குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

ராயபக்ச சகோதரர்கள் தண்டிக்கப்படுவார்களா? யமுனா ராயேந்திரன்எமக்கென ஒருஅரசியல் வெளிதிறந்திருக்கு

01 .06. 2011.த.ஆ.2042--அறிக்கையால் மகிழ்வதைவிட இதைஎவ்வாறு பயன்படுத்துவது  என்று ஏங்கும்நிலையில்  தமிழர்கள். குமரிநாடு.நன்றி யமுனா இராசேந்திரனுக்கும் தொகுப்பிற்கும். இந்தப் பகுதியை நன்கு வாசிப்பவர்களே பொறுப்பு வாய்ந்த தமிழர்கள். I18 மே 2009 ஈழத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்தது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால், போர் நடந்து கொண்டிருந்த வேளையில்,  23 மார்ச் 2009 இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளரும் தென் கொரியப் பிரஜையுமான பான் கி மூன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை கொழும்பில் சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அந்தக் கூட்டறிக்கையில் போர்நிகழ்வுக்கான ‘பொறுப்புக் கூறலையும் வெகுமக்கள் அதனால் அடையும் துயர்களையும் கவனம் கொள்வது’ என இருவரும் ஒப்புக் கொண்டார்கள்.
 
இலங்கை ஜனாபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் என இருவரதும் கூட்டறிக்கையினை நடைமுறைப்படுத்தும் போக்கில், ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளருக்கு ஆலோசனை சொல்வதற்கு என இந்தோனேசியாவைச் சேர்ந்த மரிஸக்கி தாருஸ்மான், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த யுஸ்மின் சூக்கா போன்றோர் கொண்ட மூவர் குழு 22 ஜூன் 2010 அன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு 16 செப்டம்பர் 2010 அன்று துவங்கி ஏழு மாதங்கள் ஆய்வுக்குப் பின்பு, 31 மார்ச் 2011 ஆம் ஆண்டு தமது இறுதி செய்யப்பட்ட ஆலோசனை அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கி மூனிடம் கைளித்தது.
 
11 ஏப்ரல் 2011 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.
 
வெகுமக்களுக்காக இந்த அறிக்கை அப்போது வெளியிடப்படவில்லை. காரணம், அந்த அறிக்கை தொடர்பான இலங்கை அரசினதும் பதில்களையும் சேர்த்து இந்த அறிக்கைiயானது வெளியிடப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் கருதினார். இலங்கை அரசு இந்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி மகிந்தா அறிவித்தார். 'இந்த அறிக்கையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எமது அரசு ஏற்கனவே பதிலளித்துவிட்டது, மறுபடி பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை' என சம சமாஜக் கட்சித் தலைவரும், இலங்கை அரசின் அமைச்சராக அங்கம் வகிக்கும் டிராட்ஸ்க்கியருமான வாசுதேவ நாணயக்கார அறிக்கை வெளியிட்டார்.
 
இரண்டு வாரம் காத்திருப்பின் பின், இலங்கை அரசிடமிருந்து எந்த பதிலும் வராத சூழலில், அறிக்கைக்கு எதிராக-தமக்கு ஆதரவாக ரஸ்ய, சீன ஆதரவையும் இலங்கை அரசு திரட்டத் துவங்கியதன் பின், உள்நாட்டில் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமிய போன்ற சிங்கள இனவாதக் கட்சித் தலைவர்கள் 'மூவர் குழுவின் அறிக்கை முட்டாள்களின் அறிக்கை' என வெளிப்படையாகப் பேசத்துவங்கியதின் பின், அறிக்கையில் சில பகுதிகள் இலங்கை அரசு ஆதரவுப் பத்திரிக்கையொன்றில் கசியவிட்பபட்டதன் பின்,  26 ஏப்ரல் 2011 அன்று ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழவின் அறிக்கை முழுமையாகப் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டது.
 
II
 
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிககை 212 பக்கங்கள் கொண்டது.
 
இந்த அறிக்கையின் ஆரம்ப 16 பக்கங்களில் அறிக்கையின் வரையறை, நோக்கு,  ஆய்வுமுறை, பரிந்துரைகள் போன்றன முன்வைக்கப்பட்டிருக்கின்றன.  அறிக்கையில் குறிக்கப்படும் பரிந்துரைகளுக்கு மூவர் குழவினர் வந்து சேர்ந்ததற்கான காரணங்களையும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். 122 பக்கங்களில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் செய்த குற்றங்களை  ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இறுதி 74 பக்கங்களில் அறிக்கைக்கான ஆதார ஆவணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் என இருதரப்பினரும் எவ்வாறு ‘சர்வதேசிய மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டமீறல்களை  மேற்கொண்டார்கள்’ என ஆய்வு செய்வதையே அறிக்கை தனது நோக்காகக் கொண்டிருக்கிறது என்பதனை ஆரம்பத்திலேயே மூவர் குழவினர் தெளிவுபடுத்தி விடுகிறார்கள்.
 
சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையிலான ‘ஒப்புக் கொள்ளத்தக்க, பொறுத்தமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட, நம்பிக்கைக்கு உரிய குற்றச்சாட்டுக்கள்’  போன்றவற்றினையே தமது விசாரணைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் ஆதாரமாகத் தாம் தேர்ந்து கொண்டதாகவும் அவர்கள் பதிந்திருக்கிறார்கள்.
 
இலங்கை அரசு தானாகவே அமைத்திருக்கிற ‘கற்றுக் கொண்ட படிப்பினைகளுக்கும் மீளிணக்கத்துக்குமான குழ’வின் விசாரணைப் பொறிமுறை இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கத் தகுந்தது இல்லை எனத் தெரிவித்திருக்கும் அவர்கள், 'இலங்கையின் நீதியமைப்பும் கடந்த காலத்தில் அவர்களது செயல்பாடுகளும் சர்வதேசியத் தரத்திலானது இல்லை' எனவும் அவர்கள் தமது அறிக்கையில் திட்டவட்டமாகவம் தீர்க்கமாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
 
இந்த விசாரணையை மேலெடுத்துச் செல்வதற்கான தடைகளாக இருக்கிற சில விஷயங்களையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (1).இலங்கை அரசு போர் குறித்த தமது வெற்றிக் களிப்பில், கொண்டாட்டங்களில் திளைத்திருப்பமானது, தமிழர்களுக்கிடையில் தமது அபிலாஷைகள் முடிவுக்கு வந்துவிட்டது எனும் மனநிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டது என்கிறார்கள் அவர்கள்.(2). தமிழர்களை ‘விலக்கி வைக்கும்’  இலங்கை அரசின் புறந்தள்ளும் கொள்கைகள் இன்னொரு காரணம் என்கிறார்கள்.(3). போர்க்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அதே கொள்கைகளையும் நடைமுறைகளையும் தொடர்ந்து இலங்கை அரசு கடைப்பிடித்து வருகிறது என்கிறார்கள்.(4). விடுதலைப் புலிகளை எந்தவிதமான விமர்சனமும் இல்லாது ஆதரித்து வரும் புகலிடத் தமிழ் அமைப்புக்கள், விடுதலைப் புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து ‘எந்தவிதமான ஓப்பக்கொள்ளலையும்’  மேற்கொள்ளவில்லை என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 
இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டுக்கள் என இலங்கை அரசு நடத்திய குண்டு வீச்சுகள் மூலம் பெருந்தொகை வெகுமக்கள் கொல்லப் பட்டுள்ளனர் என்பதனை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  மருத்துவமனைகள்  மற்றும் மனிதாபிமான நிறுவனங்கள் இராணுவத்தின் குண்டு வீச்சுக்கு இரையாயின, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமன உதவிகளை இலங்கை அரசு தடுத்துள்ளது, உயிர் பிழைத்த வெகுமக்கள் உள்நாட்டில் இடம்பெயர விதிக்கப்பட்ட மக்கள் அதனோடு விடுதலைப்புலிகள் என சந்தேகத்திற்குரியவர்களை  இலங்கை அரசு மனித உரிமை மீறலுக்கு ஆளாகியுள்ளது, போர்க்களத்திற்கு வெளியில் இருந்தபடி போரை எதிர்த்த ஊடகத் துறையினர், விமர்சகர்கள் மனித உரிமை மீறலுக்கு உள்ளாகினர் போன்ற ‘போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கு  எதிரான இலங்கை அரசின் குற்றங்களையும்’ அறிக்கை பட்டியிலிட்டிருக்கிறது. இலங்கை அரசு இந்தக் குற்றங்கள் புரிந்தமையை குறிப்பான ஆதாரங்களுடன் விரிவாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
 
விடுதலைப் புலிகளின் மீதான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழவின் அறிககை பின்வரும் குற்றச்சாட்டுக்களைச் முன்வைத்திருக்கிறது. பொதுமக்களை பிணைக் கைதிகளாக விடுதலைப் புலிகள் வைத்திருந்தமை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பி வெளியேறும் மக்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு  நடத்தியமை, வெகுமக்கள் இருந்த பகுதிகளில் அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்தமை, குழந்தைகளை இராணுவத்தில் ஈடுபடுத்தியமை, வெகுமக்களிடம் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியமை, தற்கொலைப் போராளிகள் மூலம் வெகுமக்களைக் கொலை செய்தமை என விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களையும் குறிப்பிட்ட ஆதாரங்களுடன் அறிக்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அறுதியாக போரின்  இறுதிக்கட்டத்தில் வெகுமக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபடத் தவறியது என்பதனையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. 
 
III
 
இந்த அறிக்கை 2008 நவம்பர் முதல் 18 மே 2009 இறுதி வரையிலான நிகழ்வுகளை மட்டுமே தனது ஆய்வின் வரையறையாகக் கொண்டிருக்கிறது.
 
இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படாத, இலங்கை அரசின் போரக்குற்றங்களை மேலதிகமாக ருசிப்பிக்கும் பல முக்கியமான சித்திரவதைக் காணொளிகள் பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான சேனல் நான்கு அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டது. நாடுகடந்து வாழும் ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்கள் இது குறித்த அறிக்கைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
 
கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், கண்களும் கறுப்புத்துணியினால் கட்டப்பட்ட நிலையில், பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு இரத்தம் கசியச் சரியும் போராளிகளின் நிர்வாண உடல்கள் பற்றிய, விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா எனும் பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட, முதலில் பிடிபட்டு விசாரணை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதி ரமேஷ் பிற்பாடு சுட்டுக்கொல்லப்பட்டு வீசப்பட்ட காணொளிகள் அவைகள். இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட  காணாமல் போயிருக்கிற ஈரோஸ் கோட்பாட்டாளர் பாலகுமார், அவரது புதல்வன், அதனோடு ஈழக்கவிஞர் புதுவை ரத்தினதுரை என இந்த அறிக்கையில் அடங்காத இலங்கை அரசின் போரக்குற்றங்கள் ஆவணப்படுத்தப்படாமல் இன்னும் எண்ணற்றதாக விரிந்து கிடக்கின்றன 
 
இந்த நிலையில் வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழவின் அறிக்கை வழங்கும் பரிந்துரைகள்தான் என்ன?
 
அந்தப் பரிந்துரைகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது சாத்தியம்? பரிந்துரைகள நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமையாக உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் இலங்கை அரசு ஒரு விசாரணையை மேற்கொண்டு அதனை ஐக்கிய நாடுகள் சபைச் செயலருக்கு அறிவிக்க வேண்டும் எனவும், அத்தகைய விசாரணைகளை உறுதி செய்வதைக் கருத்தில் கொண்டு, குற்றம் சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து தனியாக ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமாக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
 
குறிப்பிட்ட இந்தக் குற்றங்கள் சம்பந்தமான விசாரணைக்கு அப்பால் இலங்கை அரசு உடனடியாகவும் மற்றும் நீண்டகால நோக்கிலும் செய்ய வேண்டியவைகள் குறித்தும் நிபுணர் குழு சில பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது. அரசின் அமைப்புகள், துணைப்படைகள், அரசுக்காக செயலாற்றும்  ரகசியக் குழுக்கள், அரசு அணுசரனையுடன் செயல்படும் குழுக்கள் ஆகியவற்றின் அனைத்து வன்முறைகளுக்கும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காணாமல் போனோர்  குறித்து விசாரணை மேற்கொண்டு அவர்தம் நிலை குறித்து சொல்லப்பட வேண்டும்.
 
நெருக்கடி நிலை விதிகளை  ரத்துச் செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளையும் திருத்த வேண்டும். சிறையில் உள்ளவர்கள் பெயர்களையும், எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைனையும் வெளியிட வேண்டும்.  சிறை வைக்கப்பட்டிருப்பதற்கான சட்ட அடிப்படையை இலங்கை அரசு அறிவிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் குடும்பத்தினரையும் வழக்குரைஞரையும் சந்திக்க அனுமதிக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்காட அனுமதிக்க வேண்டும்.  கடுமையான குற்றங்கள் இழைத்திருக்கிறார்கள் என்பதற்கு  போதுமான ஆதாரங்கள் இருக்கிறது எனக் கருதினால் அவர்களுக்கு எதிராக உடனடியாக அரசு குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். ஏனையவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் பொதுசமூகத்துடன் இணைவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். நடமாடும் சுதந்திரம், கூட்டம் கூடுதல், கருத்துச்  சொல்லுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிற நடைமுறைகளுக்கும், அரச வன்முறைக்கும் இலங்கை அரசு முடிவு கட்ட வேண்டும்.
 
இறந்தவர்களின் மிச்சங்களை அவர்களது குடும்பத்தினர் வசம் தர வேண்டும். மரணச்சடங்குகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இறப்புச் சான்றிதழ்களை விரைவாக கௌரவத்துடன் கட்டணம் வசூலிக்காமல் வழங்க வேண்டும். விசாரணைகளைக் கோரும் உரிமைகள் காக்கப்பட வேண்டும். இடம் பெயர்ந்தோரை  விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் தமது வீடுகளுக்குச் திரும்பச் செல்ல, அதனோடு அவர்கள் மறுகுடியமர்த்தப்பட உதவி செய்ய வேண்டும். போரின்போது தப்பிப் பிழைத்தவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு  உதவிகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும்.
 
இதுவன்றி, நீண்டகால நோக்கங்களாக பின்வருபவற்றை அறிக்கை பரிந்துரை செய்திருக்கிறது : இருதரப்புகளிலும் இனத் தீவிரவாதம் உள்ளிட்ட மோதல்களுக்கான ஆதாரமான-போருக்கான காரணங்கள், போர் நடத்தப்பட்ட முறை, உரிமை மீறல்கள் நிகழ்ந்ததில் சம்பந்தப்பட்ட நிறுவனப் பொறுப்புகள் முதலியவற்றை ஆய்வு செய்வதற்கு, படிப்பினைகளை கற்றுக் கொள்வதற்கும் மீளிணக்கத்துக்குமான குழவின்  பணிகளை கருத்தில் எடுத்துக் கொள்ளும் அதே வேளையில் அதற்கு அப்பாலுள்ள வலுவான சமூக அமைப்புகளின் பங்கேற்புடன் ஒரு தனித்த நடைமுறையை இலங்கை அரசு துவங்க வேண்டும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதில் தனது பங்கையும் பொறுப்பையும் ஒப்புக் கொள்ளும் அறிவிப்பை இலங்கை அரசு வெளிப்படையாக முன்வைக்க வேண்டும். பாரிய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகிற வெகுமக்களிடம் சிறப்புக் கவனமெடுத்து அவர்களுக்கான நஷ்டஈடு வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு துவங்க வேண்டும்.
 
ஐக்கிய நாடுகள் சபை தொடர்பாகவும் தனது விமர்சனங்களை முன்வைத்த நிபுணர் குழவின் அறிக்கை அதற்கெனவும் சில பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது : 27 மே 2009 ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் விசேஷ அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையைக் கேட்டுக் கொள்ள வேண்டும் (இந்திய-ரஸ்ய-சீன-கியூப அரசுகள் ஆதரித்த இந்தத் தீர்மானம் முழுமையாக இலங்கை அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்ததுடன், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என விளித்ததுடன் அதனது அனைத்து நடவடிக்கைகளையும் முழமையாகக் கண்டித்திருந்தது) எனக் கோரும் அறிக்கை, இலங்கையில் போரின் போதும் அதற்குப் பின்னும் மனிதாபிமானத்திற்கும் பாதுகாப்புக்குமான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைகளைச் செயல்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் மறு ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
 
12-14 ஜனவரி 2010 இல் அயர்லாந்துக் குடியரசின் தலைநகரான டப்ளினில் நடைபெற்ற 'நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை'க்கும் இந்த அறிக்கைக்கும் ஒரு மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது.
 
டப்ளின் அறிக்கையில் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைகள் ‘இனக்கொலைதான் என்று திட்டவட்டமாகச் சொல்லாவிட்டாலும், இனக்கொலைக் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்பதனை அது சுட்டிக் காட்டியிருந்தது. திட்டமிட்டபடி குறிப்பிட்ட சமூகத்தின் வெகுக்களைக் காணாமல் போகச் செய்தல், பாலியல் வல்லுறவை ஒரு யுத்த தந்திரமாகப் பாவித்தல் போன்றன நிரூபிக்கப்பட்டால் அது இனக்கொலையாகும் சாத்தியம் உண்டு என்பதனை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எங்கேயுமே இனக்கொலை என்னும் ஒரு சொல்லைக் கூட நாம் காணவியலாது. இதனோடு இலங்கை அரசுக்கு தமிழ் மக்களின் மீதான இந்தப்படுகொலையை நடத்தி முடிப்பதற்கு உதவிய இந்தியா-ரஸ்யா-சீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகள் குறித்தும் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இந்த அறிக்கையில் பதிவு செய்யப்படவிவ்லை.
 
IV
 
நிபுணர் குழவின் அறிக்கை வெளியாகியவுடன் அதனை நிராகரித்த இலங்கை அரசு, பிற்பாடு அதற்கு அரசும் ராணுவமும் தனித்தனியாக பதிலளிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
 
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு இந்த அறிக்கை விவாதத்திற்கு வந்தால் தனது ரத்து அதிகாரத்தைப் பிரயோகிக்கப் போவதாக இலங்கையின் தோழன் ரஸ்யா அறிவித்திருக்கிறது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என கம்யூனிச நாடான சீனா ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. இலங்கையின் அண்டை வீட்டு நண்பனான இந்தியா ஐக்கிய நாடுகள் சபை அறிககை பற்றி குறிப்பாக எதனையும் பேசாது தவிர்த்து வருகிறது.
 
தமது நாடு ரோம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற ஓப்புதலில் கையொப்பமிடாததால் தம்மைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என இலங்கை அரசு சார்ந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இலங்கையின் மீது விசாரணைக்கு உத்தரவிட தனக்கு அதிகாரம் இல்லை என ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கி மூனும் தன் பங்குக்குத் தெரிவித்திருக்கிறார்.
 
ரஸ்ய-சீன ரத்து அதிகாரம், பான் கி மூனின் கைவிரிப்பு, இலங்கை சர்வதேசியக் குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்திடாமை எனும் இடர்ப்பாடுகள் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழவின்  அறிக்கையை நடைமுறைப்படுத்தப் போராடுவதன் மூலம், மகிந்த ராஜபக்சே-கோதபாய ராஜபக்சே சகோதரர்களை உலகின் முன் நிறுத்தி சர்வதேச யுத்தக் குற்றவாளிகளாக தண்டனை பெறச் செய்தல் என்பது சாத்தியம்தானா?
 
முதலில் சர்வதேசச் சட்டங்களும், விசாரணையும் தண்டனையும் எனும் பிரச்சினையைப் பார்ப்போம்.
 
இது குறித்த விவாதத்திற்காக நிபுணர் குழவின் அறிக்கையைத் தொடர்ந்து வெளியான, அறிக்கை குறித்த விவாதங்களை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அமைப்பான அயல் கொள்கை வகுப்புக்கான ஆய்வு அமைப்பின்  வழிகாட்டு அறிக்கையை** நாம் அடிப்படையாகத் தேர்ந்து கொள்வோம். 25 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை சர்வதேசிய விவகாரங்களை நான்கு அடிப்படைகளில் அணுக முடியும் எனப் பிரதானமாக வரையறுக்கிறது. அ).சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆ).கீழ்மைப்படத்தப்படாத மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் இ). நாடுகளுக்கிடையில் நட்புறவு ஈ).பொருளாதார, சமூக, கலாச்சார, மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு எனும் இந்த அடிப்படைகளிலுருந்துதான் இலங்கைப் பிரச்சினைகளையும் எவரும் அணுக முடியும்.
 
இந்த அடிப்படைகளில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டும் போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதனையிட்டு இலங்கை அரசை எந்த சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் பொறுப்புக் கூற வைத்தல் முடியும் என்பது குறித்து ஆய்வு அறிக்கை விவாதிக்கிறது. இந்த நிலைபாட்டுக்கும் மூன்று வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில்தான் சர்வதேச உறவுகளைக் கையாள முடியம் என்கிறது அறிக்கை. அ) வன்முறையை உபயோகித்தலைத் தவிர்த்தல் ஆ).தேசிய இறையான்மையை மதித்தல் ஈ). முனித உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் வளர்த்தல் என்பனவே அந்த நான்கு அடிப்படைகள்.
 
இந்த நிலைபாட்டிலிருந்து இலங்கை அரசை எந்தெந்த சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் அதன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூறவைக்க முடியும் என்பது அடுத்த கட்டமாக வருகிறது.
 
இரண்டுவிதமாக இதனைச் செய்ய முடியும். குற்றங்களையும் அதனைப் புரிந்தவர்களையும் வெளிப்படையாகச் ‘சுட்டிக் காட்டி அவமானப்படுத்;துவதன்  மூலம்’ இதனைச் செய்யலாம். நடைமுறையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழவின் மூலமே இதனைச் செய்ய முடியும். இரண்டாவதாக சர்வதேசச் சட்டங்களின் மூலமும் இதனைச் செய்யலாம். இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள்  மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றை முன்வைத்து நான்கு வேறு வேறு சர்வதேசியச் சட்டங்களுக்கு இலங்கை அரசினைப் பொறுப்புக் கூற வைத்தலுக்கு நாம் முயற்சிக்கலாம்.
 
அவைகள் பின் வருமாறு :
 
முதலாவதாக, 2002 ஆண்டு ரோம் நிறைவேற்றுச் சட்டத்தின் அடிப்படையிலான மனித குலத்திற்கு எதிரான குற்ற விசாரணை.
 
இரண்டாவதாக, யுத்தக் குற்றம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழான விசாரணை. 
 
ஜெனீவா பேரவை மற்றும் ஹாக் பேரவைச் சட்டங்கள் இதன் அடிப்படைகளாக அமைகின்றன. இவைகள் நான்கு வகைகளில் அமைகிறது. 1906 ஆம் ஆண்டு முதலாவதாகவும் பிற்பாடு 1949 ஆம் ஆண்டு திருத்தப்பட்டும் ஏற்கப்பட்ட போரில் காயம்பட்டவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் குறித்த முதலாவது ஜெனீவா பேரவைச் சட்டம். அதே 1906 ஆம் ஆண்டு முதலாவதாகவும் பிற்பாடு 1949 ஆம் ஆண்டு திருத்தத்துடனும் ஏற்கப்பட்ட கடல்சமரில் காயமுற்ற நோயுற்ற ஆயுதப் படையினர் குறித்த இரண்டாவது ஜெனீவா பேரவைச் சட்டம். அதே 1906 ஆம் ஆண்டு முமதலாவதாகவும் பிற்பாடு 1949 ஆம் ஆண்டு திருத்தங்களுடன் ஏற்கப்பட்ட யுத்தக் கைதிகள் தொடர்பான மூன்றாவது ஜெனீவா பேரவைச் சட்டம். அதனோடு 1907 ஆம் ஆண்டு முதலாவதாகவும் பிற்பாடு 1949 ஆம் ஆண்டு திருத்தப்பட்டும் ஏற்கப்பட்ட யுத்த காலத்தில் சிக்குண்ட சாதாரண மக்களது பாதுகாப்பு தொடர்பான நான்காவது ஹேக் பேரவைச் சட்டம்.
 
மூன்றாவதாக, சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலான விசாரணை.
 
1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப் பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பாக 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டச் சட்டம், 1976 ஆம் ஆண்டு பொருளாதார,சமூக,கலாச்சார உரிமைகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபைச் சட்டம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
 
நான்காவதாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் முன்னெடுக்கப்படும் விசாரணை.
 
இந்த நான்கு விசாரணை முறைகளில் இலங்கை அரசாங்கத்தினை எதன் கீழ் விசாரித்தல் சாத்தியம்?
 
முதலாவது சாத்தியமான ரோம் நிறைவேற்றுச் சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையைக் கொண்டு வரமுடியாது. ஏன் எனில் இதுவரையிலும் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளில் இலங்கை இல்லை. இந்தியா இல்லை. சீனா இல்லை. ரஸ்யா இல்லை. கியபாவும் இல்லை. முத்தாய்ப்பாக அமெரிக்காவும் அதில் ஒப்பமிடவில்லை.
 
இந்த முறையில் இலங்கையை விசாரணைக்கு உட்படுத்த முடியாது.
 
நான்காவது முறையான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் வழியிலும் இலங்கையை விசாரணை செய்வதற்கான சாத்தியம், இந்தியா இப்பிரச்சினையில் என்ன நிலைபாட்டை எடுக்கிறது என்பதனைப் பொறுத்தே அமையும்.
 
இப்போது 'ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு இந்த விவகாரம் வந்தால் தனது ரத்து அதிகாரத்தை உபயோகிப்பேன்' எனும் ரஸ்யா, இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழவின் அறிக்கைக்கு ஆதரவாகத் திரும்புமானால், இதே நிலைபாட்டைக் கொண்டிருக்கும் எனச் சொல்ல முடியாது. அதுபோலவே சீனாவும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் எனவும் உறுதியாகச் சொல்ல முடியாது.
 
இதனைத் தான், இந்தியா எடுக்கும் நிiலாட்டைப் பொறுத்தே பாதுகாப்புச் சபை நடவடிக்கை அமையும் என இந்த விவாதம் குறித்த ஆய்வு அறிக்கையும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.
 
இந்த இரண்டு முறைகளிலுமான விசாரணைகள் ஒருபுறமிருக்க, இரண்டாம், மூன்றாம் முறைகளிலான விசாரணைகளின் கீழ் இலங்கையை பொறுப்புக் கூறலுக்குக் கொண்டுவர முடியும். அதாவது, ஜெனீவா மற்றும் ஹேக் பேரவைச் சட்டங்களின் அடிப்படையிலான யுத்தக் குற்றம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மூலமும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் மூலமும் இலங்கையை விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
 
ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடைந்தவர்கள் குறித்த ஆர்ட்டிகல் 9, வெகுமக்களின் மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை குறித்த ஆர்ட்டிகல் 48 மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், நிறம், இனம், பால்நிலை, மதம் போன்றவற்றின் பாலான அரசின் பாரபட்சம் குறித்த ஆரட்டிகல் 4 போன்றவற்றின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தை விசாரணை மேடையில் நிறுத்த முடியும்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்குச் செல்லாமலே தனக்கு உள்ள அதிகாரங்களைக் கொண்டே ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் இதனைச் செய்ய முடியும். இதனைத்தான் மனித உரிமை அமைப்புக்களான சர்வதச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றனவும் மனித உரிமையாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
 
V
 
இப்போது இந்த நிபுணர் குழவின் அறிக்கையைத் தொடர்ந்து இலங்கையிலும், தமிழகத்திலும், புகலிட நாடுகளிலும் நடக்கும் விவாதங்களுக்குள் செல்வோம். இலங்கையில் ஆளுங்கட்சித் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும், எதிர்க்கட்சித் தலைவரான ரணிலும் இந்த அறிக்கைக்கு எதிராக நிற்கிறார்கள். தமது நாட்டின் இறையான்மையின் மீது தொடக்கப்பட்ட தாக்குதல் இது என்கிறார்கள். ஜாதிக ஹெல உறுமிய போன்ற இனவாதக் கட்சிகள் தமது ராணுவவீரர்களின் தியாகத்துக்கும் புனிதத்துக்கும் இந்த அறிக்கைக் களங்கம் விளைவிக்கிறது என்கிறார்கள். மகிந்தாவின் வலதுகரமான வீரவன்ச நிபுணர் குழவின் மூவரை மூன்று முட்டாள்கள் என வசைபாடுகிறார்.
 
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற மார்க்சியக் கட்சிகள் இதனை ஏகாதிபத்தியத்தின் தலையீடு அல்லது சதி என்கின்றன.
 
அரசு ஆதரவுத் தமிழ்க் கட்சிகளின் தரப்பில் இருந்து டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் போன்றோர் இலங்கையில் ஈழத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படவே இல்லை எனப் பிரகடனம் செய்கிறார்கள். தமிழ் மக்களுக்கிடையில் இருக்கிற புதிய ஜனநாயக மார்க்சீய லெனினியக் கட்சி இந்தப் பிரச்சினையை ஏகாதிபத்தியம் என்றுதான் துவங்குகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் மட்டுமே இந்த அறிக்கையை ஆதரித்திருக்கின்றன. கருணரத்னாவின் நவ சம சமாஜக் கட்சியைத் தவிர முழு சிங்களக் கட்சிகளும் அறிக்கையை எதிர்க்கின்றன. இலங்கையின் தெற்கில் இந்த அறிக்கை குறித்த விவாதம் என்பது துப்புரவாக இல்லை என்கிறார் சிங்கள மனித உரிமையாளரான சுனந்த தேஸப்பிரிய. நாட்டுக்காகத் தான் மின்சார நாற்காலியிலும் அமரத் தயார் என உணர்ச்சிவசமாகச் சிங்கள மக்களினிடையில் இலங்கை தேசபக்தியை உசுப்பி விட்டிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே. இதுதான் இலங்கையின் நிலை.
 
தமிழகத்தின் இருபெறும் திராவிடக் கட்சிகளான திமுகாவும் அதிமுகாவும் நிபுணர் குழவின் அறிக்கையை வரவேற்றிருக்கின்றன. மதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றன அறிக்கையை வரவேற்றிருப்பதுடன் அதற்கான இயக்கங்களையும் முன்னெடுத்து வருகின்றன. தமிழக மாவோயிஸ்ட்டுகள் பகுப்பாய்வுடன் மௌனம் கடைபிடிக்கிறார்கள். கட்சி சாராத தமிழ் தேசியர்களான தியாகு,மணியரசன், கொளத்தார் மணி, விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டினன் போன்றவர்கள் சுயாதீனமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள். சேவ் தமிழ் போன்ற இளைஞர் அமைப்புக்கள் சிவில் சமூகத்தினிடையில் செயல்படுகின்றன. திரைத்துறையினரும் சிவில் சமூக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அனைத்துக் கட்சிகளையும் அமைப்பக்களையும்  கூட்டுச் செயல்பாடுகளை இணைந்து முன்னெடுக்குமாறு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இது தமிழக நிலை.
 
புகலிடத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தபடியிலிருக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற அமைப்புக்கள் தனித்தனியே இயக்கங்களை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றன.
 
விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்துக் கொட்டி முழக்கியபடியிருந்த புகலிட அரச சார்பாளர்கள் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கை குறித்துக் கள்ள மௌனம் காக்கிறார்கள். அங்கங்கு இருந்தபடி புகலிட மார்க்சியர்கள் எல்லையில்லாதபடி பகுப்பாய்வை மேற்கொண்டு கொண்டேயிருக்கிறார்கள். இது புகலிட நிலை.
 
இவர்களது நடவடிக்கைகளின் தன்மைகள் என்னவாக இருக்கின்றன?
 
ஈழமண்ணைப் பொறுத்த அளவில் எந்தவிதமான வெகுமக்கள் நடவடிக்கைகளும் அங்கு சாத்தியமில்லை. சிங்களக் காலனியமயமாக்கமும் மட்டற்ற ஒடுக்குமுறைகளும் உச்சம் பெற்றிருக்கிற சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னுரிமையாகவும் அது இருக்கமுடியாது. இந்த அறிக்கையை நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கு இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மட்டும்தான் அவர்களால் சொல்லமுடியும். தென்னிலங்கையில் மனித உரிமையாளர்கள் செயல்படுவதற்காக வெளிகள் சுருங்கி வரும் நிவைலயில் இலங்கை அரசு உள்ளக நிலைமையிலாவது ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மட்டும்தான் அவர்களால் கேட்க முடியும்.
 
தமிழகத்தில் ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும், கையெழுத்து வேட்டைகளும் தனித்தனியே கட்சிகளால், சுயாதீன இயக்கங்களால் நடத்தப்படுகிறது. பெரும்பாலுமான கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் உணரச்சிவசமான வீரவேசமான உரைகள் என்பதற்கு அப்பால் செல்ல முடியாது இருக்கிறது. ஓன்றுபட்ட நிறுவன மட்டத்திலான தந்திரோபாயங்களே இன்று தேவை. தமிழக அளவில் இந்தத் தந்திரோபாயம் இரண்டு வகையில் அமைவது மட்டுமே ஏதேனும் ஆக்கபூர்வமான விளைவுகளை உருவாக்கும்.
 
ஓன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு நேரடியிலாக ஒன்றுபட்ட தமிழக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் நிறுவன மட்டத்தில் சொல்லப்பட வேண்டும். இரண்டாவதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபாட்டில் தாக்கத்தை உருவாக்கக் கூடிய இந்திய அரசினை தமிழ் மக்களுக்குச் சாதகமான நிலைபாடு எடுக்க வைப்பதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
 
நிபுணர் குழவின் அறிக்கை குறித்து எந்தவிதமான அபிப்பிராயமும் சொல்லாமல் இருந்து கொண்டிருக்கும் இந்திய அரசினை தமிழக மக்களின் ஒன்றுதிரண்ட அரசியல் குரல் மட்டுமே அசைக்க முடியும். இப்படியான அரசியல் தந்நதிரேபாயங்கள் தமிழக அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது என்பதற்கான சன்றுகள் வெளிப்படையாக இல்லை.
 
இலங்கை அரசு உலக அரசுகளின் மட்டத்திலும், சர்வதேச நிறுவனங்களின் மட்டத்திலும் இப்பிரச்சினையை எடுத்துச் சென்று வருகிறது. அதே மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை எடுத்துச் சென்று தமிழக மக்களின் அரசியல் அழுத்தத்தைக் கொடுப்பதுதான் ஆக்க விளைவைத் தரக் கூடிய தந்திரோகபாயமாக இருக்க முடியும்.
 
புகலிடத்தைப் பொறுத்த வரையிலும் பிளவுபட்ட நிலையிலும் கூட விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அரசு மட்டங்களிலும், சர்வதேச நிறுவன மட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை மக்கள்திரள் போராட்டங்களின் வழியில் எடுத்துச்சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளிடம் உருவாகித் தீரவேண்டிய சுயவிமர்சனம்,மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களை ஒப்பமறுத்து நிராகரிப்பது போன்ற காரணங்களால் அவர்களொடு சேர்ந்து செயல்பட விரும்பும் இலங்கை அரசுக்கு எதிரான, நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவானவர்கள் இணைந்து செயல்பட முடியாமல் இருக்கிறது. புகலிடத்தில் ஒன்றுபட்ட வகையிலான அரச எதிர்ப்பை- அறிக்கை ஆதரவை தமிழ் மக்களுக்கிடையிலிருந்து பரந்தபட்ட அளவில் திரட்ட முடியாததற்கான காரணியாகவும் இது அமைந்து விட்டிருக்கிறது.
 
VI
 
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கும் ராணுவத் தோல்விக்கும் பின்னால் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் கிடைத்திருக்கும் மிகப்பெரும் அரசியல் வெளி இது. மகிந்த சகோதரர்களை சர்வதேசக் குற்ற விசாரணைகளின் முன்பாக நிறுத்துவதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கான திர்வு கிடைத்துவிடும் என்பது இல்லை. அதே வேளை அதற்கான நெடும்பயணத்தில் இது ஒரு முக்கியமான அரசியல் வெளி. ஈழத்தமிழர் பிரச்சினையில் உலக நாடுகள் அனைத்தும் நிலைபாடு எடுக்க வேண்டும் எனும் ஒரு நிலைமையை இந்த அறிக்கை தோற்றுவித்திருக்கிறது.
 
ஈழத் தமிழர்களின் மீதான இலங்கை அரசின் கொடுமைகளையும் படுகொலைகளையும் சித்திரவதைகளையும் இந்த அறிக்கை உலகெங்கிலும் கொண்டு சேர்த்திருக்கிறது. தமது பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் செவிகளை எட்டவேண்டும் என்பதற்காக பல்லாண்டுகாலம் பேராடிய, அதற்காக ஆயிரக் கணக்கில் மக்களைப் பறிகொடுத்த அல்ஜீரிய விடுதலை இயக்க அனுபவங்கனோடு ஒப்பிட, ஈழத்தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் அரசியல் வாயப்பு இது. எமக்கிடையில் இருக்கும் பிளவுகளினால் இந்த வெளியை இழந்துவிடக் கூடாது. எமக்கிடையிலான சிறு சிறு கருத்து மாறுபாடுகள் இந்த வெளியை இல்லாது செய்துவிடுதல் கூடாது.
 
அவநம்பிக்கையை உருவாக்கும் வெற்றுப் பகுப்பாய்வுகளால் எந்தவிதமான பயனும் விளையப்போவது இல்லை.
 
தார்மீக நெறிகளினால் அல்ல தந்திரோபாயத்தினாலும், தத்தமது நலன் சாரந்த பார்வைகளாலும்தன் இன்றைய உலக அரசியல் நடந்து வருகிறது. இதில் வலது என்றும் இடது என்றும் அரசுகளுக்கிடையில் வேறுபாடுகள் இல்லை. ஈழத்தமிழர் நலனை முன்வைத்து மிகச் சாத்தியமான தந்திரோபாயத்தைத் தேர்வதுதான் இன்றைய தேவை. உயிர்காப்பு, உறைவிடம், உணவு எனும் அடிப்படைத் தேவைகளுக்காக அல்லலுற்றுக் கொண்டிருக்கும் ஈழுமண்ணிலுள்ள மக்கள் இன்று இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள முடியாது, இந்தப் போராட்டத்தை தமிழகத்திலுள்ளவர்களும் புகலிடத்திலுள்ளவர்களும்தான் கொண்டு நடத்த வேண்டும். சர்வதேசிய நிறுவன மட்டத்திலும், அரசு மட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்வதின் மூலம் இந்த விசாரணையை நோக்கிய அழுத்தத்தை புகலிட மக்கள் தரமுடியும்.
 
தமிழக மக்களின் ஒன்றுபட்ட குரலைத் திரட்டுவதன் மூலம் இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கைகளை மாற்றுவதற்கான அழுத்தத்தையும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இலங்கை ஆதரவு நிலைபாட்டை இந்தியா எடுக்காது செய்வதிலும் இந்த அழுத்தத்தை நாம் பாவிக்க முடியும்.
 
நிபுணர் குழவின் அறிக்கை தொடர்பாக இந்த இரு தேர்வுகளும் நமக்கு முன் இருக்கின்றன.
 
ஐக்கியநாடுகள் சபை நிபுணர் குழவின் அறிக்கையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை எனக் குறிப்பிடப்படாமல் இருக்கலாம். அந்தக் கட்ட்ம் நோக்கிய முதல்படியில் நாம் இருக்கிறோம். தனித்தனியான உணரச்சிவசமான உரைவீச்சுக்களுக்குப் பதில், தெருமுனைக் கோஷங்களுக்குப் பதில் அரசு நிறுவனங்களையும், சர்வதேச நிறுவனங்களையும் நோக்கிய நிலைபாடுகளும், அதற்கான அரசியல் தந்திரோபாயங்களும் ஒருங்கிணைவும்தான் இன்று எமக்குத் தேவை. அதனை நோக்கி புகலிடத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் திரள்வது மட்டுமே எமது விடுதலை அரசியலை அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச் செல்லும்.
 
எமக்கென ஒரு அரசியல் வெளி திறந்துவிடப்பட்டிருக்கிறது…. 
 
--------------------------------------------------------------
* gtbc.fm ல் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசியல் வெளி எனும் சொற்றெடரால் நிபுணர் குழு அறிக்கையை அணுகிய ஈழக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு எனது நன்றி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.