06.07.2011-2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக்க ஏராளமான எண்ணிக்கையில் ஆக்கபூர்வமான தலைவர்கள் தேவை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.
தேசியப் பொருளாதார மேம்பாடு போட்டித்திறனின் அடிப்படையில் அமைந்துள்ளது. போட்டித்திறன் சிறந்த அறிவால் உருவாகிறது. இந்தியாவிற்கு ஆக்கபூர்வமான தலைமை தேவை. ஆக்கபூர்வமான தலைவர் என்றால் அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று கொல்கத்தா வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலாம் குறிப்பிட்டார்.
2020 க்குள் வளர்ச்சி அடைந்த நாடாவதற்கு, இந்தியா முதலில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டும். பின்னர் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என கலாம் குறிப்பிட்டார்.
ஊழலற்ற சமுதாயம், ஊரகப் பகுதிகளில் சாலை மற்றும் பொருளாதாரத் தொடர்பு, குறுங்கடன் மற்றும் சிறுதொழில் மீது கவனம் செலுத்துவது ஆகியவையும் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாவதற்கு மிகவும் முக்கியமானது என்று கலாம் தெரிவித்தார்.