தமிழுக்கு இணை ஏது?: கோர்ட்டில் வழக்கு
சென்னை: மலையாளம் மற்றும் ஒரியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கு தடைகோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல் காந்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். தொன்மையற்ற இம்மொழிகளுக்கு, மிகத்தொன்மையான தமிழுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுவதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருசெந்தூரில் மாசித் தேரோட்டம்
தூத்துக்குடி: முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பிப்., 23 ல் கொடியேற்றத்துடன் மாசித்திருவிழா துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளும், பல வகையான வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பத்தாம் நாளான இன்று காலை 5.30 மணிக்கு குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வாணையுடன் தேரில் எழுந்தருளினார். 6.05 க்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். 6.40க்கு நிலைக்கு வந்தது. சுவாமி எழுந்தருளிய தேர் 6.50 க்கு பக்தர்கள் வடம் பிடித்தனர். 9.20 க்கு நிலைக்கு வந்தது. அம்மன் தேர் 9.30க்கு புறப்பட்டு 10.15 க்கு நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்
புதுடில்லி : நிர்பயா ஆவணப்பட விவகாரத்தில் திகார் சிறையில் குற்றவாளியிடம் பேட்டி எடுக்க காங்கிரஸ் ஆட்சியின் போது தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சுஷில்குமார் ஷிண்டேவிடம் பேட்டி எடுக்கச் சென்ற தனியார் டிவி பத்திரிக்கையாளர்களை, ஷிண்டேவுடன் இருந்த தெலுங்கு நடிகர் மோகன்பாபு தாக்கி உள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திகார் அதிகாரிக்கு சம்மன்
புதுடில்லி: நிர்பயா குற்றவாளி அடைக்கப்பட்டுள்ள திகார் ஜெயிலுக்குள், குற்றவாளியிடம் பேட்டி எடுக்க அனுமதித்த விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு திகார் சிறையின் டைரக்டர் ஜெனரலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.
ஜெ.,வின் பினாமியா சசிகலா?நீதிபதி கேள்வி
பெங்களூரு : ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் கர்நாடக சிறப்பு நீதிபதி குமாரசாமி, கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் சரமாரி கேள்விகளை கேட்டார். இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஜெ., ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக எப்படி வழக்கு தொடர்ந்தீர்கள்? அதற்குரிய ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளீர்களா? தனி நீதியிடம் வழங்கிய 1000 பக்கம் தீர்ப்பில் பண பரிவர்த்தனை பற்றி ஒருவரி கூட இடம்பெறாதது ஏன்? சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் பினாமி என எதை வைத்து கூறுகிறீர்கள்? 1972 லேயெ ஜெயலலிதா ரூ.1 லட்சம் சொத்திற்கான வருமான வரியை முறையாக செலுத்தி உள்ளார். அப்படி இருக்கையில் 1972ம் ஆண்டு அவர் பெற்ற ரூ.1 லட்சம் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்? என கேட்டுள்ளார்.
கட்சி பொறுப்பு யாருக்கு?: கெஜ்ரிவால்
புதுடில்லி: ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இது குறித்து கூறுகையில், 'ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புக்களை சுமக்க முடியவில்லை. நான் டில்லி மக்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன். எனவே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கட்சியின் புதிய ஒருங்கிணைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார், என்று தெரிவித்துள்ளார்.
கெஜ்ரி வேண்டும்:யாதவ் கோரிக்கை
புதுடில்லி : ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புக்களில் இருப்பதால், வேலை பளு அதிகரித்துள்ளது என கூறி, தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தேசிய நிர்வாக குழுவுக்கு அனுப்பி உள்ளார். ஏற்கனவே, யோகோந்திர யாதவ், பூஷண் ஆகியோர் கூறிய குற்றச்சாட்டு காரணமாக கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கெஜ்ரிவாலின் இந்த ராஜினாமா முடிவு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், 'ஆம் ஆத்மி கட்சிக்கு கெஜ்ரிவால் வேண்டும். அதனால் அவர் அளித்த ராஜினாமாவை நிராகரிக்கிறோம். கெஜ்ரிவால் மீண்டும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் தொடர வேண்டும் என விரும்புகிறோம்,' என கட்சியின் மூத்த உறுப்பினர் யோகாந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
கட்சி பொறுப்பு வேணாம்: கெஜ்ரிவால்
புதுடில்லி: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாககூறி, அதற்கான கடிதத்தை கட்சியின் தேசிய நிர்வாக குழுவுக்கு அனுப்பி உள்ளார். இன்று கூட உள்ள நிர்வாக குழு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா குறித்து முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலூரில் சகாயம் குழு வீடியோ பதிவு
மேலூர்: மேலூர் அருகே உள்ள புறாக்கூடு மலைப்பகுதியில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, முறைகேடுகளை முழுமையாக பதிவு செய்யும் வகையில், புறாக்கூடு மலைப்பகுதி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
சட்டரீதியான நடவடிக்கை:ராஜ்நாத்சிங்
புதுடில்லி: நிர்பயா ஆவணப்படம் விஷயமாக ராஜ்யசபாவில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் துவங்கியபோது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். அப்போது, 'நிர்பயா வழக்கு குற்றவாளியிடம் பேட்டி எடுத்த விவகாரத்தில் விதிமீறல்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிந்ததும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
நிர்பயா படம்:பார்லி.,யில் சலசலப்பு
புதுடில்லி : நிர்பயா ஆவண படத்தையும், அவ்வழக்கின் குற்றவாளியின் பேட்டியையும் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இதனால் ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது.
'விவாதிப்போம்': ஆம் ஆத்மி எம்.பி.,
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் இன்று நடக்கிறது. இது குறித்து கட்சியின் எம்.பி., பகவந்த் மான் கூறுகையில், 'ஆம் ஆத்மி ஜனநாயக ரீதியாக இயங்கும் ஒரு கட்சியாகும். எனவே, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதிப்போம். கட்சியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்தை கூற உரிமை உள்ளது,' என்றார்.
ஆசாம் கான் மீது நடவடிக்கை: பா.ஜ
லக்னோ: உரிய உரிமம் இல்லாமல் பஸ்சை ஓட்டிய உ.பி. அமைச்சர் ஆசம்கான் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., கோரி உள்ளது.
மாற்றங்களையே விரும்புகிறோம்:யோகேந்திரா
புதுடில்லி : தனியார் டிவி ஒன்றிற்கு யோகேந்திர யாதவ் அளித்த பேட்டியில், நானும் பிரசாந்த் பூஷனும் கட்சியில் இருந்து விலக நினைக்கவில்லை. கட்சியின் மாற்றங்கள் வர வேண்டும் என்றே விரும்புகிறேன். கட்சிக்கு எதிராக ஒரு போதும் செயல்பட்டதில்லை. திலிப் பாண்டேயின் கருத்துக்கள் என்னை மிகவும் வேதனை அடைய செய்கிறது. தேசிய தலைவர் பதவி என்பது முக்கியமல்ல என தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவிற்கு வருகை தந்தார் சச்சின்டெண்டுல்கர்
புதுடில்லி: நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ராஜ்யசபா வருகை தந்து சபை நடவடிக்கையில் கலந்து கொண்டார் சச்சி்ன் டெண்டுல்கர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் ராஜ்யசபா எம்.பியாக நியமனம் செய்யப்பட்டார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் . இருப்பினும் சபையின் நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இவரது இந்நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந் நிலையில் தற்போது நடைபெற்று வரும் பார்லி கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வருகை தந்தார் சச்சின் டெண்டுல்கர். சபையின் கேள்விநேரம் முடியும் நேரத்தில்வருகை தந்த அவர் தேசி்ய வாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேலிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். உலக கோப்பை நடைபெற்று வரும் இந்நேரத்தில் சபைக்கு டெண்டுல்கர் வந்திருந்தது அனைவரையும்ஆச்சரியப்பட வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பல் போக்குவரத்திற்கு புதிய இணைய தளம் துவக்கம்
புதுடில்லி: கப்பல் போக்கு வரத்திற்கான புதிய இணைய தளத்தை மத்திய சாலை வழி போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி துவக்கிவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: இந்த புதிய இணைய தளத்திற்கு ஷிப்பிங் சம்வாத் என பெயரிடப்பட்டுள்ளது.http: /shipmin.gov.in/samvad/index.php என்ற முகவரி மூலம் இத்துறையி்ன் மேம்பாட்டிற்கு பொது மக்கள், நிபுணர்கள் தங்களின் ஆலோசனைகள் மற்றும் மேம்பாட்டிற்கான புதுமையான எண்ணங்களை இந்த இணைய தளம் மூலம் தெரிவிக்கலாம்,இந்த இணைய தளம் மூலமாக நாட்டில் நீலப் புரட்சியையும் வெளிப்படை தன்மையையும் கொண்டு வர முடியும்.மேலும் வரவு கொள்கைகள், புதிய திட்டங்கள் சிறந்த ஆலோசனைகள் ஆகியவற்றையும் அமைச்சகம் வெளியிடும் என கூறினார்.
ஆம் ஆத்மியில் உட்கட்சி பிரச்னை எதிர்பாராதது: கிரண்பேடி வருத்தம்
புதுடில்லி: தனியார் டிவிக்கு பேட்டியளித்த கிரண் பேடி, ஆம் ஆத்மியில் ஏற்பட்டுள்ள குழப்பம் எதிர்பாராதது. கட்சி ஒரேநபரால் ஏற்படுத்தப்பட்ட கட்சி. எந்த விதிகளுக்கும் உட்படாத கட்சி. கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை கெஜ்ரிவால் பிரதிபலிக்க வேண்டும் என கூறினார். கற்பழிப்பு குற்றவாளியிடம் எடுக்கப்பட்ட பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒவ்வொரு கற்பழிப்பு குற்றவாளியையும் வீடியோ எடுக்க வேண்டும். அவர்களின் மனநிலையையும் அறிய வேண்டும் எனவும் கூறினார்.
ஜெ.,வுடன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பு
சென்னை: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், நேற்று அ.தி.மு.க, பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், மற்ற அரசு ஆலோசகர்கள் மாலை 3 மணிக்கு போயஸ்கார்டன் சென்றனர். அங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசின் பட்ஜெட் குறித்து,அவர்கள் விவாரித்தாக கூறப்படுகிறது.
கட்சிக்குள் எதிர்ப்பு வருவது ஆரோக்கியம்: ஆம் ஆத்மி
புதுடில்லி: கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, டில்லியில் கிடைத்த வெற்றி மிகப்பெரியது. கட்சிக்குள் கருத்து வேறுபாடு வருவது ஆரோக்கியம். இந்த கருத்து வேறுபாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். எதிர்ப்பு தெரிவிக்க யோகேந்திராவுக்கும், பூஷணுக்கும் உரிமை உள்ளது என கூறினார்.