ந்து மெல்ல மெல்ல மக்கள் வெளியே வருவது எனக்கு மகிழ்சியாகவே உள்ளது. பார்வையாளராக இருந்தோர்; பங்காளராக மாறி வருவது நல்ல எதிர்காலத்திற்கான அறிகுறியாகவே பார்க்கின்றேன். எமக்கான அரசியலை நாமே பகிஷ்கரிப்பது, தமது சுய இலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துவோரையும், மனிதநேயமற்றவர்களையும், ஒருவகையில் ஊர் சண்டியர்களை எம்மை ஆளும்படி கதிரையில் இருத்தும் செயலாகவே முடியும். எமது அரசியல் எமக்கானது. அதனை நாமே தீர்மானிக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவு பெற வேண்டும்.
 
02.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன?
 
கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்று வருகின்றன. ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி பெரிய கூட்டங்களை ஒழுங்கு செய்வதற்கு ஆதரவாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள். கூட்டத்திற்கு வந்து கலந்துகொள்வோர் கூட அச்சுறுத்தப்படுகின்றார்கள் என்பதால் கருத்தைக் காதால் கேட்பது கூட மறுக்கப்பட்ட சூழ்நிலையே இங்கு காணப்படுகின்றது. அரசினதும், அரசைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்ற தமிழ்க் கட்சிகளி;ன் கருத்துக்களே முடிந்த முடிவான கருத்துகள். அவற்றைக் கேட்பதற்கும் அவற்றைப் பற்றி புகழ்ந்து பேசுவதற்குமே உமக்கு காதும், வாயும் உண்டு. மற்றப்படி அவற்றையும் பொத்த வேண்டும் என்ற போக்கைத்தான்  இங்கு பரவலாகக் காணமுடிகிறது. கூட்டமைப்பினர் ஆங்காங்கே சிறு சிறு சந்திப்புகளையும் தனிப்பட்ட முறையில் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டுவதிலுமே ஈடுபட்டு வருகின்றார்கள். வீட்டுக்கு வீடு கூட்டமைப்பினர் செல்லும் போது கூட, வீட்டிற்கு வெளியே ஓடிவரும் வீட்டுக்காரர்கள், 'நாங்கள் உங்களுக்குத்தான். தயவு செய்து இங்கு வராதீர்கள், நீங்கள் வந்து சென்றால் இரவில் வந்து தொல்லை தருவார்கள்' என்கின்றார்கள்.
 
03. ஏனைய தரப்பினரின் பிரசாரப்பணிகள் எவ்வாறு உள்ளன?
 
'ஓகோ' என்றிருக்கின்றது. பதின்மூன்று மந்திரிகள் வருகைதந்து 'ஜாகை' போட்டுள்ளனர். தெற்கில் இருந்து இளைஞர் பலரை அழைத்து வந்திருக்கின்றனர். பல்சர் மோட்டார் சைக்கிளில் பகல், இரவாகப் பறந்து திரிகிறார்கள். இங்குள்ள இராணுவத்தினரும், பொலிஸாரும் அவர்களுக்கு 'சலூட்' அடிக்கின்றனர். ஏனையோர் சென்றால் மறித்து சோதனை செய்கின்றனர். போக்குவரத்து பொலிஸார் விடியற்காலை வீதியில் உலா வந்து பேப்பர் வாங்க வருபவர்கள் ஹெல்மெட் இல்லாமல் வருவார்களென எதிர்பார்த்து வேட்டையாடுகின்றனர். தாங்கள் நினைக்கும் வீதி 'ஒருவழிப்பாதை' என பிரகடனப் படுத்தி உடன் குற்றம் அடிக்கின்றனர். எந்தப் பெரியவர்களையும் மரியாதை இல்லாமல், விபரம் கூறாமல் மறித்து வாகனத்திறப்பை எடுத்து ஆமை வேகத்தில் குற்றப்பண அறவீட்டு ரிசீற் எழுதி மணிக்கணக்காக நடுறோட்டில் வைத்து வெய்யிலில் வாட்டி எடுக்கின்றனர். அரச ஆதரவாளர் ஒருவழிப் பாதையால் தவறாக வந்தாலும் 'சலூட்' அடித்து ஒரு சிரிப்புடன் வழிவிடுகின்றனர்.... இவற்றைப் பார்க்கும் நாம் அரசசார்பான அடாவடித்தனங்களுக்கு தேர்தல் மூலம் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என நம்பியிருக்கின்றோம்.
 
04.ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்தவுள்ளதாக அரசதரப்புக் கூறுகின்றது. அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?
 
 சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றியோ, அதன் வரையறை பற்றியோ, அதன் விளக்கம் பற்றியோ, அதன் நடைமுறை பற்றியோ அரசுக்கும், அரசசார்பானவர்களுக்கும்  சரியான புரிதல் இல்லை என்பதைத்தான் இச் சூழலைப் பார்த்து எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
 
ஒரு சனநாயகத்தின் உயிர் மூச்சே தேர்தல் - அதன் ஊடாகவே நாம் மக்கள் ஆணையைப் பெறுகி;ன்றோம். இந்த அரசு ஜனநாயகம் என்று கூறிக்கொண்டு அதனை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது.  இவர்களது சுதந்திர தேர்தல் திருவிழாவைப் பார்க்கும் போது ஒரு குழந்தை கூட சிரிக்கும் நிலையே உள்ளது.
 
05.குடாநாட்டில் தேர்தலை நடத்த முடியாதென எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் தவறான குற்றச்சாட்டுகளை சர்வதேசத்திற்கு எதிர்கட்சிகள் முன்வைக்க முனைவதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளார். இதுபற்றி நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
 
 வரலாற்றில் பொய்யுரைத்துப் புகழ் பெற்ற கோயபல்சை விட இவர்கள் சாதனை பெரிது. உலக வரலாற்றில் இச்சாதனைக்கான வெகுமதிகளை இவர்கள் பெருமளவு பெற்றார்கள். வன்னி யுத்தத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை என்றவற்றை விட சமகால வரலாற்றில் பொய்யுரை உள்ளதா? சுண்டங்காயளவான இந்த நாட்டைப் பார்த்து சர்வதேசமே 'கெக்கலம் கொட்டிச்' சிரிப்பதை இவர்கள் அறியாரோ?
 
06.நாய்களை சுட்டுப் போடுவதும், வெட்டிப் போடுவதுமான புதிய தேர்தல் கலாசாரம் யாழ் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கின்றது. இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
 
மஹிந்த சிந்தனையில் நாய்களைக் கொல்லக் கூடாதெனக் குறிப்பிட்டுள்ளதே... நகரங்கள், கிராமங்கள் தோறும் மக்களை விட நாய்கள் சுதந்திரமாக ஓடித்திரிந்து மகிழ்ந்து வாழும் சூழல் பௌத்த தர்மத்தின் வழியாகப் பெறப்பட்டுள்ளதே... இவற்றை வாசித்துப் புரியமுடியாதோர் தான் இவற்றை செய்கிறார்கள் போலும். இவ்வாறான கலாசாரம் கொண்ட அறிவு வாசனையற்ற  இவர்கள் எம்மிடம் ஆளும் அரச நிர்வாகத்தை தரும்படி கேட்கிறார்கள்.  இந்தப் பண்பாடு தான் தமிழர் பண்பாடு என தமிழ் மக்கள் தீர்மானிப்பார்களேயானால் அவர்களுக்கு என்றும் விடிவே கிடையாது என உணர வேண்டும். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லாக்காலத்திலும் ஏமாற்ற முடியாது. இவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு இரு விரல் நுனியால் இடும் புள்ளடி போதும். மக்கள் தமது விடுதலைக்காக அதனை 23ஆம் திகதி செய்வார்கள் எனத் துணிகின்றோம்.
 
07. எதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
 
இலங்கையின் அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் வடபிரதேச உள்ளுராட்சித் தேர்தல் கவனம் கொள்ளப்படுகின்றமைக்கு சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்ல அரசும் அவர்களது ஆதரவாளர்களும் பெரும் பிரயத்தனப் படுவதே காரணமாகும்.
 
வன்னி யுத்தம் நியாயமானது. அங்கு எந்தக் கொடுமையும் நிகழவில்லை. ஒருவர் தானும் இறக்கவில்லை. அரசு செய்தது மக்களைப் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்ட மனிதாபிமான நடவடிக்கையே என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். முக்கியமாக வடபகுதித் தமிழ் மக்கள் அதுவும் முக்கியமாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் என்ற செய்தியை இந்த உள்ளுராட்சித்; தேர்தல் வெற்றி மூலம் சர்வதேசத்துக்கு சொல்வது, இதன் மூலம் சர்வதேசம் உரத்துச் சொல்லும் போர்க்குற்றம் என்ற குரல் பலமிழக்கும் என இவர்கள் கருதக்கூடும்.
 
ஜநா குற்றச்சாட்டிற்கு எதிரான தமிழ் மக்களிடம் பலாத்காரமாகப் பெறப்பட்டு அனுப்பப்பட்ட கையெழுத்துக்கள் மக்களின் ஒப்புதலுடன் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுதலிப்பது போன்ற காரணங்களுக்காகவே இவ்வாறான  நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
 
08. நாடாளுமன்றத் தேர்தலை போன்று தமிழ் மக்கள் குறைவாக வாக்களித்தால் தமிழினத்தின் எதிர்காலம் எவ்வாறிருக்கும்?
 
அறவழியில் போராடி அலுத்துப் போன தந்தை செல்வா சொன்னது போல் 'கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்' என மீண்டும் கூறுவதைத் தவிர வேறு வழி என்ன?
 
ஒப்பீட்டளவில் தமிழ் மக்கள் கற்றறிவு கொண்டவர்கள். தமக்கான ஆட்சியை, தமக்கான இறைமையை ஒரு 'புள்ளடி' மூலம் தீர்மானிக்கலாம் என்பது அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்பதில் ஜயமில்லை. நீதி, நேர்மை, பண்பாடு, மேதமை, எவருக்கும் விலை போகாத தன்மை மக்கள் பால் உண்மையான அக்கறை கொண்டவர்களை துணிவுடன் அஞ்சாது அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பகிஸ்கரிப்பதன் மூலமும், வாக்களிக்காது விடுவதன் மூலமும் தமக்கும் தம் சந்ததிக்கும் இவர்கள் அழிவுப்பாதையையே காட்டுகின்றார்கள் என்பதை ஆணித்தரமாக உணர்தல் வேண்டும். உனது அரசியல் உனக்குரியது. தேர்ந்தெடுப்போர் உன்னைப் பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு உணர வேண்டும். இனி தமிழர் போராட்டம் ஜனநாயக வழியில் தான் செல்லவேண்டும். சர்வதேசமும் அதைத்தான் எதிர்பார்க்கிறது. எனவே வாக்கு என்பது உயிர் போன்றது. வாக்கு  என்பது வெறும் புள்ளடியை இடுவதல்ல. அது உனது உரிமை, உனது இறைமை அதனை வேட்பாளன் ஒருவனுக்கு அளித்தால் அவன் நல்வழி காட்டுபவனாக இருக்க வேண்டுமல்லவா?
 
09. தமிழ் மக்கள் இன்று செய்ய வேண்டியது என்ன?
 
தமிழ் மக்கள் 30 ஆண்டுகளாக அறவழியிலும், 30 ஆண்டுகளாக ஆயுத வழியிலும் போராடி அரசியல் உரிமை எதுவுமின்றி வார்த்தையில் வர்ணிக்க முடியாத இழப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எல்லோரும் மீண்டும் மீண்டும் தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும்.  எமது மனப்பாங்கில் மாற்றம் வேண்டும். 'நானே அறிவாளி' 'நானே வீரன்' என்பதை விடுத்து ஒற்றுமையுடன் ஒரே குரலில் நமது உரிமையைக் கோரவேண்டும். ஜனநாயக வழியிலே சர்வதேசத்தில் சனநாயக வழியை வற்புறுத்தும் நாடுகளுக்குக் கேட்கக்கூடியதாக எமது உரிமைக்குரலை உரத்து ஒலிக்க வேண்டும். உள்ளுர் ஆரசியலும், சர்வதேச அரசியலும் எமக்கு நல்வழி காட்டக்கூடிய தந்திரோபாயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
 
சமூகத்தை அரசியல் மயப்படுத்துவதோடு கிராமங்கள் தோறும் வெகுசன நிறுவனங்களை உருவாக்கி சமூகம் நிறுவனமயப்பட்டு இயங்க வேண்டும். சனசமூக நிலையங்கள், தொழிற்சங்கங்கள், இளைஞர் மன்றங்கள், மகளிர் அமைப்புகள் என உருவாக்கி சமூகத்தை நிறுவனமயப்படுத்த வேண்டும். 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்பதனை எத்தனை ஆண்டுகளாக சொல்லி வருகின்றோம். இது மந்திரமல்ல வாழ்வதற்கான வழி என்பதை தரிசிக்க வேண்டும். எம்மிடம் உள்ள மத அமைப்புகள் குறிப்பாக இந்துமத கோவில்கள் சமூக மயப்பட்ட நிறுவனங்களாக மாற்றமுற வேண்டும். விண்ணுலக வாழ்வு பற்றி மட்டும் போதிக்காது மண்ணக வாழ்வை வாழ்வாங்கு வாழ மக்களுக்கு வழிகாட்டுவனவாக அவை செயற்பட வேண்டும். உண்மையில் தமிழ் மக்களிடையே ஒரு மாற்றுச் சிந்தனையும் புதிய கலாசார போக்கும் தோன்ற வேண்டும். அது தமிழ் மக்களுக்கு நிலைத்;து நிற்கத்தக்க நல்வாழ்வை அமைத்துத் தரும்.
 
 பேராசிரியர் இரா.சிவசந்திரன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.