குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

ஈழத்தில் சாதியம்- (பாகம்1. 02) பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்

 பதிவிற்கு நுழைய முன்: இங்கே நான் தனி நபர்கள் யாரையும் தாக்குவதாகவோ, அல்லது சமூகத்திலுள்ள பிரிவுகளை எள்ளி நகையாடுவதாகவோ எண்ண வேண்டாம். இப் பதிவின் நோக்கம் இலங்கையில் இற்றை வரை புரையோடிப் போயுள்ள வர்க்க வேறுபாடுகளையும் அவற்றின் ஆதிக்கப் போக்கினையும் ஆராய்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம்.  இப் பதிவினை உங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்களோடும், ஆதரவோடும் ஒரு விவாத நோக்கில் கொண்டு செல்லலாம் என நினைக்கிறேன். இப் பதிவு பற்றிய அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. கருத்திட, தங்களை வெளிப்படுத்த தயங்கும் நல்லுள்ளங்கள் பெயர் குறிப்பிடாது கருத்துக்களை விவாத நோக்கில் வெளிப்படுத்தலாம்.

ஈழத்திலுள்ள சாதியம் பற்றி பல்வேறுபட்ட கருத்துக்களும், ஆக்க இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் வெளி வந்தாலும் இற்றை வரை ஈழத்திலுள்ள சாதிய முறையை எந்தவொரு மாற்றுக் கருத்து வல்லுனர்களாலும் உடைத்தெறிய முடியவில்லை என்றே கூறலாம். இந்தியாவின் தென் பால் அமைந்துள்ள இலங்கை எனும் சிறிய தீவில் ஆதிக் குடிகளாக இயக்கர், நாகர் எனும் இரு வர்க்க அமைப்பினர் வாழ்ந்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இந்தியாவுடன் நாகரிகத்தாலும், வர்த்தக உறவுகளாலும் இரண்டறக் கலந்த இச் சிறிய தீவானது தன்னுடைய 700ம் நூற்றாண்டு காலப் பகுதியில் விஜயனது வருகையுடன் சிங்களவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது.

இக் காலப் பகுதி தொடக்கம், பின்னர் இடம் பெற்ற மேற்கத்தைய நாட்டவர்களின் வருகையின் பின்னர் வரையான இனவிருத்தி அடிப்படையில்; இற்றை வரை இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மாலைதீவினைச் சேர்ந்த மக்கள், எனப் பலதரப்பட்ட மக்கள் இன அடிப்படையில் வாழ்கின்றனர்/ வாழ்ந்து வருகின்றனர்.

இந்து மதம் கூறும் நால் வேதங்களின் அடிப்படையில் வருணாச்சிரமக் கோட்பாடுகள் தோற்றம் பெறுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய பண்டைய இடியுண்டு பூமிக்கு அடியில் புதைந்து போன நகரங்களில் இருந்து எடுக்கப்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களும் இந்த வருணாச்சிரமக் கோட்பாடுகளை எடுத்தியம்பி நிற்கின்றன. இந்துக்கள் தம்மைத் தாமே தாம் செய்யும் தொழில் அடிப்படையில் பல்வேறு பிரிவினர்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது பிராமணர், ஷத்திரியர், சூத்திரர், வைசியர் என நான்கு வகையாகப் பிரித்திருந்தார்கள்.

இவர்களில் பிராமணர்கள் குரு குலங்களை அண்டி வாழ்வோராகவும், கல்வி கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவும்,
ஷத்திரியர் போர் புரிந்து நாட்டினைக் காக்கும் குடிகளாகவும்,
வைசியர்கள் பொருளீட்டும் பாணியில் வியாபாரம் செய்வோராகவும்,
சூத்திரர்கள் - வியர்வை சிந்தக் கை கட்டி, வாய் பொத்தி, ஏவல் வேலை செய்து சரீரத்தால் இம் மூன்று சாதியினருக்கும் உழைக்கும் அடிமைகளாக, அல்லது ஏவலாளர்களாகவும் (Slaves) சித்திரிக்கப்பட்டிருந்தார்கள்.

ஈழத்தின் வட பால் எழுந்த வரலாற்று நூல்களான செகராசசேரக மாலை, பரராசசேகர மாலை முதலியவற்றின் அடிப்படையில் இப்போது சமூகத்தில் காணப்படும் சாதிய முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டிருக்கவில்லை. மன்னர்களுக்கு பூமாலை கட்டுவதெற்கென்று ஒரு சமூக அமைப்பும், அந்தப்புற வேலைகளில் ஈடுபடுவதென்று ஒரு அமைப்பும், ஆலயங்களை சிரமதானம் செய்யும் பணியில் இன்னொரு அமைப்பும், ஒற்றர்களாக ஒரு சில குழுக்கழும், கல்வி கற்பிக்கும் செயற்பாடுகளில் பிறிதொரு குழுவும், விவசாய அடிப்படையில் ஒரு சில குழுக்களும் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் செப்புகின்றன. நிலப் பிரபுத்துவ அடிப்படையிலான ஆங்கிலேய அல்லது மேற்கத்தைய நாகரிக வருகையினைத் தொடர்ந்து முதன்மையடைந்தாலும் இன்று சமூகத்தில் காணப்படும் இச் சாதிய முறைகள் எப்போது, எப்படி ஈழத்தில் தோற்றம் பெற்றன?

இற்றைக்கு 7000ம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையும் இந்தியாவும் ஒரே நிலப்பகுதியாகவே இருந்திருக்கின்றன, குமரிக் கண்டத்தினைத் தாக்கிய ஆழிப் பேரலைகள் அல்லது நிலநடுக்கத்தின் பின் விளைவாகவே இலங்கையானது இந்திய உபகண்டத்திலிருந்து துண்டாடப்பட்டுள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்றாகும். இதனடிப்படையில் ஆரம்ப காலத்திலிருந்து தமிழர்களின் வரலாற்று பிரிவுகள் பற்றி அறிய முடியாமைக்கான பிரதான காரணம் தமிழர்கள் கிறிஸ்துவிற்குப் பின் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே தமது வரலாற்றினை எழுதும் மரபுகளைக் கடைப் பிடிக்கத் தொடங்கியமை ஆகும்.

சிங்கள இன மக்களாலும் வரலாற்று ஆய்வாளர்களாலும் தொகுக்கப்பட்ட பாளி நூல்களின் அடிப்படையில் கிறிஸ்துவிற்குப் பின் மூன்றாம் நூற்றண்டளவில் எழுதப்பட்ட நூலினை ஆதாரமாகக் கொண்டு
‘’எளார என்ற பெயருடைய சத்திரியன் அஸேஸனை வெற்றி கொண்டு நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்’’ எனவும்
கிபி ஐந்தாம் நூற்றாண்டளவில் தீபவங்கஸ்த்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மகாவம்சத்தில்(சிங்கள வரலாற்று நூலில்)
’’சோழ நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த ''உயர் குடிப் பிறந்த ‘எளார என்னும் தமிழன் அஸேஸ மன்னனை வென்று நாற்பத்தி நான்காண்டுகள் தகராறு தீர்ப்பதில் நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் சமநீதி செலுத்தி ஆண்டான் எனக் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் குறிப்பாக வட கிழக்குப் பகுதிகளில் இச் சாதிய அமைப்புக்கள் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வந்தாலும்; மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத் தீவு முதலிய பகுதிகளில் எவ்வாறு இச் சாதிய முறைகள் விரிவடைந்திருந்தன? வன்னிப் பகுதிகளில் இச் சாதிய முறைகள் மேலோங்கி இருந்தாலும் வன்னி இராச்சியத்தில் வாழ்ந்த மக்களின், மூதாதைகளின் வம்சங்களானது மட்டுவில், சரசாலை, புத்தூர், நீர்வேலி, மற்றும் வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களை அண்டிய மக்களின் வம்சங்களுடன் தொடர்புபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அப்படியாயின் பிராமணர்கள், கரையார், சைவர்கள், வெள்ளாளர் அல்லது வேளாளர், தனக்காரர், கோவியர், முக்கியர், பள்ளர், பறையர், நளவர், செட்டியார், தோட்டக்காட்டார், பத்தர், தச்சர், கொல்லர், வண்ணார் (இதில் ஏதாவது சாதிகள் விடுபட்டிருந்தால் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும்) முதலிய சாதிகள் தொழில் அடிப்படையில் ஈழத்தில் எப்போது உருவாகியது, இதனை யார் உருவாக்கினார்கள்? ஊர்களிலும், கிராமங்களிலும் வடக்கு,கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளுக்கும் வெவ்வேறு சாதிகளை குடியமர்த்தும், சாதிகள் பிரிந்திருக்கும் வழக்கம் எப்போது உருவாகியது, இதனை உருவாக்கியவர்கள் யார், சாதிகள் அடிப்படையில் கோயில்களை உருவாக்கி ஏனைய சாதியினரை அல்லது கீழ்ச் சாதியினரைக் கோயில்களுக்குள் செல்ல விடாது தடுக்கும் புறக்கணிக்கும் நிலையினை உருவாக்கியவர்கள் யார்? இவை யாவும் எம்முள் தொக்கி நிற்கும் வினாக்கள்.


சமூகத்தில் உயர்ந்தவர்களாக வேதங்களின் கூற்றுக்கள் மூலம் கருதப்படும் பிராமணர்களை விட யாழ்ப்பாணக் குடா நாட்டில் வேளாளர் சாதியினர் எவ்வாறு ஏனைய சாதியினரை அடிமைகளாக, தமது ஏவலாளர்களாக காலம் பூராகவும் வைத்திருக்கும் வழக்கத்தினை உருவாக்கினார்கள்? எப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையப்படுத்தி வேளாளர் சமூகத்தினர் முதன்மை பெறத் தொடங்கினார்கள்? இத்தகைய தொக்கி நிற்கும் மேற்கூறப்பட்ட வினாக்களிற்கான விடைகளோடும், சாதியம் பற்றித் தாழ்ந்த சாதிகள் என்று புறக்கணிக்கும் அடிப்படையில்(பள்ளு இலக்கியங்கள்- பள்ளன், பள்ளி கதாபாத்திரங்கள்) நேரடியாகச் சுட்டும் வகையில் உருவான இலக்கியங்களையும், சாதியத்திற்கு எதிராக இலங்கையில் எழுந்த நூல்கள், புரட்சிகள் பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் அலசுவோம்.

ஈழத்தில் சாதியம் இன்னும் வளரும்.........


மூலாதாரங்கள்: செகராசசேகர மாலை,  கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் நூல், கலாநிதி குணராசாவின் வரலாற்று நூல்கள், ஈழத்து இலக்கியங்கள், பள்ளு இலக்கியங்கள், யாழ்ப்பாண வைபவ மாலை.

வணக்கம் உறவுகளே, ஈழத்தில் சாதியம் எனும் இத் தொடரின் இரண்டாவது பகுதியினை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு ஆய்வுக் கட்டுரையினைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமானது என்பதனை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.


இத் தொடரின் ஒரு சில கருத்துக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முதலியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காரணத்தாலும், இத் தொடர் பற்றிப் பல நூல்களை வாசிக்க வேண்டிய காரணத்தினாலும், இத் தொடரின் இரண்டாவது அங்கத்தை ஒரு மாதம் கழித்துப் பகிர்ந்து கொள்கிறேன்.

இவ் வேளையில் ஆசிரியர் ச. கருணாகரன், கு.கிரிதரன்,  கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ச. முகுந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கி.விசாகரூபன், திருமதி பிரேம்குமார், ஆகியோருக்கும் இந்தப் பதிவினூடாக நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.


ஈழத்தில் சாதியம் எனும் தொடரின் முதலாவது அங்கத்தினூடாக வரலாற்றுக் காலங்களின் அடிப்படையில் இலங்கையில் தமிழரின் இனப் பரம்பல், இலங்கையில் தமிழர்கள் எப்போது வரலாறுகளை எழுதத் தொடங்கினார்கள், இலங்கையில் தமிழ் மக்களிடத்தே காணப்பட்ட, இன்றும் காணப்படுகின்ற சாதிப் பிரிவுகள் பற்றி விளக்கியிருந்தேன்..  இத் தொடரின் முதலாவது பகுதியினைப் படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கலாம்.


இலங்கைக்கு 1505ம் ஆண்டில் போர்த்துக்கேயர்கள் வருகிறார்கள். இந்தப் போர்த்துக்கேயர் இலங்கைக்கு காலடி எடுத்து வைத்த காலப் பகுதியில் யாழ்ப்பாணம், கோட்டை(கொழும்பு) கண்டி எனும் மூன்று பெரும் இராச்சியப் பிரிவுகளும், வன்னி என்கின்ற ஒரு சிறு(சிற்றரசு) இராச்சியப் பிரிவும் காணப்பட்டது.  கோட்டை இராச்சியத்தில் காணப்பட்ட உட் பூசல்கள் இலங்கை யின் கரையோரப் பகுதிகளில் போர்த்துக்கேயர்களின் கால்களை வலிமையாக ஊன்றுவதற்கு ஏதுவாக அமைந்து கொள்கிறது.


இதனடிப்படையில் 1621ம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்கள் தமது வலிமையினைப் பயன்படுத்தி யாழ்ப்பாண இராச்சியத்தினையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறார்கள். இப் போர்த்துக்கேயர்களால் யாழ்ப்பாண இராச்சியம் கைப்பற்றபடும் வரைக்கும் அல்லது தமிழர்களின் நிலங்கள் போர்த்துகேயர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் வரும் வரைக்கும் பிராமணியக் கொள்கைகளே தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் மேலோங்கிக் காணப்படுகின்றது.


பிராமணர்களின் வம்சத்தினைச் சேர்ந்தவர்களே மன்னர்களாகவும், சமூகத்தில் மூட நம்பிக்கைகளை விதைப்பதற்குத் தூண்டு கோலாகவும் காணப்பட்டிருக்கிறார்கள்.  சமூகத்தில் கல்வியறிவிலும் உயர்ந்தவர்களாக காணப்பட்டோரும் இந்தப் பிராமணர்களே. மன்னர்களின் அரச சபைகளில் இருந்த அல்லது வாழ்ந்த பிராமணர்கள் வரலாறுகளையும், வானியல், சோதிடம் போன்ற கலைகலையும் எழுதத் தொடங்குகிறார்கள். ஆங்கிலேயர் வருகை வரை யாழ்ப்பாண இராச்சியத்தில் அரச கருமங்களில்பிராமணர்கள் முதன்மை வகித்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. 

போர்த்துக்கேயர் ஆட்சியின் போது, கரையோரங்களை அண்டி வாழ்ந்த கரையார் என மக்களால் சுட்டப்படும் சாதியினைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களிடையேயும் , வறிய மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் போர்த்துகேயர்கள் பழகி, உதவிகள் செய்து, நன்மதிப்பைப் பெற்றவர்களாக தமது கத்தோலிக்க மதத்தினைப் பரப்பத் தொடங்குகிறார்கள்.


இலங்கையில் போர்த்துக்கேயர்கள் வருகை தந்து மதம் பரப்பி, புரட்சிகரமான சிந்தனைகளை வளர்க்க முற்பட்ட காலப் பகுதியிலோ அல்லது ஆலயங்களை இடித்து கத்தோலிக்க மதம் மட்டுமே வழக்கத்தில் இருக்க வேண்டும் என்கின்ற ஆதிக்க கொள்கைகள் வழக்கத்திலிருந்த காலத்திலோ; எமது சாதிப் பாகுபாடுகள் நீங்கி விடவில்லை. மாறாக ஒல்லாந்தர் வருகையினைத் தொடர்ந்து, ஆலயங்கள் மீளவும் கட்டப்படுகின்றன, ஆலயங்களில் மீண்டும்  மந்திரம் தெரிந்தவர்கள், சமூகத்தில் உயர்ந்தவர்கள் எனும் கொள்கையின் அடிப்படையில் பூசகர்களாகவும், நிர்வாகம் செய்பவர்களாகவும் பிராமணர்களே நியமிக்கப்படுகிறார்கள்.

ஆங்கிலேயர்களின் வருகையினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மேற்தட்டு வர்க்கம் எனத் தமக்குத் தாமே பெயர் சூட்டிக் கொண்ட வெள்ளாளர் எனப்படும் இனத்தினர் தமது ஆதிக்கத்தினை மெது மெதுவாகத் தம்மிடம் உள்ள பண பலத்தின் அடிப்படையில் பரவலாக்கத் தொடங்குகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் விவசாயம், வேளாண்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வெள்ளாளர் தமது திடீர் பொருளாதார வளர்ச்சியினால் சமூகத்தில் பிராமணர்களுக்கு இருந்த மதிப்பை விடத் தம்மைத் தாமே பெரியவர்களாக, சமூகத்தில் உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.

ஆயிரத்து எண்ணூற்றி ஐம்பதுகளின் பிற்பகுதியினைத் தொடர்ந்து இந்த வெள்ளாளருக்கு களனி நடுதல், பாத்தி கட்டுதல், நீர்பாய்ச்சுதல், மலசல கூடங்களைச் சுத்தம் செய்தல் முதலிய இதர பல வேலைகளில் ஈடுபடும் சமூக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தொழிலின் அடிப்படையில் சமூகத்தில் இருந்து தனித் தனிக் குழுக்காளாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

சமூகத்தில் தாழ்ந்த சாதி எனச் சொல்லப்படும் சாதிகளைச் சார்ந்தவர்கள் வெள்ளார்களை, அவர்களின் சாதியின் பெயரால் அழைக்க வேண்டிய தேவைக்கு ஆளாகின்றார்கள். வெள்ளாளன் இங்கே வாங்கோ... எனப் பணிவாக அழைத்து ஏவல் வேலை செய்யும் அடிமைகளாக; வெள்ளாள வெறி பிடித்த சாதிய மேல்தட்டு வர்க்க கொள்கையின் கீழ் ஏனைய மக்கள் மிதிக்கப்பட்டார்கள்.

 

ஆலயங்களில் வெள்ளாளருக்கு என்று இருக்கும் ஆலயத்தினுள் ஏனைய சாதியினைச் சேர்ந்த நபர்கள் செல்லக் கூடாது எனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆங்கிலேய மரபில் ஆங்கிலேயர்களின் கால்களை நக்கி தனது கல்வி ஞானத்தைப் பெருக்கிய ’ஆறுமுக நாவலர்’ எனும் மேதை வெள்ளாளருக்குரிய கோவிலாக யாழ்ப்பாணம் வண்ணார்ப் பண்ணையில் உள்ள வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஏனைய சாதிகளையும் புறக்கணிக்கத் தொடங்கினார்.

குடா நாட்டில் மக்கள் தொழில் ரீதியாகப் பிரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட இச் சாதிய முறைக்கு வித்திட்டவராக சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்தவர் என அறிஞர்களால் சிறப்பிக்கப்படும் ஆறுமுக நாவலர் விளங்கினார். இதனால் இவ் இழி குலங்கள், அல்லது கீழ் சாதி எனப் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட சாதிகளில் பிறக்கும் குழந்தைகள் இன்று வரை இதே கீழ் சாதி மரபிலே இருக்கின்றன, அவர்களைச் சமூகம் புறக்கணிக்கத் தொடங்குகிறது. இவர்களுடன் திருமணம் செய்தால் அது தமது முழுக் குடிக்குமே தீங்கானது என்று சொல்லி, விலகிக் கொள்கிறார்கள், விலக்கி வைக்கப்படுகிறார்கள்.

ஈழத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டுகள் வரை, இச் சாதியத்திற்கு எதிராக எவருமே புரட்சிகளைச் செய்யவுமில்லை, இச் சாதியத்திற்கு எதிராக குரல் கொடுக்கவுமில்லை. இந்து சமய ஆதிக்க வாத சைவர்களின் மேற் தட்டு வர்க்க கொள்கைகளின் விளைவாக காலதி காலமாக வீடுகளிற்கு வேலைக்காகவோ அல்லது ஏதேச்சையாகவோ வருகை தரும் கீழ்ச் சாதி மக்களிற்கு உயர் சாதி எனத் தமது வம்சங்களைச் சொல்லிக் கொள்வோர் தாம் எடுத்தாளும் பாத்திரங்களில் உணவு பரிமாறுவதனைத் தவிர்க்கிறார்கள். இன்றும் ஒரு சில இடங்களில் தவிர்த்து வருகிறார்கள்.

தெருவில் போகும் நாயிற்கு வைக்கும் உணவினை விட கேவலமான முறையில் இந்தக் கீழ் சாதி என இவர்களாச் சித்திரிக்கப்படும் மக்களுக்கு பழைய ஒரு கோப்பையினையும், ஒரு சில்வர் குவளையினையும் வீட்டின் ஒரு மூலையில் வைத்து அதனை அந்த மக்களைக் கொண்டே கழுவி, உணவினைப் பிச்சை போடுவது போலப் போட்டு வீட்டுக்கு வெளியே இருத்திச் சாப்பிடச் செய்வார்கள். இன்றும் செய்கிறார்கள்.

இந்த சாதிய வெறி பிடித்தவர்களின் பிள்ளைகள் ஒன்றும் அறியாதவர்களாய் கீழ்ச்சாதியினைச் சேர்ந்த பிள்ளைகளுடன் உரையாடுவதைக் கண்டால், மேற் சாதியினைச் சேர்ந்தவர்கள் அடித்து, திட்டிப் பேசி, ஏனைய மக்களோடு பழகக் கூடாது எனும் ஒரு வரையறைக்குள் வாழ வைத்திருக்கிறார்கள்.

சந்தர்ப்ப சூழ் நிலையால் கீழ்ச் சாதிப் பெண்ணை உயர் சாதியினைச் சேர்ந்தவன் காதல் கொண்டால், இறுதியில் தனது காரியத்தினை முடித்த பின்னர் சாதியினைக் காரணம் காட்டி அப் பெண்ணைக் கைகழுவி விடும் சம்பவங்களும் எமது சமூகங்களில் அடிக்கடி இடம் பெற்றிருந்தன. அதிலும் முகம் சுழிக்கும் படியாக மேல் சாதி ஆதிக்க வெறியர்கள் சமூகத்தில் உள்ள அழகான கீழ்ச் சாதிப் பெண்களைத் தமது உடல் இச்சைக்கு ஆளாக்கும் நோக்கில் காதலித்து, பின்னர் காரியங்களை முடித்து விட்டு, சாதியினைக் காரணம் காட்டி, ஏமாற்றி விடுவார்கள். இதனால் மனமுடையும் ஒரு சில பெண்கள் மருந்து குடித்தோ அல்லது அலரி விதைகளை உட் கொண்டோ
‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்’’ எனும் கொள்கைக்கு அமைவாக தற்கொலை செய்திருக்கிறார்கள்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தியாறுகளைத் தொடர்ந்து தமிழீழம் வேண்டிய போராட்டங்கள் வீறு கொள்ளத் தொடங்க, இச் சாதிய வெறி தன் வலிமையினை ஓரளவு குறைத்துக் கொள்கிறது எனலாம். சாதிய அடிப்படையில் போராட்டத்தினை நகர்த்தினால் தமது போராட்டங்களுக்கு ஆட்களைச் சேர்க்க முடியாது எனும் தந்திரத்தின் அடிப்படையில் ஈழத்துச் சாதிய வெறி உடைத்தெறியப்படுகிறது. ஆனாலும் மேல் தட்டு வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள பண பலத்தை அள்ளி வீசி போராடும் உள்ளங்களைப் பலிக்கடாக்கள் ஆக்கியதோடு, போராட்டத்தில் இணையாது புலம் பெயர்ந்து வாழுதல் அடிப்படையில்,  தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொள்ளுதல் எனும் முறையினைக் கைக் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

ஈழத்தின் கரையோரப் பகுதியினைச் சார்ந்த கரையார் இனத்தவரும், நளவர், பள்ளர் என மேற் சாதி வெறியர்களால் அழைக்கப்படுகின்றவர்களுமே போராட்டத்தில் அதிகளவு பங்களிப்புக்களைச் செய்திருந்தார்கள். பணபலத்தில் உயர்ந்தவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட வெள்ளாள மற்றும் ஏனைய மேலாதிக்க சாதிய வெறி பிடித்தவர்கள் தமது வியாபாரங்களைப் பெருக்குவதிலும், தமது பிள்ளைகளைப் போரில் இருந்து பாதுகாத்து, வெளி நாடுகளுக்கு அனுப்புவது, போராட்டத்திற்கு நிதிப் பங்களிப்பு வழங்கி தங்களைத் தற் காத்து, ஊரார் பிள்ளைகளைச் சாகடிப்பது’’ முதலிய அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள்.  இவற்றில் எல்லாம் சரியென்று கூறமுடியாது. இவ்வாறான மனத்தாக்கங்களும் இருக்கின்றன

போராட்ட காலங்களில் சாதிச் சண்டைகள் நடந்தாலோ, சாதி வெறியுடன் கூடிய சம்பாஷணைகள் நடந்தாலோ அவை உரியவர்களின் செவிகளுக்கு எட்டப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் எனும் ஒரே நோக்கத்தின் காரணமாக இவை யாவும் உறக்கத்திலிருந்தன. ஆனால் இன்று மீண்டும் சாதிச் சண்டைகள் மெது மெதுவாக தலை விரித்தாடத் தொடங்கி விட்டன.

‘நீ பிள்ளை அவருக்குச் சொந்தமே? நீங்கள் அவரின்ரை ஆளே?
நீங்கள் இருக்கிறது முதலாளியின் வீட்டிற்கு அருகிலா....’’
எனும் வக்கிரமான கேள்விகள் தான் ஒருவரைப் புதிதாக எங்காவது கண்டால் அவரைச் சாதி அடிப்படையில் பிரித்தறியப் பயன்படுகின்றன. ஈழத்தில் இன்றும் சாதியம் வாழ்கிறது, புலம் பெயர்ந்தும் எம்மவர்கள் திருந்தவில்லை என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக;
கனடாவைச் சேர்ந்த யாழ் உயர் குல வேளாள இனத்தைச் சேர்ந்த மண மகனுக்கு அதே இனத்தைச் சேர்த மணமகள் தேவை...’’ எனும் தொனியில் இன்றும் பத்திரிகைகளில் வரு விளம்பரங்களைக் குறிப்பிடலாம்..

*யாழ்ப்பாணத்தில் உள்ள சந்நிதி கோயில் கரையார் எனும் சாதிய வம்ச வழி வரும் கப்புறாளை(வாய் கட்டிப் பூசை செய்பவர்) என்பவரால் காலாதி காலமாக பூசை செய்யப்பட்டு வருகின்றது.கப்புறாளை கரையாருக்குரியது என்பது ஏற்புடையதன்று சாதிகள் தோன்றமுன் கடவுள்நம்பிக்கையுள்ள வேடர்கால முறை எனறும் அறிந்திருக்கின்றோம். எதோ பிராமணர் இல்லாத கோவில் இருப்பது தமிழர் கோவில் என்பதற்கு சான்றாகும் என்ற உண்மையை ஏற்போம். கட்டுரையாளரின் போக்குப்படி யாழ்ப்பாணத்தில் மேல்த்தடடினர் குறைந்தவர்கள் என்று ஒரு பகுதியினரையும் கூடியபகுதியினர் என்று பிராமணர்களையும்  வேலைக்கமர்த்தியிருப்பது தெரிகிறது. இதுவெள்ளையர் இன்று நம்மை வைத்திருக்கும்   முறையின்  ஒருவித்தியாசமான சாராம்ச முறை என்பதை ஏற்று ஏங்குவோம்.

*அச்சுவேலி காட்டு மலைக் கந்த சுவாமி கோவில், வாதரவத்தை அம்மன் கோவில், சுழிபுரம் பறாளை விநாயகர் கோயில், கைதடிப் பிள்ளையார் கோயில், நீர்வேலி வாய்க்காற் தரவை பிள்ளையார் கோயில்,  உட்பட பல ஆலயங்கள் இன்றும் ஈழத்தில் தாழ்ந்த சாதியினர் என முத்திரை குத்தப்படும் நளவர், பள்ளர் ஆகிய இனங்களினால் அவர்களின் சொந்த ஆலயங்கள் என்ற அடிப்படையில் வணங்கப்படுகிறது..

இவ் ஆலயங்கள் இன்றும் இந்தச் சாதியினைச் சேர்ந்த மக்களுக்கென்று தனியாக இருக்கின்றதென்றால், நாகரிகமடைந்த, தமக்கெனத் தனி நாடு வேண்டுமென்று வாய் கிழியக் கதறுகின்ற மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இந்த மக்களை உள்ளே நுழைய அனுமதிக்காத மேல்ச் சாதியினரின் ஆலயங்கள் இன்றும் சமூகத்தில் உள்ளன என்பது யதார்த்தம் தானே!

சாதியத்திற்கெதிரான இலக்கியங்களைப் படைத்தவர்களாக பின் வரும் படைப்பாளிகளைக் குறிப்பிடலாம்.
 மலையகத்தில் ஒடுக்கப்படும் மக்கள் வாழ்க்கையினை ஜீவா(ஈழத்தில் அன்று தொடக்கம் இன்று வரை வெளியாகும் மல்லிகை எனும் பிரபலமான இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர்)
டானியல், கணேசலிங்கம், நீலாவணன் முதலியோரைக் குறிப்பிடலாம். பஞ்ச கோணங்கள், கோவிந்தன், முருங்கை இலை கஞ்சி, அடிமைகள், தண்ணீர், போராளிகள் காத்திருக்கிறார்கள் முதலிய படைப்புக்களே ஈழத்தில் சாதியத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைக்கும் நோக்கில் ஈழத்து இலக்கியப் பரப்பின் மறு மலர்ச்சிக் காலம் என்று சொல்லப்படுகின்ற காலப் பகுதியில் வெளிவந்தவையாகும்.

ஆனாலும் இவ் மறு மலர்ச்சிக் கால இலக்கியங்கள் மேற் சாதி வெறியர்களின் கிறுக்குப் பிடித்த இறுக்கமான கொள்கைகள் காரணமாகச் சமூகத்தில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம்.

தாம் உயர் சாதியினரின் போலியான வார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறோம் எனும் உண்மையினைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட மக்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளைத் தொடர்ந்து கல்வி கற்று, உயர் பதவிகளை நோக்கித் தமது வாழ்க்கையினை நகர்த்துகிறார்கள்.
இத்தகைய கல்வி வளர்ச்சியினால் ஏனைய மேற் சாதியினரையே வீழ்த்திச் சாதனைகள் புரியும் அளவிற்கு இந்த மக்கள் முன்னேறி விட்டார்கள் எனும் ஒரே ஒரு உட் காரணத்தினை உணர்ந்து தான் யாழ்ப்பாண உயர் சமூகத்தில் உள்ள ஒரு சிலர் இவர்களுடன் சாதிகளேதுமற்ற கலப்புத் திருமண உறவுகளை இக் காலப் பகுதியில் பேணத் தொடங்குகிறார்கள்.

உயர்ந்த சாதியில் பிறந்து விட்டு, தாழ்ந்த சாதிப் பெண்ணைக் கட்டினால் என்னுடைய வம்சம் அழிந்து விடும், என்னுடைய பிள்ளைக்கு நான் எந்தச் சாதியில் திருமணம் செய்து வைப்பேன் என்று எண்ணுவோர் இருக்கும் வரைக்கும் இச் சாதியம் ஈழத்தில் காலாதி காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உடையார், முதலியார், குஞ்சியார் எனும் வெறி பிடித்த பெயர்களால் உயர் சாதியினைச் சேர்ந்த நபர்களை அழைத்து ஆலவட்டம் பிடிப்பதாலும் இந்தச் சாதியம் இன்றும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நீங்கள் அவற்றை ஆளே, நீங்கள் அவருக்குச் சொந்தமே எனத் துருவித் துருவிக் கேட்கப்படும் கேள்விகளும் உங்களின் பின் புலம் சார்ந்த பரம்பரையலகு சாராத இந்தச் சாதிய வெறியினையே வெளிப்படுத்தி நிற்கிறது.

இத்தனை கருத்துக்களுக்குப் பிறகும் ஈழத்தில் சாதியம் இல்லை என்று யாராவது எதிர் வாதம் புரிய முன் வந்தால், ஒரே ஒரு தடவை எங்கள் குடா நாட்டு வீடுகளிற்கு வாருங்கள், எங்கள் கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ உள்ள ஒரு வீட்டிலாவது ‘வாசலின் மேற் கூரையினுள் செருகி வைத்திருக்கும் பழைய சாப்பாட்டுக் கோப்பையினையும், தண்ணி குடிப்பதற்காக வைத்திருக்கும் டம்ளர் அல்லது சில்வர் குவளையினையும் பார்த்து விட்டு மனச்சாட்சியைத் தொட்டுப் பேசுங்கள்!