கிரீன்கார்டு சலுகை:இந்தியர்கள் மகிழ்ச்சி
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமா, அறிவித்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தங்கள்,கிரீன்கார் விண்ணப்பித்தும் கிடைக்காத இந்தியர்களுக்கு புதிய சலுகைகள் கொடுத்துள்ளதால், கிரீன்கார்டுக்கு காத்திருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மழைக்கு முளைத்த காளானை சாப்பிட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே கரிசல்குளம் பகுதியில் மாசாணம் என்பவரது குழந்தையும், சேவியர் ராஜ் என்பவர் குழந்தையும் வீட்டருகே மழைக்கு முளைத்த காளானை எடுத்து வந்தனர். இதனை சமைத்து சாப்பிட்ட 7 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து 7 பேரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோடி -நவாஸ் ஷெரீப் சந்திக்க வாய்ப்பு?
புதுடில்லி: சார்க் நாடுகளி்ன் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டில் சார்க் அமைப்பின் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கு பெற உள்ளனர் இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடியும் , பாக்., சார்பில் அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் மாநாடு நடைபெறும் தினமான 27-ம் தேதி இரு நாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும், சந்திக்கும் பட்சத்தி்ல் இரு நாடுகளிடையேயான எல்லைப்பிரச்னை குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாலிபால் போட்டியில் தற்கொலைப்படை தாக்குதல்: 45 பேர் பலி
காபூல்: ஆப்கனில் நடந்த வாலிபால் போட்டியின் போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.பாகிஸ்தானை ஒட்டியுள்ள பக்டிகா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறினார்.
பார்லிமென்ட் சுமூகமாக நடக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை
புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது. இந்த கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு
கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களை, வரும் டிசம்பர் 7ம் தேதி வரை காவலில் வைக்க அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராம்பால் ஆசிரமத்தில் லாக்கர்கள் திறப்பு; அனைத்தும் காலி
ஹிசார்: அரியானா மாநிலம் ஹசாரில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ராம்பால், இன்று விசாரணைக்காக அவரது ஆசிரமத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். ராம்பாலுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வோர்டு மூலம், அங்கிருந்த லாக்கர்கள் திறக்கப்பட்டன. லாக்கர்கள் அனைத்தும் காலியாக இருந்தது. பின்னர், ராம்பால் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
திரிணமுல் குற்றச்சாட்டு கேலிக்கூத்தானது: ஆர்எஸ்எஸ்
புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளர் என திரிணமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இதனை நிராகரித்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, திரிணமுல் கட்சியின் குற்றச்சாட்டு கேலிக்கூத்தானது எனவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் நேர்மையை சந்தேகப்படக்கூடாது எனவும் கூறியுள்ளது.
மம்தா குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்தது
புதுடில்லி: சாரதா சிட் பண்டு மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ.,யை வைத்து மத்திய அரசு பழிவாங்குவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா குற்றம்சாட்டினார். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சி.பி.ஐ., நடவடிக்கையில் மத்திய அரசு தலையிட வில்லை எனவும், மத்திய அரசை மம்தா தவறாக புரிந்து கொள்ளக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற மாணவரும், அவரை காப்பாற்ற சென்ற மினி பஸ் கிளீனரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் படித்து வருபவர் பிரதீஸ்(21). இவர் பி.எஸ்.சி., இயற்பியல் படித்து வருகிறார். இன்று மாலை 4 மணியளவில், தனது நண்பர்கள் 10 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, வெள்ள நீரில் பிரதீஸ் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்த அங்கிருந்த 20க்கும்மேற்பட்டோர் பிரதீசை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் வெள்ள நீரில் மாவிலிராஜ்(51) என்பவரும் அடித்து செல்லப்பட்டார். மாவிலிராஜ் மினிபஸ் கிளீனராக உள்ளார். அவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ஆற்றில் அதிக நீர் செல்வதாலும், இருள் சூழ்ந்துவிட்டதாலும், தற்போது இருவரது உடலை தற்போது மீட்க முடியாது என தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நாளை காலை அவர்களது உடலை தேடும் பணி தொடரும் என தெரிகிறது.
அ.தி.மு.க.,வினர் கண்ணியத்தை கடைபிடித்தால் சட்டசபைக்கு வரத்தயார்: கருணாநிதி
சென்னை: தி.மு.க.,வினரை போல் அ.தி.மு.க.,வினர் கண்ணியத்தை கடைபிடித்தால், சட்டசபைக்கு வரத்தயார் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க.,வினர் கண்ணியத்தை கடைபிடிப்பார்கள் என முதல்வர் அறிவிக்க வேண்டும். பருப்பு வாங்கும் டெண்டரில் ரூ.8 ஆயிரம் கோடி முறைகேடு குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசு பணிகளுக்கான வயது வரம்பு மற்றும் தேர்வு எழுதும் வாய்ப்புகளை குறைத்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போதுள்ள வரம்புகளில்மாற்றமில்லை என அறிவிக்க வேண்டும். மத்திய பணியாளர் தேர்வாணைய குழப்பம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார்.
காங்., தலைவர் பதவிக்கு சிதம்பரம் போட்டியிடலாம்: திக்விஜய் சிங்
புதுடில்லி: தனியார் டிவிக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், சோனியா குடும்பத்தினர் அல்லாதவர் காங்கிரஸ் கட்சி தலைவராகலாம் எனவும், சிதம்பரம் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் எனவும் கூறியுள்ளார்.
தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தது யார்? பா.ஜ.,வுக்கு திரிணமுல் கேள்வி
கோல்கட்டா: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது செலவுக்கு பணம் கொடுத்தது யார் என பா.ஜ.,வுக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பா.ஜ.,விற்கு கிடைத்த கறுபபு பணம் குறித்து வெளியிடப்படவில்லை. இந்த தகவல் வெளியானால், பா.ஜ.,வுக்கு சிக்கல் ஏற்படும். மம்தாவின் போராட்டம் பற்றி பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை என கூறியுள்ளது. புர்துவானை வைத்து பாஜ., அரசியல் செய்கிறது எனவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவாளர் கூறியுள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் 29ல் கடையடைப்பு போராட்டம்
நாகப்பட்டினம்: காவிரியில் புதிதாக அணை கட்டுவதற்காக கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து விவாதிக்க நாகையில் தி.மு.க., மாவட்ட செயலாளர் விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் வரும் 29ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் நாகையில் 100 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும், நாகை மயிலாடுதுறையில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்துவது எனவும், நாகை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
சிறுத்தைகள் அச்சத்தில் கிராமம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கடையம், கடனாநதி அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமம் உள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியைஒட்டியுள்ள இக்கிராமத்தில் அடிக்கடி சிறுத்தைகள் வந்துசெல்கின்றன.கடந்த மாதம் ஒரு சிறுத்தை கிராமத்தில் புகுந்து தினம் தினம் ஆடுகளை வேட்டையாடியது. பின்னர் வனத்துறை அதிகாரிகள் அந்த சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் சிறுத்தைகள் கிராமங்களுக்கு வந்துசெல்கின்றன. இதனால் மலையோரம் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பீதியில் உள்ளனர். விவசாய பணிகளுக்குசெல்வோரும் பயத்தில் உள்ளனர். நேற்று பெத்தான்பிள்ளைகுடியிருப்பில் ஒரு கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து இழுத்துச்சென்றுள்ளது. இந்த சம்பவங்களால் அங்கு மக்களிடையே அச்சம் நிலவுகிறது
பம்பை பஸ் சர்வீஸ் தொடக்கம்
சபரிமலை: பம்பையில் இருந்து பெங்களூருக்கு கேரள அரசு போக்குவரத்துக்கழகமும், சென்னைக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் சர்வீஸ் தொடங்கியுள்ளன. மதுரை, பழனி, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு விரைவில் சர்வீஸ் தொடங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல சீசன் கடந்த 16-ம் தேதி தொடங்கிய நிலையில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரள அரசு போக்குவரத்துக்கழகமும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் ஒப்பந்தம் செய்து, பக்தர்கள் வசதிக்காக பஸ்களை இயக்குகின்றன. இதன் படி கேரள அரசு போக்குவரத்துக்கழகம் பெங்களூருக்கு இன்று இண்டர்ஸ்டேட் சர்வீஸ் தொடங்கியுள்ளது.
தி.மு.க., உள்கட்சி தேர்தலில் ரகளை
மன்னார்குடி; திருவாருர் மாவட்டம், மன்னார்குடியில், தி.மு.க., நகர மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தேர்தல், இன்று நடந்தது. ஒன்றிய செயலாளர் பதவிக்கு, உள்ளிக்கோட்டை பொய்யாமொழி, மேலவாசல் தன்ராஜ், நெடுவாக்கோட்டை முன்னாள் சேர்மன் தென்னவன் மகன் காஞ்சிதுரை ஆகியோர் போட்டியிட்டனர். ஒன்றிய செயலாளர் தேர்தலில், 91 பேர் வாக்களித்தனர். தேர்தல் அதிகாரி இளங்கோவன் முன்னிலையில், மதியம், 2 மணியளவில் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அப்போது, பொய்யாமொழி, 27 ஓட்டுக்களும், தன்ராஜ், 29 ஓட்டுக்களும், காஞ்சிதுரை, 35 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். ஓட்டுக்கள் எண்ணியபோது, தோல்வியை அறிந்த பொய்யாமொழி, காஞ்சிதுரையின் ஓட்டுகள், ஐந்தை பிடுங்கி தின்று விட்டார். இச்சம்பவத்தால், தேர்தல் அதிகாரி உள்ளிட்ட வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பொய்யாமொழி ஆதரவாளர்கள் ஓட்டுச் சீட்டுகளுடன் பெட்டியை தூக்கிச்சென்று, சாலையில் போட்டு உடைத்தனர். தொடர்ந்து, சோடா பாட்டில்களை வீசினர். பாதுகாப்புக்கு வந்த போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில், தேர்தல் அதிகாரி இளங்கோவன், காஞ்சிதுரை வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
திருச்சி ஏர்போர்ட்டில் தங்கம் பறிமுதல்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில், நான்கு பேர் கடத்தி வந்த, இரண்டரை கிலோ தங்கத்தை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அதிகாலை கைப்பற்றினர். கடந்த, 22ம் தேதி விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கிச் செல்லும் வழியில் உள்ள கழிவறையில் வீசப்பட்ட, இரண்டு கிலோ தங்கத்தை, துப்புரவு பணியாளர் ஒருவர் கொடுத்த தகவலின்படி, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில், இன்று அதிகாலை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர்- ஏஸியா விமானம், திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இதில், வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, திருச்சி, மேல சிந்தாமணியை சேர்ந்த நஸ்ருதீன், 54, இப்ராஹீம் ஷா, 36, ஜபர்லால், 50, அரியமங்கலத்தை சேர்ந்த மெகபூப், 28, ஆகியோர் கொண்டு வந்த கம்ப்யூட்டரில், வித்தியாசமான பொருட்கள் இருப்பதை ஸ்கேனர் கருவி காட்டியது. இதையடுத்து, நான்கு பேரை தனியாக அழைத்துச் சென்று, விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, நான்கு பேரிடம் சேர்த்து மொத்தம், 2,463 கிராம் தங்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு, 66 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய். தங்கத்தை பறிமுதல் செய்த, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், நான்கு பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பணை: உருவ பொம்மை எரிப்பு
பெங்களூரு: காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து கன்னட அமைப்பின் வட்டாள் நாகராஜ் தலைமையில், பெங்களூரு, மெஜஸ்டிக் பகுதியில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், கருணாநிதி மற்றும் வைகோ ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
எல்லையில் ஆயுத குவியல் பறிமுதல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம், ஹிஜிபால் வனப்பகுதியில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். ஒரு சிறிய போர் நடத்தும் அளவிற்கு அதிநவீன ஆயுதங்கள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ரூ.1.70 கோடி தங்க நகைகள் கொள்ளை?
கோவை: கோவை, குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில், அடகு பிடித்து வைக்கப்பட்டிருந்த 1.70 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நின்றிருந்த காரில் நகை திருட்டு
ராமேஸ்வரம்: திருப்பத்தூரில் இருந்து பக்தர்கள் சிலர் காரில் ராமேஸ்வரம் வந்தனர். பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவி்ட்டு, சுவாமி கும்பிட சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, காரில் வைத்துவிட்டு சென்ற 5 பவுன் நகையை மர்ம நபர்கள், கண்ணாடியை உடைத்து, திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில், ராமேஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் மீண்டும் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டணம் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.இவர்களில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சென்ற படகு நெடுந்தீவு அருகே கோளாறு காரணமாக நின்றுவிட்டபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜ.,வுக்கு ஒமர் எச்சரிக்கை
ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பேசுகையில், 'காஷ்மீரில் அமலில் உள்ள 370வது பிரிவு குறித்த விஷயத்தில் பா.ஜ., கை வைத்தால், இம்மாநிலத்தில் அக்கட்சி மூழ்கிவிடும்,' என்றார். பா.ஜ., சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டிய அவர், இந்த விஷயத்தில் இரு மாறுபட்ட கருத்துக்களை அக்கட்சி கொண்டுள்ளது,' என்றார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு-வைகோ
கோவை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என ம.தி.மு.க,. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்தார். கோவையில் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டத்தை துவக்கி வைத்த வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'காமராஜர், அண்ணாதுரை ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மது இல்லை. அதன் பின்னர் வந்த அரசுகள் மதுவை அறிமுகப்படுத்தின,' என்று குற்றம் சாட்டினார்.
புனிதர் பட்டம் வழங்கும் விழா
வாடிகன்: இந்தியாவின், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு போப் பிரான்சிஸ் இன்று புனிதர் பட்டத்தை வழங்கினார். வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த விழாவில், கேரளாவைச் சேர்ந்த குரியகோஸ் எலியாஸ் சவாரா மற்றும் சகோதரி எப்ரசியா ஆகியோரை புனிதர்களாக போப் பிரான்சிஸ் அறிவித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர்.
மோடி காப்பி அடிக்கிறார்-முலாயம்
லக்னோ: சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் உ.பி., முதல்வருமான முலாயம்சிங் யாதவ், விழா ஒன்றில் பேசுகையில், 'சமீப காலமாக, கிராமங்களை தத்தெடுப்பது குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். நான் இந்த திட்டத்தை கடந்த 1990ம் ஆண்டிலேயே செய்துவிட்டேன். இந்த வகையில், என் திட்டத்தை தான் மோடி காப்பி அடிக்கிறார். அதேபோல், கழிப்பறை அமைக்கும் திட்டத்திலும் மோடி என்னை தான் பின்பற்றுகிறார்,' என்றார்.
பார்லி.,: 67 மசோதாக்கள் பெண்டிங்
புதுடில்லி: லோக்சபா குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், 22 சிட்டிங்குகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் மொத்தம் 57 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. லோக்சபாவில் 8ம், ராஜ்யசபாவில் 59 மசோதாக்களும் நிலுவையில் உள்ளன. இன்ஸ்யூரன்ஸ் மசோதா உள்ளிட்ட சில முக்கியமான மசோதாக்களும் இதில் அடக்கம். இந்நிலையில், இன்ஸ்யூரன்ஸ் மசோதா உள்ளிட்ட 35 மசோதாக்களை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ., காங்., தொண்டர்கள் மோதல்
தல்டோன்கஞ்ஜ்: ஜார்கண்ட் மாநிலம், தல்டோன்கஞ்ச் என்ற இடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பிரசாரம் செய்தார். அவர் அங்கிருந்து புறப்பட்ட பின்னர், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பிலும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களுக்காக காங்கிரஸ்-சோனியா
ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம், கும்லா என்ற இடத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, 'மக்களின் நலனுக்காக காங்கிரஸ் பேரியக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. மக்களின் உரிமைக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்,' என்றார்.
லோக்சபா: கேள்வி நேரம் மாற்றமில்லை
புதுடில்லி: குளிர்கால கூட்டத் தொடரின் போது, ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தை, காலை 11மணியில் இருந்து 12 மணிக்கு மாற்ற, அவை தலைவரான அமித் அன்சாரி முடிவு செய்துள்ளார். இந்நிலையில், லோக்சபாவில் கேள்வி நேரத்தில் (11 மணி) எந்த மாற்றமும் இல்லை என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறி உள்ளார்.
மகன் அகிலேஷ் மீது முலாயம் கோபம்
லக்னோ: உ. பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பல்வேறு பணிகளை செய்துள்ளார். ஆனால் இந்த பணிகள் யாவும் மிக மெதுவாக நடந்துள்ளது. இது போன்று கால தாமதம் கூடாது என அவரது தந்தை முலாயம் சிங் தனது பிறந்த நாள் விழாவில் பேசிய போது அறிவுரை வழங்கினார்.
கூட்டணி குறித்து வாசன் பேட்டி
கும்பகோணம்: கும்பகோணத்தில் நடந்த சிறுபான்மை பிரிவு கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் வாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில், 'எங்கள் கட்சியின் தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது,' என்று தெரிவித்தார். மேலும், மதச்சார்பற்ற சிறுபான்மையினருக்கு எங்கள் கட்சி ஆதரவு தரும் என்றும் வாசன் கூறினார்.
மாநிலங்களுக்கு ஜெட்லி கோரிக்கை
புதுடிலங்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் முதலீடு செய்ய வௌிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வௌிநாட்டு முதலீடுகளை கவர தேவையான நடவடிக்கைகளில் மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்,' என கோரிக்கை விடுத்தார்.
அடுத்த சி.பி.ஐ., இயக்குனர் யார்?
புதுடில்லி: சி.பி.ஐ., அமைப்பின் தற்போதைய இயக்குனராக உள்ள ரஞ்சித் சின்ஹாவின் பதவிக்காலம் வரும் டிசம்பரம் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்காக, மூத்த, திறமையான, ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு, டிசம்பர் 2ம் தேதிக்குள் புதிய இயககுனரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பார்சிலோனா அணி மெஸ்சி சாதனை
பார்சிலோனா: பார்சிலோனா அணியின் மெஸ்சி லா லிகா கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். செவில்லா அணிக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோல் அடித்து 5-1 என வெற்றி தேடித்தந்தார். ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, செவில்லா அணிகள் மோதின. துவக்கம் முதலே அசத்திய பார்சிலோனா அணியின் மெஸ்சி (21, 72,78வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். போட்டியின் 47வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ஜோர்டி ஆல்பா 'சேம் சைடு' கோல் அடித்தார். நட்சத்திர வீரர் நெய்மர் (49), இவான் ராகிடிக் (65) தலா ஒரு கோல் அடித்து பார்சிலோனா அணியை வலுப்படுத்தினர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தில் எதிரணி வீரர்கள் கோல் அடிக்க தடுமாறினார். முடிவில், பார்சிலோனா அணி 5-1 என வெற்றி பெற்றது. அதிக கோல்: மெஸ்சி 'ஹாட்ரிக்' கோல் அடித்ததன் மூலம், லா லிகா தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதுவரை 289 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 253 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன் ஸ்பெயின் வீரர் டெல்மோ ஜாரா (அத்லெட்டிக் கிளப் ) 251 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. ..
வீடு புகுந்து நகை திருட்டு
திட்டக்குடி: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள கொடிக்களத்தில் வசிப்பவர் சரோஜா. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர், கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் சென்னையில் உள்ள மகனை சந்திக்க சென்றார். பின்னர் வீடு திரும்பி பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பதினான்கரை பவுன் நகை திருடு போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில், ஆவினன்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 இந்தியர்களுக்கு இன்று புனித பட்டம்
வாடிகன்: இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார். இவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன நிலநடுக்கம்: பலி அதிகரிப்பு
பீஜிங்: சீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் கடந்த இரு தினங்களாக நடந்த நிலநடுக்கம் காரணமாக 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹெராயின்: மிசோரம் பெண் கைது
அய்ஸால்: ஹெராயின் போதை பொருளை கடத்தியதாக, மிசோரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, மிசோரம் கலால் மற்றும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த 10 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 80 லட்சம் டாலர்கள் கொள்ளை
சென்னை: சென்னை விமான நிலையம் அருகே, ஆட்டோவை மடக்கிய மர்ம நபர்கள் சிலர், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கார்கள்:டில்லி அரசு தடை
புதுடில்லி: சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, டில்லி அரசு அதிகாரிகள் யாரும் புதிய கார்களை வாங்க கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, டில்லி யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு மட்டுமல்லாமல், உள்ளாட்சி அலுவலங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஏற்ற கட்சி பா.ஜ.,:நிர்மலா
புதுடில்லி : பெண்கள் அரசியலில் பங்குபெறுவதற்கு ஏற்ற அமைப்பு பா.ஜ., தான் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.,வில் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களும் உறுப்பினர்களாக உள்ளதாகவும், பா.ஜ., தவிர மற்ற எந்த கட்சியிலும் பெண்கள் பலம் வாய்ந்தவர்களாகவோ அல்லது அச்சுறுத்தல் இல்லாமலோ இருக்க முடியவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஆனங்கூர் மாரியம்மன் கோயிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், கோயில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லிப்டில் சிக்கி தவித்த சவான்
மும்பை : மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ப்ருத்விராஜ் சவான், தனது அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் லிப்ட்டில் சிக்கி தவித்துள்ளார். அப்போது அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் தத்தும் இருந்துள்ளார். அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் லிப்ட் கதவை உடைத்து அவர்களை மீட்டுள்ளனர்.
க்ளீன் இந்தியாவில் மேற்குவங்க கவர்னர்
கோல்கட்டா : பிரதமரின் க்ளீன் இந்தியா திட்டத்தின் கீழ் மேற்குவங்க கவர்னர் கேசரி நாத் திருபாதி தனது ஆதரவாளர்களுடன், கோல்கட்டா நகர வீதிகளை சுத்தம் செய்தார்.
மதுவுக்கு எதிராக மாணவர்களைத் திரட்ட வைகோ முடிவு
கோவை : கோவையில் நடைபெற்ற மதுவிலக்கு மாரத்தான் ஓட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவலக்கை கொண்ட வருவதற்காக நான் நடைபயணம் பிரசாரம் செய்தேன். பல போராட்டங்கள் நடத்தினேன். அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. அதனால் தற்போது மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தானை நடத்துகிறோம். இனி வரும் காலங்களிலும் மாணவர்களைக் கொண்டே மதுவிலக்கு விழிப்புணர்வு போராட்டங்கள் நடத்தப்படும். மது என்பது காமராஜர் காலத்திலோ, அண்ணாதுரை காலத்திலோ கொண்டு வரப்படவில்லை. அவர்களுக்கு பின்னர் தான் தமிழகத்தில் மது கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கோவையில் மதுவிலக்கு மாரத்தான்
கோவை : கோவையில் நடைபெறும் மதுவிலக்கு மாரத்தான் போட்டியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை சுந்தராபுரத்தில் துவங்கி மதுக்கரை மார்க்கெட் வரை நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 5000 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி-அரசுபஸ் விபத்து:பலி-1
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே,வன்னியம்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் பயணி முப்புடாதிமுத்து பலியானார்.லாரி சாலையோர மரத்தில் சிக்கியது. மரத்திலிருந்து சிக்கிய லாரி டிரைவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி:ஐயப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து மூதாட்டி பலி
கிருஷ்ணகிரி:ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு புறப்பட்டு சென்ற பஸ், கிருஷ்ணகிரி அருகே சிவம்பட்டியில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு சாலையோரத்தில் கவிழ்ந்தது.இதில் பயணம் செய்த காஞ்சிபுரம் மாவட்டம் அவலூரை சேர்ந்தஅஞ்சலாராஜீ(62) என்ற மூதாட்டி பலியானார்.9 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்
ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் தாவூத் இப்ராஹிம்:ராஜ்நாத்சிங்
புதுடில்லி:இந்தியாவில் பயங்கரவாதத்தை விதைத்து வரும் பாகிஸ்தான் குற்றம் சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மும்பை வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், நமது அண்டை நாடான ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். நாம் இந்தியா-பாகிஸ்தான் இடையே ந்ட்புறவை வளர்க்க வேண்டும் என முயற்சித்தாலும் அவர்கள் உறவுகளை புதுப்பித்து கொள்ள ஆர்வத்துடன் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
பயங்கரவாதம் இங்கே உருவாகவில்லை: இந்தியாவில் பயங்கரவாதம் வளரவில்லை ஒவ்வொரு வீட்டிலும் வளர்ந்தது கிடையாது. அது வெளிநாட்டு நிதி உதவியோடு இங்கே ஊடுருவியது. அது முழுமையாக பாகிஸ்தான் நிதியுதவியுடன் பயங்கரவாதத்தை வளர்த்து விட்டு நல்லவன் போல் நடித்து வருகிறது என குற்றம் சாட்டினார்.
நதிகளை இணைக்க தீவிர நடவடிக்கை :உமாபாரதி
புதுடில்லி: நதிகளை இணைக்க அரசு, தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். டில்லியில் நீர்வளம் தொடர்பான தேசிய மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசும் போது,ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக உமாபாரதி தெரிவித்தார்.