09.07. 2011 சென்னையில் கோபாலபுரத்தில் இருக்கிற கலைஞர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான பிரணாப்முகர்ஜி கலைஞர் கருணாநிதியைச் இன்று காலை சந்தித்துப் பேசினார்.
தயாநிதி மாறனின் விலகல். அந்த காலியாக உள்ள அப்பதவிக்கு யாரைக் கொண்டு வருவது. கனிமொழி, ஆ.ராசா சிறையில் இருப்பது உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.இச்சந்திப்பின் போது, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக காங்கிரசு உறவு வலுவாக உள்ளது -பிரணாப்முகர்ஜி.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், சென்னையில் கருணாநிதியை சந்தித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் உடனான திமுக உறவு என்று உறுதிபடத் தெரிவித்தார்.சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, தயாநிதி மாறனும் உடன் இருந்தார்.இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'நான் சென்னை பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, சென்னையில் முதல் முறையாக திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறேன். தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து அவரிடம் விரிவாக ஆலோசனை நடத்தினேன். இது வழக்கமான ஒன்றுதான்.
இன்னொரு முக்கிய விஷயம்... காங்கிரஸுடனான திமுகவின் உறவு குறித்து பல்வேறு விதமாக செய்திகள் பரவி வருகின்றன. இந்தக் கூட்டணி தற்போது இல்லை என்று கூட கூறப்பட்டு வருகின்றன. ஆனால், காங்கிரஸ் - திமுக இடையிலான உறவு தொடர்கிறது என்பதையும், இது வலுவாக இருக்கிறது என்பதையும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்,' என்றார் பிரணாப் முகர்ஜி.அதேநேரத்தில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக திமுக தலைவரிடம் விவாதிக்கப்பட்டதா என்பன உள்ளிட்ட கேள்விகளை பிரணாப் முகர்ஜி எதிர்கொள்ளவில்லை.மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் பதவி விலகிய பிறகு, கருணாநிதியுடன் பிரணாப் முகர்ஜி பேசியிருப்பதால், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக ஆ.ராசா தனது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து முதலில் விலகினார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கு விசாரணையின் எதிரொலியாக, இப்போது மத்திய ஜவுளித் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பதவி விலகியுள்ளார். இதனால், திமுகவுக்கு 3 கேபினட் அந்தஸ்தில் இருந்த அமைச்சர் பதவி இப்போது ஒரே ஒரு மத்திய அமைச்சராக குறைந்துள்ளது. மு.க.அழகிரி மட்டுமே இப்போது மத்திய அமைச்சராக உள்ளார். திமுகவைச் சேர்ந்த 4 பேர் இணை அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரணாப் முகர்ஜி, திமுக சார்பில் தயாநிதி மாறனுக்கு பதிலாக வேறு ஒருவரை மத்திய அமைச்சர் பதவிக்கு அறிவிக்குமாறு அவரிடம் வலியுறுத்தியதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
அதேநேரத்தில், தற்போதைய சூழலில் தங்கள் கட்சியில் இருந்து வேறு யாரையும் மத்திய அமைச்சராக நியமிக்க திமுக விரும்பவில்லை என்றே அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல், இம்மாதம் 23, 24-ம் தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில், காங்கிரஸுடன் கூட்டணியை தொடருவதா? என்பன உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதித்து முடிவு செய்யப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.