குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

நற்கவிஞர்.செ.பா.சிவராசன் அவர்கள் எழுதிய‌"விழிகள் தீட்டிய சிற்பி "

உன்னிடமிருந்து....

நீ ..சிரிக்கிறாய்
சினேகமாக
கற்றுக் கொள்கிறோம் நாங்கள்
பிறரை நேசிப்பதற்கு ! நீ.. நோக்குகிறாய்
உற்று..
உறுதி ஏற்கிறோம் நாங்கள்
உலகத்தின் அடையாளங்களாய் மாறுவதற்கு..!

நீ ... தடுக்கிறாய்
தவறை தவறென்று.
கற்றுக் கொள்கிறோம் நாங்கள்
துணிச்சலை..!

நீ.. ஒரம் வைக்கிறாய்
உன் நெற்றிமுடியை
கற்றுக் கொள்கிறோம் நாங்கள்
தடைகளை ஓரம் வைப்பதற்கு !

நீ நடக்கிறாய்
தடை கடக்கும் நடை
கற்றுக் கொள்கிறோம் நாங்கள்
பயணிப்பதற்கு !

நீ எழுதுகிறாய்
கற்றுக் கொள்கிறோம் நாங்கள்
மொழியை நேசிக்க!

நீ உழைக்கிறாய்
ஓயாது
கற்றுக் கொள்கிறோம் நாங்கள்
ஓய்வில் உழைப்பதற்கு !

நீ கற்கிறாய்
உலகத்திடமிருந்து
கற்றுக் கொள்கிறோம் நாங்கள்
உன்னிடமிருந்து !

******************

காவலன் திரைப்படத்தில் கதா நாயகியின் தந்தை பாடுவதாக அமைந்த பாடல் .
பாடல் எழுதும் போட்டியில் 3 வது இடம் பிடித்த செ.பா.சிவராசன் அவர்களின் பாடல் வரிகள்

பல்லவி

யார் தருவார் இந்த யாக்கை
யார் தருவார் இந்த வாக்கை
தங்கமும் தரகமும் அடிவாங்கி
தரமாய் உருவம் பெற்றது போல்..
பட்டாம் பூச்சியின் உமிழ் நீரில்
பட்டு நூலும் மானம் காப்பது போல்...

யாழ் இதுவெனப் புரியவில்லை
பாழ்பட்ட பூமியிது கண்களில்லை

தெய்வத்தை உரசிப்பார்த்தா கும்பிட முடியும் ..?
கல்லினைக் குடைந்தா சாமியைக் கண்டிட முடியும்?
-------------------------- (2)

உள்ளத்தில் உண்டானக் காயங்களை நீ கேட்டால்..
நீரில் உப்பிட்டு விழிகளும் விருந்தளிக்கும்..
---------------------------(2)

----------------- யார்

சரணம் -1

உள்ளத்துப் பூவில் எந்த வண்டு வந்தமரும் யாரறிவார்..?
உள்ளத்தைக் கண்டு வந்த வண்டு
உயிர்விட்டுப் போனாலும் போகாது யார்மறுப்பார்..?
உள்ளத்துக்கும் இவந்தான் காவலன்-பலர்
உள்ளத்தில் இவந்தான் காதலன்
மழைக்கு மண்ணென எழுதிய உறவில்
எத்தனை நாள்தான் இலைகளில் வாழ்ந்திட முடியும்..?
உயிரின் ஒயிலாட்டம் உணர்வால் வெள்ளோட்டம்
நடக்குது நெஞ்சில் மஞ்சுவிரட்டாய்..
--------------- (2)

சரணம் -2

கோடானு கோடி விண்மீனில்
மின்னும் விண்மீன் நீதானே..!
வீதியைத் தேடி தேர்வந்தால்..
விசாரணை செய்வதா நல்லமுறை

அலைகளின் துளைகள் வழி
இதயத்துக்குள் நுழைந்த உறவிதுவே..!
காவலன் காவலிருக்க காதலி நீ ஆனாய்
கண்ணகி நீ தவம் செய்ய மாதவிக்கு வரம் கிடைத்ததிங்கு
----------------------- (2)

உதிரங்கள் வலிதாங்க உறவுகள் துடித்ததிங்கு..
உறவுகள் துடிதுடிக்க காதலைக் கொன்றவன் நான்..
காதலைக் கொன்றவன் நான்..
காதலைக் கொன்றவன் நான்..
காதலைக் கொன்றவன் நான்..

 

புத்தாண்டுக் கவிதை .. (2011)

புயலே...
நீ எழுக !
பயமே இல்லாமல்
பதுக்கி வைத்திருக்கும்
பணங்களைப் பிரித்து
ஒதுக்கி வைத்திருக்கும்
ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்கு..!

இடியே..
நீ விழுக !
விடிவே இல்லாமல்
கதியே என ஊழல் செய்யும்
ஊதாரிகளின் தலையில்
குட்டு இடுவதற்கு ...!

பனியே..
நீ உறைக !
சாதகமின்றி பாதகம் செய்யும்
பயங்கரவாதிகளைக் குறைப்பதற்கு !

நிலமே..
நீ நடுங்குக !
சாதி மதம் பேதம் காட்டி
வீதி வீதியாய் தெருக்கள் செய்யும்
சனி பிடித்தவர்களையும்
நீ ஒன்றாக்குவதற்கு !

சூரியனே ..
நீ சுடுக !
பூதங்கள் ஐந்தினை மறந்து
வேதங்கள் நான்கினை
வேதாளமாய் ஓதுபவன்
நாவினைச்சுடுவதற்கு !

அலையே..
நீ பொங்குக !
பொல்லாங்கு பல செய்து
தேவாங்கு தேகம் கொண்டு
தோரணமாய் காட்சியாகும்
தோலர்களைப் பார்த்திடவே ..!

அடைமழையே ..
நீ வருக !
விளை நிலத்தில் விளைந்த
அடுக்கு மாடிகளை
அறுவடைச் செய்வதற்கு !

உணவுப் பஞ்சமே ..
நீ வருக..!
உள் நாட்டுப்
பேய் பிடித்தவன் முதல்
வெளி நாடுவரை
போய் படித்தவன் வரை
மண் தொட்டு
விவசாயம் செய்து
விவசாயிகள் இல்லா
பஞ்சம் தீர்ப்பதற்கு !

நான்..
கேட்பதைக் கொண்டு..
புத்தாண்டே .. நீ வருக !
வல்லரசு தேசம் அமைப்பதற்கு..!

 

 

   சிந்தனைக் கவியரசு சினேகன் அவர்கள் படித்து பாராட்டிய செ.பா.சிவராசன் அவர்களின் முதல் கவிதை (பாடல்)       

 

பல்லவி

ஆ : நீ என்றால் கடந்த காலம்.
பெ : நீ என்றால் நிகழும் காலம்
ஆ.பெ : நாம் என்றால் வரும் காலம், காலக் கவிதையிலே..

                                                                                  -------------- (நீ என்றால்..)
                      சரணம் - 1

ஆ : கண்ணில் பட்ட மின்னல் போல..
          என்னில் சுட்ட இன்னல் போல

பெ : உதயம் காட்டும் ஜன்னல் போல
          இதயம் காட்டி போனவா..!


ஆ : விழிகள் இரண்டும் பேரம் பேசி
          மொழிகள் விரதம் இருந்தாச்சு

                                                                                     ----------- (2)
பெ :  உன்னைக் கண்ணால் கண்ட நாளும்
            தீபத் திரு நாள் ஆகாதோ ..!

                                                                               -------------- (நீ என்றால்..)

                       சரணம் -2

ஆ : பார்வைக் கோலம் நாளும் இட்டு
          போர்வைக் காலம் நாணம் விட்டு

பெ : பாவை நெஞ்சம் மஞ்சம் கொள்ள
          பாலை கொஞ்சும் சோலை ஆகாதோ..!
                                                                                    ------------ (2)
ஆ : இளமைக் காலம் இனிக்கும் தட்டு
         இரவல் கேட்கும் இதயம் தொட்டு
                                                                                     ------------ (2)
ஆ : அட்சயபாத்திரம் ஆசைப்பட்டு
           நம்மை வரம் கேட்காதோ..!
                                                                             --------------- (நீ என்றால்..)


                        சரணம் - 3

பெ : உயிலில் இதயம் எழுதி தருவேன்
           உயிரில் உயிலை மின்னஞ்சல் செய்வேன்
          உடலைக் கண்டால் அழுதிடாதே ..!
         அதில் நான் இல்லையே..
                                                                                .------------ (2)
ஆ ; உயிரை வாங்கும் காலனுக்கு
         லஞ்சம் கொஞ்சம் நான் கொடுத்தேன்
         காதல் ஆழும் உலகமெல்லாம்
         சாதல் சாபம் எனியில்லையே ..


நாளை முதல் நான்

இருக்கத்தான் செய்கின்றார்கள்
ஏழையும் பணக்காரனும்
ஏழை...
ஏழையாகவே !
பணக்காரன்...
பணக்கரனகவே !

இருக்கத்தான் செய்கின்றார்கள்
நல்லவனும் கெட்டவனும்
நல்லவன்...
நல்லவனாகவே !
கெட்டவன்...
கெட்டவனாகவே !

இருக்கத்தான் செய்கின்றார்கள்
உழைப்பவனும்  உழைக்காதவனும்
உழைப்பவன்...
உயிர் விட்டு உழைத்துக் கொண்டே !
உழைக்கதாவன்
சவால் விட்டு வாழ்ந்துக் கொண்டே !
இறுதிவரை இப்படித்தான்
இவர்கள் ...
நாளை முதல் நான்
மேகங்களுக்கிடையில் கூட வருவதில்லை
பேதங்களைப் பார்க்க !

                         - சொல்வது நிலா

 

 
பாராட்டு பெற்ற பாடல்

பல்லவி

உடலில் வாழும் ஜீவனே 
உன்னை அறிவாயா.. ?
ஜீவன்அசைக்கும் துருவாக
தேவன் படைப்பின் பொருளாக
உணர்ந்தால் கொணர்ந்தால்
தன்னையும் மறந்து

உடலில் வாழும் ஜீவனே 
உன்னை அறிவாயா.. ?

சரணம் 1
ஐந்தறிவும் அந்த பகுத்தறிவும்
ஆசை மறந்து உலகறியும்
மெய்யறிவும் அந்த உணர்வறிவும்
ஓசை மறந்து  ஒருநிலை அறியும்
வாசல் உயிருக்கு. . ...........  ஆ...
வாசல் உயிருக்கு அன்பாகும்
அன்பு இருக்கும் மனம்
இறை உருவாகும்
அன்பின் அணையே ஆண்மிகம்தானே....!

சரணம் - 2

கூரான புத்தி இவள் சக்தி என்பேன்
சக்திக்கேற்ற இடம் உந்தன் சிந்தை என்பேன்
உதிரங்கள் உன்னுள் சுற்றும் உடல்கள் எல்லாம்
உறவாட உயிர் தாங்கும் மண் மகுடம்
இறப்பு எவ்வுயிர்க்கும் இறப்பு இல்லை
பிறப்பு எவ்வுயிர்க்கும் மறு பிறப்பாகும்
இதை காணும் விழியே ஆண்மிகம்தானே..!

 

வாழிய! கவிஞரே வாழி ! வாலிபக் கவிஞரே வாலி  
                                                              


 

வாழிய! கவிஞரே வாழி !
வாலிபக் கவிஞரே வாலி
வார்த்தைக்கு நீரோ  ஞானி 
வார்த்தையில் ஆடுகிறீர் கோலி -உம்
வார்த்தையோ இதயம் (எதையும்) திறக்கும் சாவி
முதுமை உமக்குப்  போலி
வாழ்த்தி நிரம்பவில்லை எங்கள்  மன ஆழி !

கரும்பலகையாய்....  நீ..

அன்றுதான் பார்த்தேன்
அவளை.. வகுப்பில்
கறுப்பாகவே இருந்தாள்
என்னுடன் இருந்தவர்களும் கூட‌
அவளையே உற்றுப் பார்த்து
கவனித்துக் கொண்டிருந்தார்கள்
அவளிடமிருந்துதான்  நான்
நிறையக் கற்றுக் கொண்டேன்
அவள் என்னோடு..
வருவாள் என்று எதிர்பார்த்தேன்..
இறுதியில்
நானோ...
ஜெயித்து
வெளியே போனேன்
அவளோ ..
அதே வகுப்பில்
தோற்றவளாய் இருந்தாள்..
ஆம்..
ஒவ்வொரு வெற்றிக்கும்
தோற்றவர்கள்தான்
பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் !


*******************

சாப்பிடு கண்ணா.. சாப்பிடு

சாப்பிடு கண்ணா.. சாப்பிடு
நீ.. சாப்பிடலண்ணா..
பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு கொடுத்திடுவேன்..
ஆ.........காட்டு..
ஆ...
நல்ல பிள்ளை
ஆ ... இன்னும் ஒரு வாய்..
இன்னும் ..
குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறாள் தாய்..

மனித நேயத்தை சாப்பிட‌ ..!