குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கு. பேராசிரியர் இரா.சிவசந்திரன்

04.06. 2011  சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனையாக உள்ளது, அல்லாது விடின் பல்வேறு சூழல் பிரச்சினைகளை மனிதகுலம் சந்திக்கவேண்டி வருமென எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
 
           உலக சூழல் பிரச்சினைகள் எனும் போது பொதுவாக சுற்றுப்புறம் பற்றியும், சுற்றுப்புறச் சுகாதாரம் பற்றியும் பலர் பேசுவதுண்டு. ஆனால் சூழல் பிரச்சினைகளை புவிக்கோளம் சார்ந்த உலகளாவிய ரீதியில் அணுகுதல் வேண்டும். இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு புவிக்கோளம் சார்ந்த சூழல் அம்சங்கள் பற்றிய விளக்கங்கள் முதற்கண் அவசியம்.


சூழற்பாகுபாடும் பிரச்சினைகளும.
 
          புவிச்சூழலை கற்கும் வசதிகருதி நான்கு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். நில மண்டலம் (Lithosphere)>  நீர் மண்டலம் ;(Hydrosphere)>  வளி மண்டலம் (Atmosphere)>  உயிரியல் மண்டலம் ;(Biosphere)   என்பன அவையாகும். இவை ஒவ்வொன்றும் சில துணைப் பிரிவுகளையும் கொண்டுள்ளன. நில மண்டலத்தினுள் புவிச்சரிதம் ; (Relief)> மண் (Soil)> ஆகியனவும், நீர்மண்டலத்தில் மேற்பரப்பு நீர் ;(Surface water), தரைக்கீழ் நீர் (Under ground water)> சமுத்திரங்கள்; (Oceans)  ஆகியனவும் அடங்கும். வளிமண்டலம் எனும்போது அதனுள் வானிலை காரணிகளும், காலநிலைக் காரணிகளும் (Weather/ Climate)  அடங்கும். உயிரியல் மண்டலத்தினுள் இயற்கைத்தாவரம் (NaturalVegetation)>  விலங்கினங்களினதும், பறவையினங்களினதும் வாழ்க்கை (Animals life)  ஆகியனவும் மனிதனின் வாழ்வும் அடங்கும்.
 
            உயிரினப் பாரம்பரியத்தின் பரிணாமத்தில் இன்றைய நிலையில் உள்ள மனிதன் தோற்றம் பெற்று மனித வாழ்வை  ஆரம்பித்ததிலிருந்து புவித்தொகுதியின் சகல கூறுகளின் மேலும் அவன் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றான். மனித வாழ்வின் வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் வௌ;வேறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புவித்தொகுதிக் கூறுகளைத் தன் தேவைக்குரிய வளங்களாக மாற்றிப் பயன்படுத்தி வந்தமையை அறியமுடிகின்றது. புவித்தொகுதியும் மனிததேவைக்குரிய வளங்களை நீண்ட நெடுங்காலமாக அவனது வாழ்வுக்காக எப்பிரச்சினையுமின்றி வழங்கி வந்தது. மனித குலத்தின் இயற்கைக்கு மாறான அதிகரிப்பும் அவனது பேராசைக்குரிய தொழில்நுட்ப வளர்ச்சியும் புவித்தொகுதி வளங்களை பெருமளவு சுரண்டி வீண்விரயமாக்;கின. இதனால் வளங்கள் அழிந்தன. தேவைக்கு அதிகமாக வளங்கள் பயன்படுத்தப்பட்டதால் வளப்பற்றாக்குறை ஏற்பட்டது. முறையற்ற வளப்பாவனையும் வீண் விரயமும் புவித்தொகுதிகளின் சகல கூறுகளையும் சிறிதுசிறிதாகப் பாதித்து  முழுப்புவித்தொகுதியுமே மாசடையும் நிலையைத் தோற்றிவித்தது. இம் மாசடையும் நிலை கி.பி 1700 முதல் கி.பி 1900வரை மேற்குலகில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சிக்காலத்தே  துரித கதியில் அதிகரித்தது. நவீனயுகத்தின் ஆரம்பம் என பலராலும் கூறப்படும் கைத்தொழில் புரட்சிக்காலத்திலே தான் சூழல் மாசடைதல் மனித வரலாற்றில் என்றுமில்லாத வகையில் துரிதப்பட்டதென்பதிலிருந்து நவீனயுகத் தொழில்நுட்பத்தின் பல்வேறு கூறுகள் சூழலின் எதிரி என்பது புலனாகும். இதனால் அண்மைய சூழலியல் வாதிகள் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத சூழல் நட்பார்ந்த தொழில்நுட்பமே எதிர்கால உலகிற்கு அவசியம் என வலியுறுத்தி வருகின்றார்கள். குறிப்பாக மனித வாழ்வை மாத்திரமல்ல, உயிரின வாழ்வையே நிலைநிறுத்துவதற்கான 21 ஆம் நூற்றாண்டிற்கான தொழில்நுட்பம், சூழலைப் பேணுகின்ற அதனைப் பெருமளவு பாதிக்காத தொழில்நுட்பமாக விளங்கவேண்டுமென  உலக சமூகத்திடம் விண்ணப்பித்து வருகின்றார்கள். இக் கோரிக்கைகள் உலக சூழல்மாநாடுகள் ஊடாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
புவிஉச்சி மாநாடு
 
          சூழல் பற்றிய பன்முகப்பார்வையை ஜ.நாவின் கிளை நிறுவனங்கள் பல உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வருகின்றன. இந்தவகையில் 1992 இல்; இடம்பெற்ற புவிஉச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இம்மாநாடு 1992 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறேசில் நாட்டின்  றியோடிஜெனிரோ நகரில் இடம்பெற்றது. இவ் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக சுவீடன் தலைநகரான ஸ்ரொக்காமில் 1972இல் ஒரு மாநாடு  இடம்பெற்றது. இதிலே 113 நாடுகள் பங்குகொண்டன. 1992இல் இடம்பெற்ற றியோ மாநாட்டில் 160 உலகநாடுகள் பங்குகொண்டன. 18.000இற்கு மேற்பட்டோர் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்ட இம் மாநாட்டில் ஏறத்தாழ 400.000 பேர் பல்வேறு நவீன தொலைத்தொடர்பு ஊடகங்கள் வழியாக பார்வையாளர்களாகப் பங்கு கொண்டனர். 8000 இற்கு மேற்பட்ட பத்திரிகைகள் இம்மாநாடு பற்றி எழுதின. இம்மாநாட்டின் இறுதியில் செயற்றிட்டம் -21 (Agenda-21)  எனும் நிகழ்ச்சித்திட்டம் முன்வைக்கப்பட்டது.
 
         21ஆம் நூற்றாண்டில் உலக சூழலைப் பேணுவதற்கு உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி இது விரிவாக குறிப்பிடுகின்றது. மேற்படி மாநாடு வலியறுத்திய பல்வேறு விடயங்களைச் சுருக்கமாக தொகுத்து நான்கு தலைப்புகளின் கீழ் ஆராயலாம்.
 
01. உயிரியல் பன்முகத் தன்மையைப் பேணுதல்
 
02. உயிரினங்களுக்கு ஆதாரமான காடுகளைப் பேணுதல்
 
03. பச்சைவீட்டுத் தாக்கமுள்ள வாயுக்களின் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான சர்வதேச சட்டங்களை இயற்றுதலும் அவற்றை நடைமறைப்படுத்துதலும்.
 
04. உலகில் புதிய பொருளாதார ஒழுங்கை உருவாக்குதல. 
 
01. உயிரியல் பன்முகத் தன்மையைப் பேணுதல்.
 
            உயிரியல் பன்முகத் தன்மையைப் பேணுதல் எனும் போது விரைவாக அழிவடைந்துவரும் புவியிலுள்ள விலங்குகளை மற்றும் தாவர ஜீவராசிகளை அழியவிடாது பேணிப்பாதுகாப்பதை வலியுறுத்துவதாக அமைகின்றது. உலகின் ஏறத்தாழ 50-100 இலட்சம் வரையிலான உயிரின வகைகள் உள்ளனவெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய விஞ்ஞானயுகத்துள் இவற்றுள் 10 வீதமான உயிரினவகைகளே ஆய்வுக்குட்பட்டுள்ளன.  இவற்றுள் 1 வீதமானவையே நுண்ணாய்வுக்குட்பட்டவை.  ஏனையவை மறைவளங்களாக (Latent Resource)  உள்ளன. எதிர்கால சந்ததியினர் இவற்றை முறையாக ஆராய்ந்து பல்வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்த முடியம். ஆய்விற்குட்படாமலேயே இவை அழிவடைந்துவிடின் எதிர்கால மனித குலத்திற்கு இன்றைய மனிதன் துரோகமிழைத்தவனாவான். மேலும் உயிரினங்களின் பாரம்பரிய மரபுக்கூறுகளைப் பிரித்தெடுத்து தேவையான வகையில் வளர்க்கும் மரபுக்கூற்றுப் பொறியியல் அண்மைக்காலங்களில் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. உலகம் எதிர்நோக்கும் உணவு நெருக்கடிக்கு இத்துறை வளர்ச்சி தீர்வாக அமையுமென விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். உயிரினப்பன்முகத் தன்மையை இன்றைய மனிதகுலம் பேணிக்காத்திடல் இன்றியமையாத தேவை எனலாம்.
 
02. உயிரினங்களுக்கு ஆதாரமான காடுகளைப் பேணுதல்.
 
           புவிஉச்சி மாநாடு வலியுறுத்திய இரண்டாவது அம்சம் உலகின் காடுகளைப் பேணுவதாகும். உலகைப் பசுமையாக வைத்திருப்பது, மழையை வருவிப்பதற்கும் வெப்பத்தை மட்டுப்படுத்தி புவியை பாலைவனமாகாது பாதுகாப்பதற்கும் உயிர்மண்டலத்தை பேணுவதற்கும் அவசியமாகும். மண்-தாவரம்-ஏனைய உயிரினவாழ்வு என சூழலியல் முறைமை செயற்படுகின்றது. உலகில் காடுகள் இயற்கையாகவும், செயற்கையாகவும் தினம் தினம் பெருமளவு அழிவடைந்து வருகின்றன. மேலும் உலக நிலப்பரப்பில் இன்று 6வீத பரப்பளவில் பரந்துள்ள அயனக்காடுகளில் உலகின் மொத்த உயிரின வகைகளில் 60 வீதமானவை காணப்படுகின்றன. இத்தரவுகள் காடுகளைப் பேணவேண்டிய தன் அவசியத்தை உணர்த்தப் போதுமானவை.
 
 
03. பச்சைவீட்டுத் தாக்கமுள்ள வாயுக்களின் வெளியேற்றத்தைத் தடுத்தல்.
 
            பச்சைவீட்டுத் தாக்கமுள்ள வாயுக்களின் வெளியேற்றம், கைத்தொழில் புரட்சியை தொடர்ந்து அதிகரித்துவந்து இன்று புவியை ஒரு ஆபத்தான கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. புவியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எடுத்துக்காட்டாக குளோரோ புளோரோ காபன் எனும் வாயு வெளியேற்றத்தால் வளிமண்டலத்தில் 15 -30 மைல் உயரத்திலுள்ள ஓசோன் வாயுப்படையில் துவாரங்கள் உருவாகியுள்ளன. புவியில் தீங்குவிளைவிக்குமென கருதப்படுகின்ற புறஊதாக் கதிர்வீச்சுத் தாக்கத்தை ஓசோன் படையே பாதுகாக்கின்றது. புவியில் தற்போது புறஊதாக் கதிர்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தான் சருமநோய்கள், புற்றுநோய்கள் என்பனவும் இனம்காணமுடியாத வேறுநோய்களும் அதிகளவில் காணப்படுகின்றன என மருத்துவவியலாளர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள். பச்சைவீட்டுத் தாக்கமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த 85வீத வாயுக்களை கைத்தொழில் நாடுகளே வளியில் பரவவிடுகின்றன. உலகில் 30வீதக் குடித்தொகையைக் கொண்ட இந்நாடுகளின் வர்த்தக நோக்கம் கொண்ட அபரிமிதமான தொழில் உற்பத்திகளின் விளைவாக மொத்தமாகப் புவியின் வளிமண்டலம் முழுவதும் நச்சுப்புகையால் கனத்துவருகி;ன்றதெனலாம்.
 
04. புதுப் பொருளாதார ஒழுங்கு.
 
         விவசாயம், கைத்தொழில், சேவைகள் எனும் பொருளாதார உற்பத்தி துறைகளில் சூழல் நட்பார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்கால அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டுமென்பதே சுருக்கமாகப் புதுப் பொருளாதார ஒழுங்கின் அடிப்படை எனலாம். இவை பொதுவாக நிலைத்துநிற்கக்கூடிய அல்லது பேண்தகு அபிவிருத்தியாக(SustainableDevelopment) விளங்கவேண்டு மென்பதே சூழலியலாளர்களின் எதிர்பார்ப்பாகும். இவர்கள் வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மை பற்றி முதலாம் உலக நாட்டைச் சேர்ந்தவர்களைவிட மூன்றாம் உலகநாட்டினரே கூடிய அக்கறை கொள்ளவேண்டும். யதார்த்த நிலை கவலை தருவதாக உள்ளது. அரசாங்க மட்டத்தில் திட்டமிடுவோரும் இதுபற்றி அலட்சியமாகவே இருக்கின்றார்கள். இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களும் நிதி நெருக்கடியாலும் நிபுணத்துவக் குறைபாட்டாலும் இவ்விடயம் தொடர்பாக அதிகளவில் அக்கறை செலுத்த முடியாதுள்ளது. இருப்பினும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நிலைத்து நிற்கும் வேளாண்மைபால் சில நிறுவனங்கள் கவனம் கொள்கின்றன.
      
 
 
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதபாத் நகரில் கலாநிதி அனில்குப்தாவின் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது. இவர்கள் 'நம்வழி வேளாண்மை' என்ற மகுடவாசகத்தை முன்வைத்து சூழல்பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாட்டில் மதுரை, ஒரிஸ்ஸாவில் புவனேஸ்வர், கேரளாவில் கோட்டயம், பூட்டானில் திம்பு, உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவர்கள் காந்திய நிறுவனங்களுடனும் இணைந்தும் பணியாற்றி வருகின்றார்கள். அனில் குப்தாவின் நிறுவனத்தினர் நம்வழி வேளாண்மை பற்றி பிரசாரம் செய்யும் அளவிற்கு மாதிரிப்பண்ணைகளை அமைத்து செயல்முறையில் காட்டும் தன்மை குறைவாகவே உள்ளது.
          
தமிழ்நாட்டில் மனீந்தர்பால் என்பவர் பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தின் துணையுடன் நடத்தும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளோரியாப்பண்ணை, புதுவையில் அமைந்துள்ள ஏ.எஸ் சட்டார்ஜியின் இயற்கைப்பண்ணை, கீரனூரில் நம்மாழ்வார் நடத்தும் லெய்சா (Leisa) பண்ணை, உடுமலைப்பேட்டையில் சி.ஆர் ராமநாதனின் விவசாய காட்டியல் (Agro Forestry)  பண்ணை, எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் நடத்தும் சில பண்ணைகள், வீரனூர் சுற்றுச்சூழல் சங்கப் பண்ணை என்பன இந்தியாவில் இயற்கை வேளாண்முறைகளை முன்னெடுப்போருக்கு வழிகாட்டும் பண்ணைகளாக விளங்குகின்றன.
          
இலங்கையில் கலாநிதி ஆரியரத்தினாவின் சர்வோதய இயக்கம் நடத்தும் சில விவசாயப் பண்ணைகளும் மன்னாரிலுள்ள 'ஸ்கந்தபாம்' எனும் பண்ணையும் இயற்கை வேளாண்வழியை பின்பற்றத் தூண்டுதலளிக்கும் எம்மவரின் முயற்சியெனக் குறிப்பிடலாம்.  
        
கைத்தொழில்துறை அபிவிருத்தியில் மாசற்றதும் சூழலைப் பேணுவதும் நிலைத்துநிற்கக்கூடியதுமான எரிசக்தியான ஞாயிற்றுச்சக்தி, காற்றுச்சக்தி, அலைச்சக்தி போன்றவற்றைப் பயன்படுத்துவதை சூழலியலாளர்கள் சிபார்சு செய்கின்றார்கள். போக்குவரத்துக்குரிய வாகனங்கள் சூரிய மின்சக்தியில் இயங்கத்தக்கதாக உற்பத்தியாக்கப்படவேண்டுமென கோருகின்றார்கள். சுற்றுலாக் கைத்தொழில் அபிவிருத்தியானது சூழல்சார் சுற்றுலாத்துறையாக அபிவிருத்தியுற வேண்டுமென வலியுறுத்துகிறார்கள். எமது பிரதேச அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டோர் இவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும். பாரிய சீமெந்துகட்டிடங்களை உருவாக்குவது அல்ல அபிவிருத்தி, பசுமையோடு இணைந்ததும் மாசற்றதுமான சூழலை மையப்படுத்தியே அபிவிருத்தி எய்தப்பட வேண்டும்.
 
முடிவுரை
 
         எமது பிரதேசத்தில்  கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிவந்த யுத்த நெருக்கடியால் நாம் பல இன்னல்களை எதிர்நோக்கினாலும் சில நன்மைகளும் விளைந்துள்ளன. எரிபொருள், உரம், களைநாசினி, கிருமிநாசினி என்பவற்றின் தட்டுப்பாட்டால் எமது விவசாய நிலங்கள் நஞ்சாகாது பேணப்பட்டு வந்துள்ளமை குறித்துரைக்கத்தக்க நல்விளைவுகளாகும். இந்நிலங்கள் நிலைத்துநிற்கும் பண்பு கொண்ட இயற்கை வேளாண்மைக்குரிய அடிப்படைகளை கொண்டுள்ளன. வலிகாமத்தில் வடபகுதிச்செம்மண் வலயம், தீவுப்பகுதி பிரதேசம் என்பன மக்கள் புலம்பெயர்ந்ததால் இரு தசாப்தங்களாக பலவழிகளில் இயற்கைவழி மாற்றத்தி;ற்குள்ளாகி சீர்பெற்றுள்ளன. இவ் இடங்களில் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளும்  இக்காலகட்டத்தில் அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் 21ஆம் நூற்றாண்டுக்குரிய சூழல்பேண் இயற்கைவேளாண் வழிமுறைகளையும் சூழலை மாசுபடுத்தாத கைத்தொழில்களையும் மேற்குறித்த பகுதிகளில் அறிமுகப்படுத்துதல் அறிவுடைமையாகும்.
 
         பொதுவாக யாழ்ப்பாண விவசாய மக்கள் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தகாலத்தில் உரம், நாசினிப்பாவனையின்றி அதிகளவு விவசாய உற்பத்திகளைப் பெற்றமை கவனத்திற்குரியது. தீவுப்பகுதியை பொறுத்தவரையில் மீள்குடியமர்ந்தோர் குறைவு. ஆனால் விவசாய நிலங்கள் அதிகம் உள. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி சூழல்பேண் இயற்கை வேளாண் பண்ணைகளையும், விலங்கு வளர்ப்பு பண்ணைகளையும் அங்கு உருவாக்குதல் சாத்தியமே. யாழ்ப்பாண நகரச்சந்தையில் உடன் விற்பனை செய்யக்கூடிய காய்கறி உற்பத்தி, விலங்கு வேளாண் உற்பத்தி, மீன்பிடி உற்பத்தி என்பனவற்றை தீவுப்பகுதியில் மேற்கொள்ள உதவி வழங்குவதன் மூலம் தீவுப்பகுதியை அபிவிருத்தி செய்வதோடு யாழ்ப்பாண நகர மக்களில் ஒருபகுதியினரின் உணவுத் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியும்.
 
பொதுவாக தமிழர் நிலத்தின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்பவற்றிற்காகத் திட்டமிடுவோரும் ஆலோசனை வழங்குவோரும் இப்பிரதேசங்களில் நிலைத்து நிற்கும் பண்பு கொண்ட 21ஆம் நூற்றாண்டிற்குரிய சூழல் பேண் வேளாண் அபிவிருத்தியையும, சூழலை மாசுறுத்தாத ஏனைய அபிவிருத்திகளையும் முன்னெடுத்தல் பயன்தருமா என்பது பற்றியும் எவ்வௌ; இடங்களில் எந்தெந்த வழிகளில் இவற்றை அமுல் நடத்த முடியுமென்பது பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு தெளிந்த நல்லறிவைப் பெறுதல் வேண்டும்.
 
ஆக்கம்:- பேராசிரியர் இரா.சிவசந்திரன்
புவியியல் பேராசிரியர் -  யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.