இப்போது ஆட்சி மாறி விட்டது. காட்சிகளும் மாறத்தொடங்கி விட்டன. முதல்வர் பொறுப்பை கவனிக்காமல் எந்நேரமும் சினிமா விழாக்களில் நேரத்தை கழித்துக்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை காட்டமாக விமர்சித்து வந்த செயலலிதா, முதல்வரானதும் என்ன செய்யப்போகிறார் என்று பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏனென்றால் செயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே தாயே... தமிழே என்று புகழ்பாட ஆரம்பித்து விட்டது திரையுலக யால்ரா கூட்டம்.
தி.மு.க.ஆட்சியின்போது செல்வாக்குமிக்க ஆளும் கட்சியினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பழிவாங்கப்பட்ட நடிகர் வியய், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகக் களமிறங்கினார். தனது ரசிகர்களை அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் நினைத்தது போலவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதனால் வியய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என்று முதல்வர் யெயலலிதாவுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல பெப்சி அமைப்பினர் புதிய முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்றும் விரும்பி முதல்வரிடம் திகதி கேட்டிருக்கிறார்கள்.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் திரையுலக யால்ராக்களின் அழைப்பை புறந்தள்ளிய யெயலலிதா எனக்கு நிறைய மக்கள் பணிகள் இருக்கிறது. சினிமா விழாக்கள் எதுக்கும் வரும் திட்டம் இல்லை என்று கூறிவிட்டாராம் காறாராக! முதல்வரின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது திரையுலகம்.