200 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரன் படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதேபோன்று, நம் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால், பெண்களுக்கு அதைவிட சுதந்திரம் வேறு எதுவும் இல்லை.
அப்படி ஒரு ரோபோவைத்தான் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். துணிகளைக் கையால் அடித்துத் துவைத்து, காய வைத்து மடித்து வந்த காலம் மலையேறிவிட்டது.
தற்போது, துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு எடுத்து உலர்த்துவது மட்டுமே வேலை. அதையும் செய்வதற்குப் போதிய நேரமின்றி இருக்கிறோம்.
இந்நிலையில், தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘வில்லோ கேரேஜ் பி.ஆர்.2′ என்ற ரோபோ, வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளை, தானே தேடிக் கண்டுபிடித்துத் துவைப்பதோடு மட்டுமின்றி, அதை உலர வைத்து இஸ்திரி போட்டு மடித்து நமக்குத் தேவையான இடத்தில் வைத்து விடுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு, முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரோபோ முழுமையாகத் தேர்வு செய்யப்பட்டு விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. பெர்க்கிளி யூனிவர்சிட்டி மாணவர்களான சித்தார்த் ஶ்ரீவத்சவா மற்றும் அவரின் நண்பர்கள் இதற்கான முழுப் புரோக்கிராமையும் எழுதியுள்ளனர்.
இந்த ரோபோவின் விலை 2,80,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. விலையைக் கண்டு வாயைப் பிளக்காதீர்கள். விரைவில், இது மலிவு விலையில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.