குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

மொரிசியசு கோயில்களில் தமிழில் மந்திரம்அருணாசலம் புட்பரதம்

மொரீசியசு தீவில் வாழும் தமிழர்களுக்குக் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் பல மாரியம்மன், முருகன் கோயில்கள். ஒரு சில காளியம்மன் அல்லது துர்க்கை அம்மன் கோயில்கள். முருகன் கோயில்களில் எல்லாம் சிவலிங்கமும் இருக்கும். திருமாலும் உண்டு. இந்தக் கோயில்களை 300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக ஆயிரக்கணக்கில் வரவழைக்கப்பட்டவர்கள் கட்டி வைத்தார்கள் அப்பொழுது அவை குடிசைகளாக இருந்தன. காலப்போக்கில் சிறு கட்டடங்களாகக் கட்டினார்கள். இப்பொழுது இந்தக் கட்டங்கள், திராவிடக் கோயில் கட்டட அமைப்புக்கு ஏற்ப திருப்பணி செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து இதற்கென சிற்பிகள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றில் சிலவற்றுக்குத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டும் நடைபெற்றுவிட்டன.

இப்படிப்பட்ட கோயில்கள் சற்றேழத்தாழ 130-க்கு மேல் இருக்கின்றன. இவை கோயில் சங்கங்களின் மேற்பார்வையின் கீழ் உள்ளன. எல்லாக் கோயில் சங்கங்களும் மொரீசியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பு என்னும் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. கூட்டிணைப்பு ஆட்சிக் குழுவின் உறுப்பினர்கள் கோயில் சங்கங்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மொரீசியஸ் நாட்டின் அரசாங்கம் இந்நாட்டிலுள்ள கிறிஸ்துவர், இஸ்லாமியர், இந்துக்கள் ஆகியோர் தங்கள் தங்கள் சமயத்தின் வளர்ச்சிக்குப் பண உதவி செய்கிறது. இது மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்பத் தரப்படுகிறது. கூட்டிணைப்பின் ஆட்சிக்குழுவினர் இந்த உதவிப் பணத்தைக் கோயில்களின் தரத்திற்கு ஏற்பப் பகிர்ந்து அளிக்கின்றனர். தவிரவும், தமிழர்களைப் பொறுத்தமட்டில் இந்நாட்டு அரசினர் கூட்டிணைப்புக் குழுவினரோடு கலந்து ஆலோசித்த பிறகுதான் தைப்பூசக் காவடித் திருவிழாவிற்குரிய தேதியைப் பொது விடுமுறையாக அறிவிப்பது உண்டு. இப்படியே தமிழர்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு கூட்டிணைப்புதான் அதிகாரபூர்வமான அமைப்பு என்று சொல்லலாம்.

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்குப் பெரும் பொருள் செலவிடப்படுகிறது. மேலும், தமிழ் நாட்டவரில் சிலர் இங்கு வந்த பிறகுதான் கோயில் கிரியை முறைகளைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டுச் சூழல் வேறு; இந்நாட்டுச் சூழல் வேறு. இன்னும் பல்வேறு காரணங்களால் இனி உள் நாட்டவரையே கோயில் திருப்பணிகளுக்கு உருவாக்க வேண்டிய கட்டாயம் உணரப்பட்டது. அதனால் கூட்டிணைப்புக் குழுவினர் 2,000-வது ஆண்டில் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பைத் தொடங்கினார்கள். 80 பேருக்கு மேல் விண்ணப்பித்திருந்தனர்; ஆனால் 40 பேரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் பலர் கோயில்களில் பகுதி நேர அர்ச்சகர்களாகப் பணியாற்றுகின்றனர். அறிவியல் பட்டதாரிகள் ஓரிருவரும், உயர்கல்வி மாணவர்களும், தமிழாசிரியர்கள் சிலரும் இப் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்கள். சிலர் ஆர்வத்தின் காரணமாகவும் சேர்ந்திருக்கிறார்கள்.

இப் பயிற்சி வகுப்பு சுந்தரேசன் செங்கல்வராயன் மற்றும் எனது பொறுப்பில் விடப்பட்டுள்ளது. நான் இங்குள்ள மகாத்மா காந்தி நிறுவனத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவன். சு. செங்கல்வராயன் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்; சிவநெறிச் செம்மல் ந.ரா. ஆடலரசு என்பாரிடம் சைவ சமய தீட்சை பெற்றவர்.

நாங்கள் இருவரும் முறையான பாடத்திட்டம் ஒன்றை வகுத்தோம். அந்தப் பாடத்திட்டத்தைப் பேராசிரியர் ச. சாம்பசிவனார், பேரூர் ஆதீனத் தலைவர் தவத்திரு இராமசாமி அடிகளார், லண்டன் மெய்கண்டார் ஆதீனத் தலைவர் தவத்திரு சிவநந்தி அடிகளார் பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார்கள். பாடத்திட்டத்தில் சைவ சமயக் கல்வி, வழிபாட்டுச் செய்முறைகள் என்பவை அடிப்படைப் பாடங்கள். இவற்றோடு தமிழ்மொழி (பேசுதல், எழுதுதல், வாசித்தல்), மக்கள் தொடர்பு, திருமுறை இசை என்னும் பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுது அர்ச்சகர் பயிற்சி வகுப்பு நிறைவு பெறுகிற நிலைமையில் உள்ளது. ஆகவே, நவம்பர் மாதத்தில் பயிற்சி பெறுகிற மாணவர்களோடு ஆசிரியர்களும் வேறு சிலருமாக 30 பேர் தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார்கள். இவர்களுக்குச் சமயத் தீட்சை அளிக்க பேரூர் ஆதீனத் தலைவர் முன்வந்துள்ளார். மூன்று மாதங்கள் தமிழ்நாட்டிலேயே தங்குவார்கள். திருத்தலப் பயணமும் மேற்கொள்வார்கள்.

வழிபாட்டுச் செய்முறைகள் எல்லாம் திருமுறைகள் அடிப்படையில் கற்றிருக்கிறார்கள் இந்த அர்ச்சகர் பயிற்சி பெறுகிற மாணவர்கள். மொரீசியஸ் தமிழர் கோயில்களில் தமிழ் மொழியில் தான் மந்திரங்கள் சொல்லப் பெற வேண்டும் என்பது கூட்டிணைப்பின் நோக்கமாக உள்ளது. அந்த நோக்கம் இனி செயல்பட இருக்கிறது. மேலும், எல்லா ஊர்களிலும் உள்ள எல்லாக் கோயில்களிலும் ஒரே மாதிரியான திருமுறைகளும் மந்திரங்களும் ஓதப்பட வேண்டும் என்பது இன்னொரு நோக்கம். இதுவும் இனி செயல்முறைக்கு வந்துவிடும்.