குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இயற்கையை நேசியுங்கள்

சிறிய வயதில் வரலாற்றுப் பாடப்புத்தகங்களைப் படிக்கும்போதெல்லாம் ஒரு புறம் மனத்தில் வேடிக்கையாக இருக்கும், மறுபுறம், இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று தோன்றும். “அசோகர் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார், ஆங்காங்குச் சத்திரங்களை ஏற்படுத்தினார்” என்று ஒரே வாய்பாடு போல அரசர்களைப் பற்றிக் குறிப்புகள்.

 

 

 

இப்போதுதான் அந்த வரிகளின் ஆழம் புரிகிறது. இன்று எங்கும் நிஜக்காடுகள் அழிக்கப்பட்டு, கான்கிரீட் காடுகள் உருவாகிவிட்டன. உலகின் வெப்பம் பெருகி விட்டது. மழை இல்லை. குடிதண்ணீர் கிடைக்காமல், அரசாங்கமே தண்ணீரை விற்கத் தொடங்கிவிட்டது. எந்த ஓர் ஆற்றையும் தனக்கெனச் சொந்தமாகக் கொள்ளாத தமிழ் நாடு அடுத்த ஐந்தாண்டுகளில் பாலைவனமாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. மனித உறவுகளைப் போல, இயற்கைமீதான நமது நேசமும் ஆழமாகவும் காலங் காலத்துக்குத் தொடர்வதாகவும் இருக்கவேண்டும் என்பது உலக மக்களுக்குப் புரிய வில்லை. தமிழ்மக்களுக்கும் தெரியவில்லை.

 

துரதிருஷ்டவசமாக, நம்மை நாம் எவ்விதம் மேம்படுத்திக்கொள்வது என்று அறிவதற்கு, சிந்திப்பதற்கு முன்னாலேயே இன்று நம்மில் பலர் மிகவேகமாக இயற்கைச் சூழலை மாற்றிவிட்டார்கள். இயற்கை இருக்க நம் உதவி தேவையில்லை, நாம் இருக்கத்தான் இயற்கையின் உதவி தேவை. நாம் வாழும் இந்த உலகமாகிய பூமியின் எதிர்காலம்தான் இன்று மனித இனத்தை எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியமான பிரச்சினை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னால், ஒரு பறவையைப் பிடிப்பதற்கு முன்னால், ஒரு குன்றினைத் தரைமட்டமாக்குவதற்கு முன்னால் நாம் நினைவில் வைக்கவேண்டியது இது: “இயற்கை தான் நமது வாழ்க்கை”.

 

இயற்கையின் பரிசு-ஒரு பழங்கதை

ஒரு காலத்தில் ஆரோக்கியமான மூன்று பிள்ளைகளைக் கொண்ட விவசாயி ஒருவன் இருந்தான். முதல் இரண்டு மகன்களும் காளைகளைப் போன்ற வலிமையும், கழுகினைப் போன்ற கூரிய பார்வையும் கொண்டவர்கள். குறி தவறாமல் அம்பு எய்யக்கூடியவர்கள். மூன்றாவது மகனோ முற்றிலும் இவர்களைப்போல இல்லை. சற்றே ஒல்லியான தோற்றத்துடன், சிந்தனையாளன் போலக் காட்சியளித்தான்.

தன் பண்ணைநிலத்தை யாருக்குக் கொடுப்பது என்று விவசாயி முடிவு செய்யும் காலம் வந்தது. தன் மகன்கள் தாங்களே தங்கள் எதிர்காலத்தைத் தேடட்டும் என்று அந்த முதிய விவசாயி நினைத்தான். “உலகத்தைச் சுற்றி வாருங்கள், போங்கள்” என்று மகன்களுக்குக் கட்டளையிட்டான்.

அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். வழியில் பாதைக்கருகில் ஓர் எறும்புப் புற்று உயரமாக இருந்தது. காலை முதல் நடந்து சலிப்புற்ற இரண்டாவது மகன் அதை உதைக்கச் சென்றான். அதிலிருந்து பயந்தோடும் எறும்புகளைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் என்று நினைத்தான்.

“உதைக்காதே” என்றான் மூன்றாமவன். “அவைகளுக்கும் பாதுகாப்பாக வாழ உரிமை இருக்கிறது, அல்லவா?”

கொஞ்சம் கழித்து அவர்கள் தெளிந்த நீரைக்கொண்ட ஓர் ஏரியை அடைந்தார்கள். தங்கள் சாப்பாட்டு மூட்டைகளைப் பிரிக்க உட்கார்ந்தார்கள். சில வாத்துகள் ஏரியில் இறங்கி நீந்தின.

“இவற்றில் ஒன்றை அடித்தால் போதும், நம் உணவுக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்” என்று முணுமுணுத்தவாறு தன் வில்லைத் தேடினான் மூத்தமகன்.

“நகராதே!” உரக்கக் கத்தினான் இளைய மகன். “பலநாட்களுக்குத் தேவையான உணவு நம்மிடம் இருக்கிறதே!” வாத்துகள் அதிர்ந்து, ஏரியிலிருந்து பறந்தோடி விட்டன.

ஒரு முதிய காட்டின் விளிம்பை அவர்கள் அடைந்தபோது எழுத்து மறையும் நேரம். இரவுநேரத்தில் தங்கள் கூடுகளுக்குத் தேனீக்கள் திரும்பிய ரீங்கார சத்தம்

“ஆஹா, என் ரொட்டிக்குக் கொஞ்சம் தேன் இருந்தால் போதுமே”….ஓசையைத் தொடர்ந்து மூத்தவன் சென்றான். உள்ளீடற்ற ஒரு மரத்தின் அருகில் சென்ற போது அதன் பட்டைமீது தேன்

மற்ற இருவரும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். நடுமகன் சொன்னான், “மரத்தை நாம் எரித்தால், அதில் எழும் புகையில் தேனீக்களை விரட்டிவிடலாம்”.

“அப்புறம்? காடு முழுவதையும் உசுப்பிவிடுவதா?” என்றான் இளையவன். “தேனீக்களை அவற்றின் போக்கில் விடுங்கள்.”

மற்ற இரண்டு சகோதரர்களும் எரிச்சலடைந்தார்கள். இவனை எங்கேயாவது விட்டுவிட்டு வந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும்!

களைத்தவாறு நடந்து, இருண்ட காட்டின் மத்தியில், பாழடைந்த ஒரு குடிசையை அடைந்தார்கள் அவர்கள். மூத்தவன் கதவைத் தட்டினான். நரைத்த முதியவர் ஒருவர் அவர்களை உள்ளே அனுமதித்தார்.

“எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று ஓர் இனிய குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், ஓர் அழகிய இளம்பெண்.

“எங்கள் அதிர்ஷ்டத்தை நாடிப் புறப்பட்டிருக்கிறோம்” என்று விடையிறுத்தான் மூத்தவன்.

“இதயத்தில் துணிச்சலும் கண்களில் கூர்மையும் இருந்தால் அதை நீங்கள் அடைந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம்” என்றார் முதியவர்.

“இரண்டுமே எங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று பெருமையடித்துக் கொண்டான் இரண்டாமவன்.

“அப்படியானால்,” தொடர்ந்தார் முதியவர், “உங்களில் யார் இந்தக் கற்பலகையைப் படித்து முயற்சி செய்யத் தயார்?”

மூத்தவன் தைரியமாக எழுந்து கற்பலகையிலிருந்த செய்தியைப் படித்தான். “காட்டில் பரவிக்கிடக்கும் முத்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சூரியன் மறையும் போது ஒரு முத்து கூட விடுபட்டிருக்கக் கூடாது. இல்லையென்றால் நீ கல்லாகிவிட நேரும்.”

கிழவரைப் பார்த்து மூத்தவன் கேட்டான்: “எத்தனை முத்துகள் விடுபட்டிருக்கின்றன?”

“ஆயிரம்.”

விடியலில் அவன் புறப்பட்டான். இலைகளும் கொடிகளும் மூடிக்கிடந்தன எங்கும். காட்டின் தரையைப் பார்த்து ஏறத்தாழ அழுதேவிட்டான்.

குன்றுகளின் பின்னால் சூரியன் மறைவதற்குள் பத்து முத்துகளை மட்டுமே பொறுக்கமுடிந்தது. குந்திய நிலையிலேயே சிலையாகிவிட்டான்.

இரண்டாம் சகோதரன் மறுநாள் காலையில் போனான். சூரியாஸ்தமனத்திற்கு முன் இருபது முத்துகளை மட்டுமே சேகரித்தான். அவனும் சிலையாகிவிட்டான்.

மூன்றாமவனின் முறை வந்தது. புறப்பட்டவுடன் அவன் காதில் ஒரு சன்னமான குரல் கேட்டது. “சஞ்சலப்படாதே.”

திகைத்துப்போய் காலடியைப் பார்த்தான். பாதை முழுவதும் எறும்புகளின் கூட்டம். மெல்லிய குரல் ஒன்று சொல்லியது: “நான்தான் நீ எறும்புப்புற்றில் காப்பாற்றிய எறும்புக்கூட்டத்தின் அரசன். நாங்கள் உன்னைக் காப்பாற்றுவோம்.”

சூரியன் மறையும் நேரத்தில் அவன் ஆயிரம் முத்துக்களைக் கொண்ட இரண்டு பெரிய பைகளுடன் வீட்டுக்குத் திரும்பிவந்தான்.

இரண்டாவது பணிக்கு அவனை முதியவர் அனுப்பினார். ஒரு பெண்ணின் மோதிரம். ஓர் ஆழமான கருத்த ஏரியில் விழுந்துவிட்டது, அதைத் தேடி எடுக்க வேண்டும். எப்படி எடுப்பது? சற்றேறக் குறைய அழுதேவிட்டான் இளைஞன்.

“பயப்படாதே” என்று ஒரு வாத்தின் ஒலி கேட்டது. “நீ என் கூட்டத்தைக் காப்பாற்றினாய். உன்னை நாங்கள் காப்பாற்றுவோம்” என்றது தாய் வாத்து.

சூரியாஸ்தமன நேரத்தில் கையில் பொன் மோதிரத்தோடு திரும்பினான் இளைஞன்.

மூன்றாவதாகவும் ஒரு பணிக்கு அவன் மீண்டும் அனுப்பப்பட்டான். ஒரு உயர்ந்த மாளிகையின் உப்பரிகைக்குச் செல்லவேண்டும். சென்றான். அங்கே மூன்று பட்டாடை அணிந்த பெண்கள்-அச்சாக ஒரே மாதிரி இருந்தார்கள்-உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்திதான் இளவரசி. தன் இளவரசனுக்காகக் காத்திருப்பவள் அவள்.

“ஐயோ” விசனித்தான் இளைஞன். “எப்படி நான் இவர்களில் என் இளவரசியைக் கண்டுபிடிப்பேன்?”

“கவலைப் படாதே” என ஒரு ரீங்காரக் குரல் கேட்டது. அது இராணித் தேனியின் குரல். அது ஒவ்வொரு பெண்ணாக முகர்ந்துகொண்டே சென்றது. மூன்றாவது பெண்ணின் உதட்டில் போய்

அந்த அழகிய இளவரசிக்கு ஒரு தகுதியான கணவன் கிடைத்தான் என்று காட்டின் பிராணிகள் யாவும் குதூகலித்தன.

 

இயற்கையை நேசியுங்கள், நேசியுங்கள்

1964ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்புத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்-கிடம் ஒருமுறை “நீங்கள் நாளை இறந்துபோகப் போவதாக அறிந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அவர் பதில்: “ஒரு மரம் நடுவேன்”.
மரம் நம் வாழ்க்கையின் குறியீடு. நாம் மரங்களை நடுகிறோம், அதன் குளிர்ந்த நிழலில் அடுத்த தலைமுறை இளைப்பாறுவார்கள். அடுத்த தலைமுறையைப் பற்றிய கவலை சிறிதுமற்றவர்கள்தான் இயற்கையைப் பாழாக்குவார்கள். மலைகளை அழிப்பார்கள். பாறைகளைக் கொல்லுவார்கள், மணலை அள்ளுவார்கள், மரங்களை வெட்டுவார்கள். இவர்களைவிட மானிட இனத்திற்குப் பெரிய துரோகிகள் இல்லை.
ஐம்பதுகளில் வெளிவந்த தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் இறுதிப் பகுதியில் ஒரு காட்சி. தெனாலிராமன் தில்லிக்குச் செல்கிறான். அரசன் பாபர் வரும் வழியில் ஓரிடத்தில் முதியவன் வேடத்தில், “உல்லாசம் தேடும் எல்லாரும் ஓர்நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்” என்று பாடியவாறே ஒரு மாங்கன்றை நட்டுக்கொண்டிருக்கிறான். பாபர் வருகிறான் குதிரைமீது. “முதியவரே, உங்களுக்கு வயதாகிவிட்டது, இந்தக் கன்று மரமாகிப் பழமளிக்கப் பல ஆண்டுகள் ஆகுமே” என்கிறான். “நமது முன்னோர்கள் நட்ட மரங்களின் பழங்களைத்தான் இன்று நாம் சாப்பிடுகிறோம், இது நம் பிற்காலச் சந்ததிகளுக்குப் பழமளிக்கும்” என்கிறான் தெனாலிராமன்.
சீனர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: “நிழல்தர மரமில்லையா? கொளுத்தும் வெயிலைக் குற்றம் சொல்லக்கூடாது, உன்னைத் தான் சொல்ல வேண்டும்”.
மரங்கள் இயற்கையின் பகுதி, மனிதனின் ஊட்டத்தின், உணவின் மூலப் பொருள். ஆனால் இயற்கை என்பது மரங்கள் மட்டுமல்ல, அதற்கு மேலும் இருக்கிறது. ஞாயிறு, நிலவு, நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ள வானம்; கடல்கள், ஏரிகள், ஆறுகள், ஓடைகள், அருவிகள்; மலைகள், குன்றுகள்; நாம் வசிக்கும் இந்த மண்; நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று; நம்மிடையே வாழும் உயிரினங்கள்-இவை யாவும் நாம் வாழ்வதை அனுமதிக்கின்ற, நம் வாழ்க்கையைத் தொடரவிடுகின்ற இயற்கைக் கூறுகள். ஆகவே இயற்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் நம் வாழ்க்கையையும் நம் எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் போன்றதுதான்.
மனிதன் நிலவுக்குப் போய்விட்டான், செவ்வாய்க்கு மங்கள்யான் விடுகிறான். ஆனால் ஒரு செந்நிறப்பூக்கொண்ட மரத்தையோ, ஒரு பாடும் பறவையையோ எப்படி உருவாக்குவதென்று அவனுக்குத் தெரியுமா? இதே மரங்களையும் பறவைகளையும் எதிர்காலத்தில் பார்க்கமுடியுமா என்று அவாவுவதற்குக் கொண்டுசெல்கின்ற, மாற்ற முடியாத தவறுகளை நாம் செய்யாமல் நாம் இருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்கள்தான் உலகின் மிகப் பழமையான மிக நீண்ட கலாச்சாரத்தை உடையவர்கள். (கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றியவர்கள்!) ஞானத்திலும் ஆழ்நோக்கிலும் வளமான ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அவர்கள், இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலுள்ள நெருக்கமான தொடர்பின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்-”நாங்கள் மரங்களை வெட்டுவதில்லை, பட்ட மரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.”
“விண்ணுலகும் பூமியும் நானும் ஒன்றாய் வாழ்கிறோம்” என்று ஒரு டாவோ பொன் மொழி சொல்கிறது. டாவோ போதனையின்படி, இயற்கையின் எல்லாக் கூறுகளுக்கிடையிலும் ஒருங்கிசைவு வேண்டும். சீன நிலத்தோற்ற ஓவியங்களில் நாம் ஆறுகளையும் ஏரிகளையும் மலைகளையும் மட்டுமே காணமுடிகிறது, மனிதர்கள் அதற்குள் ஆதிக்கம் செய்வதில்லை.
இயற்கையை நேசியுங்கள், அதனுடன் ஒருங்கிசைவுடன் வாழுங்கள், அதைப் பாழாக்கவோ அழிக்கவோ செய்யாதிருங்கள். இயற்கையை நேசிப்பது என்பது கொடைக்கானலுக்கோ நீலகிரிக்கோ போய் அங்கே பிளாஸ்டிக் குப்பைகளை நிரப்பி விட்டு வருவதல்ல.
கோடரிக்காம்பு:
காட்டுக்குள் வந்த ஒரு மனிதன், தன் கோடரிக்கு ஒரு கைப்பிடி வேண்டும் என்று மரங்களிடம் கேட்டான். மரங்களும் ஒப்புக்கொண்டு ஓர் இளைய மரத்தைக் கொடுத்தன.
அவன் தன் கைப்பிடியைச் செய்துமுடித்தானோ இல்லையோ, காட்டிலிருந்த மிகப்பெரிய மேன்மையான மரங்களை வீழ்த்தத் தொடங்கினான்.
பக்கத்திலிருந்த ஓர் ஆலமரம், தன்னருகிலிருந்த அரசமரத்திடம் சொல்லியது: “முதல்முதலாக நாம் காட்டிய கருணையே நமக்கு அழிவைத் தந்துவிட்டது. நாம் அந்த இளைய மரத்தை அளிக்கவில்லை என்றால், காலங்காலமாக நாம் வாழ்ந்திருக்க முடியும்.”
வாழ்க்கை என்பது என்ன? அது இரவில் ஒளிரும் ஒரு மின்மினிப்பூச்சியின் ஒளிவீச்சு…குளிர்காலத்தில் ஓர் எருமை விடும் மூச்சு…சூரியமறைவின்போது புல்லின் மீது விரைந்து சென்று மறையும் ஒரு நிழல் -அமெரிக்க இந்தியப் போர்வீரர்.
பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது, ஒவ்வொரு நோயை குணப்படுத்தவும் ஒரு மூலிகை இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது.
-அமெரிக்க இந்திய முதியவர் ஒருவர்.
உலகின் காடுகளை நாம் என்ன செய்கிறோம் என்பது நாம் நம்மை நாமே, ஒருவருக்கொருவர் என்ன செய்துகொள்கிறோம் என்பதன் கண்ணாடிப் பிரதிபலிப்பு தான் -மகாத்மா காந்தி
பூமிக்கு என்ன நேர்கிறதோ, அதுதான் பூமியில் வாழும் மக்களுக்கும் நேர்கிறது.
-அமெரிக்க இந்திய இனத் தலைவர் சியாட்டில்.
வால்நட் மரம்:

சாலையின் ஓரத்திலிருந்த வால்நட் மரம் ஒன்றில் பழங்கள் பழுத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. வால்நட் கொட்டைகளுக்காக, அதன் கிளைகளை வழிப்போக்கர்கள் கல்லாலும் தடியாலும் அடித்து ஒடித்தார்கள். அந்த வால்நட் மரம் புலம்பியது, “ஐயோ, நான் என்ன செய்வேன், யாருக்கு நான் பழங்களால் மகிழ்ச்சியளிக்கிறேனோ, அவர்கள் கைம்மாறாக என்னை இப்படிக் கொல்கிறார்களே!”
-ஈசாப் கதைகள்
அழகையும் மகிழ்ச்சியையும் அளிக்குமாறு நாம் பூமியை விடாவிட்டால், கடைசியில் அது உணவையும் வழங்காது.
நீரற்ற பாலை, நோய், பனிப்பொழிவுச் சரிவுகள், இன்னும் ஆயிரம் கடுமையான, வீழ்த்தக்கூடிய புயல் வெள்ளங்களிலிருந்தும் இந்த மரங்களைக் கடவுள் பாதுகாத்திருக்கிறார், ஆனால் முட்டாள்களிடமிருந்து அவரால் காக்க இயலவில்லை.
-ஜான் மூர்இயற்கை தன்னை நேசித்த இதயத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை.
-வேர்ட்ஸ்வொர்த்.
“மிகச் சிறந்த மனிதர்கள் எவ்விதம் உருவாயினர் என்ற இரகசியத்தை இப்போது நான் அறிந்தேன். திறந்த வெளியில் வளர்வது, தரைமீது அமர்ந்து உண்பது, உறங்குவதுதான் அது.”
-வால்ட் விட்மன்